அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக்கமனப்பான்மை, மற்றும் ஆதர்ச ரீதியிலான எதிர்பார்ப்புகளையும் ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
எனது முதல் கேள்வி: தினசரி வாழ்வில் எத்தனையோ வசைகள், பொய் பித்தலாட்டங்களை தாங்கும் நாம் இலக்கியப் பரப்பில் ஒரு உன்னதமான நிலையை ஏன் எதிர்பார்க்கிறோம்? எழுத்தாளனை ஏன் லட்சியப்படுத்துகிறோம்? ஜெயமோகன் இயக்குனர்கள் முன் ஆதாயத்துக்காக புழுவாய் குழைவதை கண்டிக்கும் அமர்நாத் தன் தனிப்பட்ட வாழ்வில் யாரையும் ஜால்ரா போட்டதில்லையா? கூஜா தூக்காத மனிதனே பூமிப்பரப்பில் இல்லை எனலாம். இலக்கியவாதியும் தினசரி வாழ்வுத் தளத்தை சேர்ந்தவன் தானே? இலக்கியவாதி ஆதர்ச நாயகனாக இருந்த காலம் கற்பனாவாத சகாப்தத்துடன் முடிந்து விட்டது. எழுத்தாளனை அவனது அரசியலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய சூழலின் கட்டாயம். எந்த அணுகுமுறைச்சாய்வும் இல்லாதவன் மன நிலை பிறழ்ந்தவன் மட்டுமே. அவன் எழுத்தாளனாக முடியாது. உலகவாழ்வின் பாசாங்கு, குழிபறித்தல், கபடம் எழுத்தில் நுழைந்தால் அதை தர்க்கரீதியாக எதிர்கொண்டு, மறுக்கலாம், மௌனிக்கலாம்; உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பது மடத்தனம்.
மேற்குறிப்பிட்ட வலைமனையில் ஜெவை வைய தேவடியா, பிம்ப் (மாமா), கருட புராணத் தண்டனை ஆகிய பதங்களை அமர்நாத் மற்றும் சாரு பயன்படுத்தப்படுத்துகிறார்கள். இதை நாம் ஆராய வேண்டும். சமூகத்தை கட்டுப்படுத்த விழையும் உயர்குடி, பிராமணீய, ஒழுக்கவியல் பயன்பாடுகள் இவை. பழங்கால அரச சமூகத்தில் பொதுப்பார்வைக்கு முன் குற்றவாளிகளை தாக்கி அழிக்கும் தண்டனை முறைகள் இருந்தன. ஃபூக்கோ தனது "ஒழுக்கமும், தண்டனையும்: சிறையின் பிறப்பு" எனும் நூலில் இந்த வகை தண்டனைக்கு இரு கூறான நோக்கங்கள் உண்டு என்கிறார்: எதிர்பார்த்த, எதிர்பாராத நோக்கங்கள். பொதுமக்கள் முன்னிலையிலான தண்டனையின் போது குற்றவாளியின் உடல் அவனது குற்றத்தை மறுஒளிபரப்பு செய்யும் டி.வி. சானல் போல் ஆகிறது. அதாவது இப்படியாகப் பட்ட குற்றத்தை செய்திருக்கிறான் என்பதை மக்களுக்கு உணர்த்துவது. அடுத்து சட்டம் என்கிற தனது உடல் நீட்சியை காய்ப்படுத்தியதற்காக குற்றவாளியின் உடல் மீது அரசாங்கம் பழி தீர்த்துக் கொள்கிறது. எதிர்பாராத நோக்கம் என்னவென்றால், குற்றவாளியின் உடல் மீது பெரும்பாலான கட்டங்களில் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டு அதனால் அரசாங்கத்துக்கு பாதகமான கலகங்கள் விளைகின்றன. இந்த கடைசிக் கூற்றுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாசாங்கு, பித்தலாட்டத்தின் அடிப்படையில் ஜெவை கூண்டில் ஏற்றி தீர்ப்பு சொல்லி தண்டனை விதிப்பது ("மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டாம்; கருட புராணத்தில் தண்டனை உண்டு") தன்னை நியாயப் பீடமாக கற்பிக்கும் கடித ஆசிரியரின் ஒழுக்கவியல், மேட்டுக்குடி மனப்பான்மையை குறிக்கிறது. ஃபூக்கோவை பொறுத்த மட்டில் இது பூர்ஷுவா நிலைப்பாடு. இதன் எதிர்பாரா விளைவு (பச்சாதாபம்) ஜேவுக்கு ஆதரவாக அமையலாம்.
பிரபல ஆளுமைகளை போற்றுதலும், தூற்றுதலும் வலுவற்ற வாசகப் பரப்பின் நோய்க் கூறுகள். நுட்பமான அறிதல் அற்ற வாசகர்கள் எதை சார்வது என்று புரியாமல் ஆரம்பத்தில் தடுமாறுவார்கள்; பாதுகாப்பின்மை போக்க குழுக்களில் இணைவார்கள்; அவதூறுகள் கிசுகிசுப்பார்கள். இறுதியாய் வழிபாட்டு, எதிர்நிலை பிம்பங்களை ஏற்படுத்துக் கொள்வார்கள். ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுத்தாளனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு மீது கசப்பு ஏற்படாது. அப்படி நேர்ந்தால் அவன் போன தலைமுறை ஆதர்சவாதத்தின் எச்சமாக மட்டுமே இருப்பான். எழுத்தாளன் பிரதிநிதி அல்ல; அவன் தனிக்குரல் மட்டுமே. கடல் ஆரவாரத்தினிடையே ஆயிரம் முறைகளில் ஒன்றாய் கரையில் உடையும் ஒரு அலை அவன்.
ஒரு ஆளுமையின் அரசியல் காய் நகர்த்தல்களை நிர்வாணப்படுத்தல் அறிவுத்தளத்தின் பணி அல்ல. ஆதிக்க அரசியல் இன்றைய மனித இயல்பு. நமது களம் மனித மனத்தின் நுட்பங்கள் பற்றின தேடலாகவே இருக்க வேண்டும்.
உயிர்மையின் தரம் பற்றின ஜெவின் கேள்விக்கு பதில் "வார்த்தை" வலதுசாரி இதழ் என்று சொல்லுவதல்ல. ஒரு மாதாந்திர இதழான உயிர்மைக்கு பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் நோக்கம் உள்ளது. பக்கங்களை நிரப்பும் நிர்பந்தம் உள்ளது. தீவிர, வணிக இதழ் வாசகர்களுக்கு இடையிலான ஒரு பாலமாகத்தான் உயிர்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான கட்டுரைகளை சுவாரஸ்யமாக, தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர் நம் இலக்கியப் பரப்பில் உள்ளனர்? ஆங்கிலத்திலிருந்து கோட்பாட்டு எழுத்தை தமிழில் பிரதியெடுப்பதை நான் குறிப்பிடவில்லை. புதிய கலை, அறிவியல், சமூக, வரலாற்று அணுகுமுறைகளை நம் சூழலுக்கு அல்லது தலைமைப் பொருளுக்கு பொருத்தி அவதானிக்கும் மிகச்சில எழுத்தாளர்களே உள்ளனர்; ஒரு மாதாந்திர பத்திரிகைக்கு அவர்களால் மட்டுமே தீனி போட முடியாது. உயிர்மை அனைத்து எழுத்தாளர்களுக்குமான பொதுத் தளம். தீவிர ஆய்வுப் பின்னணி மற்றும் தயாரிப்புடன் உருவாக்கப்படும் கட்டுரைகளை "உயிர்மை" எதிர்பார்க்கிறது என்பதே உண்மை. மிக முக்கியமான படைப்புகளுடன் பலவீனமானவையும் வெளிவந்தால் அது நம் தமிழ்ச்சூழலின் பிரதிபலிப்பு தான். எழுத்தாளர்களின் மறுபிம்பம் தான் பத்திரிகை. உயிர்மையில் தொழில் நுட்ப ரீதியிலான ஆழமான சினிமா விமரசனங்களை வெளியிடாதது பற்றி நான் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டிருக்கிறேன். தமிழில் அத்தகைய திரைவிமர்சகர்கள் இல்லை என்பதே அவரது பதில் (இதையே "கற்றது தமிழ்" ராமும் "புதிய பார்வை" பேட்டி ஒன்றில் குறிப்பிடுள்ளார்). மற்ற துறை சார்ந்த படைப்புகளின் பஞ்சத்திற்கும் இப்பதிலே பொருந்தும் என நினைக்கிறேன். ஜெவின் திருப்திக்காக வேண்டுமானால் எச்.பீர்முகமது உயிரொசையில் எழுதின சில தத்துவக் கட்டுரைகளை உயிர்மையில் மறுபிரசுரித்து மிரட்டலாம்.
மேலும் ஜெயன் உயிர்மைக்கு செய்வது போல் ஒருவர் தனக்குப் பிடித்த மூன்று பத்திகளை மட்டுமே படித்து பத்திரிகையை வீசினாலும் அது பிரச்சனை அல்ல. நமது இன்றைய முடிவற்ற ஊடக வெளியில் தரம் என்பதற்கு பொது அளவுகோல் அமைப்பது சிக்கலானது. தரம் தனிமனித தீர்வு சார்ந்தே அமைகிறது. இந்நிலைக்கு இன்றைய இணைய, பதிப்பு, டி.வி.ஊடகங்களில் மையமற்று அலைவுறும் விவாத சச்சரவுகள் (இவ்விவாதத்தையும் உள்ளிட்டு) உதாரணம்.
கடைசியாக "நொண்டி நாய்" விவகாரம் பற்றி. ம.பு இவ்விவகாரத்தில் சமயோசிதமாகவே நடந்து கொண்டிருக்கிறார். இதில் எதிர்கால பதிப்பாளர்களுக்கு பாடம் உள்ளது. சண்டை சச்சரவுகள் மத்தியிலும் தமிழின் மும்மூர்த்திகள் ஜெ, எஸ்.ரா, சா.நி ஆகியோர் உயிர்மை பதிப்பகத்துக்காக தொடந்து எழுதி வந்துள்ளதை கவனியுங்கள். அரசியலில் போலவே தொழிலிலும் எதிரிகளை பயன்படுத்துவது அல்லது நண்பர்களாக்குவது அவசியம். இலக்கிய மும்மூர்த்திகள் ஒரே படகில் வாளேந்தியபடி வெவ்வேறு சுருதிகளில் முழங்கியபடி பயணித்ததனாலே பல முக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்தன.
அடுத்து, ஊனர்கள் தங்கள் சமூக உறவாடல்களின் போது தங்கள் உடல் வித்தியாசம் பற்றின பல வசைகளை கேட்டு பல்லிளிக்க வேண்டியுள்ளது. தலித்துகளை அவரகள் சாதிப் பெயர் குறிப்பிட்டு வைதால் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஊனர்களை பாதுகாக்கவும் இத்தகைய சட்டம் வேண்டும். அத்துடன், "தேவடியாளுக்கு" நேர்ந்தது போல் "நொண்டி" எனும் தட்டையான வார்த்தைக்குப் பதிலீடாக வேறு பொருத்தமான, வாயில் நுழையாத சொல்லை அல்லது சொற்றொடரை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து கால் ஊனர்களும் நொண்டுவதில்லை. சக்கர நாற்காலிக்காரர்களை உதாரணமாக சொல்லலாம். அப்படிச்செய்தால் "நொண்டி" ஒரு பொது வசையாக மாறும் (நிலையற்ற தன்மை கொண்ட பிரபல எழுத்தாளரை "அட நொண்டி" என அழைக்கலாம்)---ஊனர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.