Friday, 14 August 2009

நோபல் பரிசாளர் யுவான்-மரீ குஸ்தாவே லெ கிளேசியோவின் பேட்டி






"நேரடியாய், எழுத்து என்னை பொறுத்த மட்டில் பயணம் போன்றது. என்னிலிருந்து வெளியேறி மற்றொரு வாழ்க்கை வாழ்வது; ஒருவேளை, மேன்மையான வாழ்வு."

9 அக்டோபர் 2008-இல் 2008-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு யுவான்-மரி குஸ்தாவே லே கிளேசியோவுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடன் உடனடியாய் காணப்பட்ட தொலைபேசி பேட்டி. பேட்டியாளர் nobelprize.org இணையதளத்தின் தலைமை ஆசிரியர் ஆடம் ஸ்மித்.

கிளேசியோ: ஆம், லே கிளேசியோ பெசுகிறேன்.

ஸ்மித்: ஓ ஹலோ, என் பெயர் ஆடம் ஸ்மித்; ஸ்டோக்ஹாமில் நோபல் பவுண்டேசன் இணையதளம் சார்பில் அழைக்கிறேன்.

கிளேசியோ: ஆம்

ஸ்மித்: தொலைபேசியில் உங்களொடு 5 நிமிடங்கள் பேசலாமா?

கிளேசியோ: நிச்சயமாக, நான் தயாராக உள்ளேன்.

ஸ்மித்: ரொம்ப நன்றி. நீங்கள் பல நாடுகளின் வாசி. இப்போது பிரான்ஸிலிருந்து எங்களிடம் பேசுகிறீர்கள், சரி தானே?

கிளேசியோ: ஆமாம், ஆமாம். தற்போது பிரான்ஸில் உள்ளேன். பொதுவாக கனடாவுக்கு சில நாட்களில் சென்று விடுவேன். ஆனால் இப்போதும் பிரான்ஸில் தான் உள்ளேன்.

ஸ்மித்: பல நாடுகளிலாய் வளர்க்கப்பட்டீர்கள், உலகம் பூரா வாழ்ந்துள்ளீர்கள் எனப்பார்க்கையில், சொந்த நாடென்று எங்காவது ஓரிடத்தை கருதுகிறீர்களா?

கிளேசியோ: ஆமாம், உண்மையில், என் முதாதையரின் இடமான, மௌரீஷியஸ் என் சின்ன சொந்த நாடாக நான் கருதும் இடமெனச் சொல்வேன். அதனால், அது நிச்சயம் மௌரீஷியஸ் தான்.

ஸ்மித்: அதோடு, நீங்கள் பன்மொழி பயில்பவராக வளர்க்கப்படீர்கள், ஆனால் எப்போதும் பிரஞ்சிலேயே எழுதுகிறீர்கள். எதாவது குறிப்பிட்ட காரணம் உள்ளதா?




கிளேசியோ: ஏறத்தாழ, ஆமாம். உண்மையில், நான் குழந்தையாய் இருக்கையில் பிரஞ்சு பேசித்தான் வளர்ந்தேன், அதாவது, ஒரு பிரஞ்சு அரசுப்பள்ளியில். அதனால் இலக்கியத்துடனான என் முதல் தொடர்பு பிரஞ்சில்தான்; நான் பிரஞ்சில் எழுதும் காரணம் அதுதான்.

ஸ்மித்: அதோடு, குழந்தையாக இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டீர்கள், எழுதிக் குவிக்கிறீர்கள் வேறு. இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ளீர்கள். எழுதுவது சுலபமாக வருகிறதா? எழுதுவதால் மகிழ்ச்சியடைகிறீர்களா?

கிளேசியோ: ஆமாம், நிச்சயமாக. என் வாழ்க்கையின் ஆகப்பெரிய ஆனந்தங்களில் ஒன்று மேஜை அருகே அமர்வது தான், அது எங்காயிருந்தாலும். எனக்கு அலுவலகம் ஏதுமில்லை. எங்கும் எழுதுவேன். அதனால், மேஜையில் ஒரு துண்டு காகிதத்தை வைத்து, பிறகு பயணிப்பேன். நேரடியாய், எழுத்து என்னை பொறுத்த மட்டில் பயணம் போன்றது. என்னிலிருந்து வெளியேறி மற்றொரு வாழ்க்கை வாழ்வது; ஒருவேளை மேன்மையான வாழ்வு.

ஸ்மித்: அருமையாய் உள்ளது. வாசிப்பு பிரயாணம் போல எனச் சொல்வார்கள், ஆனால் எழுத்து கூட, இது அருமை.

கிளேசியோ: ஆமாம் ரெண்டுமே எனக்கு ஒன்றுதான். வெளிநாட்டில், ஒரு புதிய நாட்டில், புது இடத்தில், இருப்பதை ரொம்ப ரசிப்பேன். ஒரு புதிய புத்தகத்தை ஆரம்பிப்பதில் கூட இன்பம் கொள்வேன். மற்றொருவராவது போன்றது அது.

ஸ்மித்:பிற இடங்கள், பிற கலாச்சாரங்கள், பிற சாத்தியப்பாடுகள் பற்றி நிறைய எழுதுகிறீர்கள்; குறிப்பாய் அமெரிந்தியர்கள் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறீர்கள். அவர்களின் கலாச்சாரத்தில் அப்படி குறிப்பாய் வசீகரமானது என்ன?

கிளேசியோ: ஆமாம். ஒருவேளை அவர்களது கலாச்சாரம் ஐரோப்பிய கலாச்சாரத்திலிருந்து ரொம்பவே வேறுபடுவதனாலிருக்கலாம். மற்றொரு புறத்தில் அதற்கு தன்னை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நவீன உலகால், குறிப்பாய் ஐரோப்பிய படையெடுப்புகளால், சில விதங்களில் சிதைக்கப்பட்ட கலாச்சாரம் அது. அதனால், இங்கு ஐரோப்பியர்களுக்கு ஒரு தீவிரமான சேதி உள்ளது எனப்படுகிறது. நான் அடிப்படையில் ஐரோப்பியன் தான். அதனால், ஐரோப்பிய கலாச்சாரத்திலிருந்து மிகவும் மாறுபட்ட இந்த கலாச்சாரத்தை நேர்கொள்ளும்படி ஒரு தீவிரமான சேதி இங்குள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது. இந்த அமெரிந்தியர்களின் கலாச்சாரங்களிலிருந்து அவர்களுக்கு நிறையவே கற்க வேண்டியுள்ளது.

ஸ்மித்: காலனிய அனுபவம் பற்றியும் நிறைய எழுதுகிறீர்கள். நவீன ஐரோப்பிய கலாச்சாரம் தனது இறந்த காலத்தை இவ்வாறு ஆராய்வது முக்கியம் எனக் கருதுகிறீர்களா?

கிளேசியோ: ஆமாம். ஏனென்றால் எனக்குத் தோன்றுகிறது, ஐரோப்பா, அதோடு சேர்த்து அமெரிக்க சமூகமும் என்று சொல்வேன், காலனிய காலகட்டத்தில் தங்களைத் தந்துவிட்ட மக்களிடம் நிறையவே கடன்பட்டுள்ளார்கள். அதாவது ஐரோப்பாவின் செல்வம் காலனிகளின் சர்க்கரை, பருத்தி ஆகியவற்றிலிருந்து தான் வருகிறதென்று சொல்ல வந்தேன். இந்த செல்வத்தைக் கொண்டு தொழில்மய உலகை உருவாக்கினார்கள். அதனால் அவர்கள் காலனியாதிக்கம் செய்யப்பட்ட மக்களிடம் நிஜமாகவே ரொம்ப கடன்பட்டுள்ளார்கள். அதோடு இந்த கடனை அவர்கள் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

ஸ்மித்: பரந்த இயங்கெல்லை கொண்ட உங்கள் எழுத்து வகைப்படுத்த முடியாதது, ஆனாலும் நீங்கள் எழுதும் போது ஒன்றிணைக்கும் நோக்கம் ஏதாவது உண்டா?

கிளேசியோ: முக்கியமாய் எனக்கு உண்மையாய் இருப்பது, என்னை மிகத் துல்லியமாய் வெளிப்படுத்துவது. எழுத்தாளன் நடப்பவற்றுக்கு ஒருவித சாட்சி மட்டுமே என தோன்றுகிறது. அதோடு எழுத்து ஒரு வழி ... அதுதான் சான்றளிப்பதற்கு, ஒரு சாட்சியாவதற்கு மிகச்சிறந்த வழி.

ஸ்மித்: உங்கள் எழுத்தோடு பரிச்சயம் இல்லாதவர்களுக்கு, ஏதாவது ஆரம்பப் புள்ளிகளை பரிந்துரைக்கிறீர்களா?

கிளேசியோ: ஓ, வேண்டாம். நான் அதற்க்குத் துணிய மாட்டேன். என்ன சொல்கிறேன் என்றால் வாசிப்பு ஒரு சுதந்திர பயிற்சி. நீங்கள் தற்செயலாய் அல்ல, ஆனால் உங்கள் சொந்த உணர்வுகளால் வழிநடத்தப்பட வேண்டும். வாசகர்கள் தாங்கள் விரும்பும் வரிசையில் என் புத்தகங்களை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் வாசிப்பில் வழிநடத்தப்பட வேண்டியதில்லை.

ஸ்மித்: அது ரொம்ப வசீகரமான பதில், நன்றி. சரி, கடைசி கேள்வி. இந்த பரிசு உங்களுக்கு மேலும் மோசமான பிரபலத்தை கொண்டு வரும். அந்த பிரபலத்தை எதாவது குறிப்பிட்ட சேதியை பரவச் செய்ய பயன்படுத்துவீர்களா?

கிளேசியோ: சரி, அதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்! அது ஒரு ... விதத்தில் ரொம்ப மிரட்டலான சந்தர்ப்பம் தான், ஏனென்றால் எனக்கு பரிச்சயமில்லை ... அறிவுரைகள் சொல்லும், என் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. நான் சொல்வேன், அதை விட, என்னை படிப்பதையே முன்விரும்புகிறேன். நான், என்னவிருந்தாலும், நிச்சயமாய் நோபல் அகாதமியில் உரை நிகழ்த்த வேண்டும்; அதனால் அந்நேரத்தில் வெளிப்படுத்த நான் சில அறிவுரைகளை ஒருவேளை கண்டடைவேன்.

ஸ்மித்: ஆக நாம் டிசம்பர் வரை காத்திருப்போம்.

கிளேசியோ: ஆம்.

ஸ்மித்: சரி, ஸ்டாக்ஹாமில் உங்களை எப்படியும் சந்திக்க எதிர்நோக்குகிறோம்; ரொம்ப நன்றி.

கிளேசியோ: நிச்சயமாய் உங்களுக்கும் நன்றி.

ஸ்மித்: அதோடு வாழ்த்துக்கள்.

கிளேசியோ எழுத்து மற்றும் வாழ்க்கை -- சிறு குறிப்பு:

வாழ்க்கை:
பிறந்தது 13 April 1940-இல். அப்பா இங்கிலாந்து குடியுரிமை கொண்ட மௌரீஷியஸ் டாக்டர். அம்மா பிரஞ்சுக்காரர். கிளேசியோ 8 வயதில் நைஜீரியாவுக்கு குடி பெயர்ந்தார். இங்கிலாந்தில் படிக்க ஆரம்பித்து பிரான்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் ஆசிரியப் பணி. பிறகு தாய்லாந்து, மெக்சிக்கோவில் ராணுவச் சேவை. பிறகு பனாமாவில் எம்பெரோ வோனான் பூர்வகுடிகளோடு வாழ்வு. பிரான்ஸில் படிப்பைத் தொடர்ந்து முதுகலைப் பட்டமும், மெக்ஸிக்க ஆரம்ப வரலாறு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். மொரோக்கோவை சேர்ந்த ஜெமியாவுடன் திருமணம்; இரண்டு குழந்தைகள். உலகம் பூரா விரிவுரையாளர் வேலை சம்மந்தமாய் சுற்றியுள்ளார். 2007--2008 காலகட்டத்தில் தென்கொரியாவில் பிரஞ்சு மொழி, மற்றும் இலக்கியம் கற்பிக்கும் பணி.

எழுத்து:
ஏழு வயதில் எழுத ஆரம்பித்த கிளேசியோ, தன் 23-ஆம் வயதில் பிரசுரித்த நாவல் "விசாரணைக்காக" பிரிக்ஸ் ரெனாடோட் விருது பெற்றார். அதற்க்குப் பின் 36க்கும் மேற்பட்ட நூல்கள்:
சிறுகதைகள், நாவல்கள், மொழியாக்கங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், விமர்சனம், குழந்தை இலக்கியம். மொழி, பைத்திய மனம், எழுத்து ஆகியன ஆரம்பத்தில் இவர் கையாண்டதாய் சொல்லப்படும் கருப்பொருட்கள். பிரான்ஸில் சோதனையாளர், புதுமையாளர், புரட்சியாளர் என்று அறியப்பட்டாலும், 1870களின் இறுதியில் இவரது எழுத்து மனநிலை மாறியது. பால்யம், பயணம் போன்ற கருக்களை பயன்படுத்தினார். இவரது பெரிதும் விவாதிக்கப்பட்ட நாவல் "பாலைவனம்".

விருதுகள்:
1963: பிரிக்ஸ் ரெனொடோட்
1972: பிரிக்ஸ் வேலெரி-லாபோட்
1980: கிராண்டு பிரிக்ஸ் மொராண்டு
1997: கிராண்டு பிரிக்ஸ் யுவான்-கியானொ
1998: பிரிக்ஸ் பிரின்ஸ்-டெ-மொனாக்கொ
2008: ஸ்டிக் டேகர்மான்பிரிஸிட்
2008: நோபல் பரிசு
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates