Friday, 14 August 2009
அமைதியும் வன்முறையும்
சுவர்க்க வாசல்
ஈழப்போரில் சிதறின பாலகர்களின்
அடுக்கான வரிசைகள்
கைதெறித்தவர்கள் காலிழந்தவர்கள்
வயிறு கிழித்து வீசப்பட்ட
முகம் சிதைந்த சிசுக்கள்
முன்னவரில் பின்னவர் சாய்ந்து தவழ
தேவன் கட்டளையிட்டார்
பூமியில் மறுபடி உயிர்த்தெழுந்து
கருணை மொழி சொல்லித் தர
வரிசை கலைய
எதிர்பட்ட சாத்தான்
ஆறுமாத சிசு ஒன்றின் முதிராத இதயத்திடம்
உதடு வைத்து கேட்டான்
"உங்கள் தாய்மொழி என்ன?"
யாருக்கும் தெரியவில்லை.
மௌனம் இறுகி காற்று நின்றது.
"ஏதாவது பேசுங்களேன்"
கசியும் குருதியை சிசு
தொட்டுக் காட்ட
சாத்தான் மறைந்தான்.
குருதி காயும் தொறும்
தோன்றிச் சொன்னான்
"கேளுங்கள் கேள்விதான் உங்கள் மொழி"
ரத்தத்தின் குழந்தைகள்
நிற்கவே இல்லை
கடைசிச் சொட்டு குருதியை
போட்டல் பூமி உறிஞ்சும்வரை.
வரிசையில் எஞ்சினவன்
ஒரு பாலகன்.
வடுவற்ற முழு உடலாய்
தேவன் திரும்பினார்
தீர்ப்பு நாளன்று
குருதி காணாமல்
வறண்ட பூமி வெடித்தது
தேவன் உடல் சுருங்கிற்று
உயிர் வற்றியது
அக்கணம்
சிறு விரலால்
அவர் நெஞ்சைப் பிறாண்டினான் இறுதி பாலகன்
தேவன் உயிர்த்தார்
முதற்சொட்டு மழையை அறிந்தது
வானம்
பூமி தளும்பியது
மானிடம் விழித்தது.
கண்மூடுமுன் இறுதி பாலகன்
ஒரே முறை தாய்மொழி பேச வாய் திறந்தான்
தேவன்
உயிப்பித்தார் அவனை
மீண்டும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
மனமும் கண்ணும் கனக்கின்றன. வார்த்தைகள் சொல்லும் வலியுணர்கிறேன்.
ReplyDeleteஆழமான கவிதை!
ReplyDeleteநன்றி !
ReplyDelete