Friday, 14 August 2009
பொதுமையாக்கல் அரசியலும் மெரீனா கவியரங்கமும்
"இலங்கை போரின் காயம் இன்னும் ஆறாத நிலையில் தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக கேள்விக்கு உட்படுத்தும் இக்கட்டுரை நம் வாசிப்புக்கு அவசியமானது."
07-12-2008 அன்று மெரீனாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் இனப்படுகொலை கண்டனக் கவியரங்கில் கலந்து கொண்டு திரும்புகையில் நடைபாதை கடையொன்றில் லஷ்மி மணிவண்ணனின் "குழந்தைகளுக்கு சாத்தான், பெரியவர்களுக்கு கடவுள்" நூலைப் பொறுக்கினேன். இதில் முதல் கட்டுரை "பேச முடியாமல் போகிற பேச்சு" அதிகார மைய அரசியலால் பொதுமையாக்கப்படும் தீவிர எழுத்தாளர்களைக் கண்டிக்கிறது. அன்றைய கவியரங்க மனநிலையோடு ஒட்டி வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அன்று பெரும்பான்மையாய் ஒலிக்கப்பட்ட ஆதங்கம் பேச்சு சுதந்திரம், அதிகார மைய கண்காணிப்பு, கட்டுப்பாடு பற்றியது. லஷ்மி இந்த குரல் ஒடுக்கத்தை, குரல் இழப்பைப் பற்றிப் பேசுகிறார். கவியரங்க பங்கேற்பாளரில் ஒருசாராரின் நிலைப்பாட்டை புரிய இந்த கட்டுரை உதவும். உலகமயமாதல் சூழலில் தனி அடையாளம் பொது அடையாளத்துக்கு, பொதுமைப்படுத்தலுக்கு பலியாகிறது. பொதுவிருப்புகள், தேர்வுகள் வணிக லாபத்துக்கு அவசியம். சர்வதேச உற்பத்திப் பொருட்களின் நுகர்வோனாக மூன்றாம் உலக மனிதன் மாறுமுன் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் இனமேலாண்மை, அரசியல் பார்வையை பிரக்ஞையற்று வரித்துக் கொள்கிறான். இவை ஏற்கனவே பேசப்பட்டவை தான். லஷ்மி இதை மேக்ரோ அளவில் தமிழ்ச்சூழலுக்குப் பொருத்துகிறார். தமிழக அரசியல், ஆதிக்க, செல்வாக்கு சக்திகளோடு தீவிர எழுத்தாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதன் பொதுமை அரசியலைப் பேசுகிறார். தி.மு.கவுக்கு மக்கள் ஆட்சியுரிமை வழங்கியதற்கு அக்கட்சி மத்தியில் கூட்டணியில் உள்ளதன் அனுகூலங்கள் ஒரு காரணம். இதன் ஒரு எதிர்மறை விளைவு தி.மு.க மத்திய அரசால் பொதுமைப்படுத்தப்பட்டு கா.மு.க ஆனது. இதன் அடுத்த கட்ட குறுவிளைவாக கவியரங்கில் "இலங்கை, ஈழம், பிரபாகரன்" போன்ற வார்த்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. "எங்கோ இருக்கும் பிடல் காஸ்டுரோ பற்றிப் பேசலாம், தமிழர் விடுதலைக்காய் போராடும் பிரபாகரன் பற்றிப் பேசத் தடையா" என சில கவிஞர்கள் பொருமியதன் பின்னணி இது தான். நான் கூட இந்த குரலொடுக்கத்தை உணர்ந்தேன். முதலில் கவியரங்கத்தில் ஆளுங்கட்சியின் பச்சோந்திப் போக்கை விமர்சிக்கும் "தேர்தல் வாக்குறுதிகள்" என்ற கவிதையை கலைஞரை மிமிக்ரி செய்து படிக்கும் திட்டம் வைத்திருந்தேன். எதிர்மறை விளைவுகள் பற்றி உள்நடுக்கம் இருந்தது. ஜாமீனில் எடுக்க முடியாது என்று மனைவி திட்டவட்டமாக அறிவித்திருந்தாள். கழக ரௌடிகள் தாக்கலாம். கையில் கத்தி எடுத்துப் போவது என்று முடிவு செய்தேன். இறுதியாய் நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் நரன் அரசுக்கு எதிரான நிலைப்புடைய கவிதைகள் வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்தார். ஆபத்தற்ற மற்றொரு கவிதையை படித்தேன். சுதந்திரமின்மையில் பாதுகாப்பு உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பல அடுக்குகளில் பொதுமை அரசியலாக்கப்பட்டவர்கள். கனிமொழி கழகத்தின் நேரடி தோல்பாவை. தமிழச்சி தங்கபாண்டியன் நிலவில் நடப்பது போல் கால் பதியாமலே முக்கியமான வகையில் பங்கேற்றினார்; ஈடுபாட்டோடு உழைத்தார். கவியரங்க முடிவில் நடந்த நாடகத்தில் காளி வேடத்தில் இவர் நடிப்பதாய் இருந்தது. இறுதி கட்ட கழகக் குறுக்கீடால் அதைத் தவிர்த்து வேறொரு மிதிபடும் சிறு வேடத்தை எடுத்துக் கொண்டார். தமிழச்சி ஒரு நட்சத்திரம் கூட. என் நண்பர் குழு தமிழச்சி அழகுதானா என்று அலசியது. இன்னும் மணமாகவில்லை என்று எண்ணி சிலர் விசனித்தனர் (அவரது கணவர் துணை கமிஷ்னர் அன்று முழுக்க ஜீப்பில் காத்திருந்தார்). வீட்டுக்குப் போனதும் என் மனைவி கேட்டாள்: "தமிழச்சி நேரில் பார்க்க அழகாயிருந்தாரா?" புத்திசாலித்தனமாக "இல்லை" என்றேன்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இன்பா, லீனா, சுகிர்தராணி, நரன் ஆகியோர் அடுத்த அடுக்கு பொதுமையாக்கலை சேர்ந்தவர்கள். கவியரங்கின் பின் இவர்களின் கடுமையான உழைப்பு, பொருட்செலவு, அர்ப்பணிப்பு இருந்தன. நூற்று சொச்சம் எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை நடத்துவது எளிதல்ல. நிகழச்சியை நடத்த குறைந்த பட்ச குரலொடுக்கத்தை அனுமதிக்க இவர்கள் தயார். இவர்களின் சமரசம் இருதரப்பிலானது. கலகக்குரல்களும் ஓரளவு அனுமதிக்கப்பட்டன. உதாரணமாய் அரசு தரப்பின் கட்டுப்பாடுகளை முழுக்க பின்பற்றியிருந்தால் நிகழ்ச்சி துக்க விசாரிப்பு போல் அமைதியாய் நடந்திருக்கும். வாசிப்பதற்கான கவிதைகளை முன்கூட்டியே அனுப்பக் கேட்டிருந்தார்கள். இது தணிக்கைக்காக என்று புரிந்து கொண்டேன். மிகவும் முறைப்படுத்தப்பட்ட ஒரு கதர் குல்லா கவியரங்கயே எதிர்பார்த்தேன். ஆனால் முறைப்படுத்தப்படாமல் நான் நீ என்று பலர் கவிதை வாசிக்க பேர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பாதி கொளுத்திய வாலோடு அனுமார் இலங்கையில் ஓடியது போல் இருந்தது நிகழ்ச்சி. அத்துமீறல்களும் கட்டுப்படுத்தலுமாக. சிலர் ராஜபக்சேவை ஒண்டிக்கு ஒண்டி அழைத்து மண்ணை வாரி இறைத்தனர். பல கவிதைகள் வன்புணர்ச்சி பற்றியவை. இலங்கை ராணுவம் தமிழ்ப்பெண்ணை வன்புணர்வதை படிப்படியாக வர்ணித்த ஒரு கவிஞர் ஜட்டியை மட்டும் மிக நாகரிகமாக "பெண்குறியை மூடிய ஆடை" என்று சுட்டினார். நிலைமை அத்துமீறிப்போக இன்பா உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை கைப்பற்றி அடிக்கடி எச்சரித்தனர். ஒரு கவிஞர் பொருட்படுத்தாமல் பிரபாகரனுக்கு புகழ்மாலை சூட்ட புறப்பட, கோபமான இன்பா அருகில் போல் அவரை கலவரப்படும்படியாய் காதில் ஏதோ சொன்னார். தொடர்ந்து அவர் வாசிக்க பக்கத்திலே நின்று காகிதத்தையே உற்றுப் பார்த்தார். அந்த வீரமிக்க கலகக் கவிஞர் பதறி வியர்த்து வழிந்தார். கவிதையின் இறுதி பத்தியை மட்டும் படித்து விட்டு நழுவிக் கொண்டார். இன்பா மைக்கை பிடித்துச் சொன்னார்: " நாம் நியாயப்படி இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்காக போராட வேண்டும். முடியாமல் தான் கவியரங்கம் நடத்தி நம் உணர்வுகளைக் காட்டுகிறோம். அரசாங்கத்தையோ, தனி நபர்களையோ வெளிப்படையாக கண்டித்து, ஆதரித்து கவிதை வாசித்தால் ஏற்படும் விளைவுகளை அந்த தனிப்பட்ட நபர்களே சந்திக்க வேண்டும், எங்கள் அமைப்பு பொறுப்பாகாது." இலங்கைக் கவிஞர் ஒருவரை மேடையேற்ற வேண்டாம் என நிகழ்ச்சி இடையே அரசுசார்பில் வற்புறுத்தல் வந்ததாய் கேள்விப்பட்டேன். இறுதியாய் வாசித்தவர்களில் இங்குலாபின் கவிதை மறைமுகமானது. அது தெரியாமல் அவர் அறம் பாடப்போகிறார் என்று பயந்த அமைப்பாளர்கள் வாசிக்க வருமுன் மைக்கிலேயே கொஞ்சம் மிரட்டலாய் வேண்டுகோள் விடுத்தனர். பழம்போல் வெள்ளை வேட்டி சட்டையில் தெரிந்த இங்குலாப் தாத்தா பதிலடியாக கவிதையின் பின்விளைவை தானே சந்திக்கத் தயார் என்று கர்ஜிக்க எனக்கு புல்லரித்தது. நான் அன்று உரக்க கைத்தட்டியது அவருக்கு மட்டும்தான். இந்த சங்கடத்தை தவிர்த்து அவர் மேடைக்கு வருமுன் தனிப்பட்ட முறையில் கட்டுப்பாடுகளை தெரிவித்திருக்க வேண்டும்.
இந்த "கலகங்களை", குழப்படிகளை காவல்துறை கவனித்துக் கொண்டுதான் இருந்தது, குறிக்கிடவில்லை. நன்றி. மேடை அருகில் நின்று ஒரு முள்தாடி குடிகாரர் கவிஞர்களை உற்றுப்பார்த்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவரை மட்டும் சிரமப்பட்டு இரண்டு முறை விரட்டினார்கள். ஆனால் உண்மையில் அங்கு கட்டுப்பாட்டு--மீறல் அரசியல் செய்யாதவர்கள் அவரும், சுடுமணலில் படுத்துக் கிடந்து நிகழ்ச்சிப் போக்கை கவனித்த வெள்ளை நாயும் மட்டுமே: தமிழ்ப்பரப்பின் விதூசகனும், பார்வையாளனும்.
பூடகமாக, மறைமுகமாக யாரை வையவும், கொல்லவும் நிகழ்ச்சியில் அனுமதி இருந்தது. மிகச்சிலர் மட்டுமே இந்த சைலன்சர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து அழுத்திப்பார்க்க முயன்றனர்: ரமேஷின் பூனைக் கவிதை போல். கவிதை வாசித்த தமிழக கலகக்காரர்கள் யாரும் தம் வாழ்நாளில் ஒரு குண்டு வெடிப்பை கூட கேட்டிராதவர்கள். போரின் கொடுமை, அவலம், இழப்பு பற்றி இவர்கள் கவிதையில் மிகச்செயற்கையான உணர்ச்சிகளையே வெளியிட்டனர். உதாரணமாய் ஒருவர் இலங்கைப் படைக்கு எதிராய் மிகக் கொந்தளிப்பான ஒரு கவிதையை வாசித்து விட்டு வாயெல்லாம் பல்லாக மேடையிலிருந்து வெளிவந்தார். அன்றைய கவிமேடை ஒரு அபத்த நாடக மேடையாக முடிந்தது. கவிதை வாசிப்பதற்கு பதில் சிலர் சிங்கள அரசுக்கு எதிராக ஆவேசமாய் கூச்சலிட்டது தங்கள் படைப்பூக்கம் மீதான நம்பிக்கை இழப்பாகவே புரிந்து கொள்ள முடியும்: சில தீவிர சினிமா ரசிகர்கள் விரல், நாக்கு, மூக்கு என நடிகர்களுக்கு தபாலில் அனுப்புவது போல். இலங்கைத் தமிழர்களிடம் இருந்து விலகி வாழும் நாம் இனப்படுகொலைகளை பற்றிய நம் அதிர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, நிலைப்பாடுகளை கவிதையின் நுட்பமான மொழியில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். போலியான அரற்றல்களையும், பலவீனமான அச்சுறுத்தல்களையும் எந்த அதிகார அமைப்பும் அஞ்சாது. குழந்தைகளின் காகித ஏவுகணைகளைப் போன்றவை அவை. இலங்கை அரசின் குண்டு தமிழக மண்ணில் விழுந்தால் மட்டுமே நாம் நேரடி போர்ப்பரணி எழுத முடியும். அதுவரையில் ஜாக்கிசானின் மொழிமாற்றப் படங்களுக்கு இணையாகத் தான் நம் கொந்தளிப்பு கவியரங்கங்கள் அமையும்.
இந்த முக்கியமான நிகழ்வு சாத்தியமானதில் திமுக அதிகார மையத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரும் கனிமொழியும் ஆளுங்கட்சி ஆதரவு கோஷங்கள் போடாமல் கண்ணியமாகவே கவிதை வாசித்தார்கள். நன்றி. நண்பனும், தலித்திய சிந்தனையாளனுமான சார்லஸ் "தமிழச்சி, கனிமொழியின் பங்கேற்பு நிகழ்ச்சிக்கு பாதகமே" என்றான். இவர்களின் இருப்பு அரசை காயப்படுத்தாமல் கழைக்கூத்தாடி போல் கயிற்றில் நடக்க அமைப்பாளர்களை நிர்பந்தித்தது என்பது அவனது வாதம். அரசியல் எதிர்ப்போ சாய்வோ வேண்டாம் என்பது அமைப்பாளர்களின் நிலைப்பாடாக இருக்கலாம். அவர்கள் முழுக்க சாயவில்லை என்பதே என் அவதானிப்பு. சார்லஸ் சொல்வதும் லஷ்மி சொல்வதும் ஒன்றுதான். பொதுமை அரசியல்வாதிகளிடம் இருந்து நம்மை அன்னியப்படுத்தினால் மட்டுமே நாம் பொருள்பட இயங்க முடியும். ஆனால் கண்காணிப்பு கட்டுப்பாடுகள் அற்ற அத்தகைய 'தனிப்பட்ட' கூட்டங்களுக்கு இத்தகைய மைய அதிகாரத்தின் குரலையே ஏறத்தாழ எதிரொலிக்கும் ஒரு பொதுமை கவியரங்கின் ஊடக, சமூக கவனம் கிடைக்காது. பொதுஅரங்கில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன், அதிகார மைய ஆதரவுடன் நடத்தப்படும் நிகழ்வுகளின் சமூக வீச்சு அவசியமாக உள்ளது. லீனா நிகழ்ச்சி முடிவில் குறிப்பிட்டது போல் இதுவொரு வரலாற்று நிகழ்வு. ரயில் மறிப்பு, பேரணி போன்று. ஒரு ரயிலை மறிப்பது சாதனை அன்று, அதனால் நேரடி லாபமும் இல்லை. அது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமே.
வரலாற்று நிகழ்வுகளால் புதிய சிந்தனைகளோ, கலாச்சார நகர்வுகளோ சாத்தியமில்லை. அதற்கு மையமற்ற குறுங்குழுக்கள் நடத்தும் விவாதங்கள், படைப்பூக்க வெளிப்பாடுகள் வேண்டும். இணையம் இதற்கு சிறந்த தளம். அரசு அதிகார எல்லைக்கு அப்பாலே அவர்கள் செயல்பட முடியும். புயலடிக்கும் பொதுமேடையில் அல்ல, பொத்திய கரங்களுக்கு உள்ளே தான் இந்த "அக்கினிக் குஞ்சுகள்" வளர்ந்து காட்டுக்குள் பிரவேசிக்க முடியும். இத்தகைய உழைப்பு, ஈடுபாடு, செல்வாக்கு, பணம், நூற்றுக்கணக்கானோரின் பங்களிப்பு தேவைப்படும் இக்கவியரங்கம் போன்ற பொது நிகழ்வுகள் பொதுமைப்படுத்தலுக்கு எதிராய் சூழலைத் தயாரிக்க பெரிதும் பயன்படும். அந்த கண்ணோட்டத்தில் இரண்டு தரப்பினரும் அவசியம். தமிழச்சி, கனிமொழியும் வேண்டும், கலக தனிச்சிந்தனையாளர்கள், கவிஞர்களும் தேவையுள்ளார்கள். இருவரின் அலைகளும் ஒரே பரப்பில் தான் எழுகின்றன. கடவுளும் சாத்தானும் எப்போதும் இருட்டில் சேர்ந்தே நடமாடுகிறார்கள்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment