ஒவ்வொரு நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கும் ஒரு பலவீனம். அந்த ஒரு பந்து போதும் அவர்களை வீட்டுக்கு அனுப்ப. ஆனால் இந்த பலவீன ஆட்ட நாயகர்கள் இந்த பந்தை தவிர்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆடி தாடி நரைத்து டீ.விக்குள் மைக்கை பிடித்து உட்கார்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட் அலசலின் மிகப் பெரிய தமாஷ் இந்த மர்ம ஸ்தானம் தான். 04-05-2009 அன்று நடந்த ஆட்டத்தில் ரெய்னாவின் சரவெடி இன்னிங்சை அலசிய ஸ்ரீனாத் மோவாயை உயர்த்தி சொன்னார்: "அவருக்கு பிடித்த இடத்தில் எதிரணியினர் பந்து வீசுகின்றனர். எகிறும் பந்து ரைனாவுக்கு பலவீனம் என்பதை அடுத்த ஆட்டத்திலாவது நியூசிலாந்து உணர வேண்டும்". 'மோவாய் இசைப்' பந்தை (மோவாயை உரசி பந்து பறக்கும் போது கேட்கும் ஸ்வெய்ங்...) வீசினால் ரெய்னாவை வெளியேற்றலாம் என்று என்ன உத்தரவாதம்?
இப்படி மர்ம ஸ்தானம் கண்டுபிடித்து எதிராளிக்கு தலைவலி கொடுப்பது கிரிக்கெட்டில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. பயன் தரும் என்ற உத்தரவாதம் இல்லை. உதாரணம். ஜெயசூரியாவுக்கு ஆப் ஸ்டம்பில் எகிறும் பந்து. அதை அவர் தூக்கி விளாச பிடிக்க என்று பத்து வருடங்களாய் தவறாமல் தெர்டு மேன் பகுதியில் ஆள் விடுகிறார்கள். ஜெ.சுவுக்கு 38 வயது தாண்டியும் அவர் பந்தை விடாமல் விளாசுவதை இந்த தெர்டு மேன் மின் கம்பம் போல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார். சேவாகுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பலவீனம் தேடி சொன்னார்கள்: விலாவுக்கு எகிறும் பந்து அல்லது உள்வரும் வேகப் பந்து அல்லது ஆப் ஸ்டம்புக்கு வெளியே குறை உயரப் பந்து. கொஞ்சம் திறந்த பாணியில் நின்று ஆப் பகுதியில் பந்தை அடிக்க விரும்பும் சச்சின் உள்வரும் பந்துக்கு பல முறை ஆட்டம் இழந்தாலும் அவருக்கு இன்னும் எந்த பந்து வீச்சாளரும் முற்றுப் புள்ளி வைக்க வில்லை.
இவர்கள் நிலைப்பு மேதைமையின் நிரூபணம் அல்ல. கிரிக்கெட் ஒரு மூளை ஆட்டம் அல்ல என்பதையே இது நிரூபிக்கிறது.
நியூசீலாந்துக்கு இந்திய அணி சென்ற பிறகு ஒரு பேட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் தமது திட்டமிடலே என்று கிர்ஸ்டன் சிலுப்பிக் கொண்டார். இதில் கால்வாசி தான் உண்மை. ஆட்டப் போக்கில் பாதி திட்டங்கள் காற்றோடு போகும். மண்ணில் கோடு வரைந்து திட்டமிட நேரமில்லை. நெருக்கடியான, குழப்பமான சூழல்களில் கூட்டு சேரும் தனிநபர் ஆற்றல் தான் கைகொடுக்கிறது.
ஒரு பிளேட் டிவிசன் பந்து வீச்சாளரிடம் ஒரு டீ.வித்தனமான கேள்வியை ஒரு தடவை கேட்டேன். "எதிரணி மட்டையாளன் பிச்சு உதறுகிறான், யாராலும் அவனது விளாசலை நிறுத்த முடியவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்". "கோணம், நீளம், வேகம் எல்லாம் மாற்றி பந்து வீசிப் பார்ப்பேன்" என்றவர் பதிலுரைப்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் சொன்னது "பந்து வீசாமல் எதாவது ஒரு மூலைக்கு ஓடி விடுவேன்".
நியூசிலாந்து போவதற்கு முன் அங்குள்ள பருவ நிலை, வேகமான விக்கெட்டுகள் பற்றி பல முன்னாள் வீரகள் டீ.வியில் திகில் சரடு விட, ஜெடேஜா ஒன்று சொன்னார்: " நாங்கள் பண்டிதர்கள் டீ.வியில் சொல்லும் அபிப்பிராயங்களை தயவு செஞ்சு ஆட்டக்காரர்கள் கேட்க வேண்டாம்". அப்போது நிகழ்ச்சி அமைப்பாளினி குறிக்கிட்டு "என்ன அஜய், இப்படி உண்ட வீட்டுக்கு பாதகம் செய்கிறீர்களே?" என்றார். ஜடேஜா புன்னகை மாறாமல் சொன்னார்: " நாங்கள் பேசுவது மக்கள் கேட்டு ரசிக்க. ஆட்டவீரர்கள் இதை கவனிக்காமல் தங்கள் இயல்புபடி ஆட வேண்டும்".
கிரிக்கெட் மூளை ஆட்டம் அல்ல. துணைபிரக்ஞை மனதோடு ஒருங்கிணைந்து சமனிலை பெறும் உடல் ஆற்றலின் வெளிப்பாடு.
ஒரு ஆட்டக்காரரின் பலவீனம் சில சமயம் அவரது ஆட்ட பலத்தின் பக்க விளைவு தான். சேவாக் நடு குச்சிக்கு சற்று விலகி நின்று ஆடுவதாலே இத்தனை சிறப்பாய் அவரால் சீரான பந்துகளையும் ஆப் பகுதி எல்லைக் கோட்டுக்கு விரட்ட முடிகிறது. இதன் பக்க விளைவாய் அவரால் கூர்மையாய் உள் நோக்கித் திரும்பி வரும் பந்தை தடுக்க சில நேரம் முடிவதில்லை, பவுல்டாகி விடுகிறார். மற்ற மட்டையாளர்கள் நேராய் தட்டும் பந்தை சேவாக் ஆப் பகுதிக்கு விளாச முயன்று தன்னிச்சையாய் அதை தன் குச்சிக்கே திருப்பி விட்டு வெளியேறுவதுண்டு. பார்ப்பவர்களுக்கு சேவாக்கை காப்பாற்ற ஆயிரம் யோசனைகள் தோன்றும். அவற்றை பின்பற்றினால் அவர் டிராவிட் ஆகி விடுவார். தனது வெற்றிக்கு அவர் கொடுக்கும் விலை தான் இந்த பக்கித்தனமான வெளியேறல்கள்.
ஆகாஷ் சோப்ரா என்ற முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் Beyond the Blues என்ற சமீபத்திய நூலில் இந்த சூட்சுமங்களை பேசுகிறார். இவர் அதிகமான முறைகள் எல்.பி.டபுள்யூ முறைப்படி வெளிறுபவர். இதற்கு இவர் பந்தை ஆப் பகுதியில் அடிக்கும் பொருட்டு கொஞ்சம் பாணியில் நிற்பதுதான் காரணம். 'இந்த முறைப்படி தான் மூன்று இரட்டை சதங்களை ஒரே பருவத்தில் அடித்தேன். அவ்வப்போது இந்த குறையால் ஆட்டம் இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை' என்கிறார்.
இந்த 'கோட்டை பிடித்தல்--ஓட்டை விழுதல் கோட்பாட்டை' வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கிறேன். உள் கருவேந்தல் முறை உருவானது தான் ஆணாதிக்கத்திற்கு காரணம். மனித பரிணாமத்தின் ஒரு முக்கிய திருப்புமுனை உடலுக்குள் கருவை உருவாக்கி பாதுகாப்பாய் வளர்த்து வெளிவிட முடிந்தது. இதற்கு முன், உயிர்கள் காற்றில் அல்லது தண்ணீரில் மகரந்தம் / விந்து / முட்டைகளை (தாவரம், தவளை, மீன்) பறக்க / மிதக்க விட்டு இனப்பெருக்கம் செய்தன. இதனால் நிறைய ஆற்றல் விரையம். உதாரணமாய் தவளைக்கு ஒரு கோடி முட்டைகளை வீணடித்த பிறகு தான் சில குஞ்சுகளை கொள்ளி போட கிடைக்கிறது. வயிற்றுக்குள் வளர்ப்பதால் கரு பாதுக்காப்பாய் வளர்ந்து அது நிலைப்பதும் ஏறத்தாழ உறுதி ஆனது. ஆனால் இந்த பரிணாம திருப்பத்தில் மற்றொரு பிரச்சனை. உள்ளுக்குள் கருவளர்க்கும் உயிருக்கு குழந்தை தனது என்பதை நிச்சயப்படுத்த வேண்டும். உதாரணமாய் வயிற்றுக்குள் ஒரு வருடம் கரு வளர்க்கும் மனிதனுக்கு ஆற்றல் முதலீட்டை அடுத்தவன் குழந்தைக்காக வீணடிக்க முடியாதே? இங்கு கற்பு, சாதி, அதன் விளைவாய் ஆணாதிக்கம் உருவாயின. பெண்கள் மீதான அத்தனை வன்முறைக்கும் இந்த உள் கருவேந்தல் முறை ஒரு தொடக்கப் புள்ளி மற்றும் காரணம். இந்த ஆணாதிக்கம் மனிதனுக்கு மட்டும் உள்ள நோயல்ல. பல பூச்சிகள், விலங்கு, பறவைகள் பெண் துணையை வன்புணர்வதை, காயப்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆணாதிக்கத்தை நிறுவுவதே இதற்கு உத்தேசம். ஆக, உள் கருவேந்தல் முறை மகப்பேறை பல மடங்கு பத்திரப்படுத்தி உயிர்களுக்கு வரமாய் அமைந்தால், பெண்களுக்கு சாபமாயிற்று. சாதி வெறியர்கள், கற்பழிப்பாளர்களில் இருந்து ராமசேனையினர் வரை உருவானதற்கு காரணம் இதுவே. கற்பனை செய்து பாருங்கள், தவளை போல் கருவை வெளியே விட்டு வளர்ப்பதானால் நம் வரலாறே வேறு விதமாய் இருந்திருக்கும். பெண்கள் நிர்வாணமாய் திரிந்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அது போல் பெண்ணிய சிந்தனையும் இருக்காது. சாதி உணர்வும் இருக்காது. தகப்பன் யாரென்ற பிரக்ஞை இல்லாத பட்சத்தில் சாதியாவது புடலங்கையாவது.
Friday, 14 August 2009
தோல்விக்கு காரணமாகும் வெற்றி: கிரிக்கெட்டிலிருந்து கற்பு வரை
Share This
Labels:
அறிவியல்
,
கிரிக்கெட்
,
பெண்ணியம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment