Friday, 14 August 2009

ஜென்னும் கவிதைக் கலையும்: ஜேன் ஹிர்ஷ்பீல்டுடன் ஒரு சந்திப்பு --- முதற்பகுதி




ஜேன் ஹிர்ஷ்பீல்டு -- வாழ்க்கைக் குறிப்பு

ஜேன் ஹிர்ஷ்பீல்டு ஆறு கவிதை நூல்களை எழுதியுள்ளார். சமீபமாய் இவர் வெளியிட்டது பிறகு (ஹார்ப்பர் காலின்ஸ், 2006). இது டி.எஸ் எலியட் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. தரப்பட்ட சக்கரை தரப்பட்ட உப்பு எனும் நூல் தேசிய நூல் விமர்சகர் வட்ட விருதுக்கான இறுதிச் சுற்றை அடைந்தது. பேய் ஏரியா நூல் விமர்சகர் விருதைப் பெற்றது. ஒன்பது வாசல்கள்: கவிதை மனதுக்குள் நுழைவு எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மைக்கறுப்பு நிலவு: ஓனோனோ கொமாச்சி மற்றும் இசூமி ஷிகிபூ ஆகிய ஜப்பானிய சபை மகளிர் கவிதைகள் (1990) மற்றும் பரம்பொருளைப் போற்றி மகளிர்: பெண்களின் நாற்பத்தாறு வருட ஆன்மீக கவிதைகள் (1994) ஆகிய நூல்களை மொழிபெயர்த்து தொகுத்துள்ளார்.

கவிஞர் ரோசன்னா வாரன் இவரது எழுத்துலகைப் பற்றி சொல்லியுள்ளது:

சொற்றொடர் பிரிவு, பிரிவாக, படிமம் படிமமாக, மொழியில் ஒரே நேரத்தில் புதிராகவும், சாதாரணத்தன்மையோடும், ஹிர்ஷ்பீல்டின் கவிதைகள் யோசனைக்கும், மாற்றத்திற்குமான வெளியை திறந்து வைப்பன

கவிதை மைய புத்தக விருது, குகெய்ன்ஹெய்ம், ராக்பெல்லர் நிதியேற்பாட்டு நிறுவனங்களின் ஆதரவூதியங்கள், கொலொம்பியா பல்கலையின் மொழிபெயர்ப்பு மைய விருது மற்றும் காமன்வெல்த்து கிளப்பின் கலிபோர்னியா கவிதைப் பதக்கம் ஆகியவற்றை ஹிர்ஷ்பீல்டு பெற்றுள்ளார். 2004-ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தின் போது, இவருக்கு சிறந்த கவிதை சாதனைக்காக 70-வது கலைக்குழு ஆதரவூதியம் அமெரிக்க கவிஞர்கள் கலைக்குழுவால் வழங்கப்பட்டது. யூசி பெர்க்கெலே, சான் பிரான்சிஸ்கோ பல்கலை மற்றும் பென்னிங்டன் கல்லூரியில் பயிற்றுவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வாழ்ந்து வருகிறார். அங்குதான் தோட்டம் மற்றும் விரிகுடாவை எதிர்நோக்கும் அவரது வீட்டில் ஹிர்ஷ்பீல்டை பேட்டி கண்டோம்.



இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: உங்கள் வாழ்வை கவிதை மற்றும் ஜென் பௌத்த பயிற்சிக்கு அர்ப்பணித்துள்ளீர்கள். இவ்விரு உட்கூறுகளும் உங்களை வரையறை செய்ய நேர்ந்தது எவ்வாறு?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: ஒரு பதில்: என் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் நான் ஹொரேஸ், தோரோ, ஜப்பானிய மற்றும் மற்றும் சீன செவ்வியல் கவிதைகள், நான்கன் தொகுதி (டெ. எஸ். எலியட்), மற்றும் விட்மன் படித்தேன். மற்றொரு பதில்: 1974-இல் மஞ்சள் முறுக்குச்சாயத் திரைகள் கொண்ட ஒரு சிவப்பு டோட்ஜ் வேனில், தங்க இடமும், எழுதுகையில் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று நான் கருதிய மேசைப்பணிப்பெண் வேலையும் தேடி காலிபோர்னியா வந்தேன். ஆனால் வழியில் ஒரு சுற்று வழிப் பயணம் மேற்கொண்டேன். ஜென் பற்றி அறிவதற்கான குறுகுறுப்பும், ஆர்வமும் உடைய நான், பிக் சர்ரிலுள்ள் வெந்தானா வைல்டர்னெஸ் தீவில் தஸாஜாராவில் ஒரு மடாலயம் உண்டென்று அறிந்திருந்தேன். கண்டிப்பு மிகுந்த குளிர்கால பயிற்சிக் காலம் அல்லாமல் அது கோடை விருந்தினர் காலம் ஆகையால், ஆபத்தான 14-மைல் நீளமுள்ள ஒரு சிதிலமடைந்த சாலையில் பயணித்து, ஒரு வாரம் விருந்தினர் மாணவியாக என்னால் தங்க முடிந்தது. பிறகு அது போன்ற பல வாரங்கள் சான் பிரான்சிஸ்கோ மற்றும் முயிர் பீச்சிலுள்ள அதே மரபு வழியிலான ஒரே வகைப்பட இரு பயிற்சித் தலங்களுக்கு சென்றேன். பௌத்தம் என்றால் என்னவென புரிந்து கொள்ளும் வரை அங்கேயே சில மாதங்கள் தங்கியிருக்க முடிவு செய்தேன். சில மாதங்களுக்குப் பின் நாம் புரிந்து கொள்வதென்னவெனில் பௌத்தம் என்றால் என்னவென நமக்கு ஏதும் தெரியாதென்பதே. நான் 8 வருடங்களுக்கு முழுநேர ஜென் மாணவியனானேன், அதில் மூன்று வருடங்கள் மடாலயப் பயிற்சி மேற்கொண்டேன். இந்த காலகட்டத்தை என் வாழ்வின் மத்தியிலுள்ள வைரம் என்று கருதுகிறேன். நான் இப்போது எதுவாக இருக்கிறேனோ அது அவ்வனுபவத்தில் இருந்து உருவானதே.

கத்தோலிக்க மதம் போலன்றி, பௌத்தத்தில் மடாலயத்தை விட்டு நீங்குவதென்பது தோல்வியோ, விலக்கமோ அல்ல. மடாலயம் என்பது ஒரு பயிற்சிக் களம்; ஜென் பயிற்சியின் மரபுவழி மாதிரிப்படிவங்களில் ஒன்று சாதாரண உலகிற்கு, சாதாரண வாழ்விற்குத் திரும்பிச் செல்லலே. "பத்து காளை மேய்ச்சல் ஓவியங்கள்" எனும் புகழ்பெற்ற சித்திர வரிசை ஒன்று உண்டு, புரிதலின் பாதையை அது சிரமம், சாத்தியமின்மை மற்றும் அற்புதத்தினூடே சென்று மீண்டும் இறுதியில் சாதாரண அங்காடியை வந்தடைவதாய் காட்சிப்படுத்தும். ஜென்னில் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடித்த விஷயங்களில் ஒன்று தீவிர பயிற்சி மற்றும் திரும்புதல் ஆகியவற்றின் இந்த மாதிரிப்படிவம் தான்; மற்றொன்று, ஆத்மீகம் நிபுணர்களுக்கானது மட்டுமல்ல, மாறாய், அது தண்ணீரைப் போன்றது---சர்வவியாபி. சராசரி வாழ்விற்கு நான் திரும்புவேன் என்றே எப்போது நினைத்தேன். இறுதியில் நிகழ்ந்தது என்னவென்றால், நான் வெளிவந்த போது கவிதை எனக்காகக் காத்திருந்தது.

பௌத்தத்தின் ஒரு மையக் கருத்து எதுவும் நிலைப்பதில்லை என்பதே. காதலோ, மடாலயங்களோ, வாழ்க்கையோ கூட. எந்த பட்சத்திலும் யாரும் வாழ்க்கை முழுமைக்குமாய் ஜென் மடாலயம் நுழைவதில்லை, துறவிகள் கூட. அது ஒரு பயிற்சிச் சூழல், கலையாத கவனத்தின் வாசனையை அறிவதற்கு, மனஉலைவின்றி, தீவிரமாய் பயிற்சி கொள்ளும் காலம்.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: மடாலயத்திலிருந்த போது உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக எழுத்து இருந்ததா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: தசாஜெராவில் நானிருந்த வருடங்களில் நான் எழுத்தாளர் அல்ல, நானொரு துறவி. எல்லாம் மிகக் கண்டிப்பாகவும், எளிமையாகவும் இருந்தது. "ஜென் பயில்வது தவிர வேறெதுவும் செய்ய வேண்டாம்" என்று எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது; அந்த மூன்று வருடங்களில் நான் ஒரு ஹைக்கூ மட்டுமே எழுதினேன். ஆனால் நான் கவிதைக்குத் திரும்பிய போது, ஐயமின்றி பல விதங்களில் ஒரு வித்தியாசமான நபராக, ஒரு எழுத்தாளனுக்கு மிக உபயோகமான இரு விஷயங்களை நான் கொண்டிருந்தேன்: மடாலய மாதிரிப்படிவமான மனச்சிதறல் இன்மை, மௌனம், மற்றும் முழு கவனத்தை பிரயோகிக்கும் விருப்பம். ஒரு தருணத்தில் நிலைப்பதும், அதை என் உடல், மனம் வாயிலாய் ஆராய்வதுமே வாழ்வின் அப்புள்ளியில் நான் கற்றுக் கொள்ள மிக அவசியப்பட்டவை. என் அனுபவத்தினுள் அச்சமின்றி தங்குவது. அதனால் தான் நான் ஒரு பட்டப்படிப்பு பள்ளிக்குப் போவதற்குப் பதில் ஜென் பயில்வது அவசியப்பட்டதென நினைக்கிறேன். அனுபவத்தினுள் உறைவது எப்படியென தெரிவதுவரை உங்களால் எழுத முடியாது.


எம்.எப்.ஏ நிகழ்ச்சிகள் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு விதத்தில் மோசம் அல்லது கேடு என்று எண்ணுபவர்களுள் நானும் ஒருவள் அல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னை பொறுத்தமட்டில் அது ஒரு அதிகபட்சமான தொடர்ச்சியாய் இருந்திருக்கும். வாழ்வின் வழக்கமான வடிவங்கள், வழிமுறைகளை உதறிவிட்டு வெளிவர வேண்டியிருந்தது. மேலும் எனக்கு விரிவானதொரு கல்வித்தளம் தேவைப்பட்டது. இது கொஞ்சம் உடலியல் ரீதியானது. நான் நியூயார்க் நகரின் கீழ்க்கிழக்குப் பகுதியில் வளர்ந்தவள். வனத்தின் மத்தியில் உள்ளது தசாஜரா. மின்சாரமில்லை, வெப்பமில்லை. குளிர்காலத்தில் பிளாஸ்டிக் ஜன்னல்கள், கோடையில் திரைகள், கழுவுப் பாத்திரத்தில் குளிர்நீர், வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே. மானிடர் முன்னேறி வந்த காலத்தில் வாழ்ந்த விதத்திற்கு நெருக்கமாய் வாழ்தல் மாற்றம் ஏற்படுத்துவதாய், புத்துயிர் அளிப்பதாய் அமைந்தது. நமது சாதாரண பண்பாட்டால் ஒருபோதும் சாத்தியப்படாத வழிகளில் அடிப்படைகளை அது கற்றுத் தந்தது. நம்முள் என்ன நேர்கிறதோ அதைக் கண்டு அஞ்சி ஓடாமல் இசைவு கொள்வதெப்படி என்பதையும் ஜாஜென் தியானம் கற்றுத் தருகிறது. பலமணி நேர தியானத்திற்குப் பின் எது நிகழ்கிறதோ அதனோடு இருத்தல் சாத்தியமே என நாம் கண்டறிவோம். கவிதை எழுத விழைவோருக்கு உபயோகமான திறமைகள் இவை.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: மடாலயத்தில் உங்கள் அன்றாட வாழ்வு எப்படிப்பட்டது?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: துயிலெழுப்பு மணி காலை 3:30க்கு ஒலிக்கும். 4:00 மணிக்கு ஆரம்பமாகும் ஜாஜென்னுக்கு முன், ஒரு கோப்பை குழம்பி தயாரிக்க நான் சற்று முன்னரே எழுந்து விடுவேன். பிறர் தேநீர் சடங்கில் பயன்படுத்தப்படும் பச்சைத் தேநீரான மாச்சா தயாரிப்பார்கள்; அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூங்கிக் கொள்வார்கள். ஆனால் நான் எப்போதும் ஒரு கோப்பை குளம்பி தயாரிப்பேன். அது அப்போது, இப்போதும் கூட, எனது பிரம்மாண்ட காலை ஆடம்பர வசதி. என்னிடம் ஒரு சாராய அடுப்பிருந்தது; மேலும் அதன் அலுமினிய குடுவையில் எந்த அளவு மட்டும் சாராயம் ஊற்றினால் தண்ணீர் கொதிக்கும் என எனக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. நீர் கொதித்ததும் எரிபொருள் தீர்ந்து, தீ கிளர்ந்தெழுந்து அணையும். அது ரம்மியமான ஒரு நீல ஒளியை பரப்பும்.

அவ்வருடங்களின் வழமையின் தினசரி கால அட்டவணைப்படி இரு 40-நிமிட அளவுகளிலான ஜாஜென் தியானம், இவற்றினிடையே பத்து நிமிட நடைதியானம், காலை வழிபாடு, ஜெண்டோவில் (தியான மண்டபம்) சிற்றுண்டி, வாசிப்பறை, மீண்டும் தியானம் அல்லது சிலநெரம் உரை, குறுகிய காலக்கூறுக்கு வேலை, பிறகு மீண்டும் ஜெண்டோவில் மதிய உணவு. ஒரு ஜென் மடாலயத்தில் உணவு மௌனமாய் அருந்தப்படும்; ஒரியோக்கு எனப்படும் இது, தேனீர் சடங்கைப் போன்று, மரபொழுங்குப் படி உணவருந்தும் முறை, ஒவ்வொரு சைகையும் கவனமுடன் செய்யப்படும், அதற்கானதொரு நிகழ்த்து முறைப்படி நடைபெறும். ஒவ்வொரு கணத்தையும் மைய நோக்கத்தின் ஒரு சரிசமமான பகுதியாக்குவதே, எந்த மரபிலாயினும், மடாலய வாழ்வின் செயல் நோக்கமாக உள்ளது---திட்டமிடப்படாத காலம் கூட ஓய்வு நேரம் அல்ல. உங்கள் வாழ்க்கையே பயிற்சிக் களம் எனும் போது, நீங்கள் எங்கு செல்ல முடியும்? மத்தியானம், மற்றொரு வேலைப் பொழுது, குளியல் நேரம், பிறகு மாலை வழிபாடு. தியான மண்டபத்தில் இரவுணவு, மேலும் தியானத்திற்கான இரு காலக்கூறுகள், மற்றும் தூக்கம்.

சிலநேரம் மூன்று மாத பயிற்சிக் காலங்களில், நாங்கள் காலை 2:30க்கே துயிலெழுந்து தொடர்ச்சியாய் ஜெண்டோவிலே தங்கியிருபோம், ஒருவேளை 10:30 அல்லது 11 மணி அல்லது நள்ளிரவு வரை. செஷ்ஷின் எனப்படும் இது, ஒரு வாரகால அளவிற்கு நீளும். அட்டவணைப்படியான வழக்கமான நாளில் பெரும்பாலான பொழுதை மௌனமாய் கழிப்போம். வேலைக் காலக்கூறின் போது நீங்கள் அரட்டையடிக்கக் கூடாது, வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பிரக்ஞை நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதில் உறைகிறது. இது ஒரு லட்சியபூர்வ விவரணைதான். எல்லோரும் மன அலைவுறுவோம்; ஒவ்வொருவரும் தாம் மடாலய வாயிலைத் தாண்டி காலடி வைக்குமுன்பான கணத்தில் எப்படி இருந்தனரோ அதே மனநிலையை மடாலயத்திற்கு தங்களுடன் கொண்டு வருகின்றனர். ஆனால் கால அட்டவணை மற்றும் பயிற்சி சார்ந்த விஷயங்களும், உங்களுடன் உள்ள 40 அல்லது 50 மக்களும் நீங்கள் ஏனிந்த வாயிலைத் தாண்டி நுழைந்தீர்கள் என்பதை நினைவூட்டுவார்கள். அதனால் நீங்கள் மறக்க நேரிடும் போது அப்போதைய தருணத்திற்கு மனம் மீட்டெடுத்து வரப்படுகிறது: உங்களுக்கும் உங்கள் செயலுக்கும் இடையே உள்ளது பிரிவா அல்லது உறைவுணர்வு மற்றும் நெருக்கமா என்பதை கவனிக்க நினைவூட்டப் படுவீர்கள்.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: அந்த வருடங்களில் எழுதுவது பற்றி சிந்தித்தீர்களா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: எழுத விரும்பியிருந்தால் வேறு எங்காவது சென்று எழுதிக் கொண்டிருந்திருப்பேன். எதை செய்து கொண்டிருந்தேனோ அதைச் செய்யவே விரும்பினேன். அதைச் செய்யாமல் இருந்திருந்தால் நானொரு குறிப்பிடும்படியான எழுத்தாளராக மாட்டேன் என்று எனக்கு ஏதோ ஒரு நிலையில் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறு விஷயங்களுக்கு நகர்வதற்கு முன் மனிதராய் இருத்தல் பற்றி சில விஷயங்களை நான் கற்க வேண்டியிருந்தது.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: உங்களுடைய கட்டுரைத் தொகுப்பான ஒன்பது வாயில்களில் நீங்கள் இவ்வாறு எழுதுகிறீர்கள்: உலக வாழ்வில் மூழ்குவது, பிறரில், மானிட எல்லைக்குப் புறம்பானவற்றையும் சேர்த்து, உறைவு கொள்ள, அவர்களுக்காய் பேச சுயவிருப்பம் கொள்ளல் போதிசத்துவருக்கான பயிற்சி மட்டுமே அல்ல, எழுத்தாளருக்குரியதுமே. அதே நேரத்தில் எழுதுவதன் பொருட்டு சுயத்தின், மௌனத்தின் ஆழத்திற்கு மேலும் செல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். சுயத்திற்குள் ஆழமாய் செல்வதன் அவசியத்திற்கும், உலகினோடு ஆழமாய் தொடர்புறுத்துவதற்கான அவசியத்திற்கும் இடையேயுள்ள் இந்த எதிர்முரண்தன்மையை எவ்வாறு சமரசம் செய்கிறீர்கள்?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: இதற்கான சிறந்த பதில் ஒருவேளை 13 ஆம் நூற்றாண்டு ஜென் குரு டோஜன் சென்ஜியினுடையதாகவிருக்கும் இருக்கும். அவர் சொன்னார்: செல்லும் வழியைக் கற்பது சுயத்தைக் கற்பதாகும்; சுயத்தைக் கற்பது அதை மறத்தலாகும்; சுயத்தை மறத்தல் பத்தாயிரம் விஷயங்களைப் பற்றி விழிப்படைவதாகும். இதன் பொருள், நீங்கள் உங்கள் தோலைத் தாண்டி வெளியே குதித்து பிறருடன், மனிதரோ, மூங்கில் நாற்காலிகளோ, நெருக்கம் பாராட்ட வேண்டும் என்றல்ல. உங்கள் வாழ்விலுள்ள ஊடுருவல் தன்மையால் தான் நெருக்கம் உதயமாகிறது. நாம் இங்குள்ளோம். இந்த உடல்களில் உள்ளோம்; இந்த மனங்களில் உள்ளோம்; இந்த இதயங்களில் உள்ளோம்; இந்த ஆன்மாக்களில் உள்ளோம். உங்கள் இரு கால்களைக் கொண்டே உலகில் நடக்கிறீர்கள்; உங்களுக்கு தரப்பட்டுள்ள இந்த வாழ்வினூடே, எளிய வாழ்வினூடே, உங்கள் நாவால், கண்களால் தான் நெருக்கம் ஏற்படுகிறது. சுயத்தினுள், மௌனத்துள் ஆழமாய் செல்வதற்கும், ஜன்னலுக்கு வெளியே ஒரு முதிய ஆப்பிள் மரத்தை அல்லது உங்களுக்கு எதிரே பேருந்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணைக் காண்பதற்கான ஊடுருவல் தன்மையை கண்டடைவதற்கும் இடையே எதிர்முரண்தன்மை ஒரு போதும் இல்லை. நம் கண்களால், நம்மால் பார்க்க முடிகிற ஒரே வழி இதுதான். மற்றவை எல்லாம் ஏதாவது பிளாட்டோனிய கருத்தே, எனக்கு ஆர்வமூட்டும் பாதை அல்ல அது.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: நீங்கள் முதலில் பௌத்தராயிருந்து கவியானீர்களா, அல்லது கவியான பின் பௌத்தரானீர்களா?
ஜேன் ஹிர்ஷ்பீல்டு: இவ்வாறு யோசிக்கையில் இக்கேள்வி என்னை கட்டுப்படுத்துவதாய் உணர்கிறேன். எந்த கணத்தில் ஒரு நபர் இதுவோ அதுவோ ஆகிறார்? ஒருவரை குறிப்புத் தொகைப்படுத்துவது இருத்தலின் சாத்தியங்களை முடித்து விடுவதாகும். ஆனால் நீங்கள் கேட்கின்ற பொருளில், சாதாரண உரைப் பொருளில், சொல்வதானால் கவிதை முதலில் வந்தது. எழுதக் கற்றவுடனே கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதல் நூல் வெளிவந்த போது, எனக்கு 29 வயதிருக்கும்போது, என் அம்மா துணி அலமாரியின் கீழ்த்தட்டிலிருந்து நான் இரண்டாவது வகுப்பில் இருக்கும்போது தரப்பட்ட ஒரு பெரிய காகிதத்தை வெளியே எடுத்தார், அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: "நான் வளர்ந்த பிறகு எழுத்தாளராக வேண்டும்". அது எங்கிருந்து வந்ததென்று எனக்கு தலைகீழ் புரியவில்லை. ஆனால் எனக்கு நானே, தனிமையில், திறந்து கொள்வதற்கான ஒரு சுயத்தை செதுக்க, எனக்கானதொரு வாழ்வை, பிறருக்கு சொந்தமல்லாத ஒன்றை, தேடிக்கொள்ள எழுத்தே எனக்கான வழியாயிருந்தது.

இருந்தும், எனக்கு இவ்விரு பாதைகளும் ஆரம்பத்திலிருந்தே பின்னிப்பிணைந்திருந்தன---கிழக்கு 20வது தெருவில் ஒரு எழுதுபொருள் கடையிலிருந்து நான் வாங்கிய முதல் கவிதை நூல் ஒரு டாலர் விலையுடைய பாப்பர் பிரஸ் பிரசுரித்த ஜப்பானிய கவிதை நூலாகும். எனக்கு எட்டு வயதிருந்திருக்கும். என்னை அக்கவிதைகளை நோக்கி எது பலமாய் ஈர்த்தது என்றோ, அந்த வயதில் அவற்றில் நான் என்ன கண்டேன் என்றோ தெரியவில்லை, ஆனால் என் வாழ்வில் நான் நிச்சயமாய் கொண்டே ஆக வேண்டும் என்றுணர்ந்த ஒன்றை நான் அடையாளம் கண்டேன். அப்பாதை எப்போதும் வட்டவடிவானதாய் இருந்துள்ளது. கவிதை என்னை ஜென்னிடம் அழைத்துச் சென்றது, ஜென் என்னை கவிதையிடம் திருப்பித் தந்தது. 1985-இல் ஜப்பானிய செவ்விலக்கிய சகாப்தத்தின் இரு மிகச்சிறந்த பெண் கவிஞர்களின் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பான மைக்கறுப்பு நிலாவின் இணைமொழியாக்கத்தை மேற்கொண்டேன், எனக்கு 17 வயதிருக்கும் போது இவர்களின் சில கவிதைகளை முதலில் ஆங்கில மொழியாக்கத்தில் படித்திருந்தேன். காமவேட்கையிலும், பௌத்த கருத்துப்பாங்குகளிலும் தோய்ந்த அவர்களது கவிதைகள்தாம் என்னை பாதி ஜென்னை நோக்கித் திருப்பியதும், பாதி என் கவிதையுணர்வை வடித்ததும்---கவிதை இயக்கம், பணி ஆகியவை சார்ந்து. இந்த மகளிரின் படைப்புகள் சார்ந்து பிற்பாடு பணி புரிவேன் என்று அப்போது சற்றும் நான் எண்ணியிருக்கவில்லை. ஏதும் எண்ணியிருந்தாலும், யாரும் பயணித்திராத பாதை அது என்று மட்டுமே. அந்த நூல் நிலைக்க வேண்டும் என்றும் தோன்றியது; 15 வருடங்கள் யாரேனும் அதனை மொழியாக்கம் செய்ய காத்திருந்தேன், எதிர்பாராமல் அந்த வாய்ப்பை நானே கண்டடையும் வரை. ஆனால் பாருங்கள், ஒவ்வொரு செயல்வகையும்---கவிதை, ஜென்--என்னை எப்போதும் பிறிதில் திருப்பித் தந்தவாறு இருந்துள்ளது. இதுவரை அவை என் வாழ்வின் வலது, இடது கால்களாக இருந்து வந்துள்ளன. இது அதிகவர்ச்சியாய் தெரிகிறதென ஊகிக்கிறேன். ஆனால் உள்ளிருந்து, இவ்வாழ்வு மிகச் சாதாரண செயல்வழியாகவே தோன்றிவந்தது, ஒரு வாய்ப்பை மற்றொன்று தொடர.


இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: தன்முதன்மை பற்றிய கேள்வி எனும் உங்கள் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறீர்கள்: தன்முதன்மைக்கு தொலைவு அயல்வாழ்வுக்கான மனப்பான்மை தேவைப்படுகிறது. உங்களுக்குக் கிடைத்த தொலைவு அயல்வாழ்வு அனுபவங்கள் மற்றும் அவை உங்கள் படைப்பை செறிவூட்டின விதம் பற்றி சொல்வீர்களா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: நான் எப்போதும் உணர்ந்த அயல்வாழ்தன்மை என்னை ஜென்னைப் பயில தூண்டியது என்று நினைக்கிறேன். ஜென் எனக்கு சாதகமாய் இருந்தது என்றும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஆனால் சரியான ஆன்மீகப் பாதை ஒன்று மட்டுமே என நான் நிச்சயமாய் நம்பவில்லை---எவ்வளவு மக்கள், ஒருவேளை, குருவிகளும், தவளைகளும், கூழாங்கற்களும் சேர்த்து, உளரோ அத்தனை ஆன்மீகப் பாதைகளும் உளன. இருப்பினும், என்னைப் பொறுத்தவரை லௌகீக இருப்பிலிருந்து அயல்வாழ் தன்மை கொள்ளும் நிலையே என்னை ஜென் மற்றும் கவிதை நோக்கி கொண்டு சென்றது. ஒருவேளை சமகால நகரவாழ்வே ஒருவகை தொலைவு அயல்வாழ்வு தான் அல்லவா; ஒருவேளை அது குடும்பம் சார்ந்து, ஆன்மிகம் சார்ந்து இருக்கலாம். இறையைப் போற்றும் பெண்களில் தாவோ கவிஞர் யூசுவான்ஜி தனது ஒரு கவிதை முடிவில் சொல்கிறார்: கடுங்காற்று கொண்டு செல்லும் இடமெல்லாம் என் வீடு. குழந்தையாயிருக்கையில் நான் உணர்ந்தது இதைத்தான். என் கவிதைப் பணியில் மேலும் மேலும் பயணிக்கும் போது இந்த கூற்றைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன் வீட்டில் இருப்பதென்றால் என்ன? இல்லை என்றால் என்ன? எனது பிறகு தொகுப்பிலுள்ள குறுகிய கூழாங்கற் கவிதைகளில் ஏன் போதிசத்துவர் வாகன விடுதி 6-க்கு சென்றார் என்ற தலைப்பிலான கவிதை இந்த கேள்வியைக் கையாள்கிறது. தொலைவு அயல் வாழ்க்கை உடல் ரீதியானது மட்டுமல்ல. ஒரு அர்த்தத்தில் அது மானிட நிலைமையே: சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றம். நாம் தொலைவு அயல்வாழ்க்கையுடனே தான் பிறக்கிறோம். அங்கு நீங்கள் கருவறையில் வசதியாய் முழுபாதுகாப்புடன் வாழ்கிறீர்கள்; பிறகு திடீரென வெளிவந்து கடுங்குளிரும், பசியும், கைவிடப்படலும் கொண்ட உலகை அடைகிறீர்கள். மனிதர் என்ற முறையில் நமக்கு தரப்பட்டுள்ள ஒரு பெரும் கேள்வி இது: இதற்குப் பிறகு என்ன செய்வீர்கள்? உங்கள் துன்பத்தோடு தோழமை கொள்வீர்களா அல்லது அதைத் தவிர்க்கும் முயற்சியில் உங்கள் வாழ்வை வெறுமையாக்குவீர்களா? இருந்தும், ஒன்பது வாயில்களில் அந்த சொற்றொடரை எழுதியபோது, ஒரு அர்த்தத்தில், என்னைப் பற்றியல்லாது செஸ்லாவ் மிலோஸ் போன்று வெளிமுக தொலைவு அயல்வாழ்வை அறிந்த கவிஞர்களைப் பற்றியே நிறைய எண்ணினேன். இதை அவர் கையாண்ட முறையிலிருந்தே அவரது மேன்மை பெரும்பாலும் உருவானது: அவரது பால்யத்தின் சொர்க்கத்திலிருந்து தொலைவு அயல்வாழ்வு, தாயகத்திலிருந்து தொலைவு அயல்வாழ்வு. எனது தொலைவு அயல்வாழ்வு அனுபவங்கள் எளிய அமெரிக்க, மானுட அனுபவங்களே.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: பல எழுத்தாளர்கள் ஏதாவது ஒருவித ஆட்கொள்ளல் காரணமாய் எழுதுகிறார்கள். உங்கள் வாழ்வில் ஜென்னுக்குள்ள இடத்திலிருந்து உங்கள் படைப்புகளின் தொனி வருகிறதென்று சொல்வீர்களா---அதுவே உங்கள் ஆட்கொள்ளல் என்பீர்களா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: எதனாலும் ஆட்டிப்படைக்கப்படுவதை நான் விரும்பவில்லை; மேலும் அந்த கருத்துடன் நான் உடன்படுவேன் எனத் தோன்றவில்லை. சிலர் விஷயத்தில் இது வெளிப்படையான உண்மை, பிறரைப் பொறுத்தவரையில் கொஞ்சம் உண்மை குறைவாய் இருக்கலாம். நித்ய மேன்மையுடைய தேவதூதர்களால் தோற்கடிக்கப்பட்டதைக் குறித்து ரில்கே எழுதினார்---அந்த தேவதூதர்கள் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுவர், அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே தேவதூதன் அல்ல என சந்தேகப்படுகிறேன். ஆனால் ஜென் பயிற்சி ஆட்கொள்ளலுக்காக அல்ல. அந்த பயிற்சியிலேயே விடுதலைக்கான சாத்தியம் மையங்கொண்டு உள்ளது என்று சொல்லுவேன். ஆட்கொள்ளல்கள் தான் ஒருவரை பயிற்சிசார் வாழ்வை மேற்கொள்ளச் செய்கின்றன. நம்மில் பலருக்கும் இவையே உலகம் முழுமைக்கும் பொதுவான கேள்விகள் என்று நினைக்கிறேன்: துயரம், காலம், இழப்பு, முதுமை, நோய்மை மற்றும் இறப்பு ஆகியவற்றின் தவிர்க்க இயலா தன்மைகள். துன்பத்திலிருந்து தப்பித்தல் இயலாது. உனது பணி, தரப்பட்டுள்ள துன்பத்தைக் கொண்டு உன் வாழ்வில் என்ன செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்தலே. இந்த நிலைமைகளுக்கு உங்கள் கவனத்தை செலுத்துவதை ஆட்கொள்ளல் என்று சொல்லலாமா என்று தெரியாது. அவை எதுவோ அதுவே. வாழ்வை அதுவாகவே கொண்டு வாழ்வதும், திரிபின்றி அணுகுவதும் மனிதர்களின் பணி.

எந்த கவிதையாகினும், என்னைப் பொறுத்தவரையில், நான் அந்த கணத்தில் உள்ள நிலைமையை மேலும் பெரிதாய், நெருக்கமாய் அறிவதற்கான முயற்சியே. ஒவ்வொரு கவிதையும் ஒரு குறிப்பிட்ட கேள்வியின் புரிதலும், தற்காலிக விளக்கமுமே. நாம் சமநிலை தவறும்போது, கவிதை அச்சமநிலையை மீட்டெடுக்க முயல்கிறது; அல்லது, இன்னும் உண்மையாய் கூறுவதானால், நிலையற்றதும், தற்காலிகமுமான ஒரு புது சமநிலையை நோக்கித் தாவுகிறது. ஆனால் ஆட்கொள்ளல் எனும் வார்த்தையை கவிதைக்குப் பொருத்திப் பார்க்கும்போது தட்டையாகத் தோன்றுகிறது. நாம் ஒவ்வொருவருக்கும் அவரவர் கவனிப்பிற்கு மிகவும் தோதான பொருட்கள் உள்ளன என மேலும் தோன்றுகிறது. சில கவிஞர்கள் காதலை கவனிப்பார்கள். சில கவிஞர்கள் காலத்தை கவனிப்பார்கள். சில கவிஞர்கள் நியூயார்க் நகர சுரங்கப் பாதைகள், நாய்கள் அல்லது தங்களது தனிப்பட்ட வாழ்வின் குறிப்பிட்ட வரலாற்றுப் பருவச் சூழ்நிலைகளை கவனிப்பார்கள்.

நான் செய்ய விரும்பும் விஷயம்---தீவிர முயற்சி பாணியில் அல்ல, ஆனால் ஒரு வேண்டுகோளாக---நாளும் அதிகரிக்கும் பல்வேறு தரப்பட்ட விஷயங்களை என் கவிதைகளில் உற்று நோக்க வேண்டும் என்பதே. ஜென்மானிய கவிஞரும், மணிமொழியாளருமான நோவாலிஸ் ஒரு நபர் தன் வாழ்வின் முதல் பாதியை உள்முகமாய் நோக்கியும், மறுபாதியை வெளிமுகமாய் பார்த்தும் செலவழிக்க பரிந்துரைத்தார். நீங்கள் யாரென்று ஓரளவு புரிந்து கொண்டதும், உலகம் மிக சுவாரஸ்யம் உள்ளதாகிறது; மேலும் அதில் கவனம் செலுத்துவது அற்புதமானது. தன் கவிதைகள் தனிப்பட்டவை அல்ல என்று யார் வாதிட்டாலும், அது தவறு என்று நினைக்கிறேன். ஆனால் கவிஞர் என்ற முறையில் நான் கவனிக்க நேர்ந்த தளத்தை கவிதைகளே கூட விரித்துக் கொள்ளும். எழுத்து கவனிப்பை உருவாக்கும். இந்த பணியை செய்வது என் வாழ்வை விரிவடையச் செய்கிறது---நாம் பேசியவற்றின் ஆதாரக் கருத்து இதுதான். நான் அதிர்ஷ்டசாலி என்றால், பிறரது வாழ்வை விரிவடையச் செய்ய நான் ஏதாவது செய்யலாம் கூட.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: ஒரு கவிதை மேலும் அறிவதற்கான முயற்சி என்கிறீர்கள். அல்லது பால் செலான் சொன்னது போல, கவனித்தல் என்பது ஆன்மாவின் இயல்பான பிரார்த்தனை.

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: சிமோன் வெயில் இதற்கு நெருக்கமாய் வருவது போல் மற்றொன்று சொன்னார்: சற்றும் கலப்பற்ற கவனமே பிரார்த்தனை. ஜென்னின் பாதை கவனம் பற்றியது, உங்கள் வாழ்வில் முழுமையாய் உறைவு கொள்வது பற்றியது; ஆனாலும் அது பிறரது வாழ்வு மற்றும் துன்பம் பற்றியதுமே. உங்கள் துயரம் உலகின் துயரத்திலிருந்து தொடர்ச்சியற்றது அல்ல. ஆகையால் கவனித்தல் எனும் பயிற்சி உங்களை கருணைக்கு இட்டுச் செல்லும். அது ஒரு பதர் அல்லது போர் பற்றியதாகட்டும், கருணை உணர்வை வளர்ப்பது பயனுள்ளதாய், ஏதும் செய்வதற்கான, ஒரு சூழலில் நம்பிக்கையுடன் உழைப்பதற்கான முதற்படியாய் அமையும்.

கேள்வி கேட்பதும், எதிர்புறத்தை ஆராய்வதும் என் இயல்பு. சிறந்த எழுத்தும் இதைச் செய்யும் என்று நம்புகிறேன். குறுகிய மனப்பான்மை கொண்டோருடன் ஒத்துச் செல்லக்கூடியவை அல்ல பெரும் இலக்கியங்கள். அவை சார்புநிலை உடையனவோ, குறுகினவையோ அல்ல. துன்பம் உள்ள இடத்தில் ஆனந்தம் ஏற்படும் என, ஆனந்தம் உள்ள இடத்தில் துன்பம் உண்டென அவை நமக்குச் சொல்கின்றன. ஒருமுகமான கவிதை சலிப்பை ஏற்படுத்தும். சிலநேரம் மறுபுறம் மிக ஆழமாய் புதைந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் கவிதையின் புற்களை விலக்கி அதைக் காண முடியும்; இருப்பினும், ஒரு நல்ல கவிதையில் இரண்டாவது பரிமாணம் எப்பொதுமே இருக்கும் என்றே சொல்வேன். நம்மை உலுக்கிப் போடும், சற்றும் எதிர்பாராத ஏதோவொன்று அதில் எப்போதுமே இருக்கும்---ஏதாவது ஒரு அடியொழுக்கு, முழுமையான உண்மையின் ஏதோ காந்த இழுப்பு.

இருத்தலின் முழுமையான சிக்கலான சாத்தியப்பாட்டை ஒப்புக் கொள்வதாலே தான் நல்ல கலைப்படைப்பு திகிலூட்டுகிறது. நான் மீண்டும் மீண்டும் இந்த கருத்திற்கே திரும்புகிறேன்: விஷயங்களின் முழுமையை ஏற்றுக் கொள்ளலே மானுடப் பணி. இதைச் செய்ய முடிகிற இருப்பின் ஒரு பகுதியே நாம். இதில்தான் நம் திறமை உள்ளது---அனுபவத்தின் பன்முகங்களை, முரண்பரிமாணங்களைக் காண்பதும்; வெறுமனே தன் வாழ்வை துல்லியமாய் ஆனால் உள்ளிருந்து மட்டும் புரிந்து கொள்கிற ஒரு மான் அல்லது ஆமையைப் போல் உலகைக் கடக்காமல் இருப்பதிலும். ஏனெனில், நம்மில் மானுட விதியான தொலைவு அயல்வாழ்தன்மை உள்ளதால்---நம் வாழ்வில் அயல்வாழ் பிரக்ஞை எனும் மானிட விதி தப்பித்தலின்றி இருப்பதால், எல்லைக்கோடுகள், கற்பனை முடிவுகளிலிருந்து திரும்பிப் பார்க்க முடிகிறது, நமது தனிப்பட்ட விதிகளுக்கு முன்னரும் பின்னரும். நம்முடைய முதல் பார்வையன்றி நிச்சயமாய் பிறிதொன்றை நம்மால் காண முடிகிறது. இது சுயபிளவு சார்ந்ததாயோ, ஈரமற்று பொதுப்படையாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நெருக்கம் அதிகமாவதாக இருக்கலாம்: "சுயத்தை மறத்தல் பத்தாயிரம் விஷயங்களில் விழிப்பதாகும்".

கவிதையின் நோக்கம் உவகை ஏற்படுத்துவதும், அறிவுறுத்துவதும் என நினைவில் பதியும்படியாய் ஹொரேஸ் சொன்னார். உவகை நிச்சயம் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். உவகையின்றி எதற்கு பொருட்படுத்த வேண்டும். ஒரு கவிதையை வாசித்தல் இனிமை தருவதாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லையெனில், வேறு ஏதாவது செய்யலாமே. ஒரு கலைப்படைப்பு அழகாயில்லை என்றால்---இதைக் கொண்டு சில நேரம் உச்சபட்சமாய் முரண்டு பிடிக்கும் இருண்மைக் கவிதைகள் உருவாகலாம்---அதை நாம் கவனிக்க மாட்டோம். இலக்கியம் நம்மை கட்டிப் போட வேண்டும், சொக்க வைக்க வேண்டும். அறிவுறுத்தல்---இதற்கு தற்போது மோஸ்தர் இல்லை---மிரட்டும் போதனையாக இருக்க வேண்டியதில்லை. நாம் அர்த்தம் படைக்கும் பிராணிகள்; மேலும் அர்த்தம், என்னைப் பொறுத்தமட்டில், ஆழ்மன படிமங்களைத் தட்டி எழுப்புகையில், தன்னிடத்தே அழகு மிக்கதாகிறது. அழகு எப்போதுமே, அடிமட்டத்தில், ஒரு வகை அர்த்தம் என்றே ஆகலாம். ஒரு கணிதவியலாளனுக்கு விளக்கச் சான்றைக் கண்டால் கண்கள் நிறையலாம்.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: நீங்கள் சொல்வது போல், நாம் அர்த்தம் படைக்கும் பிராணிகள். உங்கள் படைப்புகளில் அர்த்தம் படிமம் வழியாய் வெளியிடப்படுகிறது. படிமத்தை சர்வதேச மொழியென்று கருதுகிறீர்களா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: நிச்சயமாய். அதனால் தான் படிமக்கவிதைகள் இசைக்கவிதைகளை விட மொழிபெயர்க்க எளிதாய் உள்ளன. ரஷ்யக் கவிதைகள், அவற்றின் வலிமையும், பாதிப்பும் பெரும்பகுதி இசைசார்ந்தே உள்ளக் காரணத்தால், மொழிபெயர்க்க மிகவும் சிரமமானவை என சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
சீன, ஜப்பானிய கவிதைகளில், இசையும் அத்தியாவசியம் எனும் போதும், படிமங்கள் எளிதாய் கடந்து விடக்கூடியவை; ஒக்டேவியோ பாஸ் கூறியது போல் அவற்றின் மொழிபெயர்ப்பு சரிநிகர் இசையொன்றை உருவாக்க முயலலாம். இஸ்ஸாவின் கவிதையிலுள்ள சக்தியை (power) நினைத்துப் பார்க்கிறேன்: "நதியோடு மிதந்து போகும் கிளையில், பாடும் சில்வண்டு". மறுப்பு ஏதுமின்றி, இக்கவிதை முழுக்க படிமத்தாலானது. ஆனால் அதைக் கேட்கும் எவருக்கும், பிரக்ஞை பூர்வமாய் என்றாலும், அது வாழ்வு நிலையின் ஒரு சித்திரமும் கூட. நீரோட்டத்தால் தடுமாற்றத்துடன் அடித்துச் செல்லப்படும் எதோவொரு கிளையில் நாம் உள்ளோம். நாம் என்ன செய்கிறோம்? இசை பாடுகிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை. இதை கசப்பாய் நீங்கள் நோக்கலாம், அல்லது வீரதீரமாய் கொள்ளலாம். ஒரு நல்ல படிமம் செய்வது இதைத் தான். இப்படிமம் மிக எளிதாய் ஆழ்மன எண்ணக் கிளர்த்தல்களின் பல உலகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. இஸ்ஸாவின் படிமம் ஒவ்வொருவர் மனத்திலும் ஓரளவு வித்தியாசமான உலகைக் கிளர்த்தும் (evoke), இந்த படிமமோ அவற்றிற்கெல்லாம் இடம் தரும்வகையில் திடமாய் உள்ளது. எதுவும் தவறல்ல. ஒவ்வொரு படிமமும் ஆன்மநிலையின் சித்திரம். நீங்கள் கதவின் கைப்பிடி என்று சொல்லும்போதே, நான் கடந்து கொண்டிருப்பேன்.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: ஒவ்வொரு அணிகலனுக்குப் பின்னும் மூவாயிரம் வியர்வையில் நனைந்த குதிரைகள் உள்ளன என்று ஒரு ஜென் பழமொழியை எடுத்தாள்கிறீர்கள். உங்கள் எழுத்து முறையை பற்றி சொல்ல முடியுமா? உங்கள் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னரும் வியர்வையில் நனைந்த மூவாயிரம் குதிரைகள் உள்ளனவா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: சில நேரங்களில், பிறவற்றை விட அப்பட்டமாகவே, ஒரு கவிதைக்குப் பின் முழுவாழ்வே உள்ளதாய் நினைக்கிறேன்; அக்கவிதை விரைவாய் வந்தாலோ அல்லது கடுமையான போராட்டம், 83 திருத்தங்களுக்குப் பின் அல்லது முப்பது வருடகால திருத்தங்களுக்குப் பின் வந்தாலோ சரி. விரைந்தோ, மெல்லவோ, குதிரைகள் எப்போதுமே அங்கு உள்ளன. பெரும்பாலும், முடிக்கப்படாத கவிதை சில மணிநேரங்கள், நாட்கள், ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் காகிதத்தில் வந்து விடும். விதிவிலக்குகள் தான் நம் கவனத்திற்குரியவை என்று நினைக்கிறேன். உதாரணமாய், என் கவிதையான ஓவியர் பெர்னட்டினுடையது போன்ற வரலாறு பல மாதங்கள் எக்கச்சக்க திருத்தங்களுக்கு உள்ளானது. 1989 வெல்வெட் புரட்சியின் போது ஒவ்வொரு நாட்டிலாய் கம்யூனிச அரசுகள் மக்களாட்சிக்கு வழிவிட்டபோது (அது இவ்வாறே அழைக்கப்பட்டது), அக்கவிதை தன்னை வெளிப்படுத்தியது. அவ்வலகிலான ரத்த சேதமற்ற அரசியல் மாற்றம் நிகழும் என யாரும் எதிர்பார்த்திருக்க இல்லை. பிறகு போஸ்னியா தோன்றிற்று தான்; ஆனால் 1989-இல் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அதனால் என் முதல் எதிர்வினை எளிய மகிழ்ச்சியே---இது போதாது என்று உணர்ந்தேன்; ஏனெனில் உலகின் இதே பகுதிகள் இருபதாம் நூற்றாண்டின் உச்சபட்ச துயரத்தைக் கண்டிருந்தன. இருந்தும், இதைப் பற்றி மேலும் ஆழமாய் யோசிக்க எனக்கு வழி தெரியவில்லை. கடைசியாக, எனக்குத் தோன்றியது---ஒருவேளை நானொரு கவிதை எழுதிப் பார்க்கலாம். அதற்கடுத்த எண்ணம் நிச்சயமாய் 'எப்படி இதைப் பற்றி கவிதை எழுத்துவது' என்பதே. அத்தகைய ஒரு அறிவுசார் நுழைவு என் வழக்கமான பாணிக்கு முற்றிலும் வேறானது. அக்கவிதைக்கான அவசரத் தேவையிருந்தது; ஆனால் வார்த்தைகளோ, படிமமோ, உள்ளிசை தொனியோ இல்லை. அந்நிகழ்வு கையகப்படாததாய் இருந்தது. ஆனால் அந்த அகப்படாத தன்மையே நான் எழுத வேண்டியதன் தேவைக்கும், கற்பனை செய்யத்தக்க கவிதைக்கும் இடையிலான தடுப்புச் சுவராக இருந்தது. ஆனால் நான் வேட்டையாடினேன்; நாட்கணக்காய் வலை விரித்துக் காத்திருந்தேன். இறுதியாய் ஏதோ ஒரு கட்டத்தில் திருத்தியமைத்தலே நுழைவுக்கான வாயிலாக அமையுமென எனக்குத் தோன்றியது. ஒன்று திருத்தியமைக்கப்படும்போது முன்னிருந்ததற்கு என்னவாகிறது? பிறகு யத்தோவில், பல வருடங்களுக்கு முன் ஒரு ஓவியரிடமிருந்து நான் கற்ற வார்த்தை ஒன்றை நினைவு கூர்ந்தேன்---பொன்னார்டுவது என்பதே அச்சொல்; இது தனது ஓவியங்கள்
விற்பனையான பின்னும் கூட அவற்றிற்கு மாற்றம் செய்வதை நிறுத்தாத ஓவியர் பொன்னார்டிடமிருந்து பெறப்பட்டது. அப்போது அது ஆரம்பம் கொண்டது. ஆனால் நாள்தோறும் நான் உழைத்து அக்கவிதையை எழுத முயன்று மாதங்கள் கடந்தன. பிரதிக்குப் பின் பிரதிக்குப் பின் பிரதி. கவிதை எழுதுவதிலுள்ள ஆரம்ப சிரமம் அதை முடிப்பதிலும் பிரதிபலித்தது. அந்நிகழ்வுகள் பற்றி எப்படி உணர்ந்தேன்? அடிவாங்கிய குழந்தை அம்மாவின் கையை திரும்பப் பற்றுவதாகிய காட்சியுடன் முழுமையாக்கப்பட்ட கவிதை முடிகிறது, அம்மாவின் முகத்தினுடனான அவனது உறவு சரியுமில்லை தவறுமில்லை, முழுக்க அவனுடையதே என விவரித்தபடி. என்னைப் பொறுத்தவரையில் அந்த படிமம் கிழக்கு ஐரோப்பாவின் வரலாற்றைப் பற்றிய துல்லியமான புரிதலைத் தருவது: இதுதான் நடந்தது, இது நமது, இனிமேலான வாழ்வில் நாம் இதனோடே பயணிப்போம், துயரத்தைப் பறித்துச் செல்லவோ அழிக்கவோ முடியாது, ஆனாலும் நாம் முன்னகர்ந்து செல்வோம். இதன் பின், நிச்சயமாய், படுகொலைகள் நடந்தன; மேலும் வெறுமனேயான கொண்டாட்டத்தின் மீதான என் சந்தேகங்கள் நிரூபணமாயின.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: அப்போதுங்கூட, நீங்கள் ஒப்பாரிக் கவிஞராக அல்லாமல் வாழ்த்திப் பாடும் கவிஞராகவே இருப்பதாய் தோன்றுகிறது.

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: பிறரும் இதுபோல சொல்லியுள்ளனர்; அதாவது என் கவிதைகள் அவற்றின் உடன்பட்டு வாழ்த்தி உரைக்கும் தன்மைகளால் வித்தியாசமாய் இருப்பதாய்---வாழ்வின் முக்கிய பணி வருபவற்றை ஏற்றுக் கொள்வதாகும் என்று நினைக்கிறேன். இந்த ஏற்பு வெறுமனேயான இன்முக சாத்வீகமல்ல, ஆனால் கவிதைகளில் சிரமப்பட்டு அடையப்படும் ஒன்றாகும் என்றும் நமக்கு தோன்றலாம். என் துறவற வாழ்வின் இரண்டாவது வருடத்தில், கல்லூரியில் நான் எழுதி, இறுதியாண்டு ஆய்வுக்காய் அழகான புத்தக வடிவாக்கப்பட்ட என் கவிதைகளைப் படித்தேன். ஒவ்வொரு கவிதையும் அழிவை வேண்டி நின்றது; ஒவ்வொன்றும் அவாய் நிலையில் அல்லது கருத்தியல் படிம மிதந்தலைதல் ஊடாய் பனிமூட்டத்தில் சென்று முடிந்தது. பீதியடைந்தேன். இவ்வாறு எண்ணினேன்: "என் கவிதைகள் தற்கொலை மனநிலையில் உள்ளன; அவைகளுக்கு நிலைக்க வேண்டாம்; நிலைத்திட விரும்பாத வார்த்தைகள் கொண்ட ஒரு நபராக எனக்கு இருக்க வேண்டாம்". இத்தகைய மெய்மை அறிதலே என் வாழ்வின் திருப்புமுனை. நான் ஏற்கனவே குறிப்பிடும்படியாக இந்நகர்வை ஏற்படுத்தியிருந்தேன்; நான் இதை நோக்கி உழைத்துக் கொண்டிருந்ததே ஜென்னின்பால் ஈர்க்கப்பட்டதன் ஒரு காரணம். பௌத்தத்தை சரியாய் புரிந்து கொள்ளாத மக்கள் சூனியவாதம் என்று கருதுகின்றனர்; ஆனால் ஜென் பயில்வது சூனியவாதத்திற்கு நேர்எதிரானது. அது உலகில் இருத்தலுக்கான பயிற்சியே ஆகும், பிரிவற்று இருத்தலுக்கான பயிற்சி. இனிமேல் ஒருபோதும் வெறுமையில் மறைய விழையும் நபராக இருக்க மாட்டேன் என அந்த கணம் சபதம் மேற்கொண்டேன். உலகில் உறைவு கொள்ள, அதைக் கொண்டாட, ருசிக்க, கேட்க, தொட்டுணர சபதமெடுத்தேன். எப்படி ஆயினும் வாழ்க்கை அதன் போக்கில் போய் விடும். நான் அதைப்பற்றி வருந்த வேண்டியதில்லை. நாம் சாகப் போகிறோம். ஆனால் வாழும் இக்கணத்தில் என்ன செய்யப் போகிறோம்? பிரகாசமான, நளினமான இக்கவிதைகளில்
நீங்கள் காண்பது மறைதலிலிருந்து இருத்தலை நோக்கி திரும்புவதற்கான போராட்டமே.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: பிரகாசம் மற்றும் நளினம் நோக்கிய வாழ்வு முழுமைக்குமான போராட்டம் என்பது ஆன்மீக நம்பிக்கைகளுடனான உங்கள் பயணம் போல் தொனிக்கிறது.

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: ஜென் நம்பிக்கை பற்றியதல்ல என்பதைத் தவிர. பெரும்பாலும் அது நம்பிக்கையை தளர்த்திய பிறகு என்னவாகும் என்பதைப் பற்றியதே. வார்த்தைகளுக்குப் புறம்பான போதனை என்றே

மரபுரீதியாய் ஜென் அறியப்படுகிறது. போதனைக்குப் புறம்பானது ஜென். ஜென் சொல்லித் தருவது: உங்கள் தேனீரைப் பருகுங்கள். இந்த கணத்தின் ருசியை நாவில் உணருங்கள். நிச்சயமாய் பல வார்த்தைகளும், போதனைகளும் உள்ளன, ஆனால் அவை கேள்வி கேட்பதை வரவேற்கும் வார்த்தைகள்; மின்சாரம் தரையோடு பாய்வது போல் அவை நிஜத்தில் நிலை கொண்டுள்ளன. உங்கள் வாழ்வினுள் இருந்து கண்டறிவதைக் கொண்டு பரிசோதிக்க வேண்டியே ஜென் போதிக்கப்படுகிறது. பௌத்தத்திற்கு சுயம் பற்றிய கருத்தாடலுடன் ஒரு விந்தையான உறவுள்ளதை பலரும் அறிவர். ஆனால் இது சமயக் கொள்கை அல்ல, அனுபவம் மட்டுமே ஆகும். அமைதியாய் அமர்ந்து கவனிப்பீர்கள் ஆயின், பிறிதின் இருப்பின் தொடர்ச்சியாய் அதனோடு ஊடுருவிச் செல்வதாய் உங்களைக் கண்டறிவீர்கள். வேறு பலவற்றையும் சேர்த்து 'சுயம்' என்பது ஒரு நிரந்தரமற்ற வாழ்க்கைப் பார்வையாகும். ஒரு இளம் ஜென் மாணவியாய் இருக்கையில் என்னுள் முழுக்க நானே நிறைந்திருப்பதை உணர்ந்தால் என் சுயம் எங்கு குடியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயல்வேன். முழங்கையில் உள்ள எதேச்சையான மூலக்கூறில் இருந்ததா? ஜேனாய் இருப்பது அத்தகைய ஒரு மூலக்கூறை ரொம்ப ஒன்றும் படுத்தவில்லையே. அதன் பாட்டிற்கு முழங்கையில் மூலக்கூறாய் இருப்பது ஒழிய வேறு வேலையில்லை. அதன் வாழ்வு தீவிர செயலூக்கம் மிக்கதும், இடவிரிவு உடையதாகவும் உள்ளது. அதன் மின்னனுக்களிடையேயும் மற்றும் கருவுள்ளின் உள்ளேயும் நிறைய இன்மை உள்ளது. இவ்வழியில் உங்களை நீங்கள் அணுகினால், உங்களைப் பற்றி
நீங்கள் ரொம்ப கிளர்ச்சி அடைய மாட்டீர்கள். அதே நேரத்தில் விலகி இருத்தல் மற்றும் சுயமழிந்த கடவுள் வட்டத்திற்குள் அதிகமாய் ஈடுபட்டு விட்டால், உங்கள் குரு ஒரு குச்சியுடன் வந்து அடிப்பார்,
நீங்கள் இயல்பாக அய்யோ என்பீர்கள். தினசரி உலகை நீங்கள் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பார்வை கோணங்களிலும் நாம் ஒரே நேரத்தில் வசிக்க வேண்டும் என்பதே ஜென்னின் வேண்டுகோள்.

இல்லியா காமின்ஸ்கி மற்றும் காதரீன் டவ்லர்: நாங்கள் அதே கேள்வியை ஆன்மீக நம்பிக்கைகள் என்பதை மதம் என்பதால் பதிலீடு செய்து விட்டு கேட்கும் பட்சத்தில் உங்கள் மனப்பான்மை மாறுமா?

ஜேன் ஹிர்ஷ்பீல்டு: மதம் எனும் வார்த்தை பாலான என் உறவு மேலும் உவப்பு குறைந்ததுதான். இத்தகைய உறவாடல்கள் தனிமனப்போக்கு சார்ந்தது என்பதை உணர்கிறேன்; ஆனால் பால்யத்தில் கூட தெய்வம் எனும் இருப்பு எனக்கு சற்றும் புரியும்படியாய் இருக்கவில்லை. சுற்றிலும் நான் கண்ட யூத கிறித்துவ அமைப்பு சற்றும் ஈர்க்கவில்லை. ஜென் பெரும்பாலும் ஒரு பயிற்சி என்றே விளக்கம் பெறுகிறது, மதமாக அல்ல. மேற்கத்திய மரபில், இறை எல்லாவித இருப்புகளினூடும் சமமாக பரவியுள்ளது என்று பேசும் இயற்கை சமயம் இதற்கு சற்று அருகாமையில் உள்ளது. இதிலுள்ள இறைமையை அகற்றுங்கள், நான் எங்கு உள்ளேனோ அதை நீங்கள் நெருங்கி விடுவீர்கள்: எது இருக்கிறதோ அது போதுமானது. நிஜத்தின் மேல், இதோ இந்த வாழ்வு மேல், நீங்கள் மலைப்படைய, மதிப்பு கொள்ள, பேரொளியைக் காண நீங்கள் ஏதும் சேர்க்க வேண்டியதில்லை. பேரொளி என்பது எளிமையாக இதுதான். அதை ஒரு குறிப்பிட்ட தனியிருப்பாய் கொள்ள நீங்கள் கருத்தியல் குட்டிக்கரணம் அடிக்கத் தேவையில்லை. இது எளிதாய் தெரியலாம், ஆனால் ஒரு நபரை சிறை அறைக்குள் வைத்து அவருக்கு வேறொன்றும் இன்றி கவனம் செலுத்தும் வாய்ப்பு மட்டும் அளித்தால், உலகப் பேரொளி பற்றி அவர் அறிய வேண்டிய அனைத்தும் அங்கே, தயாராக, இருக்கும் என்று மனப்பூர்வமாய் நம்புகிறேன். அத்தோடு ஒவ்வொரு சமயமரபிலிருந்தும் மெய்ஞானிகளின் குழுவொன்றை அந்த அறைக்குள் அனுப்பினால், அவர்களால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
Share This

1 comment :

  1. ம‌ன‌துள் நிறுத்த‌ வேண்டிய‌ ஆழ்ந்த‌, அற்புத‌மான‌ நேர்காண‌ல்... ப‌கிர்வுக்கு ந‌ன்றி!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates