Sunday, 16 August 2009

ஐ.பி.எல்: நவீன கிரிக்கெட்டின் அசுரக் குழந்தை



" 'உயிர்மையில்' வெளிவந்த IPL 2-க்கு முன்னான கட்டுரை. இணைய வாசகர்களுக்காக மறுபிரசுரிக்கிறேன்."

எல்லா வீட்டிலும் தலையணையை குத்தியபடி நகராது கிரிக்கெட் பார்க்கும் ஒரு ஆட்ட வெறியர் இருந்த நிலைமையிலிருந்து போன வருடம் ஐ.பி.எல் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது: குழந்தைகள், குடும்பப் பெண்கள், அத்தைகள், இளைஞிகள் என மொத்த குடும்பமும் பவுன்சருக்கும், புல்டாசுக்கும் வேறுபாடு தெரியாமல் பரபரப்பாக 20-20 பார்த்தனர், விவாதித்தனர். இந்திய அரசுக்கு நேரடி வருமானமாக 90 கோடி வந்தது. கிரிக்கெட்டை இவ்வளவு சாமர்த்தியமாக கலர்ப்பேப்பர் சுற்றி விற்க முடியுமா என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூக்கை சொறிந்தது. ஐ.பி.எல் தலைமை நிர்வாகி லலித் மோடி மீடியாவின் நாயகனானார். ஐ.சி.சி 50 வருடத்திற்கு மேல் கிரிக்கெட் எனும் வணிகப் பொருளை எவ்வாறு வீணடித்து வந்துள்ளது என்று லலித் மோடி உணர்த்தினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டின் முப்பது வருட வரலாற்றில் பவர் பிளே மற்றும் நோ பால் இலவச விளாசல் மட்டுமே ஐ.சி.சி அறிமுகப்படுத்திய புதுமைகள். (டெஸ்டுக்கு அது கூட இல்லை). ஆனால் அப்போது ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நரை கூடி மயிர்கொட்டி விட்டிருந்தது. முதல் சில ஓவர்களிலே அதன் முடிவு கணிக்கும்படியாய் மாறி விட்டது. மேலும் ஏழெட்டு மணி நேரங்கள் செலவழித்து கிரிக்கெட் பார்ப்பது இந்த அவசர யுகத்தின் தாளகதிக்கு தோதல்ல. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட் பிரபலமாகாதற்கு, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பேஸ்பால், சாக்கர் ஆட்டங்கள் முன் அது ஒளி மங்கியதற்கு முக்கிய காரணம் இதுவே. இளைய தலைமுறையைனரிடம் கிரிக்கெட்டை பரவலாக்கும் நோக்கத்துடனே இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் 20-20 அறிமுகப்படுத்தினார்கள். 26000 பேர்களுக்கு மேல் பங்கேற்று ஓரளவு இங்கிலாந்தில் வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலியா இதை பொருட்படுத்தவில்லை. அங்கு நடந்த முதல் சர்வதேச 20-20இல் ஆஸி- நீயுசிலாந்து அணியினர் 70-களின் மோஸ்தரில் ஆடை அணிந்து, வேடிக்கையாக மீசை வைத்து, வட்டப்பெயர்கள் சீருடையில் எழுதியபடி ஆடினர். இந்தியாவில் மாலை வேளை வெளிப்பொழுது போக்குக்கு சினிமாவை விட்டால் மத்திய வர்க்கத்திற்கு குறிப்பிடும்படியான வாய்ப்புகள், இடங்கள் இல்லை; மேலும் மற்ற நாடுகளில் போலல்லாது இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு போட்டி இல்லை. இந்த பொழுது போக்கு காலியிடத்தை கண்டு கொண்டு, வணிக குழுமங்கள், நடிகர்களை இணைத்துக் கொண்டு 20-20 கிரிக்கெட்டை முதன்முதலாய் வெற்றிகரமாய் விற்றதே மோடியின் சாமர்த்தியம். குழந்தைகள் மற்றும் வளர்ந்த அறிமுக பார்வையாளர்களைக் கவரும் சிக்சர்கள், குட்டைப்பாவாடைப் பெண்களின் கிளர்ச்சி நடனம், தலைகாட்டும் பிரபலங்கள், சுவையான உணவு ஆகியவற்றோடு ஒவ்வொரு அணிக்கும் தனிப்பட்ட விளம்பரப் பாட்டு, வண்ணமய ஆடை, பரந்துபட்ட ஊடக கவனத்திலிருந்து ஐ.பி.எல் பார்ப்பதை, விவாதிப்பதை ஒரு அந்தஸ்து சின்னமாக்கிய வெற்றிகரமான பிராண்டிங் வரை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்தனர் மோடி குழுவினர். ஆரம்பித்த சில வாரங்களில் திரைப்பட வசூல் மற்றும் மெகா தொடர்களின் ரேட்டிங்கை முடக்கும் அளவிற்கு ஐ.பி.எல் சமூகத்தின் கற்பனையை ஆக்கிரமித்திருந்தது.



இது நாள் வரை முதிய வீரர்களை ஓய்வு பெற வாரியங்கள் வற்புறுத்த மிரட்ட வேண்டியிருந்தது. ஆனால் ஐ.பி.எல்லில் கலந்து கொள்ள நட்சத்திர ஆட்டக்காரர்கள் சற்று முன்னதாகவே ஓய்வு பெற்றுக் கொண்டனர். இந்த வரிசையில் மெக்ராத், வார்னே, பிளமிங் போன்றோரின் அதிரடி ஓய்வுகள் சர்வதேச அரங்கில் ஒரு அதிர்வலையை பரப்பியது. பல நாடுகள் தங்கள் வீரர்களை இழக்க நேரிடுமோ என்று அஞ்ச, "பயப்பட வேண்டாம் நாங்கள் ஐ.பி.எல்லை சர்வதேச ஆட்டங்கள் நடக்காத பருவத்தில் மட்டுமே நடத்துவோம்" என்று சமாதானம் சொல்லி ஆசீர்வதித்தார் மோடி. வீரர்கள் மாதக்கணக்காய் சர்வதேச அரங்கில் பாடுபட்டு சம்பாதிப்பதில் பலமடங்கை ஐ.பி.எல்லில் சில வாரங்கள் சில மணி நேரங்கள் ஆடி சேர்த்து விட முடிவதால் அவர்கள் தேசிய அணிக்கு பங்களிப்பதை புறக்கணிப்பார்கள் என்பதே இந்த அச்சத்திற்கு காரணம். தங்கப்புதையல் வேட்டை யாருக்குத்தான் பிடிக்காது? ஐ.பி.எல்ல்லில் சேர்க்க மாட்டோம் என்று மோடி மிரட்ட, மும்பை தாக்குதல் கழித்து சில நாட்களிலேயே இங்கிலாந்து அணியினர் இந்தியா வந்து சமர்த்தாக டெஸ்டு தொடர் ஆடிச் சென்றார்கள். காயம் காரணமாக தாய் நாட்டு அணிகளின் சமீப, நடக்கப் போகும் ஆட்டங்களில் கலந்து கொள்ள மறுத்த நியூசிலாந்தின் ஜேகப் ஓரம் மேற்கிந்திய தீவுகளின் பிரேவோ ஆகியோர் தற்போது ஆர்வமாக ஐ.பில்.எல்லில் மட்டும் கலந்து ஆடுவது, இந்த நாட்டு வாரியங்களை மீண்டும் கலங்கடித்துள்ளது. ஐ.பி.எல் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட்டை ஆக்கிரமித்து ஆள்வது பற்றி கண்டனம் பல நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.

ஐ.பி.எல் அடுத்து செய்தது இந்திய அணிக்கான தேர்வு முறையை கேலிக்கூத்தாக்கியது. 12--15 வருடங்களாய் உள்ளூர் ஆட்டங்களில் ஆடிக்களைக்காமல் ஒரு சில ஐ.பி.எல் ஆட்டங்களில் சிறப்பாய் ஆடினாலே போதும், சர்வதேச அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உருவானது. குறிப்பாய் கோனி எனும் உள்ளூர் அளவில் முகவரி அற்ற பந்து வீச்சாளர் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் ஸ்டார்சுக்காக ஆடி நட்சத்திரமாகி, இந்திய அணியில் இடம் பெற்று, "மனைவிக்காக பெற்ற தாயை புறக்கணிக்கிறான் படுபாவி" என்று அவரது குடும்பத்தாரின் குடுமிச் சண்டையை டி.வியில் அலசும் அளவிற்கு பிரபலமானார். ரெய்னா ரஞ்சி, செலஞ்சர் தொடர்களில் ஓட்டங்கள் குவித்தும் திரும்பிப் பார்க்காத தேர்வாளர்கள் ஐ.பி.எல்லில் தோனி அணியில் அவர் ஜொலித்த உடனே வாசல் திறந்தனர். இதுவே ஓஜ்ஹா, யூசுப் பதான் விசயத்திலும் நடந்தது. பிரமாதமாக ஆடியும் கோட்டை விட்டவர் வேணுகோபால ராவு மட்டுமே. தனித்து நின்று ஹைத்ராபாத் அணியை வெற்றிக்கு அருகில் இவர் அழைத்து வந்த ஆட்டங்கள் சிறப்பானவை. முப்பது வயது வரை வருடாவருடம் வெயிலில் காய்ந்து பாடுபட்டு ஆடியும் சின்ன அளவில் இந்திய A பயணங்களுக்கு கூட தேர்வாகாத பல உள்ளூர் சீனியர்களை இந்த தேர்வுகள் ஏமாற்றமடைய வைத்துள்ளன. ரஞ்சி அறிமுகமின்றியே சர்வதேச தேர்வென்றால் உள்ளூர் ஆட்டங்களின் பொருளென்ன என்கின்றனர் இவர்கள்.

ஆனால் அஷோக் திண்டா, யோ.மகேஷ், ஸ்ரிவஸ் கோஸ்சுவாமி, அஸ்னோட்கர், கபீர்கான் போன்ற இளம் திறமைகளுக்கும், டெப்ரதா தோஸ், யோஹன்னன், ஷுக்ளா, மன்ஹால், சால்வி, பொவார், திரிவேதி, நீரஜ் பட்டேல் என உள்ளூர் ஆட்டங்களில் நெடுநாள் ஆடியும் புறக்கணிக்கப்பட்ட வீரர்களுக்கும் ஐ.பி.எல் கொஞ்சம் புகழும் நிறைய பணமும் பெற்றுத் தந்தது. ஆஸ்திரேலியாவின் மார்ஷ், வெர்னர் போன்ற ரத்தினங்களை சொந்த ஊர் தேர்வாளர்களுக்கு முன்னரே கண்டெடுத்தது ஐ.பி.எல் குழுவினர் தான். முக்கியமாய், இனிமேல் அதிர்ஷ்டமின்றியோ, இடமின்மை காரணமாகவோ இந்திய அணிக்குள் புக முடியாதவர்கள் திறமை துருவேற மறுக வேண்டாம். சர்வதேச கிரிக்கெட்டில் கிடைக்கும் அனைத்துமே மிக சீக்கிரமாய், குறைந்த காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும். சர்வதேச அணியில் ஆடினால் கூடுதல் பணத்திற்கு பேரம் பேசலாம் என்று மட்டும் இளைய தலைமுறை ஆட்டக்காரர்கள் இனி நினைக்கும்படி இந்திய அணியில் இடம் பெறுவது எதிர்காலத்தில் இரண்டாம் பட்சம் ஆகலாம். ரமேஷ், தினேஷ் மோங்கியா, கன்வல்ஜித் சிங் போன்று அபாரமான திறமைகள் வாய்ப்பில்லாது வீணாகும் அவலம் இனி நிகழாது.

ஐ.பி.எல்லின் மற்றொரு முக்கிய பாதிப்பு ஒரு நாள் ஆட்ட மட்டையாட்டத்தை மிக அதிரடியாக மாற்றியது. இதனால் 300 ஓட்டங்கள் பாதுகாப்பல்ல, 350 பரவாயில்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. ராவு, ரெய்னா உள்ளிட்ட பல இந்திய\உள்ளூர் வீரர்கள் கவலையின்றி பல அதிரடி ஷாட்களை ஆடும் தைரியத்தை ஐ.பி.எல்லில் தான் பெற்றனர். சேவாக்--காம்பிர் கூட்டணி இத்தனை ஆபாயகரமானதாக மாறினது ஐ.பி.எல்லில் அவர்களது வெற்றிகர இணை-ஆட்டங்களுக்குப் பிறகுதான். பின்-ஐ.பி.எல்லின் போது பந்து வீச்சாளர்களும் மெருகேறி உள்ளனர்; யார்க்கர், ஸ்லோப் பால் ஆகிய பந்துகளை சுலபமாக வீசுகின்றனர். இதனால் ஓட்டம் சேகரிப்பது மேலும் சவாலாகி விட்டது. 20-20 ஆட்டத்துக்கு உடற்தகுதி மற்றும் பீல்டிங் ஆதார அம்சங்கள் ஆகையால் இளைய தலைமுறை ஆட்டக்காரர்கள் இந்த துறைகளில் கவனம் செலுத்துகின்றனர். மறைமுகமாக இது இந்திய அணியின் உடற்தகுதி மற்றும் பீல்டிங் தகுதியை உயர்த்தவும் உதவும்.

ஐ.பி.எல்லில் கவனிக்க வேண்டிய மற்றொரு போக்கு இனம், நாடு, மாநிலம், மொழி போன்ற அடையாளங்கள் வலுவிழப்பது. யோ. மகேஷும், கார்த்திக்கும் மும்பை, தில்லிக்காக சென்னை அணிக்கு எதிராக ஆடுவதை, ஹர்பஜன் மும்பைக்காக தன் சொந்த மாநில அணியான பஞ்சாபுடன் மோதுவதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஹெய்டனுக்காக கைதட்ட தமிழர்கள் பழகி விட்டார்கள். விசுவாசத்தின் பொருள் பின்-ஐ.பி.எல் வரலாற்றில் மாறி விட்டது. இந்த முகமற்ற தன்மையால் ஐ.பி.எல்லை உலகமயமாக்கலின் நீட்சி எனலாம். இதன் அடுத்த படியாக சொந்த நாட்டு அணிகளில் ஆட வாய்ப்பில்லாத முரளி கார்த்திக், ஆகாஷ் சோப்ரா, ரமேஷ் பவார் போன்ற தரமான வீரர்களை சற்று பலவீனமான கென்யா, ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு தற்காலிக கடனாக வழங்குவது பற்றி ஐ.சி.சி\பி.சி.சி.ஐ சிந்திக்க வேண்டும். சில சர்வதேச அணிகள் சில குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பலவீனமான உள்ளன. உதாரணமாக பாக்கிஸ்தானுக்கு தரமான சுழல்பந்து வீச்சாளர் இல்லை, இந்தியாவுக்கு ஆல்ரவுண்டர்களும். உபரியாக இத்தகைய ஆட்டக்காரர்கள் உள்ள நாடுகள் இவர்களை பரிமாறிக் கொண்டால் கிரிக்கெட்டின் தரத்தை அது வெகுவாக உயர்த்தும். உதாரணமாக வாய்ப்பில்லாத ஸ்காட்லாந்து ஆல்ரவுண்டர் ஹாமில்டனை இந்தியா சுளுவாக பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம். எதிர்கால சர்வதேச கிரிக்கெட்டில் ஐ.பி.எல்லின் பாதிப்பாக இது அமையலாம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்திரமாக ஒற்றை இரட்டை இலக்க ஓட்டங்கள் ஓடி மட்டுமே 6 ஓட்ட சராசரியை தக்கவைக்க தெரிந்ததனாலும் தான் நவீன மட்டையாளர்களால் தன்னம்பிக்கையுடன் 300க்கு மேற்பட்ட இலக்குகளை எட்ட முடிகிறது. ஒரு நாள் ஆட்டத்தில் எந்த கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு காலம் கற்றுத் தந்த சில உத்திகள் உள்ளன. ஆனால் 20-20-இல் நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு ஓவரின் 4 பந்துகளை காற்றில் தூக்கி அடிப்பது, விக்கெட்டுகள் தொடர்ச்சியாய் சரிந்தால் இரண்டு ஓவர்கள் கட்டை போடுவது. 20-20க்கு என்று எந்த திட்டவட்டமான ஆட்ட முறை உத்திகளும் இன்னும் உருவாக இல்லை. அது தற்போது வரை ஒரு கற்றுக்குட்டி ஆட்டம் மட்டுமே. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் புச்சண்ணன் அதிக அபாயமின்றி ஆரோக்கியமான ஓட்டசராசரியை (8--10 ஓட்டங்கள்) தக்கவைக்க ஒரு நடைமுறை சாத்தியமுள்ள திட்டத்தை பரிந்துரைக்கிறார். ஒரு மட்டையாளன் தனது சில வலுவான பவுண்டரி ஷாட்களை தேர்ந்து கொள்ள வேண்டும். அவற்றை அடிப்பதற்கான சாத்தியமுள்ள பந்துகளுக்கு காத்திருக்கு வேண்டும். மற்ற சமயங்களில் ஒன்று, இரண்டு ஓட்டங்கள் கொண்டு ஸ்கோரை தடையின்றி நகர்த்த வேண்டும். ஐ.பி.எல்லில் நிலைத்து ஆடி அதிக ஓட்டங்களை சேகரித்த ஹெய்டன், ஷோன் மார்ஷ் போன்றோர் இந்த முறையை பின்பற்றிவதை பார்க்கலாம். சமீபமாய் சச்சின் தென்னாப்பிரிக்க ஐ.பி.எல் முதல் ஆட்டத்தில் அடித்த அரை சதத்தில் அதிக ஓட்டம் தேவைப்படும் போதெல்லாம் குச்சிகளிருந்து முழுக்க விலகியோ, அல்லது குறுக்காக சென்றோ சில குறிப்பிட்ட ஷாட்களை மட்டுமே தொடர்ச்சியாக அடித்து விட்டு, அதற்கு தோதான பந்துகள் வாய்க்காத போது இயல்பான சம்பிரதாய ஆட்டத்துக்கு திரும்பினார். 200 ஸ்ரைக்கு ரேட்டில் ஆடக்கூடியவரகள் ஒருவர் இருவர் போதும் ஒரு அணிக்கு (சேவாக், ஹெய்டன், யூசுப்). பிறர் மேற்சொன்ன முறைப்படி ஆடலாம். ஒரு கட்டுக்கோப்பான திட்டத்துடன் ஆடினால் அணிகள் 180 ஓட்டங்களை சராசரியாக அடையலாம். அதாவது ஒரு நாள் ஆட்டத்தில் 275 போல. எதிர்காலத்தில் 250 (ஒருநாள் ஆட்டத்தில் 350) ஒரு வழமையான ஸ்கோராக இருக்க வேண்டும். 20-20 ஆட்டம் எதிர்காலத்தில் நிலைக்க இத்தகைய திட்டமிடலும், அதனாலான முன்னேற்றமும் அவசியம்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் இரண்டாவது ஐ.பி.எல்லில் படுகுழப்படியாகவே அனைத்து அணிகளும் ஆடி வருகின்றன. அதனோடு பந்து வீச்சுக்கும் சாதகமான ஆடுதளமும், பருவ நிலையும் இணைந்திட சற்று சொதப்பலாகவே இந்த இரண்டாவம் வருகை தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இப்போது கிரிக்கெட் ஆட்டப்பருவத்தின் இறுதி கட்டம். இதனால் தொடர்ந்து வருடம் முழுக்க பயன்படுத்தப்பட்டு பழசாகிப் போன ஆடுதளங்களில் ஐ.பி.எல் ஆட வேண்டிய கட்டாயம். வெயில் காய்ந்து வறண்டால் இந்த தளங்கள் வேகம் குறைந்து தூங்கும். பந்து எளிதில் மட்டைக்கு வராது. சராசரி சுழல் வீச்சளரை கூட அடிப்பது இதனால் சிரமம் ஆகிறது. தற்போது அங்கு மழைக்காலம் வேறு. மழையால் ஈரமானால் இதே ஆடுதளம் வேகப்பந்தாளர்களுக்கு ஏராள ஸ்விங் அளிக்கும். மட்டையாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் கரம் ஓங்குவது நல்லதல்ல. அந்நாட்டில் பிரபலமான கால்பந்து, ரக்பை ஆட்டவரிசைகளின் பருவம் இது. வெடவெடக்கும் குளிரையும், மழையையும் எதிர்கொண்டு, பிற ஆட்டத்தொடர்களுக்கு மத்தியில் அரங்கத்துக்கு மக்கள் வரும் வாய்ப்புகள் குறைவு. இந்திய ஐ.பி.எல்லுடன் ஒப்பிட்டால் இம்முறை கூட்டம் பாதிதான். அதுவும் இரண்டாவது ஆடும் அணி சொதப்ப ஆரம்பித்தால் அரங்கு ஏறத்தாழ காலியாகி விடுகிறது. உள்ளூர் போட்டியின் கடைசி விக்கெட் ஆட்டம் வரை இந்திய பார்வையாளர்கள் காத்திருப்பார்கள். சேப்பாக்கில் இதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். ஆட்டம் முடிந்து போலீஸ் விரட்டின பின்னரே கூட்டம் கலையும். நம்மூர் ரசிகர்களின் ஈடுபாடு நிச்சயம் தென்னாப்பிரிக்க மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஐ.பி.எல் ஒரு விநோத ஜல்லிக்கட்டு மட்டுமே. கடந்த வருட ஐ.பி.எல் இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் கூட பிரபலமானது. ஆனால் அப்போதே தென்னாப்பிரிக்காவில் மிகக்குறைந்த ஈடுபாடே காணப்பட்டது. 20-20க்கு சற்றும் தோதல்லாத, ஐ.பி.எல்லை விரும்பாத தென்னாப்பிரிகாவை தேர்ந்தெடுத்த லலித் மோடியின் வணிக கணிப்புகள் சொதப்பல் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகளை மதிக்காமல், தான்தோன்றித்தனமாய் ஐ.பி.எல்லின் முதலாளிகள் நடந்து கொண்டது அதன் மதிப்பை பொதுமக்களிடையே வெகுவாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசுக்கு 200 கோடி ரூபாய் ஐ.பி.எல்லிலிருந்து வரியாக மட்டுமே வந்தது. இந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடப்பதால் ஆட்டக்காரர்கள் வரியைத் தவிர்க்க வசதியுள்ளது. அரசியல்வாதிகள்--ஐ.பி.எல் பூர்ஷ்வா நிர்வாகிகளுக்கு இடையிலான இருங்கிணைவின்மையால் நம் நாட்டுக்கு நேரும் இந்த கொடிக்கணக்கான நஷ்டம் ஒருவித தேசதுரோகம் தான்.

அணிகள் 50க்கும் 100க்கும் ஆட்டமிழக்கும் தென்னாப்பிரிக்க ஐ.பி.எல் 20-20ன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றாலும், அது இந்திய தேர்வாளர்களுக்கு சிறந்த மதிப்பிடும் களமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவின் சிரமமான ஆடுதளங்களில் ஆடும் இளைஞர்களில் நேர்த்தியான ஆட்ட உத்தியும், வேகப்பந்தை எதிர்கொள்ளும் திறனும் கொண்டவர்கள் மட்டுமே தேற முடியும். இந்தியாவின் தட்டையான தளங்களில் தூங்கிக் கொண்டே சதம் அடிக்கும் பல போலிகளுக்கு தென்னாப்பிரிக்க சூழல் சிறந்த உரைகல். அடுத்த 20-20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடக்கிறது. ஏறத்தாழ இதே போன்ற ஆட்டச்சூழல் தான் அங்கும். தென்னாப்பிரிக்காவில் தேறும் இளைஞர்களை நம்பி இங்கிலாந்துக்கும் அனுப்பலாம். உலகக்கோப்பையில் ஆடப்போகும் இந்திய அணியின் நிரந்தர வீரர்களுக்கு இந்த ஐ.பில்.எல் சிறந்த பயிற்சியாகவும் அமையும். 20-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற முயலும் ஸ்ரீசாந்த், ஆர்.பி. சிங், ஜொகீந்தர், அபிஷேக் நாயர் போன்றோருக்கு தங்களை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பும் கூட.



"Honey, I Blew up the Kid" பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல் எனும் இந்த அசுரக்குழந்தையை சற்று கலக்கம் மற்றும் வியப்புடன் உள்ளூர்\சர்வதேச கிரிக்கெட் அமைப்பாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஒருநாள், டெஸ்டு ஆட்டங்கள் காலாவதியாகப் போவதை உள்ளூர அவர்கள் உணர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த வகைகளுக்கு மாற்றங்கள் கொண்டு வந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பதில், 20-20 ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இது நடமாடும் அசுரக் குழந்தையை பதற்றத்தில் படுக்கை விரிப்பால் மூடி மறைப்பதற்கு நிகரானது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates