Tuesday, 18 August 2009

படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)

என் நண்பன் சார்லஸோடு பெரியாரியம், திருமா என்று மணிக்கணக்காய் வறுத்து விட்டு, தலைப்பு தாவினேன். ரஜினி வசனத்தை திரித்து "காதலிக்கும் போது உன் ஆளுமைக்கு தோதான பெண்ணென்றால் மடக்குவது எளிதாக இருக்கும்" என்ற போது அவன் மேலும் சூடானான்: " அடப்பாவி ... எனக்கு இதுவரை தெரியாம போச்சேடா". பெரும்பாலான மொழியியல் இலக்கிய விமர்சன சித்தாந்தங்கள் கருவிகள் பொறுத்த வரையிலும் இதுவே நிகழ்கிறது. வாசகர்களை எதிர்நோக்கி பயன்படுத்தப்படும் விமர்சனக் கருவிகள் எழுத்தாளனுக்கு கணிசமாய் பயன்படக் கூடியவை. இவை பரிச்சயமானால் நமது முன்னோடிகளின் வெற்றிகளை வடிவ ரீதியில் புரிந்து கொள்ளலாம்; பாணியை பொதுவாய் போலச்செய்யும் விபத்து நேராமல். இதனால் ஒரு சுமாரான கதை அல்லது கவிதையை சிறப்பான ஒன்றாக எழுதலாம். காதலனுக்கே காம நுட்பங்கள் பிரயோசனமானவை. நான் இக்கட்டுரையை என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை நோக்கி முன்வைக்கிறேன். நாம் காக்னிடிவ் பொயடிக்ஸ் (Cognitive Poetics) எனும் விமர்சன முறையிலிருந்து மைய உருவம் (figure) மற்றும் பின்புலம் (ground) ஆகிய கருவிகள் பற்றி விவாதிக்கப் போகிறோம்.

காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் சைக்கோலஜி (Cognitive Psychology) கோட்பாடுகளை இலக்கிய ஆய்வுக்கு பயன்படுத்தும் விமர்சனப்பள்ளி. ரூவன் த்ஸர், ரொனால்டு லாங்கேக்கர், மார்க் டெர்னர், பீட்டர் ஸ்டாக்குவெல் ஆகியோர் இப்பள்ளியின் நட்சத்திர சிந்தனையாளர்கள்.

'பெட்ரோல் விலை உயர்கிறது' என செய்தி படிக்கும் போது விலையின் அளவை உயர்தல் எனும் திசை-அமைப்பு வழி புரிந்து கொள்கிறோம். உங்களில் ஒருவருக்கு திசையுணர்வு இல்லையெனில் இந்த செய்தி பாதிக்காது. "விலை உயர்கிறது" என்பதில் ஒரு உருவகம் உள்ளது ("பாய்ஸின்" 'எகிறிக் குதித்தேன்' பாடலின் காட்சியமைப்புடன் ஒப்பிடுங்கள்). உருவகம் போன்று மொழியின் கட்டமைப்புகளை மொழியியல் வரம்புகளுக்கு மட்டும் நின்று அலசாமல், புரிதல் அடிப்படையில் அணுகுவதே இந்த விமர்சனப் பள்ளியின் அடிப்படை. பெட்ரோல் விலை உயர்வை போல், நாம் ஒரு புரிதலை பிறிதொன்றின் அடிப்படையிலே நிகழ்த்துகிறோம். இதற்கு மிக சுவாரஸ்யமான உதாரணம் காக்னிடிவ் சைக்காலஜியில் வருகிறது. கீழ்வரும் படத்தை பாருங்கள். வெள்ளை வண்ணத்தை குவிமையமாய் கொண்டு கறுப்பை அதற்கு பின்னணியாக்கி கவனித்தால், ஒரு குடுவை தெரியும்; மாறாக எனில் இரு முகங்களின் பக்கவாட்டு நிழல்கோட்டு தோற்றம்.



பொருட்களை அல்லது கூறுகளை முரண் அடிப்படையில் புரிவது மனித இயல்பு என்பது பார்வை புலனுணர்வு விதிகளில் முக்கியமானது. உதாரணமாக, சமவெளியின்றி மலைகளை காண முடியாது. மேலுளள் படத்தில் கறுப்பு நிழல்களை மட்டும் கவனித்தீர்கள் என்றால் வெள்ளை பரப்பை நீங்கள் பின்புலமாக கொண்டீர்கள் என்று அர்த்தம். நிழல்கள் மைய உருவம் ஆகின்றன. வெள்ளை எனில் கறுப்பு பின்புலமாகிறது. வெள்ளை மைய உருவமாகிறது. ஒரு இலக்கிய படைப்பை நாம் பல சமயங்களில் புரிவது இந்த மைய உருவ -- பின்புல அடிப்படையிலே. இந்த பிரபலமான படத்தின் சுவாரஸ்யம் என்ன? பின்புலமும், மைய உருவமும் இடம் மாறுவதனால் கிடைக்கும் இருவேறு பார்வைகள். ஒரு இலக்கிய படைப்பில் இது நிகழும் போது அதன் இயல்பான பொருள் ஆழத்தினால், விரிவினால் அனுபவ ரீதியிலான தரிசனங்கள் கிடைக்கின்றன. மேலும் ஒரு இலக்கிய படைப்பில் எது மைய உருவம் அல்லது பின்புலம் ஆக வேண்டும் என்பதை எழுத்தாளன் தகவல்களை அளிக்கும் விதத்தில் அல்லது அவற்றின் அளவின் அடிப்படையில் தீர்மானிக்கலாம். ஒரு வாசகனின் வாசிப்பு பயிற்சி மற்றும் சூழமைவு சார்ந்தும் குவிமையம் வேறுபடலாம். இப்போது ஒரு எழுத்தாளன் பிரதியில் மைய உருவ -- பின்புலத்தின் சம நிலையை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில தந்திரங்கள்.

மைய உருவத்துக்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்கும்:

(1) புலத்திலிருந்து தன்னை பிரித்து காட்டும் படி தெளிவாக விளிம்புகள் கொண்டு, தன்னில் முழுமையானது தான் மைய உருவம். பெரும்பாலான புனைவுகளில் பாத்திரங்களே மைய உருவம். இவற்றின் பெயரே பிரித்துக் காட்டும் முக்கிய விளிம்பு. உதாரணமாக "காடு" நாவலின் குட்டப்பன் -- ரசாலம். மைய உருவமாகும் பாத்திரங்கள் தனித்துவமும், முழுமையும் கொண்டிருக்கும். அவற்றின் மனவியல் கூறுகள், சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றும் பாங்கால் இவ்வாறு தனித்துவம் பெறுகின்றன. உதாரணமாக கோப, காம ஆரவாரங்களில் மற்றவர் ஆழ்கையில் விலகலுடன் பங்கேற்று உணரும் பெருமாள் ("காமரூபக் கதைகள்").

(2) பின்புலத்தின் நிலையாக இருக்க, மைய உருவம் நகரும். மைய உருவத்தை அதன் நகர்வை இவ்வாறு காட்டசெயல்-விருப்ப வினைச்சொற்களை, செய்வினைச் சொற்களை பயன்படுத்துவோம் .பின்புலத்தை உருவாக்க படைப்பாளி அடைமொழி- அல்லது இருப்பு-சார் வினைச்சொற்கள் அல்லது செயப்பாட்டு வினைச்சொற்களால் அதைக் கட்டுகிறான்.

"அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் டெலிபோன் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம்". (மறுபடி-2; சுஜாதா).
இந்த வசனத்தில், italicized வினைஅடைச்சொற்கள் பின்புலத்தை நிறுவ, மைய உருவத்தின் நகர்வை அல்லது செயலை (வேலை) காட்ட செயல்விருப்ப வினைச்சொற்கள் பயன்படுகின்றன (செய்யப் போகிறோம்). அடுத்த சொற்றொடரில் சுஜாதா இருப்புசார் வினைச்சொற்களை கொண்டு பின்புலத்தையும் செயல்விருப்ப வினைச்சொற்களை பயன்படுத்தி மைய உருவத்தையும் சுருக்கமாக காட்சிபூர்வமாய் உருவாக்குக்கிறார்

"உள்ளே சென்றதும் இருட்டாக இருந்த நடையை கடந்ததும், பிரமிப்பாக பெரிய மைதானம்" ("துடிப்பு; தேர்ந்தெடுத்த கதைகள், இரண்டாம் தொகுதி")
சுஜாதா சென்றதும், கடந்ததும் ஆகின சொற்களை கதைப்பாத்திரத்துக்கு அளித்து லாவகமாய் இங்கு அதனை மைய உருவம் ஆக்குகிறார். "இருட்டாக", "பிரமிப்பாக" "இருந்த" எனும் இருப்பு-சார் வினையடைச்சொற்களால் நடையையும், மைதானத்தையும் பின்புலங்களாக வடிவமைக்கிறார். நடையை இருட்டாக உணர்ந்தான்; மைதானம் கண்டு பிரமித்தான் என்றால், இத்தனை கச்சிதமான, தூலமாக தோன்றும் ஒரு காட்சிபூர்வ அனுபவத்தை சுஜாதாவால் அளிக்க முடியாது.

(3) காலத்தாலும், வெளியினாலும் பின்புலத்திற்கு முன் வருவதே மைய உருவம். "ஜெயமோகனின் பூமியின் முத்திரைகள்" குறு நாவலில் இருந்து சில வரிகள்:

"நான் எதிர்பாராமல் ஃபாபதரின் கல்லறையை கண்டேன். அது அங்கிருப்பதைக் கூட எதிர்பாராதவன் போல் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தேன். துடைப்பப் புல் இடுப்பளவு உயரத்துக்கு மண்டி மற்றக் கல்லறைகளை விட மிகவும் பாழடைந்து காணப்பட்டது".

முதலில், இரண்டாம் விதிப்படி italicized வினைச்சொற்களை பாகுபடுத்த வேண்டும் . "காணப்பட்டது" (செயப்பாட்டு வினை) "பார்த்தேன்" (செய்வினை) ஆகிய இரண்டின் இலக்கண முரண் கொண்டு ஜெ.மோ கல்லறைத் தோட்டத்தை எளிதில் பின்புலமாக சித்தரிக்கிறார். அடுத்து அவர் கதைசொல்லியை முதலில் வர செய்கிறார் ('நான்'). அடுத்து வருபவை பெரும்பாலும் கல்லறைத் தோட்டம் பற்றின செய்திகளாக இருந்தாலும் கூட காலத்தாலும், வெளியாலும் கதைசொல்லி முந்துவதால் அவனே இங்கு மைய உருவமாக ஆகிறான். இதே கதையில் வரும் மற்றொரு பத்தியுடன் இதனை ஒப்பிடுவோம்:

"மவுனம் எங்களை மூச்சுத் திணற செய்தபடி கவிந்திருந்தது. மேல் பறம்பு வீட்டின் முன்புறமிருந்து வெளியே வளைந்து நீண்ட தென்னை மரத்தின் நிழல் சற்று தள்ளி சாலையில் செம்மண் பரப்பில் விழுந்து கிடந்தது. வானில் மிதக்கும், மிகப்பெரிய, ஏராளமான சிறகுள்ள பறவை ஒன்றின் நிழல் போல அது மெலிதாக அசைந்து கொண்டிருந்தது.

நீ நாளை சர்ச்சுக்கு வருவாயா?" என்றான் ஜான்."

கதைசொல்லி (முதலில் தரப்பட்டு மைய உருவமாகிறான்) நிற்கும் வெளியில் (பின்புலம்) தான் பறம்பு வீட்டின் நிழல் விழுகிறது. நிழலுக்கு ஏகப்பட்ட அடைச்சொற்கள், அடைவினைகள் தருகிறார் ஜெ.மோ. அதிகப்படியான நுண்தகவல்களால் பின்புலத்துக்கு அதிக பரப்பு ஒதுக்குகிறார். ஒரு பெரிய சித்திரத்துக்கு ஓவியன் எளிய கோடுகள் தீட்டி, வண்ணங்களை திட்டுத் திட்டாய் கத்தி கொண்டு பரப்புவது போல் பின்புலத்தை எதற்கோ தயாரிக்கிறார். அடுத்த கட்டமாக இறுதியில் ஜெ.மோ செயல்விருப்ப வினைச்சொல் ஒன்றை ('அசைந்து') பொருத்தி பின்புலத்தை (மௌனம் கவிந்த மனம் மற்றும் நிழல் கவிந்த சாலை பரப்பு) உயிர்பெறச் செய்கிறார். அதனை மைய உருவமாக்குகிறார். நிழலை அதன் சலனம் எழுப்புகிறது. பின்புலம் இவ்வாறு இங்கு மிக அழகான படிமமாக விகாசிக்கிறது .

பின்புலம் ஜுரத்தில் இருந்து விழித்த குழந்தை போல் மைய உருவமாய் பரிணமிப்பதற்கு மற்றொரு பிரசித்தமான எடுத்துக்காட்டு தாமஸ் ஹார்டியின் Return of the Native நாவலில் வரும் இயற்கை. தலைப்பு சொந்த ஊரான எக்டன் ஹீத் எனும் இங்கிலாந்திலுள்ள வெசக்ஸ் புதர்க்காடு கிராமத்துக்கு திரும்பும் இளைஞன் கிளிம் பற்றியது. கதைத்திட்டம் மேலும் கிளிம்மின் அத்தை மகள் தாமஸின், யுஸ்டேஷியா வை ஆகிய பெண்களின் எதிர்பால் உறவுகளை சொல்வது என்றாலும் இந்நாவலில் புதர்க்காட்டின் இயற்கை பற்றின் பல நுண்தகவல்களை பக்கம் பக்கமாய் தருகிறார் ஹார்டி. இளங்கலை பாடத்திட்டத்தில் இந்நாவலை வகுப்பில் வாசிக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியில் மாணவர்கள் பொறுமை மொத்தமாய் இழந்து விட்டோம் . யுஸ்டேஷியா ஏரியில் குதிக்கும் சத்தம் கேட்டு கணவன் கிளிம், கள்ளக்காதலன் வில்டேவ், அவனது மனைவி தாம்ஸின், அவளது ஒருதலைக் காதலன் வென் என ஆளாளுக்கு காப்பாற்ற விரைகிறார்கள். இப்போது இரண்டு பக்கத்துக்கு வழியில் தெரியும் இயற்கை பற்றின் விஸ்தீரமான வர்ணனை வருகிறது. பேஜாராகி பற்களுக்குள் பொறுமினோம்.

இப்போது புரிகிறது: ஆனால் இதுவொரு நெடுந்தொடர் தந்திரமல்ல; ஹார்டியை பொறுத்தமட்டில் புதர்காடு பின்புலம் மட்டுமல்ல, உயிருள்ள மையப்பாத்திரம்: மைய உருவம்.

அடுத்து வரும் விதிகளுக்கும் "பூமியின் முத்திரைகள்" பத்திகள் சிறந்த உதாரணமே.

(4) மைய உருவம் அதிக நுணுக்கமாய் விவரிக்கப்பட்டு, குவிமையப்பட்டு, அதிக வெளிச்சம் கொண்டு அல்லது அதிக ஈர்ப்புடையதாக இருக்கும்.

(5) அது களத்தில் உள்ள பிறவற்றின் மீதாகவோ, முன்னதாகவோ, அல்லது அவற்றை விட பெரிதாகவோ தெரியும். அப்படியாகின் பிறவை பின்புலமாகும்.

பின்புலம் பரப்பில் புலப்படாமல், கற்பனையில் முழுக்க எழுவதாக அமையலாம். பூமா ஈஸ்வரமூர்த்தியின் இச்சிறு கவிதையில் போல்:

பிறக்கையில்

"பிறக்கையில்
அழுததற்கு
காலடிகள்
அர்த்தம் சொல்லும் இனி ..." ("பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்")

பிறக்கையில் காலடித்து அழும் மைய உருவமான சிசுவின் பின்புலம் எது? இலவம் பஞ்சென தான் மிதக்கப் போகும் காலவெளியா? சிக்கலான, அச்சமூட்டும் சுழல்பாதைகளால் ஆன வாழ்வின் வெளியா? புலனாகாத கற்பனையில் விரியும் பின்புலம் தான் இக்கவிதை தரும் அலாதியான வாசிப்பனுவத்திற்கு காரணம்.

பின்புலமும் மைய உருவமும் படைப்பின் நிகழ்தல் ஊடே இடம் மாறுவதில் அல்லது இரண்டும் ஒன்றாகையில்அல்லது புது மைய உருவம் தோன்றி முந்தின மைய உருவத்தின் இடம் பிடிக்கையில் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் நேரலாம். இதை கவிதையில் எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை முதலில் காணலாம்.

கவிதையில் மைய உருவமும், பின்புலமும்

கவிதை வாசிப்பு பிரக்ஞையில் உறைக்கும் முன்னே நிகழ்ந்து முடிகிறது தான். ஆனாலும் அதன் இயக்கமுறையை ஆராய்ந்து புரிகையில் மேலும் பல நுட்பங்கள் திறக்கும்; அதுவரை மூட்டமாய் இருந்த கவிதையின் G-spot அகப்படும்; அதன் முதுகெலும்பு இடைவட்டுகள் வெதுவெதுப்பாய் கையில் வழுவும். மனுஷ்யபுத்திரனின் ஒரு அற்புதக் கவிதை:

ஒரு அற்புதத்துக்காக

"ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை

அற்புதங்கள் இனி நிகழாதென
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக் கொண்டேயிருக்கும்
ஒரு கணம்" ("நீராலானது")

இக்கவிதையின் பின்புலம் அருவமானது: அதாவது, காலம்; மேலும் குறிப்பாய் ஒரு அற்புதம் நிகழும் காலம். இவ்வரிகளில் மூன்று மைய உருவங்கள் ஒவ்வொன்றாய் மின்கம்பி மழைத்துளிகள் போல் வழுவிச் செல்கின்றன. முதல் மைய உருவம் அற்புதம். அற்புதமே இல்லை எனும் சகுனங்கள் அடுத்த மைய உருவம். இவை இரண்டையும் செங்கோலால் உந்தி விட்டு வந்தமர்கிறது மூன்றாவதாய் ஒன்று: அற்புதத்துக்கு மிக முந்தைய ஒரு கணம். இந்த கணம் நாம் முதலில் கண்ட பின்புலத்தின் இரட்டைப் பிறவி போல் தெரிகிறது அல்லவா? கவிதையை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

G-spot கிடைச்சுதா?

(இக்கட்டுரையின் தொடர்ச்சியாக, மைய உருவமும் பின்புலமும் கதை சொல்லலின் ஊடே ஏறத்தாழ இசை நாற்காலி விளையாட்டு போல் இடம் மாறுவதை ஹெமிங் வே மற்றும் சுஜாதாவின் சிறுகதைகளை முன்வைத்து அடுத்த வாரம் விவாதிக்கலாம்.)
Share This

10 comments :

  1. ஊப்ஸ் , அண்ணே , நீங்க கொஞ்சம் ஜீனியஸ்ன்னு ஆண்குறி பற்றிய பதிவிலேயே கண்டு கொண்டேன் ,

    ஆனால் இந்த பதிவு..... இவ்வளவு ஆழமாக எழுத்தை சிந்திக்க முடியுமா ? என கேள்வி எழுப்புகிறது,

    நிஜமாகவே காடும் மற்ற ஜெமோவின் எழுத்துக்களும் நான் படித்த முறை சரிதானா என சந்தேகிக்கிறேன் .

    ReplyDelete
  2. அன்பு மதி
    உங்கள் வாசிப்புக்கு நன்றி. ஜெயமோகனின் எழுத்து மீதான மற்றொரு வாசிப்பு மட்டுமே இது. மேலும் பலவும் சாத்தியம். நன்றி.

    ReplyDelete
  3. அபிலாஷ்,
    கட்டுரை வாசித்தேன். ஆரம்பம் சற்றே தொய்வாக இருப்பது போல் தெரிகிறது. காரணம் கட்டுரை ஆரம்பிப்பதற்கான முற்புனைவு சரியானபடி இல்லையென்பது என் கருத்து.
    கட்டுரை முதல் வாசிப்பில் நன்றாக இருக்கிறது. மறுவாசிப்பின் பிறகுதான் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். மேலும் கண்களை சோர்வடையச் செய்யும்படி பக்க வடிவமைப்பு இருக்கிறது. அச்சு வடிவில் வாசித்தால் இன்னமும் நன்றாக இருக்குமென கருதுகிறேன். பகிர்தலுக்கு நன்றி.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. வாசிப்பு மறு வாசிப்பு விமர்சனம் மறு விமர்சனம் எழுத்துக்களினூடு மிக மிக உள்ளாகி ஊடுருவ முனையும் தருணங்களில் ஆழ ஆழ உழ முடியும் முயற்சி செய் நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. மிக்க நன்றி இளைய அப்துல்லா அவர்களே; நானும் மேலும் எழுத உற்சாகம் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. என்ன சொல்றதுன்னு தெரியல.ஆனா உங்கள பார்த்து பொறாமை படுகிறேன்.(ஆரோக்யமான பொறாமைதான்) சரி, உங்களோட நண்பனா நான் இருகிறதே என் பாக்கியம் என்று கருதுகிறேன்.

    இந்த மாதிரி ஆழமான கட்டுரைகளை புத்தக வடிவில் படிக்கவே முடியும் என்று கருதுகிறேன். தொடர்ந்து எழுங்கள் சார். வாழ்த்துக்கள்

    மிக்க அன்புடன்
    பெருமாள்
    கரூர்

    ReplyDelete
  7. நன்றி பெருமாள், உங்கள் பொறாமைக்கு

    ReplyDelete
  8. அபிலாஷ் உங்களை தொடர்ந்து உயிரோசையில் படித்து வருகிறேன். இதன் இரண்டாம் பாகம் ஏன் கடந்த வாரம் வெளிவரவில்லை? தொடர்ந்து இந்த கட்டுரை எழுதுங்கள்

    ReplyDelete
  9. அடுத்த பாகத்தை இன்னும் எளிதாக விரிவாக எழுத உத்தேசித்து தாமதமாகிவிட்டது. அடுத்த வாரம் நிச்சயம் வரும். உங்கள் வாசிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates