" எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் " தொகுதியிலுள்ள 90 கதைகளில் முதற் கதை " பழைய தண்டவாளம் ". நினைவு மீட்டல் பாணி கதை இது. ஒரு பழைய கூட்ஸ் பெட்டியை ஆட்கள் அகற்றுவது பற்றின தகவலிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பெட்டி பற்றி கதைசொல்லியின் ஏக்கம், விசனம், வியப்பு மற்றும் கவித்துவம் ஆகிய பல நினைவு அடுக்குகளாய் கதை விரிகிறது. பாம்பை காமத்தின் குறியீடாய் கொண்டு எழுதப்பட்ட சில கதைகள் போல், இக்க்கதை கூட்ஸ் பெட்டியை இருண்ட ஆழ்மனதின் படிமமாக மாற்றுகிறது. கல்யாணியக்கா எனும் பாத்திரம் துணிந்து இந்த பெட்டிக்குள் புகும் தருவாயிலிருந்து இது நமக்கு புரிபடுகிறது. இந்த கல்யாணி அக்காவும், கதைசொல்லியின் நிஜ அக்காவும் எதிர்நிலை பாத்திரங்கள்.
இந்த கூட்ஸ் பெட்டியை கதைசொல்லிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊர்மக்கள் அணுகும், எதிர்கொள்ளும் விதங்களில் தான் கதையின் சுவாரஸ்யம் உள்ளது. அப்பாவுக்கு பெட்டியை அண்டும் " கழிசடை " ஆண்களிடமிருந்து மகளின் பரிசுத்தத்தை பாதுகாக்கும் பதற்றம் ஏற்படுகிறது. கதைசொல்லிக்கு பெட்டி வியப்பு, இருப்பின் அடையாளம், இதுபோல் பலவற்றின் அர்த்தப் பரிமாணங்கள் கொண்டது. பெட்டிக்குள் சாராய யாவாரம் வேறு நடக்கிறது. பிறகு பாம்பு பரபரப்பில் இது தடைபடுகிறது. சில பேருக்கு இப்பெட்டி போக்குவரத்து இடைஞ்சல் மட்டுமே. இறுதியில் பெட்டியை அகற்றி விடுகிறார்கள். அது இருந்த இடம் வெறிச்சோடிப் போகிறது.
" எந்த மறைப்பும் இல்லாமல் வீடு வெட்டவெளியில் தெரிந்தது ".
இப்படி மறைப்பை அகற்றி வெட்டவெளி ஆக்குவதில் ஒரு சமூக வன்முறை உள்ளது. இந்த வரியிலிருந்து கதையை சமூக--தனிமனித உறவாடலாக திருப்பிப் படிக்கலாம்.
சமீபத்தில் "ராயல் சொசைட்டி" இதழில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். மேற்கில் அலுவலகங்களில் பயன்படுத்த உத்தேசிக்கப்படும் ஒரு கண்காணிப்புக் கருவியின் செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றி விளக்கியிருந்தார்கள். அதன்படி ஒரு அலுவலகப் பணியாளரின் அடையாளப் பட்டியில் மைக்ரோ சிப் ஒன்றைப் பொருத்தி விடுவார்கள். பிறகு இவர் அலுவலகத்தில் எங்கே உலாத்தினாலும், இருந்தாலும் மேலாளரால் இருந்த இடத்திலே மூக்கை சொறிந்தபடி துல்லியமாய் சொல்ல முடியும்: " என்ன அரைமணியாய் ஆளைக் காணோம், டாய்லட்டில் தவமா?"; "இன்று மட்டுமே 80 நிமிடங்கள் மொத்தமாய் பிரியாவுடன் அரட்டை போலும்". இதன் அடுத்த கட்டமாய் ஒரு தனிமனிதனின் அலுவலகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கூட கண்காணிக்க முடியும்.
தற்போதைய தமிழ்ச்சூழலில் ஒரு அரசியல் பிரமுகரைப் பற்றி ஜோக்கடிக்கக் கூட மிகுந்த ஜாக்கிரதை உணர்வு தேவைப்படுகிறது. அதிகார மையத்தில் இருப்போர் பற்றின எளிய விமர்சனத்துக்குக் கூட ஏகப்பட்ட கண்டனக் குரல்கள், வாயடைப்புகள், தணிக்கைகளை ஒருவர் எதிர்கொண்டாக வேண்டும். பேச்சும் மூச்சும் அனுமதிக்குப் பிறகே வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் குற்றச்செயல் தடுப்பு எனும் பெயரில் தனிமனித அந்தரங்கம், சுதந்திரம் மீதான அரசின் ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமாகவுள்ளது. அப்போது நம் சமூகம் மறைப்பற்ற ஒரு வெட்டவெளியாக, நிழல்களாய் துரத்தப்படும் மனிதர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பொருளில் " பழைய தண்டவாளம் " கதைக்கு சமகாலத்தன்மை உருவாகிறது.
கதையின் இறுதியான கவித்துவ வரி: " லேசாக இருட்ட ஆரம்பித்து தண்டவாளம் இருட்டில் தெரியாமல் போனது ". இப்போது நானிதைச் சொல்லும் போது இருட்டு அடர்த்தியாய் உங்களை சூழ்ந்துள்ளது. கண்களை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கண்ணால் காண்பதும் பொய் ... அது தேர்தல் ஊழலோ அல்லது சிலை நாட்டும் நாடகமோ. தீரவிசாரித்து விளக்கங்கள் வரும்வரை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். இருட்டில் கண்விழிப்பவன் முட்டாள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment