இது போன்று மற்றொரு இரவின் போது, நாங்கள் சியனாகா கிராண்டேவைக் கடக்கையில் பாப்பலேலோ என்னை சிற்றறையில் தூங்க வைத்து விட்டு, மதுபான விடுதிக்கு சென்றார். அது என்ன நேரமென்று நினைவில்லை; சிற்றறையில் துரு பிடித்த மின்விசிறியின் பொம்மென்ற இரைச்சல் ஒலி மற்றும் உலோகப் பட்டிகைகள் மோதி கலகலக்கும் ஒலிக்கும் மத்தியில் நான் கும்பல் ஒன்றின் கூச்சல் கூப்பாடுகள் கேட்டு எழுந்தேன். எனக்கு அப்போது வயது ஐந்துக்கு மேல் இருக்காது; ரொம்பவே பயந்து போய் விட்டேன். ஆனால் அக்கூச்சல் விரைவிலே அடங்கிவிட, நான் அதுவொரு கனவு என்று நினைத்தேன். காலையில் மதகுடை கலத்துறையில் நாங்கள் இருந்த போது, தாத்தா தன் நேர் சவரக்கத்தியுடன் நின்று சவரம் செய்து கொண்டிருந்தார், கதவு திறந்திருந்தது; சட்டத்திலிருந்து கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்தது துல்லியமாக நினைவுள்ளது. அவர் அப்போதும் சட்டை போட்டிருக்கவில்லை. ஆனால் உட்சட்டைக்கு மேல் அகலமான பச்சை நேர்கோடுகள் கொண்ட நிரந்தர தொய்வு வார்களை அணிந்திருந்தார். இப்போதும் கூட என்னால் பார்த்த உடனே அடையாளம் காண இயலும் நபர் ஒருவருடன் அவர் சவரம் செய்தபடி விடாமல் பேசினார். அப்படியே காகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை கொண்டிருந்த அவர் வலக்கையில் மாலுமியின் பச்சை குத்தியிருந்தார்; மேலும் அவர் கழுத்தை சுற்றி பல கெட்டியான தங்க மாலைகளும், இரு மணிக்கட்டுகளிலும் தங்க கையணி மற்றும் வளையல்களும் அணிந்திருந்தார். நான் ஆடைகள் அணிந்து பூட்ஸ் போட்டு படுக்கையில் அமர்ந்திருக்கும் போது, அந்த மனிதர் என் தாத்தாவிடம் சொன்னார், "கொஞ்சமும் சந்தேகமில்லை கர்னல், அவர்கள் விரும்பியதெல்லாம் உங்களை தண்ணீருக்குள் வீசவே"
தாத்தா புன்னகைத்தார்; சவரத்தை நிறுத்தாமலேயே தனக்கே உரித்தான இறுமாப்புடன் பதிலிறுத்தார், "அதுக்கு முயலாதது அவர்களுக்கு நல்லதாகப் போச்சு"
இரவின் ஆரவாரத்தின் பொருள் எனக்கு அப்போது விளங்கியது; தாத்தாவை யாரேனும் சதுப்பில் தூக்கி வீசியிருப்பார்கள் என்று எண்ணிட எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அம்மாவுடன் வீட்டை விற்க சென்று, சூரியனின் முதல் கதிர்களில் சியாராவின் பனி நீலமாய் ஒளிர்வதை சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விடிகறையில் இந்த விளக்கப்படாத நினைவெழுப்பல் படலம் என்னை திடுக்கிட வைத்தது; கால்வாய்களில் நேர்ந்த தாமதம் காரணமாய் சதுப்பு நிலத்திலிருந்து கடலை பிரிக்கும் பிரகாசமான மணற்துண்டை காண நேர்ந்தது; அங்கு வெயில் காய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டு, மெலிந்து, அழுக்கான சிறார்கள் கந்தல் துணிப்பந்தால் சாக்கர் ஆடும் மீனவ கிராமங்கள் தெரிந்தன. வெடிமருந்து குச்சிகளை சற்று தாமதித்து வீசியதால் கைகள் தூண்டிக்கப்பட்டு தெருக்களில் திரிந்த மீனவர்களின் எண்ணிக்கை திகைக்க வைத்தது. கப்பல் கடந்திடும் போது பயணிகள் சுண்டி விடும் நாணயங்களுக்காக சிறுவர்கள் பாயத் துவங்கினர்.
சியனாகோ நகரத்தில் இருந்து சற்று தொலைவில் கொள்ளை நோய் விளைவிக்கும் சதுப்பு நிலமொன்றில் நங்கூரம் இறக்கிய போது மணி ஏறத்தாழ ஏழு இருக்கும். சுமைதூக்கிகளின் குழுக்கள் முட்டியளவு சேற்றில் மூழ்கி எங்களை தோள்களில் தூக்கியபடி, விவரிப்புக்கு அப்பாற்பட்ட, சேற்றில் போட்டியிடும் வான்கோழி பருந்துகளிடையே நீரை வாரியடித்தபடி, எங்களை செயற்கை துறைமுகத்துக்கு கொண்டு சேர்த்தனர். நாங்கள் துறைமுகத்தில் மேஜைக்கு பின்னே அமர்ந்தபடி சுவைமிக்க சதுப்பு நில மேஜோரா மீன் மற்றும் பொரித்த பச்சை வாழைக்காய் துண்டுகளால் ஆன சிற்றுண்டியை சாவகாசமாக சாப்பிட்டோம்; அப்போது அம்மா தன் தனிப்பட்ட போர்த்தாக்குதலை தொடர்ந்தாள்.
"சரி, கடைசியாக சொல்", அவள் தலை நிமிராமலேயே சொன்னாள், "நான் உன் அப்பாவிடம் என்ன சொல்லட்டும்?"
யோசிக்க சற்று நேரம் எடுத்துக் கொள்ள முயன்றேன்.
"எதை பற்றி?"
"அவருக்கு வேண்டிய ஒரே விஷயத்தை பற்றி", அவள் சற்று எரிச்சலுடன் சொன்னாள், "உன் படிப்பு"
என் அதிர்ஷ்டத்துக்கு பக்கத்தில் உணவருந்தும் அடக்கமற்ற ஒருவர் எங்கள் உரையாடலின் தீவிரத்தன்மையால் தூண்டப்பட்டு என் காரணங்களை அறிய விழைந்தார். அம்மாவின் உடனடி பதில் என்னை அச்சுறுத்துவதோடு அல்லாமல் ஆச்சரியப்படுத்தவும் செய்தது;அவள் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பொறாமையுடன் பாதுகாத்து வருபவள் என்பதே காரணம்.
"அவனுக்கு எழுத்தாளன் ஆக வேண்டுமாம்", அவள் சொன்னாள்.
"ஒரு நல்ல எழுத்தாளனால் நன்றாக சம்பாதிக்க முடியும்", அந்த நபர் முழுத்தீவிரத்துடன் படிலளித்தார், "எல்லாவற்றையும் விட முக்கியமாக, இவன் அரசில் அந்த பணி செய்யும் பட்சத்தில்"
அவளது புத்தி சாதுர்யத்தாலோ அல்லது இந்த எதிர்பாராது இடை-புகுந்தவர் வழங்கின தர்க்கங்களை கண்டு அஞ்சியோ அம்மா விவாதப் பொருளை மாற்றினாள்;ஆனால் அதன் விளைவாக இருவரும் என் தலைமுறையின் எதிர்பாராத தன்மை குறித்து தங்களுக்குள் இரக்கப்பட்டு, தங்களது கடந்தகால ஏக்கநினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் இருவரும் பரிச்சயமானவர்களின் பெயர்களைத் தொடர்ந்து சென்று, தாம் இருவரும் கோட்ஸ் மற்றும் இகுவாரன் உறவுவழிகளில் இரட்டிப்பு சொந்தம் கொண்டவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். அந்நாட்களில் நாங்கள் கரீபியன் கடற்கரை ஓரமாய் சந்தித்த இரண்டு மூன்று நபர்களிடம் இவ்வாறு நிகழ்ந்தது, அம்மா இதை ஒரு அற்புத நிகழ்வாய் எப்போதும் கொண்டாடினாள்.
No comments :
Post a Comment