Wednesday, 23 December 2009

இன்றிரவு நிலவின் கீழ் (ஹைக்கூ தொகுப்பு): வா.மணிகண்டனின் தேர்ந்த விமர்சனம்



இது கவிஞரும், கட்டுரையாளருமான வா.மணிகண்டன் என் தொகுப்புக்கு எழுதியுள்ள ஒரு தேர்ந்த விமர்சனம். அவரது வலைப்பூவில் பிரசுரமாகி உள்ளது. அவரது மொழி நடையின் பாய்ச்சல், சுவாரசியம் மற்றும் விமர்சனத்தின் சவரக்கத்தி கூர்மைக்காகவே இங்கு மறுபிரசுரம் செய்கிறேன். நல்ல வாசிப்பு

இந்த நள்ளிரவில், மார்கழிக் குளிரின் சில்லிடுதலில், குரைத்துத் திரியும் நாய்களின் இரைச்சலால் ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை மேலோட்டமாகவே புரட்ட முடிகிறது.


கவிதைகள்(ஹைக்கூ) பேய்களைப் போலிருக்கின்றன. மனம் உற்சாமடையும் போதெல்லாம் ஒரு ஹைக்கூவை படிக்கிறேன். பின்னர் கொஞ்ச நேரம் ஆயாசமாக அமர வேண்டியிருக்கிறது. மீண்டும் ஒரு ஹைக்கூ. மீண்டும் அமைதி. ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் ஹைக்கூ என்பதன் வரையறையை இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்தாலும் அப்படிச் செய்ய முடிவதில்லை. இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் "இதுதான் ஹைக்கூ" என்பதற்கான வரையறையை செய்வது கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் வாசகனுக்கு கொடுக்கின்றன. ஆனால் மனம் இந்த வரையறை உருவாக்குதலில் லயிப்பதில்லை. கவிதை தரும் அனுபவத்தை விடவா வரையறை/வடிவம் அறிதலில் இன்பம் கிடைத்துவிடப் போகிறது என்ற உதாசீனம் மனதின் ஏதோ ஒரு இடத்தில் உருவாகிவிடுகிறது.


இந்தக் ஹைக்கூக்களுக்கென ஒரு பருவம் இருக்கிறது. அந்த பருவத்திற்கான குறிப்போ குறியீடோ கவிதையில் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு ஹைக்கூக்களை வாசிக்கும் போது ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. மேற்கத்திய பருவநிலை பற்றி ஒரு மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். பனிக்காலம் என்றால் காற்றும் நீரும் உறைந்து சாலையில் மென்பனி விரவிக்கிடக்கும் கடுங்குளிர்காலம். வெக்கை என்றால் இந்திய தேசத்து வெம்மையில்லை. சற்றே மிதமான கோடை. ஆடைகளை கழற்றிவிட்டு சூரிய ஒளி வாங்குவதற்காக ஒரு மணியின் மதிய வெயிலில் கடற்கரையில் கிடந்தாலும் உடல் வெந்துவிடாத வெப்பம். பின்னர் வாசிக்கும் போது ஒவ்வொரு கவிதையும் வாசகனை ஒரு பருவத்திற்குள் தள்ளி விடுகிறது. அது கவிதைக்கும் வாசகனுக்குமான விளையாட்டு.

ஹைக்கூக்கள் ஒரு காட்சியையும், ஒரு பருவத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றன. கவிஞன் எந்த பிரயத்தனமுமில்லாமல் இவற்றைச் சொல்லிச் செல்வதாக தோன்றுகிறது. இதிலிருந்து வாசகன் தனக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். கவிதைக்கான சாத்தியங்களும், அவனின் புரிதலையும் பொறுத்து வாசகன் ஹைக்கூவை நெருங்குகிறான் என்று சொல்லும் போது 'புரிதல்' என்ற சொல்லில் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.


ஹைக்கூவில் புரிதல் என்று எந்த சிக்கலும் இல்லை. பனி மூட்டத்தில் மூதாட்டி நட்சத்திரங்களை நோக்குகிறாள் என்பது ஒரு காட்சி மட்டுமே. அதோடு கூட வாசிப்பவன் நிறுத்திக் கொள்ள முடியும். இந்தக் காட்சியின் நீட்சியாக தான் ஒரு கதையை உருவாக்குவதும், தன் அனுபவத்தை கோர்ப்பதும் கவிதையோடான வாசகனின் ஒன்றுதலை பொறுத்து அமைகிறது.

ஆலன் ஸ்பென்ஸ் கவிதை ஒன்று பின்வருமாறு இருக்கிறது.

குழந்தைகள் வரைகிறார்கள்

உலர்ந்து மறையும்

ஓவியங்கள்


மழைக்காலத்தில் நீரில் வரையும் ஓவியங்கள் என்பது என் புரிதல், இந்தக் காட்சியை குழந்தைகள் மழைக்காலத்தில் செய்யும் ஒரு செய்லோடு மட்டுமாகவோ அல்லது அவர்களது வாழ்வோகவோ அல்லது தத்துவார்த்தமாக குழந்தமையின் நிலையின்மை வரைக்குமோ யோசிக்க முடிகிறது.

இந்தக் கவிதைகளை தொகுப்பாக்கியதில் அபிலாஷ் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார் என்று படுகிறது. வேனிற்கால கவிதைகள், மழைக்கால கவிதைகள், குளிர்கால கவிதைகள் என்று கவிதைகள் பருவத்தினடிப்படையில் ஒரு சேர இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய ஒரு சில கவிதைகள் தனியாக வாசிக்கும் போது ஆழ்ந்த வாசிப்பனுபவம் தராமல் இருக்கக் கூடும் ஆனால் அவற்றை தொகுப்பில் ஒத்த பருவமுடைய வேறு சில கவிதைகளுடன் சேர்த்து வாசிக்கும் போது மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக இருக்கின்றன.

கர்த்தரின் சிலை
தலைக்குப் பின் சூரியன்-
பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரிக்கிறது.


இந்தக் கவிதை ஒற்றைக்காட்சியை மட்டுமே தருவதாக தெரிகிறது. பருவமும் மறைந்திருக்கிறது. இது வேனிற்கால கவிதைளோடு தொகுப்பில் இருக்கிறது என்னும் போது சூரியன் இந்தக் கவிதையில் தனித்து தெரிகிறது. கர்த்தருக்குப் பின் சூரியன் இருப்பது காலையா மாலையா என்ற கேள்வியும், பட்டாம்பூச்சி சிறகுகளை விரிப்பதன் காட்சியும் வேறு பல புரிதல்களை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒரு உலகத்தை தனக்குள் அடக்கியிருக்கிறது. அந்த உலகம் வாசகனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்காக பெரும் கதவுகளை திறந்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதே தொகுப்பில் சில ஹைக்கூக்கள் நேரடியான காட்சியை சுட்டுவதில்லை. நேரடியான பருவ கால குறிப்பும் இல்லை.

நாய்ப்பீ
அல்லது நான்
ஈக்கு பொருட்டில்லை

இந்தக் கவிதையில் பருவம் நேரடியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஈக்கள் அதிகம் அலைவது என்பது வேனிற்காலத்தின் குறியீடாக இருக்கலாம் என்று படுகிறது. ஒற்றைவரி உரையாடலாக இருக்கும் இந்த சுய எள்ளல் மெல்லிய சிரிப்பை ஊட்டியது.
ஹைக்கூக்கள் என்பவை தத்துவம் சார்ந்தவை மட்டுமே என்பதும் சரியான கணிப்பில்லை. அங்கதமும் எள்ளலும் இந்தக் கவிதைகளில் தெறித்துக் கிடக்கின்றன. இன்னொரு முக்கியமான அம்சம், கவிதையின் இளமை. இதே கவிதைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு வாசகனுக்கு பழைய கவிதை என்ற எண்ணத்தைத் தரப்போவதில்லை.

அபிலாஷின் பெரும்பான்மையான மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆங்கில மூலத்தை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பைத் தரவில்லை. வெகு சில கவிதைகள் அப்படி வாசிக்கச் செய்கின்றன. warmth என்ற சொல் ஒரு கவிதையில் கதகதப்பு என்றும் இன்னொரு கவிதையில் வெதுவெதுப்பு என்று வருகிறது. பொருளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூலத்தை எழுதிய கவிஞனின் மனநிலைக்குச் செல்ல வாசகனுக்கு ஆங்கிலச் சொல் தேவைப்படுகிறது.

இந்தத் தொகுப்பின் சில ஹைக்கூக்களில் வரும் கவிதைக்குரிய தேசத்திற்கான பழங்கள், காய்கள், பூக்கள், பறவைகளின் பெயர்கள் வரும் போது சற்று அந்நியத்தன்மையுடையவையாக இருந்தன. இது மொழிபெயர்ப்பின் தவிர்க்க முடியாத அம்சம் என்றே நினைக்கிறேன். ஆனால் இத்தகைய மொழிபெயர்ப்பின் பலவீனங்கள் என்பது இந்தத் தொகுப்பில் மிகச் சொற்பம். எனக்கு அவை negligible.

ஹைக்கூ கவிதைகளுக்கென இருக்கும் வரைமுறைகள், வடிவம் போன்ற எந்தக் கூறின் மீது எனக்கு புரிதல் இருந்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை "இன்றிரவு நிலவின் கீழ்" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எனக்கு மிக நெருக்கமான ஹைக்கூ:

ஈ என் மூக்கில்
நான் புத்தன் அல்லன்
இங்கே ஒரு ஞானமும் இல்லை

100 நவீன கவிஞர்களின் ஹைக்கூக்களை மொழிபெயர்த்து கவிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புடன்(இருபது கவிஞர்களின் குறிப்புகள்) கையடக்கமாக வந்திருக்கும் இந்த நூல் கைக்கு கிடைத்ததிலிருந்து இரு மாதங்களாக வாசிக்காமல் வைத்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.


வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates