Thursday, 3 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: மார்க்வெஸ் (அத்தியாயம் 6)

 
நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு பின் கால்வாயில் வளரும் கடற்பஞ்சு கூட்டங்களால் கப்பலின் செயலுறுப்புகள் வேகம் இழந்திருந்தாலும், மாங்குரு காட்டுக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டதாலும் மூன்று மணிநேரங்கள் தாமதமுற்றோம். வெக்கையும், கொசுக்களும் தாங்க முடியாத வண்ணம் இருந்தன; ஆனால் அம்மா, எங்கள் குடும்பத்தில் பிரபலமான, இடையிடையே ஆன குட்டித்தூக்கங்களால் இவற்றுக்கு பிடிகொடுக்காமல் தப்பித்தாள்; இதனால் உரையாடலின் சரடை நழுவ விடாமல் ஓய்வு கொள்ளவும் அவளால் முடிந்தது. பயணத்தை நாங்கள் மீண்டும் துவக்கி, புதுமலர்ச்சி தரும் தென்றல் வீசவும் அவள் முழு விழிப்புடன் இருந்தாள்.
"என்ன ஆனாலும்", அவள் பெருமூச்சுடன் சொன்னாள், "உன் அப்பாவுக்கு நான் ஏதாவது ஒரு பதில் சொல்லியாக வேண்டும்"
"நீங்க அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்", நான் மனத்தூய்மையுடன் சொன்னேன், "டிசம்பரில் நானே நேரடியாக வந்து எல்லா விஷயத்தையும் அவரிடம் விளக்குவேன்"
"அதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளனவே", அவள் சொன்னாள்.
"எப்படி இருந்தாலும் பல்கலைகழகத்தில் எதையாவது ஏற்பாடு செய்ய இந்த வருடம் ரொம்பவே பிந்தி விட்டது", நான் அவளிடம் சொன்னேன்.
"நிச்சயமாக வருவாயா?"
"சத்தியமாக"
முதன்முறையாக அவள் குரலில் ஒருவித பதற்றத்தை உணர்ந்தேன்.
"நீ ஆமா என்று சொல்லப் போவதாய் உங்க அப்பாவிடம் சொல்லலாமா?"
"வேண்டாம்" என்பது என் ஆணித்தரமான பதிலாக இருந்தது, "நீ அப்படி சொல்லக் கூடாது"
அவள் வேறு வழி தேடுகிறாள் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் நான் பிடிகொடுக்க இல்லை.
"அப்படி என்றால் அவரிடம் முழு உண்மையயும் ஒரே அடியாக சொல்வதுதான் நல்லது", அவள் சொன்னாள், "நான் ஏமாற்றுவதாய் அப்போது தோன்றாது அல்லவா"
"சரிதான்",நான் நிம்மதியாக சொன்னேன், "அவரிடம் சொல்லி விடுங்கள்"
நாங்கள் அங்கே நிறுத்தினோம்; அவளை சரியாக புரிந்திடாத ஒருவர் அது முடிந்து விட்டதென்று நினைக்கலாம், ஆனால் அது அவளுக்கு மூச்சு விடுவதற்கான சிறு இடைவேளை மட்டுமே என்று எனக்கு தெரியும். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் முழுமையாக தூங்கி விட்டாள். இளங்காற்று கொசுக்களை துரத்தி புதுக்காற்றில் பூமணத்தை கலந்தது. பின் அக்கப்பல் ஒரு பாய்மரப்படகின் நளினத்தை பெற்றது.
என் குழந்தைப் பருவத்தின் மித்துகளில் ஒன்றான சியானாகா கிராண்டே எனும் மாபெரும் சதுப்பு நிலத்தில் நாங்கள் இருந்தோம். என் தாத்தா கர்னல் நிகோலஸ் ரிகார்டோ மார்க்குவஸ் மெஜியா -- அவரது பேரக்குழந்தைகள் அவரை பாப்பலேலோ என்று அழைத்தனர் -- அரகடாகாவில் இருந்து பாரங்குல்லாவிற்கு பெற்றோர்களை சந்திக்க என்னை அழைத்து செல்லும் போது எல்லாம் பலமுறை இதைக் கடந்திருக்கிறேன். ஒரு குளத்தைப் போலவோ, கட்டுக்கடங்காத சமுத்திரத்தைப் போலவோ இயங்கக் கூடிய அதன் பெரு நீர்ப்பரப்பின் கணிக்க முடியாத மனநிலைகளைப் பற்றி பேசுகையில் அவர் என்னிடம் சொன்னார், "நீ சதுப்பு நிலத்தை பார்த்து அஞ்சக் கூடக் கூடாது. மரியாதை தரலாம் அதற்கு"
மழைக்காலத்தின் போது அது சயராவிலிருந்து வீசும் புயற்காற்றின் கருணையில் இருந்தது. டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை, பருவ நிலை சாந்தமாக இருக்க வேண்டிய போது, வடகாற்று பெரும் ஆக்ரோசத்துடன் தாக்கியதால் ஒவ்வொரு இரவும் ஒரு சாகசமாக கழிந்தது. என் தாய்வழி தாத்தாவாகிய டிராங்குவிலினா இகுவாரன் -- மினா -- ரியோபிரையோவின் முகவாயில் அடைக்கலம் தேடி விடியல் வரை காத்திருக்க நேர்ந்த பயங்கர பயணத்திற்கு பின்னர், உயிர்போகும் அவசரம் இல்லாத பட்சத்தில் அதைக் கடக்கும் அபாயத்தை மேற்கொள்ள மாட்டார்.

எங்களின் அதிர்ஷ்டத்திற்கு அன்றிரவு கடல் அமைதியாக இருந்தது. வைகறைக்கு சற்று முன்னர்,கப்பல் முகப்பின் ஜன்னலுக்கு நான் காற்று வாங்க சென்ற போது மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல் நீரில் மிதப்பதை கண்டேன். அவை எண்ணற்று தெரிந்தன. ஏதோவொரு அழைப்பை ஏற்று செல்வதைப் போல் சதுப்பு நிலத்தின் எல்லைகளுக்குள் மீனவர்களுன் குரல்கள் ஒருவித பேய்த்தனமான முழக்க அதிர்வு கொண்டிருந்தன. நான் கைப்பிடிச்சுவரில் சாய்ந்து சியராவின் எல்லைக் கோட்டை ஊகிக்க முயல்கையில் கடந்த கால நினைவெழுச்சிகளின் எதிர்பாரா முதல் தாக்குதலுக்கு உள்ளானேன்.

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates