Wednesday, 2 December 2009

காலச்சுழலில் நின்றபடி வாசகர்களுக்கு ஒரு சலாம்

வாசக எதிர்வினைகள் தனிமை மற்றும் சோர்விலிருந்து என்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பது பற்றின பதிவு இது.

நேற்று போல் நான் என்றும் தன்மையை உணர்ந்தது இல்லை. எழுதின ஒரு கட்டுரைக்காக வசை பாடப்பட்டு சோர்ந்து போனேன். வசை எனக்கு புதிதல்ல. ஒருவித அதிர்சசி தான் சோர்வுக்கு காரணம். துதி பாடினவர் மிக அசட்டுத்தனமான தரப்புகளை முன்வைத்து பேசினார். நான் அறிவார்ந்தவராய் மதிக்கும், மிக்க பிரியம் கொண்ட நபர் அவர். அவரிடம் இருந்து வெளிப்பட்ட அசட்டுத்தனம் என்னை சற்று குழப்பி விட்டது. காரணம், அன்று அவர் தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தார். பதற்றமும் கோபமும் என் மீது திரும்பியது.

ஆனால் இந்த பதிவு அவரைப் பற்றியதல்ல. இந்த சம்பவத்துக்குப் பிறகு பன்மடங்கு அசட்டுத்தனத்துடன் நான் யோசித்தது பற்றி.

எழுத்தின் தனிமை



எழுத்துலகை ஒரு எதிரொலிக்கும் குகையுடன் ஒப்பிடுவோம். எழுத்தனுபவம் இப்படி விபரீதமாய் குகை சுவருடன் பேசுவதே. ஒரு அரூப வாசகன் கற்பனையில் இருந்தாலும் இது ஒரு செயற்கையான நிலைதான். வாசகர்கள் குகை வெளியே நின்று எதிரொலியை தங்களுக்கு ஏற்றபடி கேட்கிறார்கள். நான் இயல்பாகவே சற்று உள்ளொடுங்கியவன். இலக்கிய நண்பர்கள் கம்மி. எல்லாம் சேர்ந்து இந்த ஒன்றரை வருடம் அடிக்கடி ஒரு நூற்றாண்டாக கனக்கிறது.

அசட்டு எண்ணம்

ஒரு குழந்தை “என்னை எதுக்கு பெத்தே?” என்று கேட்பது போல் யோசித்தேன்: “இத்தனைக் காலமாய் (வெறும் ஒன்றரை வருடம், அட!) எழுதினதுக்கு மொத்தமாய் இப்படி திட்டு வாங்கினதுதான் வெகுமதியா?” மீண்டும் மீண்டும் இதையே நினைத்து இரவெல்லாம் கணினித் திரையை முறைத்தபடி கழித்தேன். அடுத்து, தெருவில் போகும்போது யாரோ முதுகுப் பக்கமாய் இழுத்து “யோவ் ...” என்று என் பிற கட்டுரைகள் மேல் மேலும் அசட்டுத்தனமாய் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுடன் தனிமையில் கத்திச் சண்டை. மேலும் மேலும் களைப்படைந்தேன். காலையில் செய்தி பார்த்து “எப்படி எல்லாம் ஊழல் அட்டூழ்யம் பண்ணுகிறார்கள்!” என்று டீ.விக் குரலை தொட்ர்ந்து சிந்தித்தால், அதே நபர் குறுக்கே தோன்றி ” நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ. உன் கட்டுரையையே பாரேன் ...” என்று ஆரம்பித்தார்.

என் ”கோவை மாணவிகளின் ...” கட்டுரைக்கு என்றுமே அல்லாத படி இன்று வாசகர்களிடம் இருந்து அதிக பாராட்டுகள் வந்திருந்தன. தலையை பிய்த்தபடி அழும் குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் வருவது போல். இதன் காலப்பொருத்தம் வியப்படைய வைக்கிறது. ஏனெனில் இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்துள்ளது. பல சமயங்களில் என் படைப்புகளுக்கு எதிர் தரப்பில் இருந்து நீடித்த மவுனம் நிலவும். எழுதுவது யாருக்கும் பிடிக்கவில்லையோ என்று சோர்வுற்று, சற்று காலம் எழுத்துக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று தீர்மானித்தபடி இருக்கையில் பரிச்சயமற்ற ஒரு வாசகரிடம் இருந்து பாராட்டி மின்னஞ்சல் வரும். அந்த ஒரு குரலால் உத்வேகம் பெற்று அவரையே அரூப வாசகனாய் முன்னிறுத்தி அடுத்து எழுதுவேன். என் குறைவான எழுத்து வாழ்வில் வறட்சி கட்டங்களில் இப்படி பல முறை காலம் தூறலிட்டுள்ளது. இந்த அவசர நிலை ஆதரவாளர்கள் இன்றி இதோ இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். வாழ்வெனும் காஸினோ சுழல் மேஜையில் மீள மீள பந்து சரியான இலக்கை நோக்கி வருவது வெறும் எதேச்சைதானா? இதன் பின்னால் சிடுக்குகள் நிறைந்த காலத்தின் மூளை ஒன்று செயல்படுவதாக படுகிறது. ஆகாயத்தில் இருந்து நீண்டு வரும் காலத்தின் கரம் நம் சீட்டுக்கட்டுகளை கலைத்து விடுகிறது; பிறகு அதே மாயக்கரம் ஒரே ஒரு சீட்டை சரியான இடத்தில் திணித்து மறைகிறது. ஆட்டம் திசை மாறுகிறது; அல்லது மர்மமான அன்றாடத்தன்மையுடன் தொடர்கிறது.

சிறுபத்திரிகை கட்டத்தில் இருந்து இன்று வரை நமது சிறுபான்மை வாசிப்பு கலாச்சார சூழலில் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேலாய் பல படைப்பாளிகள் எப்படி நிலைத்து எழுதியுள்ளார்கள் என்று வியந்திருக்கிறேன். நம் புராணங்கள், காப்பியங்களில் வரும் கண்ணகி, சீதை, காந்தாரி போன்றவர்களா இவர்கள். இல்லை. அந்த மர்மத்தின் திட்டிவாசல் இதோ திறக்கிறது. எழுத்தாளனின் தனிமை ஒரு ஜன்னல். அது எதிர்பாராது திறக்கையில் மட்டுமே பல இதயங்கள் அங்கு திறந்தபடி காத்திருப்பது தெரிகிறது.




காலத்தின் மூளை குரூரத்துடனும் அபாரமான பிரியத்துடனும் புன்னகைக்கிறது. அதன் முன் சிறு கூச்சத்துடன், தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் சிறு வாசக வட்டத்துக்கு ஒரு சலாம்!
Share This

2 comments :

  1. Hi Abilash,

    Some way few persons in this world
    and in their journey, in most of the circumstances they starve, stand thirst for some thing.
    For them they cant able to tell or cry what they want.

    Co-passenger like you with the ability to show some few drops to
    quench their thirst.
    So continue to show/give those few drops to thirsty persons like me,
    irrespective of the barriers, irritation,+ve or -ve feedback from
    various quarters.

    Drawing of Dali's flowing clock is excellent match to the article.

    Naveen Krishna

    ReplyDelete
  2. nice post abilash... and ur UYIRMAI story is very good.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates