நாங்கள் ரயில்நிலையத்துக்கு ஒற்றைக்குதிரை விக்டோரியா வண்டியில் -- உலகின் ஏனைய பகுதிகளில் அருகி விட்ட புகழ்வாழ்ந்த மரபு ஒன்றின் இறுதிக் கண்ணியாக இருக்கலாம் -- சென்றோம். துறைமுகத்தின் சேற்றுக்குழியிலிருந்து தொடங்கி தொடுவானில் சென்று இணையும், நைட்ரேட்டால் நீறாகும் வறண்ட நிலத்தை பார்த்தவாறே அம்மா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
எனக்கு அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம்: எனக்கு மூன்றோ நான்கோ வயதிருக்கும் போது பாரங்குல்லாவிற்கு என் முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கையில் தாத்தா என்னை கைப்பிடித்து இந்த எரியும் பாழ்வெளிக்கு குறுக்காக நடந்தபடி, எங்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல், அப்போதைக்கு ஆபத்து சமிக்ஞை ஏதுமின்றி, ஒரு நுரை கொப்புளிக்கும் பரந்த பச்சை நீர் விரிவின் முன் நின்றோம்; அங்கு பொருங்கூட்டமாய் மூழ்கிய கோழிகள் மிதந்தன.
"இதுதான் சமுத்திரம்", அவர் சொன்னார். ஏமாற்றமடைந்த நான் மறுகரையில் என்ன உள்ளது என்று கேட்டேன்; ஒரு நொடி கூட தயங்காமல் அவர் பதிலளித்தார், "மறுபுறம் கரையே இல்லை"
இன்று பல சமுத்திரங்களை முன்னும் பின்னும் கண்ட பிறகு நான் இப்போதும் அதையே அவரது மிகச்சிறந்த பதில்களில் ஒன்றாக கருதுகிறேன். எப்பிடி இருப்பினும் சமுத்திரம் பற்றின என் முந்தைய படிமங்களில், அழுகித் தொங்கும் மாங்குரூ மரக்கிளைகள் மற்றும் கூரான சங்கு சிதறல்கள் காரணமாக நடப்பதே அசாத்தியமான,. நைட்ரேட் ஓடு போல் படர்ந்த கடற்கரை கொண்ட அந்த படுமோசமான மாபெரும் நீர்நிலையோடு ஒப்பிடும் வண்ணம் எதுவும் இருக்கவில்லை.
சியனாகாவில் உள்ள சமுத்திரம் பற்றி அம்மாவுக்கு அதே எண்ணமே இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இடப்பக்கமாக அது தெரிய ஆரம்பித்த உடனே பெருமூச்சு விட்டபடி சொன்னாள், "ரியோஹாச்சாவில் உள்ளது போன்ற சமுத்திரம் வேறெங்கேயும் இல்லை"
அந்த சந்தர்பத்தில் மூழ்கின கோழிகள் பற்றிய என் ஞாபகத்தை அவளிடம் சொன்னேன்; எல்லா வயது முதிர்ந்தோரையும் போல, அதுவொரு குழந்தைப்பருவ பிரமையென அவள் கருதினாள். பிறகு அவள் போகும் வழியே ஒவ்வொரு இடம் பற்றின தன் சிந்தனையோட்டத்தை தொடர்ந்தாள்; அவளது மௌனத்திலுள்ள மாற்றங்கள் மூலம் அவள் என்ன யோசிக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
ரயில் தண்டவாளங்களின் மறுபுறமுள்ள சிவப்பு விளக்கு மாவட்டத்தை கடந்தோம்; அங்கு வன்ணம் பூசப்பட்ட சிறுவீடுகளும், துருவேறிய அவற்றின் கூரைகளும், தாழ்வாரத்தில் இருந்து தொங்கிய வளையங்களில் அமர்ந்து கிராக்கிகளை போர்ச்சுகீஸ் மொழியில் அழைத்துக் கொண்டிருந்த பாரமரிவாரத்திலிருந்து வந்த மூப்பேறிய கிளிகளும் தெரிந்தன. ஊர்திகளை நீரடித்து கழுவும் இடத்தை கடந்தோம்; அதன் பிரம்மாண்ட குவிமாடத்தில் வலசைப்பறவைகளும் , வழிதொலைத்த பறவைகளும் உறக்கம் கொள்ள அடைக்கலம் அடைந்தன. மாநகரத்தினுள் நுழையாமல் அதன் எல்லையை சுற்றி வந்தோம்; ஆனால் அதன் அகன்ற ஏகாந்தமான தெருக்கள், மற்றும் மாலை வேளைகளில் முடிவற்ற பியானான் பயிற்சிகள் நடக்கும், தரைமுதல் கூரைவரை நீண்ட சாளரங்கள் கொண்ட ஒற்றை மாடி வீடுகளின் பழங்கால அலங்கார சிறப்பைக் கண்டோம். எந்த முன்னறிவிப்பும் என்று அம்மா சுட்டிக் காட்டினாள்.
"பார்", அவள் சொன்னாள், "அங்கேதான் உலகம் முடிந்து போனது"
No comments :
Post a Comment