நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம், சாய்-தகரக் கூரை, நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான், அம்மா அன்று சொன்னாள், 1928-இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது. எனக்கு நினைவு தோன்றிய நாளில் இருந்து தாத்தாவால் ஓராயிரம் முறை சொல்லப்பட்டும், திரும்ப சொல்லப்பட்டும் அந்நிகழ்வை நானே வாழ்ந்து அனுபவித்தது போல் அறிந்து வைத்திருந்தேன்.
படைவீரன் பணிநிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை சட்டவிரோதிகள் என்று அறிவிக்கும் சட்டம் ஒன்றை வாசிக்கிறான்; அதிகாரி சதுக்கத்தை காலி செய்ய ஐந்து நிமிடங்கள் அவகாசம் அளித்த பிறகு மூவாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுத்தனமாய் எரியும் சூரியன் கீழ் அசைவற்று நிற்கின்றனர்; சுடும் உத்தரவு; சடசடவென வெண்ணிற வெங்கனல் வெடிப்புகளில் தோட்டாக்கள் துப்பும் எந்திரத்துப்பாக்கிகள்; பீதியின் பொறியில் மாட்டிக் கொண்டு தெறிக்கும் குண்டுகளின் பசியடங்காத கத்திரிக்கோல்களால் கச்சிதமாக, சிறிதுசிறிதாக நறுக்கி இடப்படும் கூட்டம்.
காலை ஒன்பது மணிக்கு சியனாகோ வந்தடையும் ரயில்வண்டி கப்பல்களில் இருந்து பயணிகளையும், சியராவில் இருந்து வந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு கால்மணி நேரத்தில் வாழைப்பழ பிராந்தியத்தின் உட்பகுதிகளுக்குள் பயணம் தொடரும். நானும் அம்மாவும் நிலையத்தை எட்டு மணி தாண்டியபின் வந்தடைந்தோம்; ஆனால் ரயில் வர தாமதமாகியது. அப்போது பயணிகள் நாங்கள் மட்டுமே. காலியான தொடர்வண்டிக்குள் நுழைந்ததுமே அவள் இதை உணர்ந்தாள்; விழா உணர்வு கூடிய நகைச்சுவையுடன் கூவினாள், "என்ன வசதி ! மொத்த ரயிலும் நமக்கு மட்டும் தான்"
அது அவளது ஏமாற்றத்தை மறைப்பதற்கான போலி பெருவகை தான் என நினைக்கிறேன்; ஏனெனில் தொடர்வண்டிகளின் நிலைமையில் இருந்து காலத்தின் கோலங்களை கண்கூடாக கண்டேன். அவை இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிகள்; ஆனால் அங்கு மூங்கில் இருக்கைகள் அல்லது உயர்த்தவும் தாழ்த்தவும் முடியக்கூடிய கண்ணாடி ஜன்னல் கதவுகளுக்கு பதில் ஏழைகளின் அலங்கரிக்கப்படாத வெதுவெதுப்பான பின்புறங்களால் வழவழப்பாக்கப்பட்ட மரபெஞ்சுகளே இருந்தன. அந்த தொடர்வண்டி மட்டுமல்ல மொத்த ரயிலுமே அவற்றின் பழைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் ஒரு பேய் வடிவாகவே இருந்தது. அந்த ரயில் ஒரு காலத்தில் மூன்று வகுப்புகள் கொண்டிருந்தது. படுஏழைகள் பயணித்த மூன்றாம் வகுப்பு வாழைப்பழங்களை அல்லது கசாப்புக்கான கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பலகை பெட்டித் தொடர்வண்டிகள் பயணிகளுக்காக வண்ணம் பூசப்படாத பலகை பெஞ்சுகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டன. இரண்டாம் வகுப்பில் வெண்கல அலங்காரம் கொண்ட மூங்கில் இருக்கைகள் இருந்தன. அரசு அதிகாரிகளும், வாழைப்பழ நிறுவனத்தின் மேலாளர்களும் பயணிப்பதற்கான முதல் வகுப்பில் நடைபாதையில் தரைவிரிப்புகள் மற்றும் வெல்வெட்டால் பொதியப்பட்ட அமர்வு நிலையை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றும் வசதி கொண்ட இருக்கைகள் இருந்தன. நிறுவனத் தலைவர், அவரது குடும்பம் அல்லது முக்கிய விருந்தாளிகள் பயணிக்கும் பட்சத்தில், வண்ணக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள், சுவர் மீது ஜிகினா பதித்த அச்சுருவ வேலைப்பாடுகள்,மற்றும் பயணத்தின் போது தேநீர் அருந்த சிறுமேஜைகள் அமைந்த வெளி மொட்டைமாடி உடைய ஆடம்பர தொடர்வண்டி ரயிலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்படும். இந்த கற்பனைக்கு எட்டாத தனிவண்டியின் உட்பகுதியை கண்டுள்ள ஒரு ஜீவனைக் கூட நான் இதுவரை சந்தித்தது இல்லை. என் தாத்தா இருமுறை மாநகரத் தலைவராக இருந்தவர்;அவர் பணம் பற்றி விளையாட்டுத்தன மனப்பான்மை கொண்டவர். ஆனாலும் பெண் உறவினருடன் பயணித்தால் மட்டுமே அவர் இரண்டாம் வகுப்பில் சென்றார். ஏன் அவர் மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறார் என்று கேட்டால் "நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லாததால்" என்று பதிலளிப்பார். ஆனால் ஒரு காலத்தில் இந்த ரயிலின் சற்றும் மறக்கமுடியாத அம்சம் நேரந்தவறாமையே. நகரங்களின் அனைத்து கடிகாரங்களின் நேரமும் இதன் விசில் சத்தத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
அன்று ஏதேதோ காரணங்களால் அது ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இரங்கல் தொனியில் கிறீச்சிட்டவாறு, மிக மெதுவாக அது நகர ஆரம்பித்த போது அம்மா சிலுவை வரைந்து கொண்டாள்; ஆனால் எதார்த்தத்துக்கு உடனடியாக திரும்பினாள்.
"இந்த ரயிலின் ஸ்பிரிங்களுக்கு எண்னையிட வேண்டியுள்ளது", அவள் சொன்னாள்.
No comments :
Post a Comment