Friday, 25 December 2009
இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்
வங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது.
முதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாகவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு மட்டுமல்ல இது. ஆட்டமுறைமையை உருவாக்குவது குழந்தை சோறு உண்ண, நடக்க பழகுவது போல்; இங்கிலாந்து மட்டையாளர் கெவின் பீட்டர்சனுக்கு இந்த குழப்பம் ரொம்ப நாள் இருந்தது. இதற்காக அவர் ஜெப்ரி பாய்காட் போன்ற விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. எனக்கு ரோஹித் மீது தனிப்பட்ட புகார்கள் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குளறுபடி அவரது தேர்வின் நியாயமின்மை குறித்து. உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக, சிறப்பாக மற்றும் திறமையாக ஆடுவதே தேர்வின் அளவுகோல் என்றால் ரோஹித்தை விட பலரும் தராசில் இடம் பிடிப்பார்கள்: மும்பையின் ரஹானே, கர்நாடகாவின் மனீஷ் பாண்டே மற்றும் தில்லியின் ஷிகார் தவான். தராசு முள்ளை ரோஹித் பக்கம் சாய்த்த காரணி என்னவாக இருக்கலாம்?
அவரது ஆட்ட நளினம். இந்திய மற்றும் இங்கிலாந்து தேர்வாளர்களுக்கு ஆட்ட நளினம் மீது தவிர்க்க முடியாத மயக்கம் உண்டு. அடுத்து அணித்தலைவர் ஆதரவு. இந்த கோணத்தை விளக்க முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நசீர் ஹுசேனின் Playing with Fire எனும் சுயசரிதையிலிருந்து உதாரணம் தருகிறேன். டேரன் காப் எனும் தொண்ணூறுகளின் குண்டு வேகப்பந்து வீச்சாளரை உங்களுக்கு தெரியும். நசீர் அணித் தலைமையின்ன் போது கோப்புக்கு வயதும் உடற்பளுவும் ஏறி வந்தது. ஆனால் அவருக்கு அணியின் இளைய வீரர்களிடத்து செல்வாக்கு அதிகம். நசீருக்கு அது தெரியும். அவர் சொன்னார்: “காப் 90 கிலோ எடை ஆனாலும் நான் அவரை அணியில் வைத்திருப்பேன். அணியில் அவரது தாக்கத்தை நான் அறிவேன்.” ஒவ்வொரு அணியிலும் இத்தகைய சமரசங்கள் மற்றும் சுதாரிப்புகள். அணிக்கு வெளியே அணி மேலாண்மை மற்றும் வாரிய அதிகாரிகள், தேர்வாளர்கள் இடையிலும் இது நிகழலாம். வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் இவை. ஒரு அணித்தலைவர் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களின் ஒரு கூட்டணியை அணியில் வைத்திருக்கும் போது மன ஆறுதல் மற்றும் அதிகாரத்தை அடையலாம். குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும் பட்சத்திலும் இது முக்கியமானது.
அமித் மிஷ்ரா ஓஜ்ஹாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்படுள்ளார். முன்னவர் இடத்தில் இலங்கைத் தொடரின் போது பின்னவர் கொண்டு வரப்பட்டதற்கு மிஷ்ரா ஆட்டத்தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் இருந்தது காரணம். இப்போது ஒரு 20-20 ஆட்டத்தில் அடி வாங்கினதும் ஓஜ்ஹா மீண்டும் காணாமல் போகிறார். 20-20 உலகக் கோப்பையின் போதும் இதுவே நடந்தது.
இத்தனைக்கும் ஓஜ்ஹாவின் ஒரு நாள் ஆட்ட விவரத்தொகுதி சிறப்பானது. 9 ஒரு நாள் ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள். மிஷ்ரா? 5 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள். நடந்து வரும் ரஞ்சி தொடரில் திரிபுராவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளது இவரது தேர்வுக்கு உதவியிருக்கலாம். 90-களின் இறுதியிலிருந்து இடதுகை மட்டையாளர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதனால் பெரும்பாலான அணிமேலாண்மைகள் இடதுகை சுழலாளர்களை விட ஆப் சுழலர்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக கங்குலி இடது கை சுழலர்களுகளை பொருட்படுத்தியது இல்லை. ஜோஷி, முரளி கார்த்திக் போன்ற அருமையான சுழலர்களின் தொழில்முறை வாழ்வுக்கு செக் வைத்ததே கங்குலியின் இந்த அணுகுமுறைதான். இலங்கை அணியில் நான்கு அதிரடி இடதுகை மட்டையாளர்கள் உள்ளனர். தோனிக்கு ஓஜ்ஹா மீது நம்பிக்கை போதவில்லை என்பதும் ஒரு காரணம். ஒருவரது ஆட்டத்திறனுக்கு புறம்பாக எத்தனையோ காரணிகள் ஒருவரது தொழில்முறை உய்வை தீர்மானிக்கின்றன.
கிரிக்கெட்டை கிரிக்கெட் மட்டும் தீர்மானிப்பதில்லை.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்ல அலசல்
ReplyDeleteநன்றி பிரபு
ReplyDelete