Tuesday, 29 December 2009

பா: குழந்தைமையின் வெடிப்புகளும் வளர்ந்தவர்களின் பாசாங்கும்

(கூடு இணைய இதழில் வெளியாகி உள்ள கட்டுரை)

ஒரு நுட்பமான காட்சிபூர்வ கலைஞனால் எளிய திரைக்கதையை கூட கிளர்ச்சியூட்டும்/ஆழமான அனுபவமாக உருவாக்க முடியும். குவிண்டின் டொரண்டினோவின் Kill Bill ஒரு நல்ல உதாரணம். தமிழில் பாலா கதையை விட மைய பாத்திரத்தின் ஆன்மீக பயணத்தை சாகசமாக காட்டியே வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால் சீனி கம் மற்றும் பா ஆகிய இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ள பால்கி எனும் நம்மூர் பால்கிருஷ்ணன் நாடகீயமான கருத்து-உணர்வு மோதல்களை நம்பி படமெடுப்பவர். இவரது படங்களில் பி.சியின் படக்கருவி நுட்பமும் எதார்த்தமும் கூடிய காட்சிகளை உருவாக்கினாலும் அவை படத்தை முன்னெடுத்து செல்வதில்லை. பறவையின் கால்களைப் போன்று இளைப்பாற மட்டுமே பயன்படுகின்றன.



பால்கியின் முதற்படம் ”சீனி கம்” பலத்த வரவேற்பை பெற்றது. ஒரு 34 வயதுப் பெண் எப்படி 64 வயது முதியவரை மணக்கிறாள் என்பதே கதை. இந்த எளிய கதையின் வெற்றிக்கு அது தன் வகைமையை தெளிவாக அடையாளம் கண்டிருந்தது (காமிடி) காரணம். ஏறத்தாழ தன் வகைமையின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கியது காமிடி நாடக அமைப்புக்கு ஒரு பிரச்சனை சிக்கலாக வேண்டும். அவிழ்க்க முடியாது என தோன்றும் வண்ணம் முடிச்சுகள் இறுகுவது climax எனும் சிடுக்குகளின் உச்சம். நிறைய குளறுபடிகளுக்கு பின் இறுதியில் சிக்கல் தீர resolution எனும் முடிச்சவிழ்தல் அல்லது தீர்வு கட்டம் வருகிறது. வயது பொருத்தம் பிரச்சனை என்றால், சிக்கல் மாமனார் மருமகனை விட ஆறு வயது சின்னவர். மேலும் முடிச்சுகள் விழ வைக்க கலாச்சார முரண்பாடுகள் பயன்படுகின்றன. மேற்கத்திய கலாச்சாரத்தில் அறுபதுக்கு மேலும் இளமை கொண்டாட்டம். இந்தியாவில் நாற்பதிலே காவி துண்டை முதுகுக்கு குறுக்கே இழுத்து சொறிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். முதுமையை ஓய்வு, புலனடக்கம், இறை வழிபாடு என கழிப்பதே உசிதம் என்கிறது இந்தியா. படத்தில் அனைத்து பாத்திரங்களும் மாறி மாறி முரண்படுகிறார்கள். விளையும் பொறிகளே படத்தின் வெளிச்சம். உதாரணமாக கதாநாயகன் அசைவம், நாயகி சைவம். மேலும் இருவரும் உள்ளொடுங்கியவர்கள். எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க அனுமதிக்க முடியாது. துடுக்குதனமும் கிண்டலுமே பேச்சு. பரஸ்பரம் தாக்கி அவர்கள் தங்கள் ஈகோவை அழிக்கிறார்கள். இக்காட்சிகள் சுவாரஸ்யமானவை. நாயகனான புத்ததேவின் அம்மா குஸ்தி விரும்பி. பயில்வான்களுடன் ஒப்பிட்டு மகனை சதா கடுப்பேற்றுகிறார். செக்ஸி என்றொரு ரத்த புற்று நோய் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புத்ததேவின் உற்ற தோழி. அவள் வாழ்வை அதிவேகமாய் ஜீரணிக்கும் அவசரத்தில் இருக்கிறாள். இந்த சிறுமி, காதல் ஜோடி, மாமனார் பாத்திரங்கள் வாழ்வின் ஆரம்ப முடிவு கோடுகளை அழித்து ஆடுகிறார்கள். முதுமை எப்போது ஆரம்பமாகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். கூடவே காந்திய உண்ணாவிரத சுய-நிந்தனையின் வன்மம் மற்றும் அக்கிரமம் (?) மீதான பகடி மற்றும் பரிகாசம் இப்படத்தின் சிறப்பம்சம். நாடகீய மோதல்கள், கருத்தியல்\கலாச்சார பகடி மற்றும் மரணம் பற்றின அலசல் படத்திற்கு ஆழமும் வெற்றியும், அதனால் பாலிவுட்டில் தனித்த இடத்தையும், அளித்தது.



”சீனி கம்மில்” கல்யாண மோதல் நடக்கையில் சிறுமி செக்ஸி இறந்து போகிறாள். இரு மையபாத்திரங்களுக்கும் தாம் காலத்தில் எங்கு நிற்கிறோம் என்பதை மரணம் மூலம் புரிய வைக்கிறாள். தனது அடுத்த படமான ”பாவில்” பால்கி செக்ஸியில் இருந்து ஒரு இழையை உருவி புரோஜேரியா எனும் குழந்தைப் பருவத்திலே முதிர்ந்த கிழமாகும் மரபணு கோளாறு கொண்ட குழந்தையாக்குகிறார் (அமிதாப் பச்சன்). அரோ என்ற பெயருடைய இக்குழந்தை பழைய தமிழ்ப்பட பாணியில் அப்பா-அம்மாவை சேர்த்து வைப்பதே கதை. படம் எந்த வகைமை என்ற குழப்பம் உள்ளது. அடுத்து, எங்குமே ஆரம்பமாகாமல் சூப்பர்மேன் ஆடை போல் resolution-இல் முடிகிறது. பா என்றால் அப்பா. படம் முழுக்க பா என்றே அழைக்காமல் இறுதியில் சாகும் முன் அரோ தன் அப்பாவை நோக்கி “பா” என்றழைக்கும் இறுதி வசனத்தை திகில் மற்றும் பரபரப்பான கட்டமாக பால்கி திட்டமிட்டு, அத்தரிசனத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இருக்கை விளிம்பு வரை தள்ளி கொண்டு செல்கிறார். அதிர்ஷ்டவசமாக இந்த அதிமுக்கியமான தருணத்தில் என் மனைவி மூச்சுத் திணறி அழுது என்னை எழுப்பி விட்டாள். சிலிர்த்தபடி எழுந்து படத்தின் தரிசனத்தை பார்த்தேன். ஆனாலும் நல்ல கலைஞர்கள் முழுக்க ஏமாற்ற மாற்றார்கள். சில சாதகமான அம்சங்கள் உள்ளன.



இப்படம் முழுக்க குழந்தைகள் பற்றியதாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து பெரியவர்களின் உலகை போட்டு உடைக்கிறார்கள். ஆரம்ப காட்சியில் அரோ படிக்கும் ஒரு செல்வந்த பள்ளியில் மாணவர் கண்காட்சி. சிறந்த படைப்பை தேர்ந்து விருதளிப்பது எம்.பியான அமோல் ஆர்த்தே (அபிஷேக் பச்சன்). அமோலின் ரகசிய குழந்தை அரோ. இருவருக்கும் இது தெரியாது. சிறந்த படைப்புக்கான பரிசு நாம் எதிர்பார்ப்பது போல் அரோவுக்கு கிடைக்கிறது. அரோவின் படைப்பு ஒரு முழுக்க வெள்ளையான உலக உருண்டை. அறம், ஆன்மீக தரிசனம் என்று பேதியாகும் சில தமிழ் விமர்சகர்கள் போல் அமோல் இந்த மொட்டை உலக உருண்டை பிரிவினைகளற்ற பூமிக்கான வேண்டுகோள், அமைதிக்கான பிரார்த்தனை என்று உருகி அரோவை பாராட்டுகிறார். பரிசு வாங்கிய பின் அரோ இது குறித்து தன் அம்மாவிடம் விளக்குகிறான்: “கண்காட்சிக்கு என்ன செய்ய என்று தேடிய போது எனக்கு பரிசோதனை சாலையில் இருந்து உலக உருண்டையும் கொஞ்சம் வெள்ளை பெயிண்டுமே கிடைத்தது. அதை அடித்துக் கொண்டிருந்த போது நேரமாகி விட்டதால் அப்படியே போட்டுக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அசடுகள் இதற்கு போய் பரிசு தந்து விட்டார்கள்”. மற்றொரு காட்சியில் குழந்தைகள் “பாஸ்டர்டு” என்று அழைக்கும் இடம் வருகிறது. அட எதாவது ஒழுக்க போதனை வந்து சேருமே என்று பார்த்தால், அரோவின் நண்பன் விஷ்ணு சொல்கிறான். “என்னை என் அப்பா பாஸ்டர்டு என்று வைகிறார். எனக்கு மகிழ்ச்சியே. நான் பாஸ்டர்டு என்றால் அவர் எனக்கு அப்பா இல்லையே. பிறகு என்னை திட்டும் அடிக்கும் உரிமை அவருக்கு கிடையாதல்லவா”. மற்றொரு இடத்தில் அரோவுக்கு எம்.பி அப்பாவுடன் ராஷ்டரபதி பவன் சென்று பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. அரோவுக்கு நண்பர்களை அழைத்து செல்ல விருப்பமில்லை. அவன் விஷ்ணுவிடம் சாக்கு சொல்கிறான்: “இப்போதெல்லாம் பாராளுமன்றம், ராஷ்டரபதிபவன் போன்ற இடங்களில் தான் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கெல்லாம் போவது ரொம்பா ஆபத்து. உன்னை நான் அழைத்து போய் உனக்கு ஏதாவது ஆகி விட்டால் எனக்கு வேறு நண்பன் யார் இருக்கிறார்கள் சொல்!”. எம்.பி தன் பாதுகாப்பு விசயத்தில் காட்டும் பதற்றம் பார்த்து அரோ கேட்கிறான்: “ நீங்கள் எங்கு போனாலும் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் உண்டுதாம். ஆனால் நீங்கள் நாளிதழ் படித்தபடி ரெண்டுக்கு போகும் போது பூமிக்கடியில் கழிவறை குழாய்வழி ஒரு தண்ணீர்குண்டு வந்து வெடித்தால் உங்கள் பின்புறம் என்னாவது”. அரோ தன் பாட்டியை பம் (bum) என்றே படம் முழுக்க அழைப்பது எதார்த்தமானதே. அரோவின் மரணத் தறுவாய் காட்சிகள் இருப்பதிலே தமாஷானவை.



அரோவின் தாத்தா (பரேஷ் ராவல்) அவனிடம் கேட்கிறார்: “உன் பெயர் என்ன?” (அவருக்கு மகனின் முன்-திருமண உறவு பற்றி அதுவரை தெரியாது).
“அரோ”
“ஆஹா அரோ. என்ன அழகான அருமையான பெயர். ஸ்ரீ அரபிந்தோ அவர்களின் பெயர் தானே”
“இல்லை நான் அரொ மட்டும் தான்”
இது போல் மேலும் ஒரு பல்ப். அரோ விரைவில் இறந்து விடுவான் என்று மருத்துவர் உறுதி செய்கிறார். ஆஸ்பத்திரி படுக்கையில் தாத்தாவிடம் அவன் சீரியஸாக சொல்கிறான்: “ நேரம் வந்து விட்டது ..”
அவர் உணர்ச்சிவசப்பட்டு “இல்லை தம்பி அப்படி சொல்லாதே. உனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நேரம் உள்ளது. சிக்கிரம் சரியாகி வந்து விடு. நாம் உலகம் எல்லாம் சுற்றலாம். யு.எஸ் சென்று டிஸ்னி லேண்ட் பார்க்கலாம். அற்புதமான இடம் அது ..”. அரோ அதே தீவிர பாவத்துடன் குறுக்கிட்டு சொல்கிறான், “நான் உங்கள் விருந்தினர் நேரம் முடியும் நேரம் வந்து விட்டது என்றேன்”.

படத்தில் அமிதாப்பின் நடிப்பு, பி.சியின் ஒளி-இருள் காட்சிகள், வண்ணமய சித்தரிப்புகள் கொள்ளை கொள்பவை. மரணம் குறித்து உணர்ச்சி மேலிடல்கள், உச்சுகொட்டுதல்களுக்கு எதிரான படம் இது என்பது பாராட்டத்தக்கது, முந்திப் போகும் தன் மூக்கு வழி வித்யாபாலன் நிறைய கண்ணீர் பிழிந்தாலும் கூட. மரணம் எங்கே ஆரம்பமாகிறது என்ற நுட்பமான கேள்வியையும் அது எழுப்புகிறது. என்ன நீங்கள் மிக கவனமாக பின்தொடர வேண்டும். இதோ முடிகிறது என்று எண்ணி எக்குத்தப்பாய் தூங்கி விழக் கூடாது.
Share This

1 comment :

  1. ஹ்ம்ம்ம், இந்த ரெண்டு படத்துலயும் நீங்க மட்டும் எப்பிடி இசைய மறந்துட்டு பாத்திங்க ?அந்த technika எங்களுக்கும் சொல்லி குடுத்திங்கனா , இந்த ரெண்டு படத்த இசை இல்லாம பாத்து இருக்கலாம்....

    எனகென்னவோ ஒவ்வொரு காட்சியிலும் இசை ஒரு தூண்டுகோலா இருந்தத ஞாபகம் !!!!!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates