Tuesday, 1 December 2009
கோவை மாணவிகளின் செக்ஸும் குடியும்: கடந்து செல்ல வேண்டிய பாதை
கோயம்பத்தூர் கல்லூரி விடுதி மாணவிகள் குடித்து செக்ஸில் ஈடுபடுவதாக இந்த வார ஜூ.வியில் வந்துள்ள அறிக்கையில் அப்பெண்களுக்கு துளியும் குற்றவுணர்வு இல்லை என்று குறிப்பிட்ட கல்லூரியின் ஒரு விரிவுரையாளர் வியக்கும் இடம் வருகிறது. பெண்களின் விடுதி அறைகளில் இருந்து ஆணுறை மற்றும் மதுப்புட்டிகளை மீட்ட பின் மீந்த இந்த தன்னம்பிக்கையை தளர்த்த அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மனவியல் ஆலோசனை வழங்கி இருக்கிறது. முற்றும் முடிவுமாக குற்றசாட்டை மாணவிகள் இப்படி எதிர்கொள்கிறார்கள்: ”நாங்கள் நன்றாக படித்து கல்லூரிக்கு பேர் வாங்கித் தருகிறோம். நாங்கள் குடிப்பதால் உடலுறவு கொள்வதால் நிர்வாகத்துக்கு என்ன நட்டம்”. இந்த முரணை கவனியுங்கள்: ஒழுக்கசாலி பையன்கள் அரியர் வைத்து பேனெடுப்பதையும், ஒழுக்கமற்ற கேளிக்கைகாரர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த வேலைகளை அடைவதையும் கவனித்திருக்கிறேன். முனைப்பு தான் முக்கியம்.
இதே கட்டுரையில் மனவியலாளர் நாராயண ரெட்டி இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் சோதித்து பார்க்கும் அவசரத்தில் இருப்பதே தவறு என்கிறார். ஒரு ஆணின் பாலியல் உச்சம் பதினைந்தில் இருந்து பதினெட்டுக்குள் நிகழ்கிறது. இதைப் பற்றி பத்து வருடங்களுக்கு முன் ஒரு அறிவியல் தலையணையில் படித்ததும் உச்சத்தை ஒரு முறையாவது அதற்குள் தொடுவது என்று முடிவெடுத்தேன். அக்கட்டத்தில் ஒரு ரயில் பயணத்தில் நானும் கவிஞர் ஹெச்.ஜி ரசூலும் ஒரு இளம் ஜெர்மானியரை சந்தித்தோம். மூவருக்கும் ஆங்கிலம் தெரியாதாகையால் சரளமாக உரையாடினோம். ரசூல் அண்ணனின் இலக்கிய விசாரிப்பு முடித்ததும் நான் வெள்ளையரிடம் கேட்டேன்: “ நீங்கள் முதலில் செக்ஸ் உறவு கொண்டது எந்த வயதில்?”. அவர் “பதினைந்து” என மேலும் விசாரித்தோம். நான் எண்ணிப் பார்த்தேன். படித்து வேலை கிடைத்து பொருள் சேர்த்து முதல் பெண்ணுடல் கிடைக்கும் போது ஒரு இந்தியனின் உடல் செத்துப் போக ஆரம்பிக்கிறது. முப்பது வயதுக்கு மேல் விந்தணு சம்மந்தப்பட்ட புற்று நோய் ஆணுக்கு ஏற்படுவதாக, அதனால் குழந்தைகள் குறையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று நிறுவியுள்ளது. இயற்கை நம் மீது முத்திரை குத்தியுள்ள காலாவதி தேதியை மறைக்க முடியாது.
பருவ வயதிலான பரீட்சார்த்த முயற்சிகள் ஆபத்தில்லாத பட்சத்தில் தவறில்லை. மேற்கூறிய பெண்களுக்கு காதல் மற்றும் காமம் மீதான் மிகை எண்ணங்களோ கற்பிதங்களோ இல்லை என்பது பாராட்டத்தக்கது. விடலை வயதினர் தவறுவது பெரும்பாலும் ஆண்-பெண் உறவு குறித்த கற்பிதங்களாலே. பாலியல் கல்வியை இன்று பள்ளிகள் முன்னெடுப்பது அனாவசியம். நமது ஆசிரியர்களுக்கு அதற்கான முதிர்ச்சியும் இல்லை. இணையம் இவ்வேலையை மேலும் எளிதாக, நேரடியாக, ஓரளவு காத்திரமாக செய்கிறது. இணைய போர்னோகிரபி மிகையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக ஒரு நியாயமான புகார் உண்டு. ஆனால் பெண்ணுடல் மீதான் புரிதல் பற்றின திறப்பை அது சிக்கலின்றி நிகழ்த்துவது முக்கியமானது. பதின்வயதில் ஆண்களுக்கு பெண்ணுடலை அறியும் பரிதவிப்பு ஏற்படுகிறது. காட்சிபூர்வ இன்பத்தை மீறின ஒரு அறிதல் விழைவு இது. குடும்பத்து பெண்களின் அந்தரங்க உறுப்புகளை அவர்கள் நிச்சயம் கவனிக்க தொடங்குகிறார்கள். எனது பத்தாம் வகுப்பில் நண்பன் சரவணன் குளித்து ஈரத்துணி மாற்றும் போது தன் அக்காவின் குறியை பார்த்ததாக பரபரப்புடன் ஒரு அந்தரங்க உரையாடலில் தெரிவித்தான். இந்த அந்தரங்க பளிச்சிடல்கள் நமது குறுகலான மத்திய வர்க்க வீடுகளில் சகஜமாக நடக்கலாம். சில சமயம் இதனால் குற்றவுணர்வும், மனச்சிக்கலும் ஏற்படலாம். என் காதலி ஒருவருடன் சுன்னத் ஆண்குறி பற்றி உரையாடிய போது அவர் தான் அப்படி ஒன்றை வீட்டில் கண்டிருப்பதாக கூறினார். பெண்களின் மனவுலகும் இவ்விசயத்தில் வெகுபின்னால் இல்லை. இன்றைய தலைமுறைக்கு இத்தகைய ஒரு தர்மசங்கடத்தை இணையம் இல்லாமல் ஆக்குகிறது. உடல் பாலியல் மர்மம் அற்றதாகிறது.
குழந்தைகளுடன் பாலியல் உரையாடல் செய்வது பெற்றோருக்கு எளிதல்ல. குழந்தைகளுக்கு அவர்களை விட சற்று முதிர்ந்த தெளிவுள்ள நண்பர்களே இதற்கு உசிதமானவர்கள். சோதனையில் ஈடுபட முனையும் இளைஞர்களை தடுப்பது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாக்கிஸ்தானின் கட்டுப்பெட்டித்தனமான பாலியல் சூழலிலே கூட இளைஞர்கள் சுளுவாக இதை நிறைவேற்றுகிறார்கள். இது குறித்து ஜேனெட் ஜாக்சன் என்பவர் “Let’s talk about sex baby, let’s talk about sex in Pakistan” எனும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியுள்ளார். பிரச்சனைகள் இரண்டு மட்டுமே: செக்ஸை சச்சரவின்றி, நோய் ஆபத்தின்றி பெறுவது; அதை சமாளிக்க கற்பது. இரண்டாவதை நாம் வாழ்க்கை பூரா கற்றபடி உள்ளோம். ஒவ்வொருவரும் அவரவர் வழியில். மடிக்கணினி வாங்கின போது பாட்டெரியை பராமரிப்பது பற்றி வன்பொருள் பொறியியலாள நண்பர் ஒன்று சொல்லித் தந்தார்: “முழூசா சார்ஜ் ஆன பிறகு தொடர்ந்து ஏற்றி ஓவர்சார்ஜ் செய்யாதே; ஒரேயடியாக வறளவும் வைக்காதே.” இது காமத்துக்கும் பொருந்தும். கவனிக்க வேண்டியது நம்மை காமத்தில் இருந்து துண்டிக்க முடியாது என்பதே. காமத்தை தொடர்ந்து கடத்தி விட கற்றுக் கொள்வதே நாம் சஞ்சரிக்கும் மிக கடினமான பாதையாக இருக்கும். காமத்தை தொடர்ந்து நேரடியாக எதிர்பால் வழி அடையும் வாய்ப்பு சதா கிடைக்காது. ஆனால் எழுத்து, இசை, ஓவியம், உரையாடல் என எத்தனையோ வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.
காமத்தை எதிர்கொள்வது பெரும் சவால் என்பதை ஒழுக்கக்காவலர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனதை திசை திருப்பி திருநீர் பூசுவது வெறும் நாடகம் தான். தண்ணிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவை வேட்டி சுருட்டிக் கொண்டு ஒளிய தெரிவதா நீச்சல் கற்பதா? தண்ணீர் போலவே காமத்தை பழகியே அதனுடன் வாழவோ மீறவோ கற்க முடியும். மைக்கேல் டுடெக் டி விட் என்பவரது துறவியும் மீனும் என்கிற குறும்படம் பற்றி எஸ்.ரா உயிர்மை இதழ் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதில் மீனைப் பிடிக்க அதை அறிய வேண்டும் என்ற மனத்திறப்பு பிக்குவுக்கு ஏற்படுகிறது. அந்த குறும்படத்தில் மீனைப் பிடிப்பது பற்றி பிக்கு ராவெல்லாம் விழித்து புத்தகம் படித்து அனைத்தும் வீண் என அறிவார். பள்ளிக்கூட பாலியல் கல்வியும், மனவியலாளரின் அறுவுரைகளும் இப்படியே முடியும். ஒரு நாகரிக சமூகம் நேரடி பாலியல் பயிற்சிக்கான ரகசிய பாதைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். நான் படித்த சென்னை கிறித்துவக் கல்லூரியில் அப்படி ஒன்று இருந்தது.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் விடுதி வாழ்க்கை நடைமுறை மற்றும் தொழில்முறை வாழ்வில் ஒருவரது ஆளுமையை புடம் போடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. பேச்சு, செயல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்த அங்கு விடுதியின் நிர்வாகம் மாணவர்களிடம் விடப்படும். பாராளுமன்றத்தை போலி செய்யும் General Body என்ற கூட்டத்தில் செயலாளர்களுடன் நிகழ்ச்சி நிரல், வரவு செலவு கணக்கு, விதிமீறல்கள் குறித்து விடுதி அங்கத்தவர்கள் விவாதிக்கலாம். நாடாளுமன்றங்களில் போன்ற அமளி, அவதூறு, கூச்சல் குழப்பம் எல்லாம் இருக்கும். இதில் தேறி வருபவர்களுக்கு பின்னால் தனியார் நிறுவன மேலாண்மை பொறுப்புகளில் சிறக்க முடியும். செயலாளர்கள் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்று முக்கிய புள்ளிகளுக்கு பங்கு தந்து புகார் ஏற்படாது பார்த்துக் கொள்ள.ஒரு கூட்டத்தை சமாளிக்க, விவாதத்தை ஒருங்கிணைக்க தேர்வார்கள். இத்தகைய ஒரு விடுதிக் கலாச்சாரம் ஆசியாவில் எம்.சி.சியில் மட்டுமே உண்டு. எம்.சி.சியின் மூலகர்த்தாக்கள் கார்ப்பரேட் ஆளுமையாக்கத்துடன் மட்டும் நிற்காமல் மாணவனின் எதிர்பால் மற்றும் செக்ஸ் புரிதலுக்குமான ஒரு கலாச்சார வாசலையும் ஏற்படுத்தித் தந்தார்கள். எம்.சி.சியில் நான்கு விடுதிகள்: தாமஸ் ஹால், சேலையூர் ஹால், ஹீபர் ஹால் மற்றும் மார்ட்டின் ஹால். முதல் மூன்றும் ஆண்களுக்கு, கடைசி பெண்களுக்கு. இரு பாலாரும் மற்றவர் விடுதி அறைக்குள் செல்லக் கூடாது, அதாவது 364 நாட்களும். அந்த விடுபட்ட ஒருநாள் விடுதியின் இறுதி விழா. அன்று மட்டும் பெண்களும் ஆண்களும் விடுதி அறையில் சுமார் இரண்டரை மணி நேரத்தில் அவரவர் திறமைப் படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் தனிமையில் சந்தித்து கொள்ளலாம். பெரும்பாலானாவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தங்கள் அறையிலே புணர்வது அன்றுதான். அடுத்த நாள் பெருக்குபவர்களுக்கு கோயம்பத்தூர் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைத்ததை விட பன்மடங்கு ஆணுறைகள் கிடைக்கும். யாரும் பெரிசாய் இதைக் குறித்து அலட்டிக் கொண்டதில்லை. பாலியல் வாய்ப்புகள் ஒருவரை சீரழிக்கும் என்பது புருடா மட்டுமே.
மிதமிஞ்சிய போகம் (போதை + செக்ஸ் + கேளிக்கை) அழிவுப் பாதை என்பது ஒழுக்கவாதிகளின் கற்பனை. நான் சென்னைக்கு படிக்க போவதாக விடைபெற்றபோது என் குருநாதர் ஜெயமோகன் ஒரு குறிப்பிட்ட அறிவுரை பகர்ந்தார்: அவருக்கு தெரிந்து ஒரு இளைஞர் நாளெல்லாம் இணைய அரட்டையில் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து வாழ்க்கையை தொலைத்ததாகவும், நான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நான் முதல் வேலையாய் அதை செய்து பார்த்தேன். எனக்கு வீட்டில் இருந்து வந்த பணத்தில் கணிசமான தொகையை இணையத்துக்கு செலவழித்தேன். ஆனால் இதுவரை அரட்டையால் வாழ்க்கையை தொலைத்தவரை சந்திக்கவில்லை. பெரும்பாலும் வாழ்க்கை சீரழிய காரணமாய் இருப்பன அப்போதைய சூழமைவும், சரியான சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காமையே. எனக்குத் தெரிந்து போதைப் பழக்கமும், மிதமிஞ்சிய காமத் தொடர்புகளும் இருந்தவர்கள் வசதியான சூழல் அமைந்ததும் எளிதாக தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். சதாபோதையில் உழல்பவருக்கு எங்கள் விடுதி இறுதி விழாவில் Heavenly Selayurian விருது கொடுப்போம். அதைப் பெற்ற ஒரு நபர் இப்போது வெற்றிகரமான மருத்துவர். வகுப்பு இடைவேளையின் போது அப்பட்டமாக கஞ்சா புகைத்து திரிந்த ஒரு வங்காளிப் பெண் நல்ல மதிப்பெண் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் மூன்று நாய் மற்றும் கணவனுடன் வீட்டு மனைவியாக வாழ்கிறார் (இந்த தொடர் அமைப்புக்கு நிஜந்தன் மன்னிக்கவும்).
குடியோ காமமோ மனிதனின் வேடிக்கையான நிறஜாலங்களை வெளிக்கொணரும். விலகி நின்று காண தெரிய வேண்டும். மனிதர்களை உற்று கவனிக்க ஆர்.கே நாராயண் போல் பூங்காவுக்கோ ஆலமரத்தடிக்கோ செல்லாமல் டாஸ்மாக்கிற்கு போகலாம். கேளிக்கை மிக முக்கியமான திறப்பு அல்லது திரைவிலகல். இறுதியாக ஜூ.விக்கு: பயின்ற காவல் நாய்கள் அரிதாகவே குலைக்கும்.
abilashchandran70@gmail.com
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
பிரமாதம் சார்... பிச்சிட்டீங்க.
ReplyDeleteகலக்கலான இடுகை........
ReplyDelete//இறுதியாக ஜூ.விக்கு: பயின்ற காவல் நாய்கள் அரிதாகவே குலைக்கும். //
ReplyDeleteநச்....!
Very well done !!
ReplyDeleteMay i know ur comments abt sex???
ReplyDelete//மனதை திசை திருப்பி திருநீர் பூசுவது வெறும் நாடகம் தான்//
ReplyDeleteசூப்பர் ...
//படித்து வேலை கிடைத்து பொருள் சேர்த்து முதல் பெண்ணுடல் கிடைக்கும் போது ஒரு இந்தியனின் உடல் செத்துப் போக ஆரம்பிக்கிறது. //
ரொம்ப சரி ...
நல்ல பதிவு ...