Wednesday, 27 January 2010

வலைப்பூக்களின் பால்வெளியில்

தாமரை இதழில் வலைப்பூக்கள் குறித்து ஒரு தொடர் எழுதுகிறேன். இந்த மாதம் வெளியாகி உள்ள முதல் கட்டுரை இது

செவ்வாய்க்கிழமை கவிதைகள்

தமிழ் வலைப்பூக்களை ஒரு விளக்க வளையத்துள் நுழைத்து எடுப்பது தான் இன்றைய சவால். இது ஒரு திறந்த நாட்குறிப்பேடா? இருக்கும் பட்சத்தில் அதை படிக்க வேண்டிய அவசியம் என்ன? படிப்பதற்காக எழுதப்படும் குறிப்பேடு ஒரு படைப்பாக்க பிரதி ஆகிவிடுகிறது. அல்லது பயிற்சிக்களமா, சுயபிரசுர மார்க்கம் மட்டுமா அல்லது பிரச்சார தளமா?பிற இடங்களில் இருந்து கத்தரித்து ஒட்டும் சைபர் பொதுச்சுவரா? தமிழ் வலைப்பூ வெளி முழுமையாக உருவாக வில்லை.

வலைப்பூ எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஒரு அணுக்கமான வெளியை ஏற்படுத்துகிறது. கால/வெளி கட்டாயங்களில் இருந்து விடுவிக்கிறது. ஒரு இணைய படைப்பு எழுதப்பட்ட உடனே பிரசுரமாகி எதிர்வினை பெற்று மற்றொரு பதிவை எழுத தூண்டி தன் அடுத்த சுழற்சிப்பாதைக்கு ஆயத்தமாகும். உயிரோசை இணைய இதழ் அனுபவத்தை பற்றி குறிப்பிடும் போது மனுஷ்யபுத்திரன் என்னிடம் “உயிர்மையை விட உயிரோசை பலருக்கும் மனதளவில் நெருக்கமானதாக உள்ளது” என்றார். இதழ் பதிவேற்றம் ஒரு நாள் தாமதமானாலே அவருக்கு தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. ஜெயமோகனின் இணைய இதழில் எதிர்வினையாற்றும் வாசகர்கள் “போதை” எனும் பொருள்பட தங்கள் ஈர்ப்பை குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். பொதுவாக விடுதிகளில் ஒரு சில அறைகளில் தினமும் அரட்டைக்காக கூட்டம் கூடும். ஒரு கட்டத்தில் அவ்வறை தனி நபரின் கட்டுப்பாடு இழந்து அரட்டை-விரும்பி கூட்டத்தின் அறையாகி விடும். எல்லா கிராமத்திலும் இத்தகைய ஒரு ஆலமரத்தடி, கடைத்திண்ணை இருக்கும்.



தொடர்ச்சியாக வாரம் ஒருமுறை ஏனும் பதிவேற்றப்படும் வலைப்பூக்கள் உயிர்ப்புடன் இருக்கும். தினசரி பதிவேற்றம் பெறும் வலைப்பூக்கள் கூட உள்ளன. இவை தகவல்களை திரட்டி தரும் அல்லது மற்றொரு வலைமனையில் இருந்து ஒரு செய்திப் பத்தியை பிய்த்து ஒட்டிக் கொள்ளும். இவற்றை பற்றி குறிப்பிடும் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவர்களை எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளர் அல்லாதவர்கள் என்று பிரிக்க வேண்டும் என்கிறார்.

மூன்றாவதாக தீவிர வலைப்பக்கங்களில் வாசக எழுத்தாளர்கள் என்றொரு இனம் உண்டு. மெனக்கெட்டு இலக்கிய கலாச்சார இதழ்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதும் இந்த வாசக ஆர்வலர்கள் பிரசுர ஆர்வம் மிக்கவர்கள். ஆனால் முழுஆக்க பல்டி அடிக்க எத்தனித்து ஒரு கும்பிடு மட்டும் போட்டு கிளம்பி விடுவார்கள். என் நண்பர் ஒருவர் பத்து வருடங்களுக்கு மேலாக கடிதம் எழுதுபவர். அனைத்து கடிதங்களின் பிரதிகளையும் வைத்துள்ளார். தனது பிரசுரிக்கப்பட்ட கடிதப் பகுதிகளை காட்டி ஆசிரியர்களால் கத்திரிக்கப்பட்ட பகுதிகளை குறித்து கனவு காண்பார். இணைய எழுத்தாளர்களில் எண்ணிக்கை அளவில் இவர்களே பேரினம். தமிழில் இவர்களுக்கான இரு பெரும் தேன்கூடுகள்: jeyamohan.in மற்றும் charuonline.com.

இணைய தமிழுக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு என்ன? தீவிர மற்றும் பயன்பாட்டு எழுத்துக்கான வெற்றிடத்தை அவை நிரப்ப முடியும். ஆங்கில இணைய தளங்களில் தீவிர நுகர்வுக்கும் தாராள வெளி உண்டு. ஆனால் தமிழில் பெரும்பான்மையானவரின் கவனம் பயன்பாட்டு மற்றும் ஜனரஞ்சக வாசிப்பு நோக்கியே உள்ளது. இந்த இடைநிலை பத்திரிகைகளின் காலத்தில் தீவிர இலக்கிய பத்திரிகைகள் கமுக்கமாக இணையத்தில் மறுவரவு நடத்த முடியும். ஆங்கிலத்தில் இத்தகைய பல பத்திரிகைகள் உள்ளன. உதாரணம் http://www.fringemagazine.org/.. Blogspot போன்ற வலைப்பூ ஆதார தளத்தில் கூட தனி நபர்களால் இத்தகைய முயற்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக, http://mordenhaikupoetry.blogspot.com/ .தமிழில் இம்முயற்சிகள் குறைவே. இத்தனைக்கும் Blogspot-இல் பத்திரிகை நடத்த எந்த செலவும் இல்லை. ஆனாலும் ஒரு பெரும் இயக்கம் இங்கு ஏன் உருவாக இல்லை? இணைய எழுத்துக்கான பாரம்பரியம் நமக்கில்லை. நம்மவர்கள் ஆனந்தவிகடன் அல்லது காலச்சுவடை பிரதியெடுக்க முயல்கிறார்கள். இரண்டாவது அதற்கான வரலாற்று மற்றும் கலாச்சார அழுத்தம் உருவாகி வர வேண்டும். சிறிதுசிறிதாக கட்டி எழுப்பப்பட வேண்டும். தீவிர தேடல் கொண்ட வலைப்பூவர்களை கண்டடைய வேண்டும். எப்படி?

மீசை முளைக்க தவிக்கும் சிறார்களை எளிதில் வலைதளங்களில் அடையாளம் காணமுடியும். இவர்களை தவிர்த்து விடலாம். பொதுவாக சினிமா செய்திகள், கிசுகிசுக்கள், படங்கள், சுயமுன்னேற்ற உளறல், பக்தி கதைகள், ஊர் நினைவுகள், நினைவேக்க பரஸ்பர சொறிதல் என்று இவர்களின் குப்பைத்தொட்டி முதுகு வளையும். இப்படி. தீவிர எழுத்து தேடி பயணிப்பவர்கள் எளிதில் சோர்ந்திடாமல் இருக்க ஒரு அசலான வலைப்பூக்களின் பட்டியல் வேண்டும். இதுவே இப்பத்தியின் நோக்கம். தெளிவான தேடல் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில இணைய எழுத்தாளர்களை இலக்கியம், அரசியல், அறிவியல், கலாச்சாரம் என்று பல்வேறுபட்ட பேட்டை, சந்துகள் படி அறிமுகப்படுத்த போகிறேன். குறிப்பாய், அதிக பரிச்சயமற்றவர்களுக்கு முன்னுரிமை. இன்று \\htttp\இலக்கியம்\ கவிதை\...சாய்ராமின் “செவ்வாய்க்கிழமை கவிதைகள்”

http://poetry-tuesday.blogspot.com/




ஆசிரியர் குறிப்பு:
சாய்ராம் 33 வயது சென்னைக்காரர். தொலைக்காட்சி ஊடவியலாளர்.

ஒவ்வொரு நகரத்திலும் பக்கபலமின்றி பிழைப்புக்கு போராடும் ஒரு கூட்டம் உண்டு. ”சாந்தாராம்” எனும் இந்திய-ஆங்கில தன்வரலாற்று நாவலில் கிரகரி ராபர்ட்ஸ் ஒரு மும்பை சேரி உருவாகி அழியும் வாடிக்கை வரலாற்றை சித்தரிக்கிறார். நகரத்து விளிம்பு நிலை வாசிகளுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்பதில்லை; வெளிப்படையாக துரத்துவதும் இல்லை. ஒட்டுமொத்த சமூகம் வலுவற்றவர் மீது செலுத்தும் ஒருவித வன்முறையை அரசும் பிரயோகிக்கிறது -- புறக்கணிப்பு. வருடக்கணக்கில் பிரம்மாண்ட கட்டிட பணிகளுக்காக கொண்டு வரப்படும் தொழிலாளிகளுக்கு திருட்டு நிலத்தில், திருட்டு தண்ணீர் மற்றும் மின்சாரம் நல்கி, அரசின் மறைமுக அங்கீகாரத்துடன் தற்காலிக பொருட்களால் ஒரு சேரி உருவாக்கப்படுகிறது. இயல்பாகவே உருவாக்கும் சேரியுடன் இது சிறிது சிறிதாக இணைந்து ஆகிருதி பெருக்கிறது. அரசு இயந்திரம் அசௌகரியமாக உணரும் தோறும் சில குடில்களை பிடுங்கி, சாமான்களை வீசி எறிந்து அழிக்கும். சில வாரங்களில் இந்த சேரி வீடுகள் முளைக்கும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரியும். ஆனாலும் இதுவொரு தீராத விளையாட்டு. கட்டிட வேலை நிறைவடையும் போது சேரி முழுமையாக அழிக்கப்படும். நம் சமூகம் மனித அடிப்படை உரிமைகளுக்கு இதற்கு மேல் இடமளிப்பதில்லை. இங்கு உள்ள ஒவ்வொருவரும் உயிர்வாழும் கடுமையான முனைப்பு கொண்டவர்கள் என்று அது ஏற்பதும் இல்லை. உய்வதற்கான உரிமை படி நிலைபொறுத்தே அளிக்கப்படுகிறது. அடுத்த உயிர் மீது அக்கறை இல்லாமை ஒரு சமூக நோய்மை. இது குறித்து சாய்ராம் எழுதியுள்ள ”ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணீட்டாளே” கவிதை முக்கியமானது. போக்குவரத்து நெரிசலின் பிளிறும் ஹாரன், வசைமாரி நடுவே சாலையில் குத்திட்டபடி ஒரு கிழவி அமர்ந்து சிரத்தையாக ஒன்று செய்கிறாள். அது யாருக்கும் புரியவில்லை. நெரிசல் ஏற்படுத்தியதற்காக சினம் அடைகிறார்கள். கிழவி எதையும் கேட்காமல் சிந்தின தன் அரிசியை பொறுக்கி மஞ்சள் பைக்குள் திணிக்கிறாள். “பைத்தியமா அவள்?” என்கிறது கவிதை. மனிதன் அப்படி இருக்கவும் நிர்பந்திக்கப்படுகிறான்.




வலைப்பூ கவிதைகளில் சாய்ராமின் படைப்புகள் அவற்றின் தீவிர தேடலால் கவனிக்கத்தக்கவை ஆகின்றன, குறிப்பாக மனித இருப்பின் நெருக்கடி பற்றிய கவிதைகள்.

இலக்கியத்தில் உருவகங்கள் மற்றும் படிமங்கள் முத்துக்குளித்து மீண்டும் மீண்டும் கண்டடையப்பட்டவை. உதாரணமாய் சாத்தான். பதிமூன்றாம் நூற்றாண்டில் கிறித்துவ சமய நெறியை பரப்ப இங்கிலாந்து பாதிரிகளால் நடத்தப்பட்ட ஒழுக்கவாத (morality) நாடகங்களில் சாத்தான் தான் கோமாளி. அதீத தீமை மற்றும் கோமாளித்தனத்தின் கலவை. விகடத்தன்மை எந்த ஒரு தீய பாத்திரத்துக்கும் மானுட எதார்த்தம் அளிப்பதை பார்த்திருக்கிறோம். இத்தகைய சாம்பல் (grey) பாத்திரங்களை பின்னர் ஷேக்ஸ்பியர் தன் கோமாளிகளில் உருவாக்கினார். அவர்கள் பொது நீரோட்டத்திற்கு எதிராக தங்களுக்கான நியாயங்களை வலுவாக முன்வைத்தார்கள். குறிப்பாக, கிங் லியரின் விதூஷகன். பின்னர் மில்டன் தனது ”இழந்த சொர்க்கம்” காவியத்தில் மானிட வார்ப்பில் உருவாக்கிய சாத்தான், தெஸ்தாவஸ்கியின் ”கரமசோவ் சகோதர்களில்” வரும் பியோடர் பாவ்லோவிச்சிலிருந்து இன்றைய வணிகசினிமாவின் எதிர்நிலை நாயகர்கள் வரை அதே பதிமூன்றாம் நூற்றாண்டு கிறித்துவ சாத்தான் உருவகத்தின் வெவ்வேறு திரிபுகள் தான். ஒரு கவிஞன் உருவகங்களை உருவாக்குவதில்லை. ஏற்கனவே உள்ள அச்சில் தனக்கேற்றாற் போல் தகவமைக்கிறான். இவ்வாறு உருவகங்களை புத்துருவாக்குவது இலக்கியத்தின் முக்கிய பணி. சாய்ராமின் கவிதைகளின் பலமும் பலவீனமும் உருவகங்களே.

பாம்பு மற்றும் புழு போன்ற உருவகங்கள் இவரது கவிதைகளில் உயிர் பெறாமல் போய் விடுகின்றன. ஆனால் ”விழிப்பே இல்லாத கனவு” கவிதையில் மேகத்தை ஒரு உருவகமாய் மீட்டெடுக்கிறார். ஒரு நாள் கவிதை சொல்லி மேகங்கள் திடீரென வேகமெடுத்து ஓடுவதை பார்க்கிறார். சில உவமைகள் மூலம் மிக நுட்பமாக இவ்வுருவகத்துக்கு வண்ணம் தீட்டுகிறார். இம்மேகங்கள் ஆற்றுத்தண்ணீர் போல், போர் விமானம், சோகம் போல், ஓவியத்தின் மீது ஊற்றப்பட்ட தண்ணீர் போல் அபரித வேகம் கொள்கின்றன. இங்கே இரண்டு விசயங்கள் கவனிக்கலாம். இழப்புகளும், கடுந்துயரமும் நேரும் போது அவை நம்மை இழுத்துச் செல்லும் வேகமே நம் இருப்பை சம்மட்டியால் நொறுக்கும். உலகமே பார்த்திருக்க ஒரு இனம் அழியலாம். எப்போதும் நம்மால் சுதாரிக்க முடியாத படியான மூர்க்கத்தில் காலம் நம் கண்மூன்னே கனவுகளை கலைக்கும். வியப்பும் ஆற்றாமையுமே எஞ்சும். அடுத்து முன்கூறிய உவமைகளில் உறைந்துள்ள வன்மத்தை கவனியுங்கள்.

“தினமும் காலையில் கண்விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விடாதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்”.

நான் படித்ததில் ஈழப்போர் குறித்த மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று இது.

கூடுதலாக சில நுட்பமும் சுவாரஸ்யமும் கூடின சமூக அரசியல் கட்டுரைகளும் இந்த வலைப்பூவில் உள்ளன. அதிகார பரவலாக்கம் குறித்த இவரது அவதானிப்புகள் விவாதிக்கத்தக்கவை. ஈழம் மற்றும் தலித் பிரச்சனைகள் மையப்புள்ளிகள் எனலாம். “வோட்டுப் போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?“ மற்றும் ”விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்” ஆகியவை சிறப்பான கட்டுரைகள்.

இவரது பெயரைப் பார்த்து காவி நிறமோ என்ற முதலில் துணுக்குற்றேன். ம்ஹூம்!
Share This

2 comments :

  1. நல்ல முயற்சி.
    அறிமுகமே மிகவும் நன்றாக உள்ளது.
    தொடருங்கள் .

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates