சச்சின் தேங்கி விட்டதாக சொல்லி திட்டு வாங்கிய முன்னாள் இந்திய மட்டையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது மீண்டும் அதே விமர்சனத்தை ஹர்பஜன் மீது வைத்துள்ளார். சொல்லப்போனால் ஹர்பஜன் தன் ஆட்டத்திறனை மீட்டு விக்கெட்டுகள் எடுத்து வரும் கட்டத்தில் சஞ்சய் இதைச் சொல்லியிருக்கிறார். சஞ்சய் சொல்ல வருவது ஹர்பஜன் ஒரு சராசரி வீச்சாளராக உள்ளார், இன்னும் உயரங்களை எட்டவில்லை என்றே. சரி, ஹர்பஜனை எந்த உச்சவரம்பு கொண்டு மதிப்பிடுவது?
2001 ஆஸ்திரேலியா டெஸ்டு தொடரில் 32 விக்கெட்டுகள் சாய்த்த பின் ஹர்பஜனால் தனிப்பட்ட முறையில் ஆட்டங்களை வென்று கொடுக்க முடிந்ததில்லை. ஒரு கட்டம் வரை கும்பிளேவுக்கும் பின்னர் சஹீர், இஷாந்த போன்ற வேக வீச்சாளர்களுக்கும் துணை பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் முதல் நிலை வீச்சாளராக இயங்க வேண்டிய ஆட்டங்களில் அவரால் சுதாரிக்க முடியவில்லை. இந்தியாவின் தலையான சுழலர் சாய தோள் நாடி தவிக்கிறார். இதுவே சஞ்சயை காட்டமாக விமர்சிக்க வைத்துள்ளது. ஹர்பஜனை உலகத்தரம் என்பது தமிழில் உலக இலக்கியம் படைக்கிறோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது போன்றே. மேலும் தீர்க்கமாய் மதிப்பிட்டு தரம் நிறுவ உரைகற்கள் வேண்டும். பஜ்ஜியை நாம் முரளி, கும்ப்ளே மற்றும் வார்னேயோடு ஒப்பிட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சுழல் மேதைகள் வேறுபட்ட ஆட்டமுறை கொண்டவர்கள். வார்னே சம்பிரதாய கால்சுழல் பந்தையே ஆயுதமாக கொண்டிருந்தார். நினைத்த இடத்தில், தேவைப்படும் திருப்பத்துடன், வேற்பட்ட அளவுகளில் பந்தை இறக்க அவரால் முடிந்தது. அவரது 708 விக்கெட்டுகளில் பெரும்பாலானவை ஸ்லிப்பில் மார்க் டெய்லர் பிடித்தவை அல்லது அவரது பிரம்மாண்ட திருப்பத்துக்காக ஆடி நேராக வந்த பிளிப்பர் பந்துகளில் இழந்தவை. ஐரோப்பிய மட்டையாளர்கள் வார்னேவை அவரது தொழில்வாழ்வின் இறுதிவரை ஒருவித கிலியுடனே ஆடினர். அதே போல் இறுதி வரை அவரால் துணைக்கண்ட மட்டையாளர்களை எளிதில் வீழ்த்தி சோபிக்க முடியவில்லை. வார்னேயுடன் ஒப்பிடுகையில் முரளிதரன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அவர் மீது எந்த மட்டையாளரும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் முரளியை விட வார்னே கற்பனைத் திறன் மற்றும் திட்டமிட்டு செயலாற்றும் மதிநுட்பம் மிகுந்தவர். முரளி அளவிற்கு அவர் பந்தின் திருப்பத்தை நம்பி இருக்கவில்லை. இவ்விருவரோடும் நாம் ஹர்பஜனை ஒப்பிடலாம்.
ஹர்பஜனுக்கு இயல்பாகவே சற்று அதிகம் பவுன்ஸ் கிடைக்கும். அவர் தனது பெரும்பாலான விக்கெட்டுகளுக்கு இதனையே நம்பி உள்ளார். மேற்சொன்ன இருவர் அளவுக்கு பஜ்ஜியின் பந்து திரும்பாது. அவர் அதிகம் சிந்திக்கும் வகையறாவும் அல்ல. பொறுமையும் குறைவு. பஜ்ஜியின் ஆயுதங்கள் இரண்டு. திருப்பமுள்ள ஆடுதளத்தில் உள்வரும்-வெளிச்செல்லும் பந்துகளை மாற்றி மாற்றி வீசுவார். புதிய மட்டையாளர்கள் வலதுகை என்றால் ஸ்லிப்பிலும், இடது கை என்றாலும் எல்.பி. அல்லது பவுல்ட் ஆவார்கள். ஆட்டத்திறனின் உச்சத்தில் மட்டும் அவர் வீசும் புளோட்டர் எனும் சுழன்று மிதந்து உள்வருவது போல் தோற்றம் தந்து வெளியே அல்லது நேராக செல்லும் பந்து மிகச்சிறப்பானது. ஆனால் பொதுவாக அவரது தூஸ்ரா எனும் வெளிச்செல்லும் பந்தை மட்டையாளர் கணிக்க ஆரம்பித்து விட்டால் பஜ்ஜியின் ஒரு கை ஒடிந்தது போல. இதோடு ப்வுன்ஸ் இல்லாத மெத்தனமாக தளத்தில் ஆட்டம் என்றால் ஹர்பஜன் முழுக்க சொங்கி ஆகி விடுவார். தட்டையான ஆடுதளத்தில் ஹர்பஜனின் பந்து வீச்சை வார்னே, முரளி மற்றும் கும்பிளேவோடு ஒப்பிடுவது மேலும் நமக்கு புதிய புரிதல்களை தரும்.
ஒரு உதவாக்கரை ஆடுதளத்தில் முரளிதரன் தனது கட்டுப்பாடு மற்றும் இயல்பான திருப்பம் கொண்டு சமாளிப்பார். வார்னே பந்தின் நீளம் மற்றும் கோணத்தை எதிர்பாராமல் தொடர்ச்சியாக மாற்றி மட்டையாளரை குழப்புவார். வார்னேவுக்கும் பந்தை திருப்புவது எந்த தளத்திலும் சுலபமே. மேலும் லைன் மற்றும் லெங்த் மீது அபாரமான கட்டுப்பாடு கொண்டவர் வார்னே. இவ்விருவரையும் விட வேகமாக வீசிய கும்பிளே மெத்தன தளத்தில் கூட சிறப்பான பவுன்ஸ் பெற்றார். அதுவே அவருக்கு பெரும்பாலான விக்கெட்டுகளை பெற்றுத் தந்தது. கும்பிளே லைன் விசயத்தில் கூர்மையானவர். குறை நீளத்தில் வீசுவதே அவரது ஒரே குறையாக இருந்தது. ஒரு விக்கெட்டை வீழ்த்த மணிக்கணக்காய் முயலும் அளவுக்கு இம்மூன்று மேதைகளுமே மகா பொறுமைசாலிகள். பொறுமை தன்னம்பிக்கையில் இருந்து ஊற்றெடுப்பது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். திருப்பம், கட்டுப்பாடு, கற்பனை மற்றும் பொறுமை ஆகிய நான்கிலும் ஹர்பஜனுக்கு போதாமை உண்டு. இந்த போதாமைக்கு அவரது உணர்ச்சிகரமான மன-இயல்பு ஒரு முக்கிய காரணம்.
337 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் ஹர்பஜன் தோல்வி மனப்பான்மை மிக்கவர். பொதுவாக ஒரு வீச்சாளரின் சம நிலையை குலைக்க மட்டையாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். ஆனால் ஹர்பஜன் விசயத்தில் சமீப தொடர்களில் ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை மட்டையாளர்கள் மற்றொரு விசித்திர தந்திரத்தை கையாண்டார்கள். அவரை மிக கவனமாக ஆடி ஆரம்ப ஸ்பெல்களில் விக்கெட்டுகள் வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். விக்கெட் விழாவிட்டால் தன் பெயரை வரலாற்று நூலில் காணாத முதலமைச்சர் மாதிரி அவர் பதற்றமாவார். அவரது மன-அமைதி குலையும். விக்கெட்டுகள் வீழ்வதில் சூழல், அதிர்ஷ்டம் மற்றும் மட்டையாளரின் திறன் மற்றும் மனநிலை ஆகியவற்றின் பங்கு அதிகம். ஆனால் ஹர்பஜன் அது முழுக்க தன் தவறு என்று எண்ணியபடி அடுத்த ஸ்பெல்களில் மோசமாக் வீச ஆரம்பிப்பார். பிறகு அவரை ஆடுவது சுலபமாகி விடும். உலகில் இந்த நூதனமான முறை ஹர்பஜனுக்கு எதிராக மட்டுமே கையாளப்படுகிறது.
மேற்சொன்ன நான்கு குறைகளும் தற்போது உலக சுழலர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சனை எனலாம். பிளைட், லூப் மற்றும் திருப்பத்தை நம்பி மட்டையாளனுக்கு சவால் விட எந்த சுழலருமே இன்று தயாரில்லை. அத்தகைய ஒரு சுழல் பந்து ஆதிக்க காலகட்டம் மேற்சொன்ன மூவர் அணியின் ஓய்வுடன் முடிந்து விட்டது எனலாம். இதற்கு சமீப ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆடுதளங்களும் காரணம் எனலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுழல் பந்தாளர்களுக்கு சாதகமான ஆடுதளங்கள் இலங்கையை தவிர வேறு எங்குமே உருவாக்கப்படவில்லை. இந்தியா கூட தன் உள்ளூர் வெற்றிகளுக்கு வேக வீச்சாளர்களை பெரிதும் நம்ப வேண்டியதாகியது. இதுவே இன்றைய சுழலர் தலைமுறையை எதிர்மறை மனப்பான்மையுடன் ஆட வைக்கிறது.
ஹர்பஜனின் கற்பனை வறட்சி மற்றும் எதிர்மறை மனப்பான்மை ஆகியவற்றையே தேக்கம் என்று மஞ்சுரேக்கர் குறிப்பிட்டார். இதை உலக கிரிக்கெட் பந்துவீச்சுக்கு நேர்ந்துள்ள பொதுவான பின்னடைவின் விளைவு என்பதே தகும்.
நல்ல அலசல்
ReplyDeleteநன்றி பிரபு!
ReplyDelete