“நான் ஒரு தொழில்முறை கவிஞனே ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல.”
- மனுஷ்யபுத்திரன் (”என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்”)
ஜெயமோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையான ”கடவுள்ளவனின் பக்திக் கவிதைகள்” ஒரு தட்டையான, முழுக்க தன்வயமான சித்திரத்தை முன்வைக்கின்றன. ஒரு வாசகனுக்கு அவர் கவிதை மீதான இரும்புத்திரையாக இவ்விமர்சனம் அமைகிறது. எப்படி என்று விளக்குகிறது இக்கட்டுரை.
ஜெயமோகனின் புரட்டுகள் இவை:
• மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி.
• இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை.
• அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.
• மனுஷ்யபுத்திரன் ஒரு எழுச்சிக்கவிஞர். அவரது கவிதைகளில் ”உணர்ச்சி கொப்புளிக்கிறது.”
பக்தி இலக்கியத்தின் நெகிழ்தல் மனுஷ்யபுத்திரனின் பொதுப்பண்பு என்று ஜெயமோகன் கூறுகிறார். நெகிழ்தலை ஜெ.மோ பிரபஞ்சத்தை புன்னகையுடன் வரித்துக் கொள்ளும் தன்மையாக புரிந்து கொள்கிறார். அதாவது ம.பு வின் படைப்பாக்க தரிசனத்தில் எதிர்மறை மற்றும் நேர்மறைப் பண்புகள் சமதளத்தில் சந்திப்பது. இதை அவர் சில குறிப்பிட்ட கவிதைகள் வழி நிறுவுகிறார். நீங்கள் வேறு எத்தனையோ கவிதைகளை காட்டி இந்த ஆழ்வார்த்தனத்தை மறுக்க முடியும். இங்கே நான் கூற விரும்புவது தன்னிலை ரீதியாக ஒரு படைப்புலகின் ஆதார சுருதியை கண்டு ’அவனா நீ’ என்று பொதுவயப்படுத்தும் பிடிவாதம் ஒரு நல்ல விமர்சன பண்பு அல்லவே என்று. பொதுவாக சிறுகுழந்தைகளிடம் காணப்படுவது இத்தகைய குணம். என் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை அவரை அப்பா என்று அழைக்க மறுக்கிறது. அவரைப் பார்த்ததும் விடாப்பிடியாக சூப்பின் விரலை விடுத்து “மாமா” என்கிறது.
ஜெயமோகன் சு.ராவை வெறும் பிரக்ஞை எழுத்தின் தோல்வி என்றது போல், அசோகமித்திரன் ஒரு சிறுகதையாளர் மட்டுமே என்றது போல் தான் மனுஷ்யபுத்திரன் ஒரு பக்தி கலாச்சாரத்தின் நீட்சியான கோஷ்டி வாத்தியக்காரர் என்கிறார். ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி இப்படியான ஒரு விளக்கத்துக்குள் அவனை அடக்கி சீல் வைப்பதே.
தன்னிலை வாதத்தை ஆதாரமின்றி பொதுவிமர்சனமாக நீட்டிப்பதை பார்த்தோம். அடுத்து அவர் வாழ்க்கைசரிதை விமர்சன பாணியை தன்னிச்சையாக, தரவுகளின் எந்த ஆதாரமும் இன்றி பயன்படுத்துகிறார். தமிழினி வெளியீடான இலக்கிய முன்னோடிகள் வரிசையில் இக்கேள்வி கேட்கிறார்? புதுமைப்பித்தன் ஏன் தன் நாவலை பூர்த்தி செய்யவோ தன் சிறுகதைகளை அவசரமின்றி எழுதவோ இல்லை? பதிலும் தருகிறார்: காச நோயினால் ஏற்பட்ட உடல் பலவீனத்தினால். இது ஒரு எளிய கற்பிதம் அல்லது ஊகம் மட்டுமே. ஸ்டெல்லா புரூஸ் ”இரு மாயவலைகளில் சிக்கி அழிந்தவர்” ; ராஜ மார்த்தாண்டன் குடித்து கெட்டதனால் தன் இலக்கிய ஸ்தானத்தை சென்றடையாதவர். பட்டியல் ஓரத்தில் ஒருவர் தயாராக இருக்கிறார். காலம் ஆகும். லஷ்மி மணிவண்ணன். இலக்கிய சாதனையாளர்கள் அனைவரும் ஒழுக்கவாதிகள் அல்லர். தஸ்தாவஸ்கி சூதாட்ட போதையில் எழுதாத படைப்புகளையும் கடன் வைத்தவர். ஆண்டொனி டுரொலாப் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலாசிரியர் நேர்மாறான ஒழுக்க உழைப்பாளி. அலுவலகம் போகும் முன் காலையில் ரெண்டரை மணி நேரம் எழுதுவார். காலக்கெடு முடியும் போது வாக்கியம் பாதியில் நின்றாலும் அப்பிடியே கிளம்பி விடுவார். அடுத்த நாள் காலை தான் மிச்ச வாக்கியம் முடிவடையும். கெடுவுக்கு பதினைந்து நிமிடம் முன்னாடி நாவல் முடிந்து விட்டால், “முடிவு” என்று எழுதி கோடிட்டு அடுத்த நாவல் ஆரம்பிப்பார். இப்படியாக ஐம்பதுக்கும் மேல் நாவல் மற்றும் நாடகங்கள் எழுதினார். இன்று அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஒழுக்கம் மற்றும் உடல் வலு பயன்படும் என்றாலும் எழுத்தாளனை தீர்மானிப்பது அவனது தேடல் அல்லது காலத்தின் அழுத்தம். தண்டால் எடுப்பதும் தியானம் பழகுவதும் அல்ல. எழுத்தாளர்களில் ஹோமர், மில்டன், ஜேம்ஸ் ஜாய்ஸ் நொள்ளைக்கண்ணர்களின் பட்டியல் பெரிசு. இந்த குறைபாடு கொண்டு அவர்களை புரிந்து கொள்வது விமர்சனத்தின் ஆதாரமாக இதுவரை இருக்கவில்லை.
உண்மையில் சுயவரலாற்று விமர்சனம் எழுத்தாளன் குறித்த ஒரு மிகச்சின்ன திறப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. உதாரணமாக, சார்லஸ் டிக்கென்சின் The Tale of Two Cities. இந்நாவலில் நாயகி லூசியின் வயதான அப்பா டாக்டர் அலெக்சாண்டுரே மேனெட் தவறுதலாக 18 ஆண்டுகள் பிரஞ்சு சிறைச்சாலையில் கழிக்கிறார். சிறைவாசம் அவரை பித்தாக்குகிறது. சதா செருப்புகளாக செய்து தள்ளுகிறாள். அவரது பெண் அவரை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வருகிறார். ஆனாலும் அடிக்கடி சிறை நினைவுகள் அவரை சித்தபிரமைக்கு ஆளாக்குகிறது; அப்போதெல்லாம் அவரது பெண்ணின் அணுக்கம் அவரை மீட்டெடுக்கிறது. இப்போது டிக்கின்சின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வருவோம். அவர் 40 வயதில் 18 வயது நடிகை எல்லென் டெர்னன் என்பவரிடம் காதல் கொண்டு மனைவியை விவாகரத்து செய்கிறார். அவரது பொதுவாழ்வில் பெரும் சலசலப்பையும் மனஅளவில் நெருக்கடியையும் ஏற்படுத்தின உறவு இது. விமர்சகர்களின் கவுண்டவுன் ஆரம்பம் ஆகிறது. டிக்கென்ஸ் தான் டாக்டர் மென்னெட். எல்லென் அவரது பெண்ணான லூசி. சிறை? அதுதான் இருப்பதிலே தமாஷ். டிக்கென்சின் மனைவி. இப்படி ஒரு எளிய சுவாரசியம் தாண்டி சுயவரலாற்று விமர்சனம் பயனற்றது. இதில் ஒரு வன்முறையும் உண்டு. பேருண்மை நோக்கி விரியும் படைப்பாக்க தேடலை அல்லது இயக்கத்தை லௌகீக தளத்திலிருந்து பார்த்து விளக்க முடியாது. பந்து உருள்கிறது என்பதற்காக உருண்டோடுவது எல்லாம் பந்து ஆகாதே. ஜெயன் இந்த ஆதார தவறை செய்கிறார்.
மனுஷ்யபுத்திரன் புரட்சிகர இயக்கங்களில் இருந்து விடைபெறல், அவரது கவிதை இருத்தலியல் எழுத்தின் அடையாளம் இன்மையில் இருந்து தப்பித்தல் மற்றும் அவர் கைவிடப்பட்ட சமூகத்துடன் தன்னை அடையாளம் காண்பது உட்பட்ட அனைத்து கவித்துவ எழுச்சிகளுக்கும் உடல் ஊனமே காரணம் என்கிறார். இன்னும் அசட்டுத்தனம் அவர் ம.புவுக்கு உடல் ரீதியான குறையுணர்வு உள்ளதாக சொல்வது. இந்த குறையுணர்வினால் ம.பு தலைகீழாக நடந்து, மண்டையெல்லாம் சீழ் வழிய இறைவனை ஆரத் தழுவி நிறைவு கண்டவராம். இத்தனை பேசுவதற்கு குறைந்தது ம.புவின் ஒரு பேட்டியையாவது ஆதாரமாக அவர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். வாழ்க்கை-சரிதை விமர்சனத்தின் ஒரு அராஜக உதாரணமாக மட்டுமே நாம் மேற்படியான கூற்றுகளை புரிந்து கொள்ள முடியும். அதை விட முக்கியமாக, இப்படியான ஒரு ஆதாரமற்ற தன்னிலையான முடிவுக்கு இலக்கிய விமர்சனத்தில் எந்த ஒரு மதிப்பும் இல்லை. அவரது சுயபிரகடனப்படி அவர் உள்ளுணர்வால் வழிநடத்தப்படும் விமர்சகன் என்றாலும் கூட, சரியான தரவுகளை தராமல் விவாதிப்பது ஆற்றல் விரையம் மட்டுமே. இத்தகைய தான்தோன்றித்த்னத்துக்கு அவருக்கு முன்னோடிகள் உண்டா?
தாராளமாக. “கரமசோவ் சகோதரர்கள்” நாவலில் தஸ்தாவஸ்கி நான்கு மகன்கள் சேர்ந்து (நேரடியாகவும் மறைமுகமாகவும்) தம் அப்பாவை கொல்வதைப் பற்றி சொல்லியிருப்பார். தஸ்தாவஸ்கிக்கு இழுப்பு நோய் உண்டு. அவரது அப்பா அவரை சிறுவயதில் நிறைய கொடுமைப்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் சிறுவனாக இருக்கும் போது அப்பாவின் வேலைக்காரர்கள் அவரை கொன்று விடுகின்றனர். மனவியலாளர் சிக்மண்ட் பிராய்டு இவை அனைத்தையும் தனது சித்தாந்தப்படி முடிச்சுப் போட்டு அறிவித்தார்: தஸ்தாவஸ்கிக்கு ஏற்கனவே அப்பாவை கொல்லும் உத்தேசம் இருந்துள்ளது. ஆக அப்பா பிறரால் கொல்லப்பட, தஸ்தாவஸ்கி கடுமையான குற்றவுணர்ச்சி அடைந்தார். விளைவாக அவருக்கு இழுப்பு வருகிறது.
இந்த குற்றவுணர்ச்சியை தாண்டி தன்னை தூய்மைப்படுத்த (ஜெ.மோவின் மொழிப்படி கசப்பில் இருந்து கனிய) கரமசோவ் சகோதரர்கள் நாவலில் புனைவின் வழி அப்பாவை மீண்டும் கொல்கிறார். ஜெ.மோவை போலல்லாது பிராயிடு ஒரு ஆதாரம் தருகிறார். பதினைந்து வயதுக்கு பிறகு அப்பா இறந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே தஸ்தாவஸ்கிக்கி இழுப்பின் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன. ஆனால், ஜெ.மோவைப் போன்று பிராயிடும் தன்னிலையான ஊகத்தில் இருந்து ஒரு பொதுவய முடிவுக்கு வருகிறார்: அதாவது அனைத்து மகன்களுக்கும் தங்கள் அம்மாவை அடையத் தடையாக உள்ள அப்பா மீது கொலைவெறி. ஆனால் சீக்கிரமே பிராயிடுக்கு பல்ப் கிடைத்தது. தஸ்தாவஸ்கியின் மகன் நாலு வயதிலே இழுப்பு காரணமாய் செத்துப் போனது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர்கள் தஸ்தாவஸ்கிக்கு இருந்த இழுப்பு மரபியல் கோளாறு என்று நிறுவினர். இப்படி பிராயிடின் அப்பா-அம்மா-கொலைவெறி வடை பறிக்கப்பட்டது. இந்த நோய் பிரேமை கணினி வைரஸ் போல் எளிதில் பரவக்கூடியது; ஆபத்தானது. அசட்டுத்தனமான ஆங்கில ஆசிரியர்கள் கீட்ஸை இப்படி சவபரிசோதனை செய்வதை பார்க்கலாம். சமீபத்தில் நான் என் கல்லூரியில் மாணவர்களின் தேர்வுத்தாள்களை திருத்தும் போது இப்படியான கடுமையான ஒரு பல்முனை நோய்த்தாக்குதலுக்கு உள்ளானேன். கீட்ஸின் மரணம் குறித்த ஒரு கவிதையை (When I Have Fears) விமர்சித்த மாணவ்ர்கள் அவருக்கு புற்று நோய், மாரடைப்பு, இழுப்பு என்று ஆளாளுக்கு ஒரு நோய்ப்பட்டியலை நீட்டி இருந்தனர். காரணம் ஆசிரியர்கள் கீட்ஸின் சாஸ்வதம் குறித்த வரிகளைப் பார்த்தாலே காச நோய் பாதித்ததனாலே அப்படி எழுதினார் என்று வாழ்க்கை வரலாற்று விமர்சனத்தை நீட்டி முழக்குகிறார்கள். அவர்களுக்கு சொல்வதற்கு வேறொன்றும் இருப்பதில்லை என்பது போக இதில் ஒரு சேடிசமும், உயர்வு மனப்பான்மையும் உள்ளது. இப்படி அந்த மகாகவிஞன் ஒரு மகா நோயாளியாக ஒரு தலைமுறையின் மனதில் நிறைந்து விட்டான். அவனது ஒவ்வொரு கால்புள்ளி அரைப்புள்ளியிலும் அவர்கள் இருமலையும் மரணக்கேவலையுமே கேட்கின்றனர். ஜெயமோகன் தன் பெயர் பொறித்த சக்கர நாற்காலி ஒன்றை மனுஷ்யபுத்திரனுக்கு வலுக்கட்டாயமாக அளித்து இதுவே நீ என்கிறார்.
டொரொண்டோ பல்கலையை சேர்ந்த இயன் மற்றும் கிரேம் எனும் பேராசிரியர்களை அகதா கிறிஸ்டி எனும் பிரபல மர்ம நாவலாசிரியரின் 14 நாவல்களை ஒரு மென்பொருள் கொண்டு அலசினர். அவரது இறுதி இரண்டு நாவல்களில் வார்த்தை வளம் 30 விழுக்காடு குறைந்திருப்பதை கண்டறிந்தனர். இதன் மூலம் இவர்களின் வந்தடைந்த முடிவு என்ன? அட, அகதா கிறிஸ்டிக்கு அல்சமைர்ஸ் எனும் நினைவிழப்பு நோய் இருந்ததாம். ஜெயனுக்கு ஒரு படி முன்னே சென்று இந்த ஆய்வாளர்கள் இலக்கை எட்டி விட்டார்கள்.
லட்சியவாதம் எழுச்சிவாதத்தின் ஆதார விசை. ஜெயன் குறிப்பிடும் சமயவாத, அரசியல் எழுச்சிக்கார படைப்பாளிகள் அனைவருக்கும் இத்தகையதொரு லட்சிய சாய்வு உண்டு (இறைவன், இயற்கை, சோசலிசம்). குறிப்பாய் இவர்கள் சமகாலத்தவர்கள் அல்ல என்பதை கவனியுங்கள். லட்சியவாதம் காந்தி தலைமுறையுடன் முடிந்து விட்டது. இன்றைய நம்பிக்கை வறட்சி, அதன் மீது நிறுவப்படும் உறவுகள், உண்மையை ஊடறுக்கும் அபத்தங்கள், அவற்றை கடக்க பகடி என்று சமகால படைப்பிலக்கியம் முற்றிலும் வேறு பாதையில் செல்கிறது. நவீன கவிதையின் மொழி இறுக்கத்தை மட்டும் கொண்டுள்ள கி.மு கவிஞனாக ம.பு வகைப்படுத்துவது அவரது இரண்டாவது தவறு. எழுச்சிவாதி ஸ்திரமான திடமான மேடையிலிருந்து ஊன்றி எழுகிறான். எட்டித் தொட எத்தனிக்கும் இலக்கும் அவன் முன்னே தெரிகிறது. சமகால மனிதன் மூன் இந்த இலக்கு ஒரு புகைமூட்டமாக உள்ளது. மனுஷ்யபுத்திரன் கவிதையில் இந்த வெறுமையை காட்ட பல மேற்கோள்களை தர முடியும். ஆனால் அது ஜெயனின் தவறை பிரதியெடுப்பதாகவே முடியும். உதாரணமாக, ம.புவின் கவிதையில் “ நீ” என்பது இறைவன் என்கிறார். ஆனால் ஒரு கவிஞனின் படைப்புகளை இப்படி சுண்ணாம்படிப்பது ஆபத்தாகவே முடியும். ம.பு வின் “நீ” பல்வேறு அர்த்தப்பண்புக்ளை கொண்ட ஒரு குறியீடு. அதை கடவுளாக படிக்க முடியாத பல கவிதைகள் உள்ளன. ஒரு படைப்பாளியின் பொதுவான சில அக்கறைகளை பேசலாம். ஆனால் வலுக்கட்டாயமாக பூணூல் போடுவதும் குல்லா அணிவிப்பதும் சமநிலையற்ற விமர்சனம். எனக்குத் தெரிந்த உலக இலக்கியப் பரப்பில் எந்த முக்கிய விமர்சகனும் தனக்கு விருப்பமான வகையில் ஒரு படைப்பாளியை ஒரு கருத்து வகைமைக்குள் சுருக்குவதில்லை. அப்படியான விமர்சனங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.
அடுத்து ம.புவின் கவிதை தொழில்நுட்பம் நாடகீய தனிமொழி வகை என்கிறார். நாடகீய தனிமொழியின் சாயலில் ஆங்கில எழுச்சிவாத காலத்தில் கவிதைகள் எழுதப்பட்டன என்றாலும் (வெர்ட்ஸ்வொர்த்தின் Tintern Abbey), விக்டோரிய காலகட்டத்திலே அது செம்மையான வடிவம் பெற்றது. அதன் முக்கிய பண்பு கவிதை சொல்லியின் ஒரு குறிப்பிட்ட மனவியல அம்சத்தை வெளிப்படுத்துவது. மேலும் நாடகீய தனிமொழியில் ஒரு கதை இருக்கும். நல்ல உதாரணம் My Last Dutchess. மனுஷ்யபுத்திரனிடன் கதையாடல் கவிதைகள் எத்தனை? லா.சா.ராவை கதாகாலேட்சபக்காரர் என்று அடைப்புக் குறிக்குள் மாட்டுவது போல் மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு துணிக்கொடி கிளிப் மட்டுமே நாடகீய தனிமொழி. ஜெயனே குறிப்பிடும் மிகச்சிறந்த கவிதை பட்டியலில் வரும் ம.புவின் கவிதைகள் நாடகீய தனிமொழி வடிவம் பெற்றவையல்ல. அப்படியான கச்சித நா.த கவிதை அவரிடம் இல்லை என்பேன். எந்த தேர்ந்த கவிஞனையும் போல் வேறுபட்ட (கதை, ஆய்வு அறிக்கை ...) வடிவங்களை முயன்றுள்ளார். இதுதான் முத்திரை வடிவம் என்று வரையறுக்க முடியாதபடி அவை முக்கியமான கவிதைகளாகவும் உள்ளன: அரசி, உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் ...
அடுத்து, மனுஷ்யபுத்திரனின் உணர்ச்சிகரம் குறித்து.
நாம் ஸ்திரமற்ற உண்மைகளின் யுகத்தில் வாழ்கிறோம். இன்று எங்கும் கால் பாவாத அவநம்பிக்கையுடன் அணுகுவது அல்லது உண்மைகளை நக்கலும் கிண்டலுமாக கட்டவிழ்ப்பதே சாத்தியம். அவரது ”அபாயம்” கவிதையில் வருவது போல் ஒருவரது இருப்பே பெரும் ஆசுவாசம். கொந்தளிக்கும் உண்ர்ச்சிகள் மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் அவை குறித்த ஐயப்பாடுகளுடன் தோன்றுகின்றன. உணர்வெழுச்சிகளை மறுக்கும் உணர்வுகள் என்பேன். இது சமகாலத்துக்கே உரிய தன்மை. எதிர்தரப்புடன் ஓயாது மோதி எழும் பல கவிதைகள் இவருடையவை. திருவாய்மொழி போன்ற இலக்கியங்கள் சிக்கென்று ஒரு பாதத்தை பற்றிக் கொண்டு நிலைத்து எழுச்சி கொள்கின்றன. இந்த ஒருமுகமான விசுவாசமே உணர்ச்சிகர வரிகளை சாத்தியமாக்குகின்றன. மேலும், ம.புவிடம் நாம் கவிதையென காண்பது ஒரு செய்யப்பட்ட படைப்பு. அதில் உண்ர்ச்சிகரமும் ஒரு தொழில்நுட்ப உபாயமே. சன்னதத்தில் தள்ளாடிய குறிசொல்லிகளிடம் இருந்து கவிதை இன்று நெடுந்தூரம் வந்து விட்டது. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நிச்சயம் உணர்ச்சிவசப்பட அனுமதிப்பதில்லை. ஜெயன் முன்னிறுத்துவது போல் ம.பு தனிப்பட்ட முறையில் சொற்களின் தாளத்தால் உத்வேகம் அடைகிறாரா கருத்தியல் தரிசனத்தை முன்வைக்கும் ஆவேசத்தால் தூண்டப்படுகிறாரா என்பதும் வாசிப்புக்கு முக்கியமல்ல. அக்கவிதைகள் நமக்குள் உள்ள ஒரு உணர்ச்சிகர மனச்சித்திரத்தை அதே தொனியில் பேசி வந்து சட்டென்று கலைத்து விடுகிறது. கவனித்தால் உணர்வெழுச்சிகளை ஐயப்படும் குரலைதான் அவரது மொழிபில் உள்ள முரண் மற்றும் மறுப்பில் காண முடியும். உரையாடுகையில் கூட அதன் சித்திரத்தை, சில சமயம் சுயசித்திரத்தை கூட, அழித்து புள்ளிகள் வைக்கிறது. மீண்டும், இதனை பிரதிநுத்துவப்படுத்தும் கவிதைகளை இங்கே தந்து வாசகனுக்கு இதுதான் யானை என்று தொட்டுக் காட்ட எனக்கு விருப்பமில்லை. வாசகர்களே அவரது கவிதைகளில் மொத்த யானையையும் பார்த்துக் கொள்ளலாம். ம.புவை தூமணி மாடத்தில் கண்வளர வைப்பது ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவது மட்டுமே.
மேலும் தன்னை பிரக்ஞை கழன்ற அவேசமான எழுத்தாளன் மட்டுமேயாக ஒரு கற்பிதத்தை ஜெயமோகன் தனது தன்வரலாற்று கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் வழி கட்டமைத்து வந்துள்ளார். தற்போது ம.புவை வேறு (”ஆவேச நெருப்பு பற்றிக் கொண்ட திரைச்சீலை”) இந்த பலிகுண்டத்தில் இழுத்து விடுகிறார். எழுத்து ஒரு நூதன மனநிலையில் செய்யப்படுவது. எந்த எழுத்தாளனும் தீக்குளிப்பு மனநிலையில் இல்லை. அப்படியான சித்திரம் வாசகனுக்கு கிளர்ச்சி ஊட்டினாலும் கூட அது போலியானது தான். ஒரு உதாரணத்துக்கு, சு.ராவின் மரணத்தின் போது அவரது நினைவுகளை எழுதும் ஜெயமோகன் (நினைவின் நதி) மிக இனிமையான மனநிலையிலே இருக்கிறார். இதை அவரே மேற்குறிப்பிட்ட கட்டுரையில் பதிவு செய்கிறார். இன்னும் ரெண்டு லட்சம் பேர் செத்தது பற்றி ம.பு எழுதும் போது கூட இதுவே நிகழும். வாசகனுக்கு ஜீரணிக்க சற்று சிரமம் தான் என்றாலும் இதில் தவறொன்றும் இல்லை. மற்றபடி ஜெயமோகன் சொல்கிறபடி தினசரி நடப்பதானால மனுஷ்யபுத்திரனை காப்பாற்ற தீயணைப்பு வண்டியே தேவைப்படும்.
உங்களை ஒரு துளி கண்ணீர் சிந்த, அதிர்ச்சி அடைய அல்லது சினம் கொள்ள வைக்கும் போது எழுத்தாளன் தந்திரமாய் புன்னகைக்கிறான். வணிக எழுத்தாளன் இதை மட்டுமே நம்பி உள்ளான் என்பதே அவனுக்கும் தீவிரனுக்குமான வித்தியாசம். சரி, படைப்பூக்கத்துக்கு ஆதாரமாக உள்ள அந்த உணர்ச்சி என்ன? அந்த ஆதார உணர்வை அறச்சீற்றம் அல்லது தெய்வீகத் தேடல் என்று எளிமைப்படுத்த முடியாது. எளிமைப்படுத்தும் பட்சத்தில் அப்போ சீறினீர்கள் இப்போ ஏன் சீறவில்லை என்று ஆளாளுக்கு கேள்வி கேட்பார்கள். இவை வெறும் பாமரக் கேள்விகள் அல்ல. சுந்தர ராமசாமி ”பின்தொடரும் நிழலின் குரல்” குறித்து கேட்டார்: “நியாயப்படி ஜெயமோகன் தான் ஆர்.எஸ்.எஸில் இணைந்து வெளியேறியது குறித்தல்லவா அந்நாவலை எழுதியிருக்க வேண்டும்?”.
கடைசியாக ... இந்த கிளியை யாராவது திறந்து விடுங்களேன்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
ஜெயமோகனுக்கு தேவைதான் , வாழ்க அபிலாசின் உயிரோசை அபிலாசை ,
ReplyDeleteதொடர்ந்து உயிரோசையில் எழுத வாழ்த்துக்கள்
நன்றி அனானி அவர்களே
ReplyDeletethis matter chaaru, jemo, manushya puthran is bore, over dose in all blogs
ReplyDeleteயாரோ இரண்டு சுயநலவாதிகளின் பிழைப்புக்காக, ஒரு தனிமனிதனின் சுயகெளரவம், மரியாதை, பலியாகப்படுகிறது. இவர்கள் பிழைக்க இந்த தனிமனிதனை நாடி வந்துவிட்டு, பிறகு தங்கள் சுயவிளம்பரத்துக்காக தீட்டிய மரத்தினை பதம் பார்ப்பதுப் போல அவரையே ஒரு விமரிசனப்போருளாக கொண்டு தங்கள் பிழைப்பை நடத்துவது மிகவும் கேவலம். அச்சுலகையும், வலைஉலைகையும் நம்பி கடை விரித்திருக்கும் இவர்கள் இருவரும், இல்லை இல்லை, மூவர்: மூவரையும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நம்ம நண்பர்கள் ஆடும் வரையில் இதுப்போன்ற அசிங்கங்கள் நடந்துக்கொண்டேத்தான் இருக்கும். நான் கூறுவது தவறு என்றால் மன்னிக்கவும்.
ReplyDeleteஅருமையான கட்டுரை... நீங்கள் தொடர்ந்து எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள் பற்றி விமர்சனங்கள் எழுதினால் என் போன்ற வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.....
ReplyDeleteஜெமோவின் கோணல் பார்வையில் மனிதனின் குறைகளே அவருக்கு முதலில் தெரியும் என்று ஊகிக்கிறேன்...
ரொம்ப நல்லாயிருந்தது... சில இடங்களில் போரடித்தாலும் :)
ReplyDeleteஒரே ஒரு திருத்தம். ஜெ மோ அல்லது சுயமோகனின் கட்டுரைத் தலைப்பு கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.