ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் ஒரு தீவிர இலக்கிய வாசகரை சந்தித்தேன். விசித்திரம் என்னவென்றால் அவர் ஆறாம் வகுப்புக்கு மேல் படித்திருக்க இல்லை. இலக்கிய அமைப்புகள், கூட்டங்கள், ஆசான்களின் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்க இல்லை. அவர் ஒரு மீனவர். படகில் கடலுக்கு போகும் போது பொழுது போக்காக தீவிர இலக்கியம் அறிமுகம் ஆகியிருக்கிறது. குறிப்பாய், தனக்குள் உள்ள கல்வி வெற்றிடத்தை இலக்கிய வாசிப்பால் நிரப்பும் ஆவேசம் அவரிடம் இருந்தது. அவருடைய மச்சினிச்சி கூடவே வந்திருந்தார். அவர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்திருந்தார். குடும்ப எதிர்ப்பை மீறி கன்னியாஸ்திரி ஆகி, தற்போது காசியில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக நாளும் 12 மணி நேரம் மகத்தான சேவை புரிந்து வருகிறார். நான் சொல்ல வரும் விசயம் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடந்தது. அதுவரை ஆண்களின் புத்தக தர்பார். முடிந்து, அரை வெளிச்சத்தில் மீனவ நண்பரின் மனைவியும் அவரது சகோதரியான கன்னியாஸ்திரியும் எதிரெதிர் இருக்கைகள் அமர்ந்தபடி சம்பாஷணையை ஆரம்பித்தனர். விரல்களை கோர்த்தபடி, கண்கள் வெளிச்சம் கொள்ள ... அவரது உடல் மொழி சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பித்தது: துறவு பாவனையின் கண்ணியம் தளர்ந்தது, உபதேசியின் தொனி கிசுகிசுப்பாகியது. அவரது உலகு பன்னிரண்டு வருடங்களுக்கு பின்னால் உருண்டது. மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள் உரையாடியது எதைக் குறித்து? குடும்பத்து மற்றும் அண்டையிலுள்ள பெண்களின் குசும்பு, அழிச்சாட்டியம், குதிகால் வெட்டு, ரகசியங்கள், துரோகங்கள் ... இப்படி.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் செரியன் குரியன் ஒரு வகுப்பில் வந்ததுமே இதை சொன்னார்: “வரும் வழியில் ஒரு ஜோடி இறுக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன். உங்களுக்கு அதைப் பார்த்தால் என்ன தோன்றியிருக்கும்? எப்படி எதிர்வினை ஆற்றுவீர்கள்?”. அவரவர் உலகில் இருந்ததபடி இசொற்களின் ஊடாக யோசித்தோம். கோபம், அருவருப்பு, சிரிப்பு இப்படியாக உணர்வுகள்.
செரியன் அவரால் மட்டுமே சொல்லக்கூடியதாக அவரே நம்பின அப்பதிலை சொன்னார்: “கோபமுற்று கத்தி இருப்பீர்கள். குறைந்த பட்சம் முணுமுணுத்திருப்பீர்கள், எதிர்ப்புணர்வை ஒரு பெருமூச்சாகவாவது வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் அந்த இடத்தில் இல்லையே என்ற பொறாமையில் விளைந்த கோபம்”. மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை மவுண்ட் சாலையில் ஒரு திரையரங்கில் இவ்விளக்கம் எனக்கு நினைவூட்டப்பட்டது. படம் போரடிக்க ஏறத்தாழ காலியான அந்த அரங்கில் பக்கவாட்டாக சற்று சங்கடமான அமைவில் என் காதலியை அணைத்துக் கொண்டேன். படம் மேலும் இழுவையாக அவளை ஆவேசமாக முத்தமிடத் தொடங்கினேன். இருக்கை ஸ்பிரிங் விடாமல் அழுதது. காரியத்தில் கண்வைத்தபடியே அந்த அழுகையை நிப்பாட்ட முயன்ற போது ஒருவர் குறுக்கிட்டார். கையில் ஒரு துப்பாக்கியை கற்பித்தபடி அவர் சற்று உரக்க கேட்ட போது தான் அவரை கவனிக்கவே செய்தேன். “என்ன நடக்கிறது இங்கே? இது தியேட்டர் தானே?”. சுதாரித்து யோசித்து வார்த்தைகளை தேட வேண்டாமா? அதற்குள் அவராகவே “போலீசை அழைக்கிறேன்” என்றார். அவர் சிரிப்பு போலீஸ் என்று விளங்க ஆரம்பித்ததும் வெளியே சென்று வாசலில் நின்றபடி நுண்பேசியில் எண்களை தேடுவதாக பாவித்தார். நொந்தபடி அரங்கை விட்டு கிளம்பினோம். இத்தனை வருடங்களாகியும் அந்த திரையரங்கு பக்கமே செல்லவில்லை. இருக்கைகளை மாற்றியிருக்க மாட்டார்கள். செரியன் மேரி மக்தலீனை காப்பாற்ற ஏசு ஏவிய பஞ்ச் வசனத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விவிலிய கதையின் வெளிச்சத்தில் அசோகமித்திரன் ஒரு கர்ண பரம்பரை கதை எழுதியுள்ளார்: முக்தி. ஓம் சக்தி இதழில் வெளியானது. பயங்கர சுவாரசியமானது.
ஒரு நல்ல மன்னர். மக்களிடம் நல்ல பேர். அவருக்கு நல்ல குருநாதர் வேறு இந்த நல்ல என்கிற சொல்லை கவனியுங்கள். ராஜாவுக்கு குழந்தைப் பேறு இல்லை. குருவிடம் வினவ அவர் மன்னரின் பாவம் காரணம் என்கிறார். அதை அவருக்கு காண்பிக்கவும் செய்கிறார். பாவ மலை. இத்தனையையும் கரைக்க என்ன செய்ய? அப்போது மன்னருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குரு ஒரு உபாயம் சொல்கிறார்: “ஊருக்கு வெளியே ஒரு அரண்மனை கட்டு. அதில் ஒரே ஒரு அறை மட்டுமே. அங்கு நீ உன் மகளுடன் தனியாக ஒவ்வொரு இரவையும் கழிக்க வேண்டும்”. மன்னர் பின்பற்றுகிறார். காலம் உருண்டோட ராஜா இரவை அரண்மனையில் கழிக்காதது குறித்து மக்கள் முணுமுணுக்கிறார்கள். தற்போது வளர்ந்து பேரழகியாக நிற்கும் அரசகுமாரியை ஒரு வெளியூர் நபர் எதேச்சையாக அந்த தனியான அரண்மனை உப்பரிகையில் பார்த்து பரபரப்பாய் விசாரிக்க ஒரு சின்ன கலவரமெ ஆரம்பிக்கிறது. மக்கள் ஆளாளுக்கு முக்காடிட்டு மறைவாக சென்று பேரழகியை பார்த்து வருகிறார்கள். இவளுடனா ராஜா தினமும் இரவை கழிக்கிறார்? மகளுடன் தந்தை உடல் உறவு கொள்வதாக அவர்களின் கற்பனை வெடித்து கிளம்புகிறது. குருநாதரை தவிர அனைவரும் அவரை வைகிறார்கள். மன்னரின் பாவம் குறைய ஆரம்பிக்கிறது. அப்புறம் அவரது காதுபடவே விமர்சிக்கிறார்கள். இன்னும் வேகமாய் குறைகிறது.
கடைசியில் ஒரு கைப்பிடியே பாவம் மிஞ்சுகிறது. அதை எப்படி கரைப்பது? அப்போது பார்த்து குருநாதர் கண்களில் அரசகுமாரி படுகிறாள். அசந்து போய் அதைப் பற்றியே யோசித்தபடி இருக்கும் கு.நாவுக்கு சட்டென்று இடறுகிறது: “இந்த மன்னன் தான் மகாபாவி ஆயிற்றே. இவனை ஒரு சிறுபெண்ணுடன் தனி அறையில் வைத்து எப்படி நம்புவது”. தாபம் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள நேரே அரசசபைக்கு சென்று நிற்கிறார்: “மன்னா, பெற்ற பெண்ணையே எப்படி நீ இப்படி செய்யலாம் ...” இப்படியான குருவின் தொடர்ந்த தரவிறக்கம் முடியும் போது மன்னன் அசந்து போகிறான். கடைசி பிடி பாவமும் போயாயிற்று! அவன் குருவிடம் சொல்லும் கடைசி வசனம் முக்கியம்: “என் மீது பிறரை அபவாதம் கூற வைத்தே தூய்மையாக்கி விட்டீர்கள். ஆனால் தாங்கள் பாவியாகி விட்டீர்களே குரு!”
கொஞ்சம் தண்டவாளம் தாவி, மற்றொரு விசயத்திற்கு ... இறந்து போன எழுத்தாளர்களின் அழுக்குகளை உயிருடன் உள்ளவர்கள் அம்பலமாய் அலசுவது, தொங்க போடுவது அல்லது பதனப்படுத்துபது குறித்து இங்கே விளக்க விரும்புகிறேன். பதில் சொல்ல அவர்கள் உள்ள பட்சத்தில் பாவம் எவ்வளவு குவிந்திருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் அப்பம் தின்னட்டும். நாங்கள் பூமியில் குழி எண்ணுகிறோம். இதையெல்லாம் யார் புரிந்து கொள்கிறார்கள்!
Beautiful and Excellent !!!
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete