Sunday, 10 January 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 10
ஒருவேளை அந்த மொத்த ரயிலிலும் நாங்கள் மட்டுமே பயணிகளாய் இருந்திருப்போம்; அதுவரையிலும் எதுவுமே எனக்கு நிஜமான சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. "ஆகஸ்டில் வெளிச்சத்தின்" மந்தத்துக்குள், இடைவிடாது புகைத்தபடி, ஆனால் அடிக்கடி வேகமாக பார்வையை வீசி நாங்கள் கடந்து செல்லும் இடங்களை அடையாளம் கண்டவாறு, ஆழ்ந்தேன்.
நீண்ட சீட்டி ஒலியுடன் ரயில் உப்பு சதுப்பு நிலங்களை கடந்து. எலும்புகளை உதற வைக்கும் சிவப்புப்பாறை இடைவழி நிலத்தின் மீது முழுவேகத்தில் சென்றது; அங்கு தொடர்வண்டிகளின் செவிடாக்கும் சத்தம் தாங்கவொண்ணா விதமாக இருந்தது; ஆனால் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பின், வண்டி வேகம் குறைந்து தோட்டங்களின் நிழல்மண்டிய குளிர்மைக்குள் விவேகமான மௌனத்துடன் நுழைந்தது; காற்று மண்டலம் மேலும் அடர்த்தியானது; பின்னெப்போதும் கடற்காற்றை உணர முடியவில்லை. வாழைத் தோட்ட பிரதேசத்தின் ஆசிரம எல்லையின் மாயமண்டலத்துள் நுழைந்து விட்டோம் என்பதை அறிய நான் என் வாசிப்பை தடை செய்ய வேண்டி இருக்கவில்லை.
உலகம் மாற்றம் கொண்டது. சரிச்சீரமைவுடைய முடிவடையாத வாழைத் தோட்ட பாதைகள் இருபுறங்களிலாய் விரிந்து சென்றன; அவ்வழியே வாழைத் தண்டுகள் ஏற்றப்பட்ட காளை வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. பயிரிடப்படாத இடங்களில் திடீரெனத் தோன்றின செங்கல் முகாம்கள், ஜன்னலின் கரடுமுரடான திரைச்சீலைகள் கொண்ட, கூரையிலிருந்து மின்விசிறிகள் தொங்கும் அலுவலகங்கள் மற்றும் போப்பி வயலில் ஏகாந்தமாய் நிற்கும் மருத்துவமனை ஒன்றும் இருந்தன. ஒவ்வொரு ஆற்றிற்கும் அதற்கென ஒரு கிராமமும், ஒரு இரும்பு பாலமும் இருந்தன; அப்பாலத்தில் சிதறடிக்கும் விசில் சத்தததுடன் ரயில் கடக்கையில் ஐஸ் போன்று சில்லிட்ட நீரில் குளிக்கும் இளம்பெண்கள் ஷாட்மீன் போல் மின்னலென மறையும் மார்புகளால் பயணிகளை நிலைகுலைய செய்தபடி தாவினர்.
ரியோபிரியோ நகரத்தில் அந்நாட்டிலேயே பெரிதான, சுவையில் சிறந்ததான பேரிக்காய்கள் திணித்த மூட்டைகளை சுமந்து கொண்டு பல அரசுவாக் குடும்பங்கள் ரயிலில் ஏறினர். உட்கார இடம் தேடி தொடர்வண்டிக்குள் மேலும் கீழுமாய் தயக்கத்துடன் அலைந்தனர்; ஆனால் ரயில் மீண்டும் நகர ஆரம்பித்த போது சிறுகுழந்தையை வைத்திருந்த வெள்ளைகாரியும் ஒரு பாதிரியாருமே மிச்சமிருந்தார்கள். அந்த குழந்தை மீதமுள்ள பயணத்தில் எப்போதும் அழகையை நிறுத்தவில்லை. பாதிரியார் ஒரு ஆய்வு பயணிக்கான பூட்ஸ், தலைக்கவசம் மற்றும் சொரசொரப்பான துணியால் செய்யப்பட்ட, கப்பற்பாய் போன்று சதுர வடிவிலான, அங்கங்கே ஒட்டுப்போட்ட நீண்ட இறுக்கமான அங்கி ஒன்றை அணிந்திருந்தார்; குழந்தை அழும் நேரத்தில் அவரும் பெசினார், எப்போதும் எதோ தேவாலய உரைமேடையில் பேசுவது போல். வாழைப்பழ நிறுவனம் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடே அவரது உரையின் மையப்பொருளாக இருந்தது. அது போன பின் வேறெதையும் பற்றி அந்த பிரதேசத்தில் பேசப்படவில்லை. எல்லோரும் அது திரும்ப வரவேண்டும் என்றும், வேண்டாம் என்றும் கருத்துரீதியாக முரண்பாட்டாலும், அதன் மறுவருகை நிச்சயம் என்றே கருதினர். பாதிரியார் அதன் மீள்வருகைக்கு எதிராக இருந்தார். மேலும் அவர் தன் நிலைப்பாட்டை மிகவும் தனிப்பட்ட ஒரு விவாதத்தில் வெளிப்படுத்தியதை அப்பெண்கள் படுமுட்டாள்தனம் எனக்கருதினர். “அந்நிறுவனம் போகும் இடம் எல்லாம் நசிவை விட்டுச் செல்கிறது”. அவர் சொன்ன ஒரே சுவாரஸ்யமான விசயம் அதுதான்; ஆனால் அவரால் அதை விளக்க முடியவில்லை; இறுதியில் சிறுகுழந்தையுடன் வந்திருந்த பெண் கடவுள் அவருடன் கருத்தொற்றுமை கொள்ள மாட்டார் என்று சொல்லி அவரை குழப்பினாள். நினைவு ஏக்கம், எப்போதும் போல், கெட்ட நினைவுகளை வழித்து துடைத்து நீக்கி, நல்லவற்றை பெரிதாக்கி காட்டி விட்டது. அதன் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க இல்லை. ஆண்கள் தங்கள் வீட்டு வாசற்படியில் அம்ர்ந்திருந்ததை ரயில் ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது; அவர்கள் எதற்காக் காத்திருந்தனர் என்று அறிந்து கொள்ள அவர்கள் முகத்தை நோக்கினாலே போதும். கற்கள் பாவிய கடற்கரையில் துணி துவைத்துக் கொண்டு இருந்த பெண்கள் ரயில் கடப்பதை அதே எதிர்பார்ப்புடனே பார்த்தனர். பிரீப்கெசுடன் வந்தடையும் ஒவ்வொரு அந்நியனும் ஒருங்கிணைந்த பழ நிறுவனத்திலிருந்து இறந்த காலத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வருவதாகவே அவர்கள் நினைத்தனர். ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஒவ்வொரு பயணத்தின் போதும், உடனேயோ பிறகோ இந்த மறைநிலை மெய்வாக்கியம் வெளிப்படும்: ”நிறுவனம் திரும்ப வரப் போவதாக் சொல்கிறார்கள்”. யார் சொன்னதென்றோ எப்போது அல்லது ஏன் என்றோ யாருக்கும் தெரியாது; ஆனால் யாரும் அது பொய்யென்று சந்தேகிக்க இல்லை.
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment