Friday, 1 January 2010

கிரிக்கெட்டின் மஞ்சள் அழகியல்

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் தொடர்களை நாம் அனைவருக்கும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை, நாம் அலசப் போகும் பிரச்சனைக்கு தற்போது நடந்து முடிந்த இலங்கைத் தொடர்களே பதம். இலங்கைக்கு இந்த சுற்றுப்பயண முடிவில் திரும்ப கொண்டு செல்ல ஒன்றுமே இல்லை என்பது வருத்தம் ஏற்படுத்துகிறது. மேட்டிமை இரக்கமா? இல்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆட்டத்தரம் மற்றும் பலவீனங்களை பொறுத்தமட்டில் மிகச்சிறிய வேறுபாடே இருந்தது என்பதுதான் காரணம். கவனியுங்கள் ஒரே பலவீனங்கள் கொண்ட இரு அணிகள் மோதி விலகிய போது இரண்டும் எந்த பாதிப்பும் இன்றி அதே போல் உள்ளன. மேலும் விளங்க இத்தொடரை ஆஸி சுற்றுப்பயணங்களுடன் ஒப்பிடுங்கள். அத்தொடர்களின் முடிவில் இந்தியா பெற்றது சில அபாரமான வீச்சாளர்கள் மற்றும் மட்டையாளர்கள்: ஹர்பஜன், மிஷ்ரா, மற்றும் லக்‌ஷ்மண். கூடவே வரலாற்றை திருப்பி எழுதும் தன்னம்பிக்கை. இச்சுற்றுப் பயணம் சில இளைஞர்களை புகழ்வெளிச்சத்திற்கு நகர்த்தி உள்ளது மட்டுமே விதிவிலக்கு: லக்மல் மற்றும் கோலி. பலவீனங்களின் மோதல் சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நோய்க்கூறாக உள்ளதே நான் கவனிக்க வேண்டியது.



இங்கு நாம் வழக்கம் போல் ஆடுதளங்கள் மீது குங்குமம் இட்டு பலித்தண்ணீர் தெளிக்க முடியாது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று வேறுபட்ட சர்வதேச ஆடுதளங்களில் எதிலும் அணித்தலைவர்களுக்கு எதிரணியினரை பந்து வீசி தோற்கடிக்கும் தன்னம்பிக்கை இல்லை. தற்போது நடந்து வரும் ஆஸி-மே.இ தொடரின் மூன்றாவது டெஸ்டில் 358 எண் இலக்குக்குள் ஒரு காயலாங்கடை மே.இ தீவு அணியை காலி செய்ய ஆஸி பந்துவீச்சு திணறி திண்டாடி வெறும் முப்பத்தைந்து ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் அதை விட தமாஷாக முடிந்தது. மே.இ தீவுகள் 330 இலக்கை ஆஸிக்கு தர, அதை அடையத் திணறி போராடி டிரா செய்தார்கள். தற்போது முடிந்த் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தென்னாப்பிரிக்கா மாவு பிசைந்தது. பாக்- நியூசிலாந்த டெஸ்ட் தொடர் ரெண்டு பக்கமும் காந்தம் ஒட்டின திராசு போல் குழப்பமான டிராவில் முடிந்தது. இந்திய-இலங்கை டெஸ்டுகளில் சற்றே மோசமாக மட்டையாடிய அணி தோற்றது. அவ்வளவே. யோசியுங்கள். உலகின் மிக முக்கியமான அணிகள் ஏறத்தாழ ஒரே காலத்தில் ஆடின இந்த தொடர்களில் மட்டையாளர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி விக்கெட்டுகள் சரித்த புல்டோசர் வீச்சாளர் ஒருவர் கூட வெளிவரவில்லை. இதே அணிகளின் கடந்த தலைமுறை வீரர்கள் பங்கேற்ற தொடர்கள் இத்தகைய விக்கெட் வேட்டையாளர்களாலே ஆக்கிரமிக்கப்பட்டன: மெக்ராத், வார்னே, சக்லைன், அக்ரம், ஆம்புரோஸ், வால்ஷ், டொனால்ட், பொலாக், முரளிதரன், கும்பிளே. இவர்கள் இல்லாத சர்வதேச கிரிக்கெட் களம் இன்று பதர் மூடின வயல்வெளியாக உள்ளது. அதில் சோம்பலாக மேயும் எருமைகள் தாம் இன்றைய அணிகள். இன்றைய டெஸ்ட் அணிகள் முன்னுள்ள ஒரே திட்டம் 500 அல்லது 600 ஓட்டங்களுக்கு மேல் திரட்டி தங்களை பத்திரப்படுத்தி, இதனால், முடிந்தால், எதிரணிக்கு மன நெருக்கடி அளித்து வெல்ல முயல்வது. இருந்தாலும் இடையிடையே பறக்கும் அதிரடி பந்து வீச்சு பொறிகளை நான் மறுக்கவில்லை தான்.

நான் குறிப்பிடுவது கிரிக்கெட்டில் ஒரு வரலாற்றுத் திருப்பம் ஏற்படுத்தி உள்ள வரலாற்று பிரச்சனை. இதற்கு 20-20\ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஆடுதளங்களை குறைகூறுவது எளிய பதில் மட்டுமே. மேற்குறிப்பிட்ட பந்துவீச்சு மேதைகளை நம்மால் உருவாக்க முடியாது. பிரமிள், புதுமைப்பித்தன் போல் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு சூழலில், ஏதோ ஒரு அழுத்தம் மற்றும் காலத்தின் சூதாட்டத்தின் விளைவாக தோன்றுகிறார்கள். தன் இறகுகள் மீண்டும் முளைக்கும் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் ஒரு பட்டுப்புழுவாக இலைமீது காத்திருக்கிறது.


ஒரு அணியை வெற்றி பெற வைக்க குறைந்தது மூன்று திறன் மிக்க, அனுபவசாலி வீச்சாளர்கள் வேண்டும். இன்று எந்த அணியிடமும் இத்தகைய ஆயுதம் இல்லை. நான்காவது ஒரு நாள் போட்டியை, கூடவே தொடரையும், இழந்த நிலையில் இலங்கை அணித்தலைவர் சங்கக்காரா தன் மூத்த பந்து வீச்சாளர்களை தோல்விக்கு பழி சாட்டியுள்ளதை கவனியுங்கள். சரி, அந்த மூத்த வீரர்கள் யார்? எனக்கு தெரிந்து இலங்கை அணிக்கு ஒரே ஜடாயு தான்: முத்தையா முரளிதரன். அவரும் 43,669 பந்துகள் வீசி ஓய்ந்து விட்டார். மிக சமீபமாக அணித்தலைவர் பொறுப்பேற்றுள்ள சங்கக்காராவின் அறிக்கையில் ஒரு மனக்கசப்பு மற்றும் கைவிடப்பட்ட உணர்வு உள்ளன. அனைத்து அணித்தலைவர்களின் ஒருமித்த குரல் பிரதிபலிப்பு தான் இது.


இறுதியாக, சர்வதேச அரங்கிலிருந்து இந்திய உள்ளூர் ஆட்டங்களுக்கு வருவோம். நமது உள்ளூர் ஆட்டங்கள் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒரு மாற்றுப்பார்வைக்காக இவற்றை கண்ணோட்டம் விட வேண்டுகிறேன். மூத்த வீரரான அகார்க்கர் மட்டும் தான் 130-க்கு மேல் வீசும் ஒரே வேகவீச்சாளர். கர்நாடகாவின் அறிமுகவீரர் மிதுன் ஒரு விதிவிலக்கு. மிச்ச முன்னணி ”வேக” வீச்சாளர்கள் 112-120-க்குள் தான் வீசுகிறார்கள். அதை விட அவலம் இவர்களில் பெரும்பாலானோரால் இந்த வேகத்திலும் நிலையாக ஒரு நல்ல லைன் மற்றும் லங்தில் வீச முடியவில்லை. அப்படி வீசும் பட்சத்திலும் அவர்கள் பந்து வீச்சில் அச்சுறுத்தும் அம்சம் இல்லை. மும்பை, தில்லி, தமிழ்நாடு ஆகிய முன்னணி மாநில அணிகள் அனைத்திற்கும் இந்நிலை என்றால், குஜராத், உ.பி, பஞ்சாப் போன்ற அணிகளின் வீச்சு ஒரு பள்ளிக்கூட பரிசோதனை சாலையின் தவளை அறுப்புக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாதவை. இந்தியாவின் இரண்டாம் நிலை வேக வீச்சாளர்களான முனாப் மற்றும் தியாகி ஆகியோருக்கு சவாலாக தற்போது எந்த உள்ளூர் வீச்சாளரும் இல்லை. ஸ்ரீசாந்த் பன்றிக் காய்ச்சல் காரணமாய் விலகிய பின் ஒருநாள் தொடரில் தேர்வாளர்கள் முழுத்திறன் நிலைக்கு திரும்பாத இஷாந்தையே மீண்டும் கொண்டு வந்தனர். இரண்டு தொடர்கள் முழுக்க தியாகி ஒரு பதிலாளாகவே தொடர்ந்தார். அதாவது நமது இரண்டாம் நிலை பதில் வீரர்களால் துவளும் முதல் நிலை வீச்சாளர்களின் இடத்திற்காக கூட போட்டியிட முடியவில்லை. அணியில் பந்து வீச்சாளரின் இடம் அரசு ஆஸ்பத்திரி படுக்கை போல் ஆகிவிட்டது.


2010-ஆம் ஆண்டுக்குள் நுழையும் போது உள்ளூரிலிருந்து சர்வதேச தளம் வரை கிரிக்கெட் மஞ்சளித்து கிடக்கிறது. இது ஒரு மருந்தில்லாத நோய்க்கூறு என்பதே ஆகப்பெரும் அவலம். ஆனால் அது மட்டுமல்ல. இன்றைய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தும் உள்ளீடற்ற கேளிக்கையாக மறக்கப்படும் போது மஞ்சள் வரும் ஆண்டின் அழகியலாகவும் இருக்கலாம்.
Share This

1 comment :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates