இக்கட்டுரை கொல்கொத்தா அணியின் முதல் இரு ஐ.பி.எல் ஆட்டவரலாறு பற்றிய பதிவு மட்டும் தான். மூன்றாவது பருவத்தில் இவ்வணி அடைந்து வரும் மாற்றங்கள் குறித்து அடுத்த கட்டுரைகளில்
ஐ.பி.எல் அணிகளில் ஒவ்வொன்றுக்கும் தனித்த பாணி மற்றும் கலாச்சார அடையாளம் உண்டு. ராஜஸ்தான் ராயல்ஸ் விளிம்பு நிலை அணி. முகவரியற்ற ஆட்டவீரர்கள் வார்னே எனும் ஒரு மேதையின் தலைமையின் கீழ் தன்னம்பிக்கையுடன் ஆடும் முன்னேற்ற ஏணி. தில்லி டேர் டெவில்ஸ் உலகின் மிக அதிரடியான மட்டையாளர்களை உள்ளடக்கிய தூங்குமூஞ்சி எரிமலை. எதிர்பாராமை இவர்களின் முத்திரை. சென்னை சூப்பர் கிங்ஸும் டெக்கன் சார்ஜர்ஸும் நிதானம் மற்றும் ஒழுங்கை நம்புவன. பங்களூர் ராயல் செலஞ்சர்ஸ் டெஸ்ட் மனநிலை கொண்டவர்கள் இளைஞர்களுடன் தீவிர அணி உணர்வுடன் ஒருங்கிணையக் கூடியது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக ஆடியும் எந்த ஆட்ட வகையறாக்குள்ளும் அடங்காதது கொல்கத்தா அணி. மேலும் உள்ளூர் வீரர்களில் ஒரு சிறந்த புதுமுகத்தை கூட கண்டெடுக்க முடியாத அணி. திண்டாவும் சாஹாவும் நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தேங்கிப் போனார்கள். இந்த திசை அறியாமையும் குழப்பமுமே கொல்கத்தா அணி இரண்டு ஐ.பி.எல்களின் போதும் கீழ்மட்டத்திலே தேங்கிப் போனதற்கான முக்கிய காரணங்களில் சில.
அணியின் உரிமையாளரான ஷாருக்கானின் கிரிக்கெட் அஞ்ஞானமும் பொதுவான அசட்டு நிர்வாகமும் அணிக்குள் குழப்பத்தையும் வெளியே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் தோற்றுவித்தது. ஆனால் இதன் மத்தியில் இரண்டாவது ஐ.பி.எல்லில் ஷாருக்கின் ஈடுபாடு வேறொரு திசையில் இருந்தது; அவர் அடிப்படையில் வெறும் கேளிக்கையாளர் மட்டுமே என்பதை இது நிரூபித்தது. தனது அணிக்காக சியர்கேள்ஸ் எனப்படும் நடனப்பெண்களை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நிகழ்ச்சியை நடத்தினார்: Knights and Angels. ஆனால் இதில் வென்ற அணியை தென்னாப்பிரிக்காவில் அனுமதிக்க அங்குள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். ஏலத்தின் போது ஷில்பா ஷெட்டியிடம் வெட்டி பந்தா காட்ட மோர்த்தாஸா எனும் வங்கதேச ஆல்ரவுண்டரை அதிக விலை கொடுத்து வாங்கினார். ஆனால் பிறகு அவருக்கு அணியில் ஆட மிக அரிதாகவே வாய்ப்பளித்து ஏறத்தாழ வீணடிக்கப்பட்டார். ஐ.பி.எல்லில் அவர் செய்த ஒரே சாதனை ஷாருக்கானுடன் நிழல்படம் எடுத்துக் கொண்டது. பிறகு அடிக்கடி ஷாருக் அணியினரின் அறைக்குள் செல்ல ஐ.பி.எல் நிர்வாகிகள் தடைவிதித்தனர். ஷாருக் தனது நீரோ வயலினை எடுத்து உடனே மீடியா முன் மீட்ட ஆரம்பித்தார். தான் ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிக்க போவதாக அறிவித்தார். முதல் ஆண்டில் தலைமை தாங்கின கங்குலியை இரண்டாம் ஆண்டில் நீக்கினார். பிறகு புது பயிற்சியாளர் புச்சன்னனின் ஆலோசனையை யோசனையின்றி ஏற்றுக் கொண்டு சர்வதேச அளவில் தலைமைப் பொறுப்பேற்ற ஆட்டங்களில் சொதப்பியுள்ள மெக்கல்லமை தலைவராக்கினார். இத்தனை நடந்தும் அணி தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அணிக்குள் வெள்ளை-கறுப்பு சனாதன படிநிலை கடைபிடிக்கப்படுவதாய் குற்றச்சாட்டு உள்ளூர் வீரர்களிடம் இருந்து எழுந்தது. கான் தற்போது புச்சன்னன் மற்றும் மக்கல்லமை நீக்கி தனது தவறான முடிவுகளுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு மீண்டும் கங்குலியை தலைவராக்கி உள்ளார். டேவ் வாட்மோர் இந்த வருடத்தின் பயிற்சியாளர். அதிர்ஷ்டத்தை உத்தேசித்து அணியின் சீருடையையும் மாற்றி உள்ளார். 2010 ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்தை கொல்கொத்தா தட்டுத் தடுமாறி வென்றுள்ளது. இந்த வெற்றி அணியின் எதிர்காலம் குறித்து எதுவும் சொல்வதில்லை. அப்படியான ஒரு கொழகொழ ஆட்டத்தை கங்குலியின் அணி ஆடியுள்ளது.
உண்மையில் கொல்கத்தா அணி அதன் உரிமையாளரான ஷாருக்கின் சினிமா பிம்பம், விளம்பர சூட்சுமம் மற்றும் கோணங்கித்தனங்களால் பிரபலமானதே ஒழிய கிரிக்கெட் வெற்றிகளுக்காக அல்ல. தொடர்ந்து இரண்டு வருட ஆட்டங்களில் தோலுரித்து தொங்க விடப்பட்டும் கூட பொருளாதார ரீதியாக மிகவும் வளமான விற்பனைச் சின்னமாக மாறியது; கொல்கத்தாவின் மதிப்பு 42 கோடி டாலர்கள். T20 கிரிக்கெட்டுக்கு உள்ளடக்கம் மட்டும் முக்கியமல்ல என்பதற்கு கொல்கத்தா அணியின் வணிக வெற்றி மிக நல்ல உதாரணம்.
அணியும் தேர்வு அபத்தங்களும்
கங்குலி
மக்கல்லம்
ஹோட்ஜ்
கெய்ல்
ஹஸ்ஸி
அப்பாஸ் அலி
புஜாரா
ஒவ்வைஸ் ஷா
திவாரி
ரோஹன் கவாஸ்கர்
காடிவாலெ
பதக்
மோர்தாசா
அப்துல்லா
விக்னேஷ்
சாஹா
இஷாந்த்
மெண்டிஸ்
திண்டா
முரளி கார்த்திக்
லாங்கவெல்ட்
ஷேன் போண்ட்
ஏக்லாக் அகமத்
வருண் ஆரொன்
மெத்யூஸ்
அகார்க்கர்
ஷுக்ளா
கொல்கத்தா அணியில் உள்ள சிறந்த வீரர்கள் ஒன்றினைந்து திறமையை வெளிப்படுத்தாதது அல்லது அதற்கான அவகாசமும் அதிர்ஷ்டமும் அமையாதது கொல்கத்தாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்கிறார் விமர்சகரும் முன்னாள் சர்வதேச மட்டையாளருமான ஆகாஷ் சொப்ரா. இந்த வழமையான காரணத்தை தாண்டி மற்றொன்றை நாம் இந்த அணியில் கவனிக்கலாம். கிறிஸ் கெய்ல் மற்றும் போண்டைத் தவிர சர்வதெச அளவில் தம் இடத்தை ஸ்திரப்படுத்தியவர்கள் இவ்வணியில் வேறு இல்லை. கங்குலி ஒரு ஐ.பி.எல் ஆட்டத்தை வென்று கொடுத்திருந்தாலும் T20-இன் தேவைகளுக்கு தன்னை இன்னும் தகவமைக்க இல்லை. ஹோட்ஜ், டேவிட் ஹஸ்ஸி மற்றும் ஷா ஆகிய சர்வதேச மட்டையாளர்கள் தத்தமது நாட்டு அணிக்குள் நிலைக்க முடியாதவர்கள். இஷாந்த மற்றும் மெண்டிஸ் இருவருக்கும் T20-இன் பந்து வீச்சு நுட்பங்கள் இன்னும் முழுக்க கைவர இல்லை. மக்கல்லம் மூன்றாம் ஐ.பி.எல்லின் பெரும்பாலான ஆட்டங்களில் ஆட மாட்டார். இதனால் இம்முறை சர்வதேச வீரர்களால் கொல்கொத்தா அணிக்கு உறுதியான நிலைத்த ஆதரவு வழங்க முடியுமா என்பது சந்தேகமே.
அடுத்து உள்ளூர் வீரர்களை இரு வகைப்படுத்தலாம். அகார்க்கர், ஷுக்ளா, ரோஹன், முரளி கார்த்திக் போன்று ஆட்டவாழ்வின் அந்திப்பொழுதில் உள்ளவர்கள். புஜாரா, சோப்ரா, பங்கர் மற்றும் யஷ்பால் சிங் போன்று 20-20 ஆட்டத்துக்கு சற்றும் பொருத்தமற்றவர்கள். இந்த தேர்வு அபத்தம் கொல்கொத்தாவின் சரிவுக்கு மற்றொரு காரணம். இவர்களில் புஜாரவை தவிர பிறர் இம்முறை ஆடமாட்டார்கள் என்று தெரிகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திவாரி, கடிவாலெ மற்றும் இக்பால் அப்துல்லா ஆகியவர்கள் தாம் சமகால இந்திய தலைமுறையின் அசலான பிரதிநிதிகள்.
ஆனால் ஐ.பி.எல் ஒரு வரி கவிதை போல. இந்த வடிவத்தில் மேதைகளும் புதுமுகங்களும் சமம். நாம் இதுவரை மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளர்கள் குறித்து வைத்த அளவீடுகள் அனைத்தும் நடப்பு ஐ.பி.எல்லில் பொய்யாகலாம். கணக்குப் போட்டு கழிக்கப்பட்டவர்கள் புகழ் ஒளிவட்டத்துக்குள் சட்டென்று வரலாம்.
ராஜஸ்தான் மற்றும் ஹைதரபாத அணிகள் இதுவரை ஐ.பி.எல்லை வென்றதற்கு உள்ளூர் வீரர்களின் சிறந்த பங்களிப்பு ஆதாரமாக இருந்தது. ஆனால் உள்ளூர் வட்டாரத்திலே பலவீனமான வங்க அணியில் இருந்து ஒரு சில பேரே நைட் ரைடர்ஸ் அணியில் சோபித்தனர். அணியில் சர்வதேசர்கள் 4 பேரே சேர்க்க முடியும் என்பதால் உள்ளூர் திறமையாளர்களில் ஏழில் மூவராவது ஒவ்வொரு ஆட்டத்திலும் நிலைத்து திறனை வெளிப்படுத்த வேண்டும். நெருக்கடியில் இருக்கும் சர்வதேசர்கள் மற்றும் அரசாங்க குமாஸ்தா மனநிலை உள்ள உள்ளூர்க்காரர்கள் தமது குறுகின எல்லைகளை கடந்து அணிக்காக ஒன்றிணைந்தால் மட்டுமே அரையிறுதிக்காவது இம்முறை செல்ல முடியும். இந்த விதிக்கு மட்டும் கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் விதிவிலக்கு இல்லை.
No comments :
Post a Comment