சர்க்கரை உபாதைக்கு கணையம் பாதிப்பு ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த தகவல் யுகத்தில் மிதமிஞ்சிய விழிப்புணர்வு கணைய சிதைவை விட அபாயகரமானது. நீரிழிவின் பாதக விளைவுகள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று கிடைக்கின்றன. நீரிழிவு கால் பாதத்தில் இருந்து மூளை வரை பல்வேறு உறுப்புகளை பாதிக்கக் கூடியது குறி விறைப்பை கூட அது விட்டு வைப்பது இல்லையாம் ... சர்க்கரை உபாதையை கட்டுப்படுத்த அது குறித்த அறிவை விருத்திப்படுத்துவது நல்லதா? ஏனென்றால் எய்ட்ஸுக்கு அடுத்து வேறெந்த உடல் கோளாறையும்\ நோயையும் விட அதிக விழிப்புணர்வு பிரச்சாரம் நீரிழிவுக்கு தான் செய்யப்படுகிறது. நமது தலைமுறையினரில் உழைப்பாற்றல் மிக்க இளைஞர்களில் பலரை இக்கோளாறு மிக வேகமாக தாக்கி அழித்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அடுத்த காரணம், நீரிழிவாளர்கள் சாமியார்களை விட அதிக சுயகட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டியிருப்பது. நீரிழிவு பற்றி நாம் கேள்விப்படும் செய்திகளில் மிக சுவாரஸ்யமானது இது தான்.
தனது ரத்த சர்க்கரையின் அளவை நீரிழிவாளர் அடிக்கடி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதப்படுகிறது. இதனை சுயமாக தெரிந்து கொள்ள Acucheck போன்ற கையளவு கிளைக்கோமீட்டர் (சர்க்கரைமானி) எந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. லான்செட் எனப்படும் கருவியால் உங்கள் விரல் நுனியில் நுண்ணிய துளையிட்டு ரத்தம் பிதுக்கி சர்க்கரைமானியின் நுனியில் தேய்த்து சில நொடிகளில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளலாம். சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் முடிந்தால் தினமும் மூன்று வேளைகள் கூட இப்படி சோதித்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது போன்று நீரிழிவாளர்கள் விளையாட்டுக்கு ஒரு ஐஸ்கிரீம் தின்றாலோ, ஜுரம் போன்ற நோய்த் தாக்குதல்கள் ஏற்பட்டாலோ, ரொம்ப கவலை மற்றும் பதற்றமாக இருந்தாலோ கூட சுயசோதனை பண்ண வேண்டும். ஆனால் இத்தனை சாகசங்களுக்கும் ஒரு எதிர்விளைவு உண்டு என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இவ்வாய்வில் சர்க்கரைமானி எந்திரங்களால் சர்க்கரை சோதிப்பவர்கள் மேலும் மன-அழுத்தத்துக்கு உள்ளாவதாகவும், இதனால் இவர்களின் ரத்த சர்க்கரை முன்னிருந்ததை விட அதிகம் எகிறி விடுவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதாவது டாக்டரின் கணக்குப்படி உங்களுக்கு ரத்தசர்க்கரை 140-க்குள் இருக்க வேண்டும். ரொம்ப சமர்த்தாக உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றி, காலை மாலையில் நடைபயிற்சி செய்தும் கூட எப்படியோ உங்கள் சர்க்கரைமானி ரத்தசர்க்கரை அளவு 300 என்று காட்டுகிறது. அதிர்ச்சி, குழப்பம், குற்றவுணர்வு ஏற்படுகின்றன ... பிறகு அச்சம், கவலை, பதற்றம், மன-அழுத்தம் என்று வளர்கிறது. சாயந்தரம் வரை சோர்ந்து இதைக் குறித்தே பலவாறாக சிந்தித்துவிட்டு மீண்டும் சோதிக்கிறீர்கள். இப்போது சர்க்கரைமானி 350 என்கிறது. ஆஹா ... இரவெல்லாம் விட்டுவிட்டு தூக்கம். காலையில் நெற்றி சுருங்க மீண்டும் பார்த்தால் 400. ஏறத்தாழ பலருக்கு மேற்சொன்ன ஆய்வில் இந்த பட்டாம்பூச்சி விளைவுதான் ஏற்பட்டிருக்கிறது.
துரித ஸ்கலிதத்தின் ஆதாரப் புள்ளியும் இதுதான். தன்னால் விந்தை போதுமான நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியாது என்று புணர்ச்சியின் போது துணுக்குறுபவர்கள் மேலும் சீக்கிரமாகவே வெளியேற்றி விடுவார்கள். இன்னொரு பக்கம், இவர்கள் சுய-உதவி நூல்களில் சொல்லியுள்ளது போல் நம்மால் முடியும் என்று காற்றில் குத்திக் கொண்டு கிளம்பினால் குறி எழும்பவதுமே சில சமயம் சிரமமாகி விடும். இதன் நீதி என்னவென்றால் ரத்தசர்க்கரை மற்றும் ஸ்கலிதம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு அறை மூளையில் இல்லை. சிந்தனை தான் இவற்றிற்கு முதல் எதிரி.
ஞாயிறு பத்திரிகையில் உடல்நலப் பக்கத்தில் நீரிழிவு குறித்து அச்சுறுத்தும், உற்சாகப்படுத்தும் கட்டுரைகள் அருகருகில் எழுதப்பட்டிருக்கும். இரண்டுமே உங்களை பதற்றப்படுத்தும். உதாரணத்திற்கு நீரிழிவுக்கான உணவுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். நீரிழிவுக்காக டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும் அட்டவணைப்படி நம்மூரில் யாரும் வழக்கமாக சமைப்பதில்லை. நீரிழிவாளர் தன் உணவுப்பழக்கத்தை தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் போக்குக்கு நேர்மாறாக மாற்றிக் கொள்ள வேண்டியதாகிறது. கோயில் வழிபாடு உட்பட்ட அனைத்து வித சமூக சந்திப்புகளிலும் உணவை பகிர்தல் இணக்கத்திற்கு அவசியமாகிறது. இதுபோல் ஆண்கள் உலகில் புகையும், மதுவும் ஒரு முக்கிய கலாச்சார அம்சம் ஆகின்றன. நீரிழிவாளர்கள் இக்கட்டுப்பாட்டின் படி வாழ்ந்தால் சமூகத்திலிருந்து மிக எளிதாக துண்டிக்கப்படுவார்கள். உதாரணமாக, நீரிழிவு அட்டவணைப்படி சிற்றுண்டிக்குப் பிறகு இரண்டு மணி நேரத்தில் ஒருவர் சர்க்கரை இல்லாத டீயும், இனிப்பில்லாத 2 பிஸ்கட்டுகளும் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். இவை எந்த அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன? இந்தியாவின் 33 மில்லியன் நீரிழிவாளர்களில் ஒரு குறிப்பிடும்படியான பகுதியாக இளைஞர்கள் மாறி வரும் சூழலில் இது கவனிக்க வேண்டிய அம்சமாகிறது. பி.பி.ஓக்களில் காப்பிமெஷின் அரட்டைகளில் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. கூட்டங்களில் இனிப்பு காரம் வழங்கப்படும் போது எச்சில் வடிய விலகி நிற்க வேண்டும். திருமணம் போன்ற சமூக விருந்து சந்தர்பங்களை தவிர்க்க வேண்டும். நீரிழிவு மேலாண்மை வெறும் நாக்கை கட்டுப்படுத்துவது போன்ற எளிய செயல் அல்ல. அது சமூக பெருவெளியில் இது தனிமனிதனை தனிமைப்படுத்துவது.
வாழ்நாள் முழுக்க பின்பற்றிய ஒரு உணவுமுறையை ஏறத்தாழ முழுக்க மாற்றியமைப்பது சிக்கலான ஒன்று. புது முறைக்கு பழக வருடங்கள் பிடிக்கலாம்.
நீரிழிவாளர்களுக்கு கலோரி பிரக்ஞை அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது மனித இயல்புக்கே முரணானது. கலோரி என்பது மீட்டர், கிராம் போல ஒரு உணவு அளவுக்கான அலகு. உதாரணமாக, ஒரு தோசை 80-100 கலோரி இருக்கும். ஒரு வடை தின்ன ஆசைப்பட்டால் உங்கள் வழக்கமான கோட்டாவில் இருந்து ஒரு தோசையை ரத்து செய்ய வேண்டும். இதை உணவுப்பரிமாற்றம் என்கிறார்கள். ரெண்டு பெக் அடித்தால் அன்றைய மதிய அல்லது இரவு உணவில் எதனை எவ்வளவு குறைக்க வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே உங்களுக்குள் சர்க்கரை அளவு மீட்டர் சரசரவென்று ஏறிக் கொண்டிருக்கும். வரலாற்றில் இதுவரை நம் உணவை தீர்மானித்து வந்துள்ளது புலன்கள் அல்லவா; பணி-மேஜையிலிருந்து அறிவு உணவு-மேஜைக்கு நகர்ந்துள்ளது நமது நூற்றாண்டின் பெரும் துரதிர்ஷ்டங்களுள் ஒன்று.
இன்று பல நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளுக்கு அனாவசிய சிகிச்சை மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக ஒரு புகார் உள்ளது. அச்சு, இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் பல்வெறு உபாதைகள் குறித்த அரைகுறை தகவல்களை பிரசுரித்து விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற பெயரில் மத்திய, மேல்வர்க்க மக்களை கலவரப்படுத்தி வருகின்றன. உடல்பருமனை போக்க ஏகப்பட்ட செயற்கை இனிப்பு மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள், கருவிகள் மற்றும் உடற்பயிற்சி நிறுவனங்கள் இன்று பெருகி வருகின்றன; ஆவேசமாக சந்தைப்படுத்தப் படுகின்றன. இவை உடல்பருமன் பிரச்சனையை எளிமைப்படுத்தி (சிம்ரன் இடை போன்ற sugarfree வடிவம்) நிஜாரை உருவுகின்றன. குழந்தைகள் சற்று உற்சாக மிகுதியாகவோ அல்லது மந்தமாகவோ இருந்தால் உடனே மனவியல் மருத்துவர்களிடம் அனுப்பப்டுகிறார்கள். இக்குழந்தைள் மீது கவனக்குறைபாடு (attention deficit disorder) என்று உடனே முத்திரை குத்தப்படுகிறது. மன-அழுத்தத்திற்கானவை போன்ற நரம்பணு ஊக்கியை கட்டுப்படுத்தும் மருந்துகள் இக்குழந்தைகளுக்கு தரப்படுகின்றன. இவை தொடர்ந்து உட்கொள்ளப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் இத்தகைய மருந்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார் அமெரிக்க உளவியல் மருத்துவர் ஆண்டனி ராவ் (The Doubting Disease; Jerome Groopman; p.58; The Best American Science and Nature Writing). சமீபமாக உலகில் மனவியல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடும்படியாக அதிகமாகி உள்ளதை Journal of the American Medical Association சுட்டிக் காட்டி உள்ளது. குழந்தைகளுக்கு இப்படியாக உளவியல் மருந்துகள் அதிகப்படியாக வழங்கப்படுவதை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது. என் அலுவலகத் தோழி ஒருவரின் குழந்தை எந்த வண்டி சத்தம் கேட்டாலும் “அப்பா” என்று கூவியபடி வாசலுக்கு ஓடுவான். பிறகு கதவு, சுவர்களில் முட்டி விழுவான். அவனுக்கு கவனம் எதிலும் நிலைப்பதில்லை. கவலையான அம்மா குழந்தையை ஒரு மனவியலாளரிடம் அழைத்து சென்றார். மனவியலாளர், ஒரு மாற்றத்துக்கு, மருந்தேதும் எழுதாமல் பக்குவமாக ஒரு அறிவுரை சொல்லி அனுப்பி உள்ளார்: “உங்களுடன் அதிக நேரம் இருக்க முடியாத பதற்றம் தான் இப்படி வெளிப்படுகிறது. உங்கள் பையனோடு அதிக நேரம் செலவிடுங்கள்.” மற்றொரு நண்பரின் மாமா மொடக்குடியர். உள்ளுறுப்புகள் பல சேதமாகி விட்டன. டாக்டர் அவருக்கு இரு தேர்வுகளை அளித்தார். ஒன்று தொடர்ந்து குடிக்கலாம். அப்படியானால், 3 மாதங்களில் சாவு. இல்லது நிறுத்தலாம். 8 மாதங்களில் சாவு. மாமா துணிச்சலாக மூன்று மாதங்களை தேர்வு செய்தாராம். இதை நண்பர் மிகுந்த புளகாங்கிதத்துடன் ஒரு சாகசமாக குறிப்பிட்டார். நீரிழிவாளர்களிடம் இப்படியான அறிவார்ந்த அக்கறையும் அசட்டுத் துணிச்சலும் பொதுவாக காணப்படும் முரணான அணுகுமுறைகள். இரண்டுமே அசட்டுத்தனமானவை.
உலகசந்தை நம் படுக்கை அறை வரை வந்து விட்டது. உலகை நம்மிடமும், நம்மை உலகிடமும் அது அணுவணுவாக பிரித்து விற்கப் பார்க்கிறது. இந்த மிகைகளின் காலத்தில் இரு துருவங்களுக்கு மத்தியில் நமக்கு ஒரு இடம் வேண்டும்.
No comments :
Post a Comment