Tuesday, 9 March 2010

ஐ.பி.எல் அணி வரிசை

அணியும் தலைமையும் – இதுவரை


ஐ.பி.எல் வெளி நபர்களை பிரதானப்படுத்தி மாநில வாரியாக அணிகள் உருவாக்கிய போது இம்முரண் ஒரு சிறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் சுவாரஸ்யமாக இந்திய மாநகர மனநிலை இதை எளிதில் ஏற்றுக் கொண்டது. ஆனால் அதே நேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் கங்குலி மற்றும் திராவிடை தலைமையில் இருந்து அகற்றி வெள்ளையர்களை ஸ்தாபித்த போது ஒரு எதிர்ப்பலை கிளம்பியது. குறிப்பாக, அணிக்குள் இந்தியர்கள் கலகம் செய்தார்கள். இரு அணிகளும் வெள்ளைத் தலைமையின் கீழ் அட்டை போல் சுருங்கியது. பிறகு பங்களூர் அணிக்கு கும்பிளே தலைவராக நியமிக்க பட்ட பின் அது நன்றாக ஆடி கோப்பை வென்றது. இது ஷாருக்கானை தூண்டியிருக்க வேண்டும்: அவர் ஐ.பி.எல் 2010-இல் சவுரவை இரண்டாம் முறையாக கிரீடம் சூட்டியுள்ளார். ஆனால் பிரீத்தி சிந்தா யுவ்ராஜை கழற்றி விட்டு சங்கக்காராவை அணித்தலைவராக கொண்டு வந்துள்ளார். ஐ.பி.எல் ஆட்டம் ஒன்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் யுவ்ராஜ் சிங் சில ஓவர்கள் காயம் காரணமாக வெளியேறினார். அப்போது தலைமை தாங்கிய சங்கக்காரா புத்திசாலித்தனமாக நிலைமையை கையாண்டார். அணியை ஒன்று திரட்டி வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த தலைமைப் பண்பு பிரீத்தியை ஈர்த்திருக்க வேண்டும். மேலும் இலங்கை அணியின் தற்போதைய தலைவர் அவர் என்பதும் கூடுதல் தகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் அணித்தலைமைக்கு அதே அணியை சேர்ந்த ஜெயவர்தனே தான் மேலும் திறமையானவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ரசிகர்களுக்கு இந்த சந்தர்பத்தில் சிறு சுணக்கம் உண்டு. வெற்றி அடைந்த பின் யுவ்ராஜ்-பிரீத்தி ஜோடி மைதானத்தில் கட்டி அணைப்பது சிலரை பஞ்சாபின் கடும் ஆதரவாளர்களாகவும், வயிற்றெரிச்சலால் எதிரிகளாகவும் மாற்றி இருந்தது. சங்கக்காராவுக்கு யுவ்ராஜின் இந்த வசீகரம் மற்றும் பிளேபாய் பிம்பம் கிடையாது.



சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறத்தாழ இந்திய தேசிய அணியை போன்றது. அதிரடியான மட்டையாளர்கள் மற்றும் சுமாரான ஆல்ரவுண்டர்களை நம்பியிருக்கும் அணி. ஆட்ட வரிசை மற்றும் பந்து வீச்சு திட்டங்களை பொருத்த வரை எந்த அதிரடி மாற்றமும் இருக்காது. மட்டையாட்டம் சொதப்பினால் சென்னை அணிக்கு ஆட்டத்தின் போக்கை திருப்ப தெரியாது. நேர்கோட்டில் மட்டுமே ஒடத் தெரிந்த குதிரை தோனியின் அணி. தோனி அணித்தேர்வை பொறுத்த மட்டில் அதிரடிகளை விரும்பாத சம்பிரதாய தலைவர். உதாரணமாக ஐ.பி.எல்லின் இரு பருங்களிலும் ஏராளமான புது வீரர்கள் புகழ்வெளிச்சத்துக்கு வந்த போது சென்னை அணி இருட்டாகவே இருந்தது. கோனி மட்டுமே புதிதாக ஆடி பெயர் பெற்றவர். இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்கலாம். தோனியின் அணி 35 வயது சராசரியில் உள்ள ஓய்வு பெற்ற \ பெறப்போகும் ஆட்டக்காரர்கள் அல்லது அனுபவம் மிகக் குறைவான மாநில நட்சத்திரங்களின் கூடாரம். இந்த இரு தரப்பினரிடமும் நாம் தொடர்ச்சியான ஆட்ட உச்சத்தை எதிர்பார்க்க முடியாது. 2008 மற்றும் 2009 தொடர்களில் இந்த அணி தடுமாறி வந்துள்ளதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

அனுபவம், இளமை, திறன் மற்றும் உடற்தகுதி ஒன்று சேர வாய்த்த ஒரு பந்து வீச்சாளர் கூட சென்னை அணியில் இல்லை. இதற்கு காரணம் தோனி தனது மட்டையாட்ட வலிமைக்கு உத்திரவாதம் அளிக்கும் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையே அதிகம் தேர்ந்துள்ளார் என்பதாகும். சென்னை சூப்பர் கிங்ஸை வாங்கி உள்ள இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.எல் குழுமத்தில் உள்ள மாபெரும் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. சென்னை அணியின் மதிப்பு 224 கோடிகள். இருந்தும் சென்னை அணி தனது முதலீடை சிறப்பான பந்து இளம் வீச்சாளர்களில் செய்யவில்லை. தனது உடற்பளுவையே வெற்றிக்கு நம்பி இருக்கும் சுமோ மல்யுத்த வீரனை நினைவு படுத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை அணி விபரம்

பெயர் வயது
முரளி விஜய் 25
சுரேஷ் ரெய்னா 23
ஜார்ஜ் பெய்லி 27
மாத்யூ ஹெய்டன் 38
பத்ரினாத் 29
அருண் கார்த்திக் 24
மைக்கேல் ஹஸ்ஸி 34
ஹெமங் பதானி 33
ஆல்பி மார்க்கல் 28
ஜஸ்டின் கெம்ப் 32
மகேந்திர சிங் தோனி (தலைவர்) 28
பார்த்திவ் படேல் (கீப்பர்) 24
முரளிதரன் 37
அஷ்வின் 23
நிதினி 32
தியாகி 23
ஜெகதி 30
பாலாஜி 29
கோனி 26
துஷாரா 29
பெரீரா 24
கணபதி 29

சென்னை அணியில் மட்டும் 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 6 பேர் உள்ளார்கள். ஒப்பிட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருவர் தான். கல்கத்தா நைட் ரைடர்ஸின் நிரந்தர அணியில் மூவரே. குறிப்பாக சென்னை அணியின் ஓய்வு நிலை வீரர்கள் தாம் ஆதார ஆட்டக்காரர்கள். சென்னைக்கு அடுத்த படியாய் வயதான அணியாக பங்களூர் இருந்தாலும் அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் கோலி, உத்தப்பா மற்றும் பாண்டே போன்ற இளைஞர்களே. காலிஸ் மற்றும் திராவிட் அணிக்கு ஸ்திரத்தன்மை அளிப்பவர்களே தவிர ஆட்டத்தை வென்று கொடுப்பது இவர்கள் அல்ல. முதிய வீரர்களை நம்பி இருப்பதில் சிக்கல் அவர்களால் தொடர்ச்சியாக உச்ச நிலை ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதும், எளிதில் காயமுற்று விலக நேரிடும் என்பதுமே. அடுத்து 30 வயதினருக்கான சிறு மெத்தனம் அல்லது ஊக்கமின்மை களத்தடுப்பில் வெளிப்படலாம். அடுத்து சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களை அலசலாம்.


ஹஸ்ஸி இம்முறை ஐ.பி.எல் ஆட வாய்ப்பு குறைவு என்பதால் சென்னை அணி ஹெய்டன், தோனி மற்றும் ரெய்னாவை நம்பி இருக்கும். தோனி பத்தாவது ஓவருக்கு பிறகு பவர் பிளே முடிந்த நிலையில் களமிறங்குவதாலும், அவர் தனது ஆட்டமுறையை தற்போது அதிரடியிலிருந்து நிதானத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளதாலும் அவரது ஓட்டங்கள் ஆட்டபோக்கை பெருமளவு மாற்றுவதாக இருக்காது. இவர்களுக்கு அடுத்த படியாய் பார்த்திவ் பட்டேலும் துவக்கமாடும் பட்சத்தில் முக்கிய பங்காற்றுவார். இந்த நால்வரில் மூவர் சர்வதேச மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் நல்ல ஆட்டத்திறன் நிலையில் (form) இருக்கிறார்கள். T20 தொடரில் ஆரம்ப ஆட்டங்களில் ஏனும் தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் நிலை மிக முக்கியமானதாகிறது. T20 ஆட்டங்களில் பொறுமையாக ஆரம்ப ஓட்டங்கள் சேகரிக்க வாய்ப்பில்லை என்பதே இதற்கு காரணம். மேற்சொன்ன நால்வரின் ஓட்டங்களே அணியின் வேற்றியை பெருமளவில் தீர்மானிப்பவையாக இருக்கும்.

ஆரம்ப ஆட்டங்களில் பங்கு பெற வாய்ப்புள்ள வீச்சாளர்கள்:
பாலாஜி
அஷ்வின்
கோனி
முரளிதரன்
நிதினி
ஆல்பி மோர்க்கல்

கூடவே ஆல்ரவுண்டர்கள் துஷாரா அல்லது பெரீராவுக்கும் வாய்ப்புள்ளது. பாலாஜி, அஷ்வின் மற்றும் கோனியின் பந்துவீச்சு நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் சுமாராகவே இருந்தது. முரளிதரன் காயமுற்று நீண்ட இடைவெளிக்கு பின் ஆட வருவதால் அவருக்கு ஆட்ட தயார்நிலை (match fitness) குறைவாகவே இருக்கும். நிதினி மற்றும் ஆல்பி மார்க்கல் மோசமாக ஆடி வருவதால் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து சமீப ஆட்டங்களில் விலக்கப்பட்டவர்கள்.

சென்னை அணியின் பலம் பலவீனத்தில் இம்முறையும் மாற்றம் இல்லை. கெம்ப் மற்றும் பதானி இம்முறை அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்வின் இறங்குமுகத்தில் உள்ளவர்கள். பத்ரி மற்றும் விஜய் இயல்பான T20 மட்டையாளர்கள் அல்ல. ஆட்டத்தின் போக்கை திசை திருப்ப அவர்களால் இனி முடியுமா என்பதே கேள்விக்குறியே. ஆனால் அருண் கார்த்திக் மற்றும் பெரீரா ஆகிய இரு இளைஞர்களும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கை எளிதில் மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள். T20 ஆட்டங்களின் வசீகரமே வெற்றி தோல்விகளை எளிதில் ஊகிக்க முடியாமையே. மேற்குறிப்பிட்ட சென்னை அணியின் மூத்த வீரர்கள் கூட தொடரின் ஒரு கட்டத்தில் தற்போதைய மோசமான form-இல் இருந்து மீண்டு மிகச்சிறப்பாக ஆடலாம். ஆட்டம் சிறப்பாகும் பட்சத்தில் இதுவரையிலான ஊகங்களும் முடிவுகளும் தவறாவதில் மகிழ்ச்சியே. ஒரு உற்சாகமான T20 ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் நம் நினைவில் இருந்து எளிதில் வழுவி விடுபவை; அதனால் முக்கியமற்றவை.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates