Tuesday, 9 March 2010
நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்
நவீன மருத்துவத்தின் வணிகப்பசி அதன் மீது ஒரு ஆழ்ந்த கசப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனோடு அணு ஆயுத மற்றும் தீவிரவாத×எதிர் போர் அழிவுகளும் சேர்ந்து கொள்ள நுண்சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் அறிவியல் மீதான தீவிரமான அவநம்பிக்கை நீலம் பாரித்தது. இது அறிவியல் புனைகதைகளில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு ஒரு படிமமாகவே மாறி விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் கணிசமானோருக்கு அறிவியல் பிரக்ஞையும் கவனமும் இருக்கிறதோ இல்லையோ மேற்சொன்ன அவநம்பிக்கை உள்ளது. வெகுஜன ஊடகங்கள் நவீன மருத்துவத்தின் மகிமைகளை பஜனை பாடுவது இதன் மற்றொரு துருவம். இந்த இரு தீவிர நிலைப்பாடுகளின் மத்தியரேகையில் அறிவியல் செய்துவரும் சாதனைகளை பாயச முந்திரிப்பருப்பை போல் அங்கீகரிக்கத் தவறக் கூடாது. மருத்துவ அறிவியலின் சமீபத்திய மைல்கல் மரண வாயிலில் காத்திருக்கும் குழந்தைகளுக்கான ஒரு நூதன கல்லீரல் உறுப்பு-மாற்று சிகிச்சை.
உறுப்பு-மாற்று சிகிச்சை நீண்ட கால மருந்து உட்கொள்ளல், செலவு, கவனம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஆகிய பல சிரமங்கள் மற்றும் ஆபத்து அம்சங்களை உள்ளடக்கியது. உள்ளே பொருத்தப்பட்ட வேற்று உறுப்பின் மீது நம் உடல் ஒரு தாக்குதலை தொடர்ந்து தொடுத்தபடி இருக்கும். இதுவரை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த உள்-தாக்குதலை சமாளிப்பது பற்றியே அக்கறை கொண்டு விட்டு இப்போது சற்று மாற்றி யோசித்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சையின் போது மருந்துகளை பெரிதும் நாடாமல் உடலின் இயல்பான தடுப்பாற்றலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் நொடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் அதிகம். புற்றுநோயில் இருந்து தப்புவது பெரியவர்களை விட அவர்களுக்கே எளிது. அமெரிக்காவின் ஜேக்சன் மெம்மோரியல் மருத்துவமனையில் மருத்துவர் டொமயாகி கேட்டோ ஏழு மாதங்கள் முதல் எட்டு வயதுக்கு உட்பட்ட தீவிரமாக கல்லீரல் பழுதுபட்டு சக்கரப் படுக்கைவாசிகளான குழந்தைகளுக்கு அபாரமான ஒரு மாற்று சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றி உள்ளார். குறிப்பாக இச்சிகிச்சை குழந்தைகளுக்கு மட்டுமே தோதானது.
இக்குழந்தைகளுக்கு புதுகல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் பழையதில் பொருத்தினார் கேட்டோ. இதனால் பழைய கல்லீரல் தூண்டுதல் பெற்றது. அது சிறப்பாக வளர்ந்து செயல்பட ஆரம்பித்தது. இதுவரை அன்னிய உறுப்பை அழிக்க விழையும் உடலின் தடுப்பாற்றலை கட்டுப்படுத்த அக்குழந்தைகள் மருந்துகள் உட்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் ஈரல் பழையபடி ஆரோக்கியமாக வளர்ந்து விட்டதை உறுதி செய்த கேட்டோ இந்த மருந்துகளை நிறுத்தினார். இதனால் கட்டழித்து விடப்பட்ட தடுப்பாற்றல் செயற்கையாக பொருத்தப்பட்ட கல்லீரல் பகுதியை தடையமின்றி அழித்து விட்டது. இப்படி தடுப்பாற்றலை சாதமாக பயன்படுத்தின கேட்டோ எட்டு குழந்தைகளில் ஏழு பேரை காப்பாற்றினார். இக்குழந்தைகள் இனிமேல் மருந்து உட்கொள்ளவோ பின்விளைவுகள் குறித்து கவலைப்படவே வேண்டாம்.
இம்முறை 1990-இல் அறிமுகமானாலும் இப்போதுதான் வெற்றி அறிகுறிகளை கண்டுள்ளது. கேட்டோவின் அறுவை சிகிச்சை அதன் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதில் ஆபத்துக்கள் பல உள்ளன. பிற அறுவை சிகிச்சைகளை விட ரெட்டிப்பு நேரம் ஆகும். அப்போது செலுத்தப்படும் மருந்துகளால் குழந்தைகளுக்கு மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரழக்க நேரலாம். மிகச்சிலருக்கு கல்லீரல் மீண்டும் வளராமல் போகலாம். ஆனால் இத்தனை அபாயங்களையும் தாண்டி, உயிர்வாய்ப்பு இல்லாத பல குழந்தைகளை இப்போது இந்த கண்டுபிடிப்பு காப்பாற்றி உள்ளது.
இந்திய தேசப்பிரிவினைக்கு ஒரு நடுநிலைப்பார்வை தேவை போல் இத்தகைய அறிவியல் வீழ்ச்சி எழுச்சிகளுக்கும் ஒரு நிதான அணுகுமுறை தேவை உள்ளது. ஒரு அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை அதன் முடிவில் தேடுவது டாக்டர் ஜோக்காக மட்டும் முடிந்து விடும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
மருத்துவ துறையின் ராக்கெட் வேக வளர்ச்சி சந்தோசமானது... ஆனால் சாதாரண மனிதனுக்கு இன்றைய நவீன நுட்பங்களை பயன்படுத்த முடியாத அளவிற்க்கு அதன் விலையும்...
ReplyDeleteஅமெரிக்காவில் இந்த தொழிற்நுட்பங்களை கண்டுபிடிக்க அரசாங்கமும் அவர்களுக்கு இணையாக வியாபாரத்திற்காக நிறுவங்களும் ஆராய்ட்சியில்... மனிதனுக்கு பலன் தான் என்றாலும், ஒரு சாதாரண மனிதனையோ அல்லது இந்தியனையோ சென்றடைய அது பல வருடம் ஆகும் என்பது வருத்தமே....
பகிர்தலுக்கு நன்றி...