Sunday, 7 March 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 14
பவனி வீதியில் நீளிருக்கைகள், வெயிலில் துருபிடித்த வாதாம் மரங்கள், நான் வாசிக்கப் படித்த இயற்பாங்கு பள்ளிக்கூடத்து முற்றம். பிப்ரவரி மாத பிரகாசமான ஞாயிற்றுக்கிழமையின் போதான நகரின் மொத்த பிம்பமும் ஜன்னல்வழி ஒரு கணம் ஜொலித்தது.
"ரயில் நிலையம்!" அம்மா வியந்துரைத்தாள், "யாரும் ரயிலுக்காக காத்திருக்காத போது உலகம் எப்படி மாறி விடுகிறது"
இயக்குப்பொறி அப்போது விசிலடிப்பதை நிறுத்தி, வேகம் குறைத்து, நீண்ட ஒப்பாரியுடன் வந்து நின்றது. என்னை முதலில் வியப்பிலாழ்த்தியது அமைதிதான். உலகின் பிற அமைதிகள் இடையே நான் கண்களை மூடிக் கொண்டு அடையாளம் காணும்படியான லௌகீக அமைதி. வெப்பத்தின் எதிரலை பாய்வு மிகத் தீவிரமாய் இருந்தபடியால் மேடுபள்ளமான கண்ணாடி வழி அனைத்தையும் பார்ப்பதாய் தோன்றியது. அங்கு கண்ணுக்கெட்டியவரை மனித உயிருக்கான அடையாளமே இல்லை; சன்னமாய் தூவபட்ட எரியும் தூசால் மூடப்படாத எதுவுமே இல்லை. காலித்தெருக்களில் அமைந்த அந்த பிண நகரத்தை பார்த்துக் கொண்டு, அம்மா மேலும் சில நிமிடங்கள் இருக்கையிலே இருந்தாள். இறுதியில் பீதியில் கூவினாள்: "கடவுளே".
அதுதான் இறங்கும் முன் அவள் சொன்ன ஒரே விஷயம். ரயில் அங்கு நின்ற போது நாங்கள் ஒரேயடியாய் தனிமைப்பட இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் ரயில் இதயத்தை பிளக்கும்படியான விசில் சத்தத்துடன் திடீரென கிளம்பிய போது அம்மாவுடன் நானும் அந்த நரக வெயிலில் கைவிடப்பட்டேன்; அந்த நகரத்தின் ஆகமொத்த துக்கமும் எங்கள் மேல் கவிந்தது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. தகரக்கூரையும், நீடிக்கப்பட்ட மொட்டைமாடியும் கொண்ட அந்த பழைய மர ரயில் நிலையம் கவ்பாய் திரைப்படங்களில் நாங்கள் அறிந்தவற்றின் வெப்பமண்டல திரிபுவடிவாக தோன்றியது. புற்பதர்களின் அழுத்தத்தில் வெடிக்க ஆரம்பித்திருந்த தரை ஓடுகள் கொண்ட அந்த கைவிடப்பட்ட நிலையத்தை கடந்து போனோம்; வாதாம் மரங்களின் நிழலின் பாதுகாப்பை நாடியபோது மதியத்தூக்கத்தின் மந்தத்துக்குள் மூழ்கினோம். நான் சிறுவனாயிருக்கையில் இருந்தே, என்ன செய்வதென்றே அறியாமல் எதிர்செயலூக்கம் அற்ற, அந்த மதிய குட்டித்தூக்கங்கள் மீது அருவருப்பு கொண்டிருந்தேன். ”சத்தம் போடாதே தூங்குகிறோம்”, தூங்குபவர்கள் விழிக்காமலே முணுமுணுப்பார்கள். கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் 12 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் மூன்று மணிக்கு சற்று முந்தி தான் திறக்கும். வீடுகளின் உட்புறங்கள் சோம்பலின் முழுமறதி நிலையில் மிதந்தன. வெக்கை பொறுக்க முடியாமல் சில வீடுகளில் மக்கள் முற்றத்தில் ஊஞ்சற்படுக்கை தொங்க விட்டு தூங்குவர், அல்லது வாதாம் மரங்களின் நிழலில் நடுத்தெருவில் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து தூங்குவர். நிலையத்திற்கு எதிரிலுள்ள மதுக்கூடம் மற்றும் மேஜைக்கோலாட்ட அறை கொண்ட விடுதியும், தேவாலயத்திற்கு பின்னுள்ள தந்தி அலுவகமும் மட்டுமே திறந்திருந்தன. அனைத்தும் என் நினைவிலிருந்து அச்சடித்து எடுத்தது போல், ஆனால் மேலும் சின்னதாய், ஏழ்மையானதாய், மரணச்சூறாவளியில் நிலமட்டமாயிருந்தன: அழுகும் வீடுகள், துரும்பால் துளையிடப்பட்ட தகரக்கூரைகள், நொறுங்கும் கிரானைட் பெஞ்சுகள் மற்றும் துயரார்ந்த வாதாம் மரங்கள் கொண்ட ஆற்றின் அணைகரை ஆகிய அனைத்துமே கண்ணுக்கு புலனாகாத, தோலை வறளச் செய்து சூரணமாக்கி, எரியும் தூசால் உருமாறி இருந்தன.
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment