Monday, 29 March 2010

ஐ.பி.எல் தவிர்த்து ...



சினிமாவை மூச்சு விடும் தமிழகத்தில் 1% தவிர்த்து யாருக்கும் சினிமா தெரியாது. ஐ.பி.எல்லும் இப்படியாக ஒரு ஒழுகும் குடம் தான். காவியக் கிளர்ச்சியும் சோகமும் பின்னிப் பிணைந்த தருணங்கள் அதற்கில்லை. ஐ.பி.எல்லை விவாதிப்பதே தமாஷ்தான். இங்கு அறிவார்ந்த நிலைப்பாடுகள் எப்போதும் வழுக்கி விடும்.
உதாரணமாக ஒரு அணி நன்றாக ஆடி வந்தால் கோப்பையை அது அடிக்கப் போகிறது என்று மரபார்ந்த கிரிக்கெட் ஆட்டங்களில் கணிக்க முடியும். தென்னாப்பிரிக்காவை தவிர பெரும்பாலான அணிகளுக்கு முன்னே சென்றபடியே ரிவர்ஸ் கியர் போடும் வழக்கம் இல்லை என்பதால் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் முன்னேறுபவர்களை கணிப்பது எளிதாக் இருக்கும். விசுவாசமான பின்பற்றல்களை, செறிவான விவாதங்களை, உணர்வுபூர்வமான பிம்பங்களை ஏற்படுத்த இந்த சீரான போக்கு வசதியாக இருக்கும். ஆனால் ஐ.பி.எல்லில் ஒன்றரை மாதங்களுக்கு 60-க்கு மேற்பட்ட ஆட்டங்கள் பார்க்கிறோம். இத்தனை ஆட்டங்களிலும் ஒரு அணி தன் உச்ச-ஆட்டத்தை தக்க வைப்பது சாத்தியமே இல்லை. பெரும்பாலான வெற்றிகர அணிகள் ஒரு கட்டத்தில் துவண்டு எழுகின்றன. முதல் ஐ.பி.எல்லில் ராஜஸ்தான் ராயல்சுக்கும், இரண்டாவது ஐ.பி.எல்லில் டெக்கான் செலஞ்சர்சுக்கும் இதுவே நடந்தது. இரு ஆண்டுகளிலும் சென்னை, தில்லி மற்றும் மும்பை அணிகள் வழிதவறி காப்பாற்றப்படாத ஆடுகளாக இருந்தன. இந்த மீண்டு வரும் திறன் தான் வெற்றியாளரை தீர்மானிப்பது என்று சொல்லலாம். இதைத் தவிர தொடரைக் கைப்பற்றுவது ஆகச்சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தொடர்ச்சியான உழைப்பு, அர்ப்பணிப்பு, போராட்டம், நியாயம் போன்ற விழுமியங்களுக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை. மரபார்ந்த கிரிக்கெட்டில் சம்பிரதாய மீறல்கள் மெல்ல மெல்ல நுழைந்து தனியிடம் பெறும் என்றால், ஐ.பி.எல்லில் அவை அறிமுகமான வேகத்தில் மரபாகி விரைவில் பழசாகி கைவிடப்படும்.
உதாரணமாக முதல் ஐ.பி.எல்லில் வேகவீச்சாளர்கள் சற்றே சுழற்றி வீசிய ஆமை வேக பந்துகள் மற்றும் மெதுவான பவுன்சர்கள் மூன்றாவது ஐ.பி.எல்லில் மரபான பந்துகள் ஆகி விட்டன. வேகவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு நான்கு மிதப்பந்துகளும், இரண்டு பவுன்சர்களும் இப்போது வீசுகிறார்கள். ஏறத்தாழ வேகப்பந்து வீச்சே அரிதாகி விட்டது. அடுத்து முதல் ஐ.பி.எல்லில் போல் மட்டையாளர்கள் விலகி நின்று விளாசினால் இப்போது பந்தாளர்கள் அதைவிட விலகலாக பந்தை வீசுகிறார்கள். தொடர்ந்து யார்க்கர் நீளத்தில் அப்படி வீசுவது சம்பிரதாயமாகி விட்டது. வரும் ஐ.பி.எல்களில் மட்டையாளர்கள் மற்றும் வீச்சாளர்களுக்கு இவை மேலும் பழகி விட இந்த திட்டவிதிகளும் கைவிடப்பட்டு, புதியவை உள்ளே வரும். மரபான கிரிக்கெட்டில் இந்த மாற்றங்கள் வந்து போக குறைந்தது பத்து வருடங்களாவது ஆகும்.
இப்படி காலச்சக்கரம் ஐ.பி.எல்லில் சூறாவளியாக சுழல்வதால் நின்று நிதானிக்க அவகாசம் இருப்பதில்லை. இந்த பொருளில் ஐ.பி.எல்லை நம் சமகாலத்தின் குழந்தை எனலாம். நினைத்து ஏங்க காலமற்ற ஒரு தலைமுறையினருக்காக ஏற்பட்டது ஐ.பி.எல் கிரிக்கெட். ஒழுக்கம், உழைப்பு, நன்னடத்தை போன்ற ஆங்கிலேய மதிப்பீடுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டது மரபார்ந்த கிரிக்கெட். வாழ்வின் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத்தன்மையை அது பிரதிபலித்தது. ஏற்ற-இறக்கங்களின் நாடகீயம் கொண்டிருந்தது. அதற்கு லாரா, சச்சின், ஸ்டீவ் வாஹ், வார்னே போன்ற நாயகர்கள் உருவானார்கள். பத்தில் இருந்து இருபது வருடங்களுக்கு மேலாக அவர்கள் நிலைத்தார்கள். இவ்வாறாக மரபார்ந்த ஆட்டத்துக்கு நமது கற்பனையில் ஒரு பரந்த வெளியும், பாத்திரங்களும், நீண்ட மரபை பெருமளவு மீறாத கதையாடலும், குறிப்பாக மாற்றத்தை ஜீரணிக்கும் காலமும் இருந்தன. ஒவ்வொரு ரசிகனும் தேனீ போல் கிரிக்கெட்டை தன்னுள் செரித்து உருவாக்கி அதன் கதையாடலோடு பகுதியானான். ஆனால் ஐ.பி.எல்லுக்கு இப்படியான ஜம்பங்கள் இல்லை. அதன் உத்தேசம் கிரிக்கெட் பரிச்சயம் இல்லாத வர்க்கம் தான். நித்தியானந்தா ஆசிரமம் போல் சினிமா நட்சத்திரங்களுக்கு தாராள வரவேற்பு. நல்ல உணவு, இசை, சியர் லீடர்ஸ், நுகர்வுக் கலாச்சாரம், உயர்சமூக அந்தஸ்து அடையாளம், எளிமையான பொழுதுபோக்கு பயணம் ஆகியவற்றின் கோவை தான் ஐ.பி.எல். தற்போது பங்களூர் சின்னஸ்வாமி அரங்கத்தில் உயர்தர பார் வேறு திறந்திருக்கிறார்கள். எதிர்நாவல் என்பது போல் ஐ.பி.எல்லை பின்-நவீனத்துவ எதிர்கிரிக்கெட் எனலாம். செவ்வியல் பார்வையாளர்கள் ”ஐ.பி.எல் வந்த பிறகு கிரிக்கெட்டே பிடிக்கலைங்க” என்று அடிக்கடி புலம்புகிறார்கள்.



மேலும் எளிமைப்படுத்த, மரபார்ந்த கிரிக்கெட்டை ஜெயமோகனின் இணையதளத்துடனும், ஐ.பி.எல்லை charuonline-உடனும் ஒப்பிடலாம். சாரு தன் வாசகர்களின் மேதாவித்தனத்தை மெச்சுவதில்லை என்பதை கவனியுங்கள்; அவர் ரசிக மனநிலையையே கொண்டாடுகிறார். அவர் ஜெ.மோவைப் போல் மதிப்பீடுகளை கோருவதில்லை. கொண்டாட்டக்காரார் அவர். சாரு சமகால இலக்கியத்தின் சேவாக். சரி, இன்றைய இலக்கிய உலகின் லலித் மோடி யார்? பதில் சரியாக சொல்பவர்களுக்கு அவரது புகைப்படம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

உதிரிகளின் கிரிக்கெட்
1. யூசுப் பதான் மும்பை அணிக்காக முப்பத்து சொச்சம் பந்துகளில் விளாசிய நூறை வார்னே தான் பார்த்ததிலே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றார். இதனால் கடுப்பான மேற்கத்திய மரபான விமர்சகர்கள் வார்னே மோடியின் கைப்பாவை ஆகி விட்டார் என்று சாணி அடித்தனர். அடுத்து வந்த ஆட்டத்தில் பங்களூர் அணி வேக வீச்சாளர்கள் ராஜஸ்தானின் யூசுப், டோக்ரா உள்ளிட்ட முன்கால் ஆட்ட நிபுணர்களை தமது பவுன்சர்களால் துள்ள விட்டார்கள். வார்னேயால் மிகச்சிறந்த மட்டையாளர் என்று மெச்சப்பட்ட யூசுப்புக்கு அன்று தோள்பட்டை, தலைகவசம் என்று தாறுமாறாக அடி. பின்கால் ஆட்டம் மறந்தது போல் அவர் விறைத்து நின்றார். இவ்வளவு வெட்டவெளிச்சத்தில் ஒரு கிரிக்கெட்டருக்கு பட்டாபிசேகமும், கசையடியும் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டது என்றால் அது ஐ.பி.எல்லில் தான் சாத்தியம். அந்த ஆட்ட அவமானத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள யூசுப்புக்கு சில ஆட்டங்கள் பிடித்தன.

இதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு பவுன்சர்கள் என்றால் கிலி என்றொரு வழக்கமான சர்ச்சை கிளப்பினார்கள். இந்த சுயநிந்தனை ஒரு பின்–காலனிய மனநிலை தான். கறுப்பர்களுக்கு வேகவீச்சு ஆட வராதென்றால் வெள்ளைத் தோலர்களுக்கு சுழலர்களை அடிக்கத் தெரியாது. ஆனால் உலகம் முழுக்க வேகவீச்சுக்கு ஆதரவாக பிறழ்வான ஒரு அபிப்ராயம் நிலவுகிறது. ரிக்கி, ஸ்டீவ் வாஹ், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்களுக்கு சுழல் ஒரு பலவீனமாக இருந்தாலும் அது வசதியாக மறக்கப்பட்டது. இந்திய, இலங்கை மற்றும் பாக்கிஸ்தானின் சிறந்த மட்டையாளர்களுக்கு வேகவீச்சு சற்றே ஒவ்வாமை என்பதால் சர்வதேச அங்கீகாரம் மறுக்கப்பட்டது. இங்கே இரண்டு முரண்கள் கவனிக்கப்படவில்லை. பவுன்சர், யார்க்கர் ஆகிய வேகப்பந்து உதார்களை சிலாகிக்கும் வேளையில், இதுவரையிலான மூன்று ஐ.பி.எல்களிலும் குறைந்த ஓட்டங்களுக்கு அதிக விக்கெட் வீழ்த்தி உள்ளவர்கள் சுழலர்கள் என்பதை மறந்து விடுகிறோம். இதன் பொருள் மட்டையாளர்கள் நிஜத்தில் ஸ்பின்னுக்கு எதிராகத் தான் திணறி உள்ளார்கள் என்பது. அடுத்து, இந்த அம்சத்தை அணித்தலைவர்கள் சரியாக பயன்படுத்த இல்லை என்பது வியப்பே. ஏனென்றால் சென்னை மட்டும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட முழு நேர சுழலர்களுடன் ஆடுகிறது.

2. ஸ்ரீசாந்த் சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்து தோற்கடிக்கக் கூடியவர் ஆகையால் சென்னைக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி அவரை சேர்த்துக் கொள்ள இல்லை. எல்லைக் கோடு பக்கமாய் நடைபழகிக் கொண்டிருந்தவரை பேட்டி கண்டனர்.
மைக்காளர்: “பஞ்சாப் அணி ஏன் இப்படி தோல்வி மீது தோல்வியாக சந்திக்கிறது. ஜெயிக்க என்னதான் செய்ய வேண்டும்?”
ஸ்ரீசாந்த் (படக்கருவி வெளிச்சத்தில் தனது அப்போதைய பரிதாப நிலையை மறந்து விடுகிறார்): “பிரட் லீ குணமாகி வரட்டும். நானும் அவரும் இணைந்து பந்து வீசினால் எல்லாம் சரி ஆகி விடும்”
மைக்காளர்: “புதிதாக ஐ.பி.எல்லில் இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் உங்கள் ஊரான கொச்சியும் உள்ளதே”
ஸ்ரீசாந்த (மேலும் மேலும் உற்சாகமாகி): ஆமாம் ஆமாம் ரொம்ப சந்தோஷம். நான் கொச்சி அணிக்கு ஆட விரும்புகிறேன்”.

3. ஸ்ரீசாந்த் பேசினது காலச்சுவடு கண்ணனுக்கு அறவே பிடிக்காது என்றாலும் முன்னவர் கொச்சி அணிக்கு தலைவரானால் ஐ.பி.எல் மேலும் களை கட்டும் என்பது மட்டும் உறுதி.
4. ஹர்ஷா போக்ளே, சிவராமகிருஷ்ணன், ரவி சாஸ்திரி, டேனி மோரிசன் ஆகியோரின் அங்கதம், அசட்டுத்தனங்கள், பழங்கதை மெல்லல், செறிவான பிரயோகங்கள் கூடிய ஐ.பி.எல் வர்ணனை டி.வி பார்வையாளர்களுக்கு நல்ல இளைப்பாறல். ஆட்டத்தை விட இவர்களின் வர்ணனை பல சமயங்களில் அதிக சுவாரஸ்யமாக உள்ளது. 25-ஆம் தேதி நடந்த ராஜஸ்தான் – பஞ்சாப் ஆட்டத்தில் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் சகோதரர்கள் எதிர்அணிகளில் ஆடினார்கள். ராஜஸ்தான் மட்டையாடிய போது யூசுப்பின் விண்ணுயரக் கேட்சை இர்பான் தவற விட்டார். அப்போது ரவி சாஸ்திரி உதிர்த்த மணிவாசகம்: “காட்ச் தவற விடப்பட்டது ... ஒரு பதான் பிழைத்தார்”.
5. இப்படி ஐ.பி.எல் பற்றி படித்து படித்தே வெறுப்பானவர்கள் 56588 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் சியல்லீடர்ஸ் பெண்மணிகளுடன் கிரிக்கெட் குறித்து அளவளாவலாம்.
கிரிக்கெட்டை தவிர்க்கிற புள்ளியில் இருந்து அசல் ஐ.பி.எல் ஆரம்பிக்கிறது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates