மனுஷ்யபுத்திரன் மீது ஒரு பதிப்பாளராக, ஆசிரியராக கறுப்புக் கொடி காட்ட, வெளிநடப்பு செய்ய அடுக்க ஒரு எதிர்க்கட்சியே இயங்குகிறது. கடைசியாக சொன்னது அலங்காரத்துக்கு அல்ல. சாரு புத்தகம் கிழித்த போது நிஜமாகவே சில எழுத்தாளர்கள் வெளிநடப்பு செய்ததாக எனக்கு உள்வட்டாரத் தகவல் வந்தது. என்ன, வெளிநடப்பு தான் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அவர் அரசியல் ஆதாயத்துக்காக சில நூல்கள் வெளியிடுவதான புகார் அகநாழிகை பேட்டியில் எழுப்பப்பட்டுள்ளது. அதை ம.பு மறுத்துள்ளார். நட்சத்திரங்களையும், பிரமுகர்களையும் முன்னிறுத்துவதாக பிரபலமாக முணுமுணுக்கப்படுகிறது. அட, என் நண்பர்களுக்காகத் தானே உயிர்மை நடத்துகிறேன் என்று பதில் தருகிறார். ஆனால் இத்தனை சுவாரஸ்யங்களையும் தாண்டி சில முக்கியமான சின்ன சேதிகள் கிரிக்கெட்டில் byes போல கவனிக்கப்படாமல் போகின்றன.
முதலில் அவர் படைப்புத் தளத்தில் ஜீவாத்மாக்களுக்கு மரியாதை தருகிறார். அதற்கு அவரது ஈகோ குறுக்கே நிற்பதில்லை. தன் படிநிலையில் அவர்களுக்கான இடம் என்ன என்பதையும் வெளிப்படையாக வைத்துள்ளார். இது முக்கியமானது. முகுந்த் நாகராஜன், கருணாகரமூர்த்தி உள்ளிட்டோரின் படைப்புத் திறனை ஆரம்பத்தில் கவனிக்கவில்லையே என்ற குற்றவுணர்வு இப்போதும் அவருக்கு உள்ளது. இந்த தார்மீக உணர்வு இன்று மிகச்சிலருக்கே உள்ளது. கவிதை பிரசுரத்தில் லாப நோக்கின்றி அவர் காட்டும் ஈடுபாடு குறித்து இன்றிரவு நிலவின் கீழ் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இதோ மற்றொரு உதாரணம்.
என் நண்பரும் முக்கிய தலித் கவிஞருமான நட.சிவகுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருபவர். உவர்மண் தொகுப்பால் பெரும் கவனத்துக்கு ஆளானவர். ஆனால் அவருக்கு விமர்சகர்கள் போதுமான வெளிச்சம் இன்னும் அளிக்கவில்லை. இதற்கு அரசியல் ஒரு முக்கிய காரணம். சிவகுமார் தனது இதுவரையிலான கவிதைகளை மொத்தமாய் தொகுத்து வெளியிட விரும்பினார். அவர் அணுகிய பதிப்பாளர்கள் ’கிலோவுக்கு எத்தனை பேரீச்சம் பழம் வேணும்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள். உயிர்மை தனக்கு சரியான படைப்பு வெளியை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்று நம்பினார் சிவகுமார். என்னிடம் ம.பு வின் எண்ணை வாங்கினார். இரண்டு வாரங்கள் பேசத் தயங்கி இருக்கிறார். முடியாது என்று விட்டால் அவமானமாகி போகுமே என்ற அச்சம். இத்தனை வருடங்களாய் தமிழ்ச்சூழலில் இயங்கியதால் ஒரு மூத்த எழுத்தாளனுக்குள் சேகரமாகிய அச்சம். பிறகு போனால் போகட்டும் என்று பேசியிருக்கிறார். அவர் சற்றும் எதிர்பாராதபடி அன்புடனும் மரியாதையுடனும் பேசியிருக்கிறார் ம.பு. பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட சிவகுமார் இப்படி சொன்னார்:
“மனுஷ்யபுத்திரன் ஒரு வணிகராக என்னை நோக்கவில்லை. ஒரு படைப்பாளியாக என்னிடம் அவர் பேசினார்!”
படைப்பு அரசியலின் அச்சுபிச்சு கருத்து நெரிசலில் சிவப்பு விளக்கு மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?
No comments :
Post a Comment