Tuesday, 16 March 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 15
ரயில் தண்டவாளங்களின் மறுபுறம் வாழைப்பழ நிறுவனத்தின் தனிப்பட்ட சொர்க்கபூமி, மின்கம்பி வேலி நீக்கப்பட்டு, பனைமரங்கள் ஏதுமின்றி, போப்பிச்செடிகள் மத்தியில் பாழடைந்த வீடுகள் மற்றும் தீயில் அழிந்த மருத்துவமனையின் கற்கூளத்துடன் புதர்காடாக இருந்தது. ஒரு கதவோ, சுவற்றில் சிறுவிரிசலோ அல்லது மானிட அடையாளமோ என்னில் ஆழ்மன நினைவெழுச்சியை ஏற்படுத்தவில்லை.
வளைவில் சென்று நாங்கள் திரும்பிய போது என் செருப்பின் வலைப்பின்னல் வழி தூசு மீது காலடிகள் எரிந்தன. கைவிடப்பட்ட உணர்வு தாங்கவொண்ணாததாக இருந்தது. நான் சிறுவனாயிருக்கையில், வீட்டை உடைத்து புக முயன்று மரியா கன்சியுகாராவின் ஒரு குண்டில் பலியான திருடனின் அம்மா மற்றும் சகோதரியை ஒரு வாரத்திற்கு பின் கண்ணுற்றது போலவே என்னையும் அம்மாவையும் இப்போது பார்த்தேன்.
அதிகாலை 3 மணிக்கு தெருவை நோக்கியிருக்கும் வீட்டுக்கதவை வெளியிலிருந்து யாரோ தள்ளி உடைக்க முயலும் ஓசை கேட்டு அவள் விழித்து விட்டிருந்தாள். விளக்கை ஏற்றாமலே எழுந்தவள் தட்டித் தடவி ஆயுதப் பெட்டியிலிருந்து ஆயிரம் நாட்கள் போருக்கு பின் யாரும் சுட்டிராத அரதப்பழசான கைத்துப்பாக்கியை எடுத்து, இருட்டில் கதவிருந்த இடத்தை மட்டுமல்ல பூட்டியிருந்த சரியான உயரத்தையும் கணித்தாள். பிறகு ஆயுதத்தை இருகைகளாலும் ஏந்தி குறிபார்த்தாள், கண்களை மூடினாள். அதற்கு முன் அவள் எந்த துப்பாக்கியையும் சுட்டதில்லை; ஆனால் குண்டு கதவைத் துளைத்து சென்று இலக்கை தாக்கியது.
நான் கண்ட முதல் உயிரற்ற மனிதன் அவன்தான். காலை ஏழு மணிக்கு பள்ளிகூடம் போகும் வழியில் நடைபாதையில் காய்ந்த குருதி வட்டத்தில் உடல் அப்போதும் கிடந்தது; ஈயக்குண்டு மூக்கை சிதறடித்து காது வழி வெளிப்பாய்ந்து முகத்தை சிதைத்திருந்தது. வண்ணக் கோடுகளிட்ட மீனவரின் டீஷர்ட்டும், பெல்டுக்கு பதில் கயிறால் கட்டப்பட்ட சாதாரண நீள்கால்சராயும் அணிந்திருந்தான்; அவன் வெற்றுக்கால்களுடன் கிடந்தான். அவனருகே தரையில் அவன் பூட்டை நிமிண்ட பயன்படுத்திய வீட்டில் செய்யப்பட்ட கருவியை கண்டனர்.
திருடனை கொன்றதற்கு இரங்கல் தெரிவிக்க நகரபிரமுகர்கள் வந்தனர். நான் அவ்விரவு பாப்பலேலோவுடன் சென்றிருந்தேன். மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மூங்கிலால் பின்னப்பட்ட மயில்போல் தோற்றமளிக்கும் கைப்பிடி நாற்காலியில் அவள் அமர்ந்திருந்தாள்; ஆயிரம் தடவை அவளது கதையை திரும்ப திரும்ப கேட்ட நண்பர்களின் தீவிர ஆர்வத்தால் சூழப்பட்டு, அவள் தனது குலை நடுக்கத்தால் மட்டுமே சுட்டாள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அப்போதுதான், சுட்ட பின் அவள் ஏதேனும் கேட்க நேர்ந்ததா என்று என் தாத்தா கேட்டார்; அவள் சொன்னாள்: முதலில் மாபெரும் நிசப்தம் நிலவியது, பிறகு பூட்டுத்திறப்பு கருவி சிமிண்டு தரையில் விழும் உலோக ஒலி, கடைசியாக ஒரு அமுங்கலான வேதனைக் குரல், “அம்மா, என்னை காப்பாற்று”. மரியா கன்சுகிராவின் பிரக்ஞையில் இந்த நெஞ்சை உருக்கும் கதறல் என் தாத்தா அக்கேள்வியை கேட்கும் வரை எழவில்லையோ என்று தோன்றியது. அப்போதுதான் அவள் கண்ணீர் சிதற கதறியது.
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment