Tuesday, 2 March 2010
உலகக்கோப்பை ஊகங்களும் எதார்த்தமும்
பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தெற்காசியாவில் நடக்கப் போகும் பத்தாவது கிரிக்கெட் உலகக் கோப்பை சுழல் பந்தாளர்களும், அதிரடி துவக்கக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தின நினைவுகளை கிளர்த்தலாம். ஆசிய அணிகளுக்கு அதிக அனுகூலங்கள் இருக்கும் என்று விமர்சகர்கள் இப்போதே புகை கக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்று முன்னாள் தெ.ஆ மட்டையாளர் கலினன் கருதுகிறார். தலைகீழ் எழுதப்பட்ட புதிர்ப்போட்டி விடைகளுக்கான மதிப்பே இத்தகைய ஊகங்களுக்கும் உண்டு. இம்முறை உலகக் கோப்பைப் போட்டிகள் தேற்காசிய சாயல் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது 96-இன் அதே வித நெருக்கடிகளும் தாளலயங்களும் கொண்டிருக்காது. மிக எளிய காரணம் பருவச்சூழல்.
சூழல் கிரிக்கெட்டின் ஆட்டப்பரப்பை கடுமையாக பாதிக்கும் ஒரு அம்சம். ஒவ்வொரு நாடு மட்டுமல்ல மாநிலத்துக்குமான கிரிக்கெட் கலாச்சாரத்தைக் கூட இது திண்ணமாக பாதிக்கிறது. உதாரணமாக, இலங்கையின் ஆடுதளங்கள் மெத்தனமானவை. இந்திய ஆடுதளங்களில் பந்து சுலபமாக மட்டைக்கு வருவதால் இங்கு பந்தின் திசையை மட்டும் கணித்து சற்று தூக்கலாக துரத்த முடியும். ஆனால் இலங்கையில் பந்து மெதுவாகவே வரும் என்பதால் அங்கு உருவாகி வரும் ஆட்டக்காரர்கள் பொறுமையாக, கடுமையான உழைத்து ஓட்டங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த சூழலில் விளைந்த இலங்கையின் பிரதானமான மட்டையாளர்களான ஜெயவர்தனே, சங்கக்காரா போன்றவர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து தடுப்பாட்டம் ஆடும் மனப்பான்மை கொண்டவர்கள். நியுசீலாந்தின் ஆடுதளங்கள் மிக அதிகமாக மிதவேகப்பந்து வீச்சுக்கு உதவியதால் அது அவர்களின் மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சை எதிர்மறையாக பாதித்தன. திறமை குறைந்த மிதவேகப்பந்தாளர்கள் விக்கெட்டுகளை மாங்காய் அடி அடிக்க, அசலான வேக வீச்சாளர்களுக்கு அவசியமின்றி போனது. நியுசிலாந்தில் 120 கி.மீ-க்குள் வீசி அபரிதமான அசைவை பெற முடிகிறவர்கள் மலிவான விக்கெட்டுகளை நிறைய வீழ்த்தினர். சரளமாக அடிப்பதே ஆபத்தாக இருந்தமையால் மட்டையாளர்களின் முதலும் முடிவுமான நோக்கம் காப்பாட்டமே. இயல்பான அடித்தாடும் திறமை கொண்ட மட்டையாளர்கள் மிக சமீபத்தில் ராஸ் டெய்லர் தோன்றும் வரை நியுசிலாந்து அணியில் இருந்ததில்லை. ஹாட்லி மற்றும் பாண்ட் போன்ற இரண்டு வேக வீச்சாளர்களை மட்டுமே நெடுங்கால வரலாற்றில் நியுசிலாந்தால் உருவாக்க முடிந்தது. T20 உலக அளவில் பரவலாகும் முன்னரே அது பாகிஸ்தானில் இளம் வயது கிரிக்கெட்டர்கள் இடையே அதிக அளவில் ஆடப்பட்டு வந்தது. இதனால் பாக் பந்து வீச்சாளர்கள் T20-இல் மிக வெற்றிகரமாக இயங்குகின்றனர். ஆனால் அடித்தாட மட்டும் பழகும் மட்டையாளர்களின் தடுப்பாட்ட தொழில்நுட்பம் பலவீனமாக மாறிவிட்டது. இது பாக்கின் டெஸ்ட் தோல்விகளுக்கு முக்கிய காரணம். ஒரு அணியின் கிரிக்கெட்டின் தரத்துக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமே காரணம் அல்ல.
பருவச்சூழல் ஆடுதளங்களின் தயாரிப்பை பெருமளவில் பாதிக்கும். இது மிகவும் சிக்கலானது. உதாரணமாக போதுமான வெயில் இல்லாவிட்டால் தளம் மந்தமாகி விடும். அது போல் வறட்சியான தளம் அதிகம் உருட்டப்பட்டு வெடித்து இளகினால் ஆரம்ப ஓவர்களிலேயே பந்து கடுமையாக சுழலும். இதற்கு பயந்து தயாரிப்பாளர் புற்களை நன்றாக வளர விட்டு ஆட்டத்திற்கு முன் குறைவாக மழிக்கலாம். இது அதிகமாக வேக வீச்சுக்கு உதவும். முழுக்க மழிக்கப்பட்ட தளம் மட்டையாட்டத்துக்கு அதிகப்படியாக உதவலாம். தவறான புல் அல்லது மண் வகை பயன்படுத்தப்பட்ட தளத்தில் சமீபமாக தில்லியில் நடந்தது போல் பந்தின் உயரம் சமச்சீரற்று இருக்கும். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஆட்டங்களில் இத்தனை ஆடுதள குழப்பங்கள் நிச்சயம் ஒரு பெரும் பங்கை வகிக்கின்றன. ஆட்ட முடிவுகள் பார்த்து நமது உள்ளூர் வீரர்களின் திறனை சரியாக கணிக்க முடியாதது இதனாலே. ஒரு உதாரணம் தருகிறேன்.
கடந்த ரஞ்சி தொடரில் சுழல் தளங்களில் மும்பையின் ரமேஷ் பொவார், தில்லியின் சேதன்யா மிதுன் மற்றும் தமிழகத்தின் அஷ்வின் ஆகிய சுழலர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆனால் இம்முறை ரஞ்சி தொடரில் ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கும், வேகவீச்சுக்கும் சாதகமாக இருந்ததால் பொவார், அஷ்வின் உள்ளிட்ட சுழலர்கள் மட்டையாட்டத்தில் கவனம் செலுத்தி தங்கள் அணியின் முழுநேர மட்டையாளர்களை விட சமயோசிதமாகவும், சிறப்பாகவும் ஆடி நிறைய ஓட்டங்கள் சேர்த்தனர். மிகக் குறைவாகவே விக்கெட்டுகள் வீழ்த்தினர். அணித்தலைமைகளும் இதனை ஊக்குவித்தன. உதாரணமாக மும்பை அணி தொடர்ச்சியாக 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டருடன் களமிறங்கியது. கீப்பரை தவிர்த்து மும்பை நான்கு மட்டையாளர்களை மட்டும் பயன்படுத்தியது. ஆனால் இந்த நால்வரை விட பந்து வீச்சாளர்களே அதிக நூறுகள் மற்றும் அரை நூறுகள் அடித்து ஓட்டம் குவித்தனர். இதன் பொருள் இந்திய உள்ளூர் பந்து வீச்சின் நிலை ஒரே வருடத்தில் சரிந்து விட்டது என்று அல்ல. சூழமைவின் பாதிப்புக்கான உதாரணம் மட்டுமே இது. இதை விட ஒரு எளிய உதாரணம் உள்ளது. தெரு கிரிக்கெட்.
குறுகலான தெருக்களில் ஆடுபவர்கள் சில விதிமுறைகள் வைத்திருப்பர். ஒரு குறிப்பிட்ட திசையில் பந்தை அடித்தால் ஓட்டம் இல்லை அல்லது வெளியேற்றம் என்று இருக்கலாம். கால்பக்கம் போதுமான இடவசதி இல்லாத தெருவில் வளர்ந்த மட்டையாளர்களுக்கு கால்பக்க ஓட்டங்கள் எடுக்கவே தெரியாது இருப்பதை கவனித்திருக்கிறேன். அதே போல் வசதியின்மையால் தனது புழக்கடையில் துணிப்பந்தை கடுமையாக அடித்து ஆடி பழகிய இளம் ரமேஷ் பொவார் வளர்ந்து மும்பைக்காக ஆட ஆரம்பித்ததும் கடுமையாக பந்தை விளாசக் கூடிய ஆவேச ஆட்டக்காரர் ஆனார்.
2011 உலகக்கோப்பை இந்தியாவில் குளிர்காலத்தில் நடைபெற உள்ளது. இரவு-பகல் ஆட்டங்கள் என்றால் இந்த பருவ நிலை அணிகளின் திட்டமிடல் மற்றும் ஆடுமுறையை பெரிதும் பாதிக்க உள்ளது. சமீபமாக இந்தியாவில் நடந்த இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தெ.ஆ ஒருநாள் தொடர்களில் சுழலர்கள் சோபிக்கவில்லை. இதற்கு ஓரளவு ஆடுதளமும், அதைவிட முக்கியமாய் பனி கொட்டும் சூழலும் காரணமாக இருந்தன. இப்போது ஆட்டங்கள் தொலைக்காட்சி ஆர்வலர்களை உத்தேசித்து இரவுபகலாகவே நடத்தப்படுகின்றன. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் இரவு ஆறுமணிக்கு மேல் பெய்யும் பனி ஆட்டத்தின் போக்கை திசை திருப்பி விடுகிறது. மாலையில் பந்து வீசினால் பந்து சுழலாது. கையிலிருந்து எளிதில் வழுக்கும். ஆடுதளம் வேகமாகி சுழலை எதிர்கொள்வது எளிதாகும். பனியற்ற கோடையில் முதலில் மட்டையாடுவது உசிதம் என்றால் குளிர்காலத்தில் நிலைமை நேர்மாறானது. நவம்பர்-மார்ச் ஆட்டங்களில் அணித்தலைவர்கள் காசை சுண்டிப் பார்த்து மட்டையா பந்தா என பெருங்குழப்பம் அடைகின்றனர். காரணம் விழப்போகும் பனியின் அளவை கணிக்க முடியாது என்பதே.
இந்த சிக்கலை நேரிட அணிகள் இப்போதே திட்டமிட்டு தயாராக வேண்டும். இந்தியா தயாராகி வருகிறது. அதாவது மட்டையாட்டத்தை பெருமளவு நம்பி ஆடப்போகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் சம்பிரதாய ஆயுதமான சுழல் வீச்சு வரப்போகும் குளிர்கால உலகக்கோப்பையில் மூலையில் துருவேறப் போகிறது. உதாரணமாக தெ.ஆ ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இரு திறமையான சுழலர்கள் இருந்தும் தோனி பகுதி நேர சுழலர்களை மட்டுமே பயன்படுத்தினார். இரவில் பெய்யும் பனியினால் அஷ்வின், மிஷ்ரா போன்ற சுழலர்கள் சட்டென காலாவதி ஆகி விட்டார்கள். இந்த நிலைமை இலங்கை அணிக்கும் நேர்ந்துள்ளது. இதன் பொருள் உலகக்கோப்பையில் ஆடப்போகும் ஒவ்வொரு அணியும் முதல் ஆட்டத்தில் 350-க்கு மேல் ஓட்டம் குவிக்கும் கட்டாயத்தில் இருக்கும். அப்படி குவிக்கும் பட்சத்திலும் காப்பாற்ற முடியுமா என்ற பதற்றம் வயிற்றுக்குள் துடித்தபடி இருக்கும். இந்த 350-400 பதற்றத்தால் மட்டையாடும் அணி 250-இல் ஆட்டமிழக்கவும் நேரிடலாம்.
இந்தியாவுடன் நடந்த ஒரு நாள் தொடர்களில் ஆஸ்திரேலியா வென்றது; இலங்கை சரிக்கு சமம் போட்டியிட்டு தோற்றது. இந்த இரண்டு எதிரணிகளின் வெற்றிக்கு அவை மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் பெற்ற சிறந்த துவக்கங்கள் முக்கிய காரணம். தெ.ஆ அணியினால் இத்தகைய துவக்கங்களை பெற முடியாததனால் அது தற்போதைய தொடரை இழந்துள்ளது. இந்தியா மற்றும் வங்க தேசத்தில் நிகழ உள்ள உலகக்கோப்பை ஆட்டங்களில் துவக்க வீரர்கள் தாம் நட்சத்திரங்களாக இருப்பார்கள். இலங்கையில் நடக்கும் ஆட்டங்களில் மாறாக சுழலர்கள் மற்றும் மத்திய வரிசை மட்டையாளர்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள்.
அடுத்த உலகக்கோப்பையில் மட்டையாட்டம், பந்துவீச்சு, வியூகம், சுண்டப்படும் நாணயம் ஆகியவற்றை கவிழ்க்கும் படியாக பருவதேவதையின் புன்னகை இருக்கும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
அருமையான அலசல் அபிலாஷ்! வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ரெட்டைவால்ஸ்
ReplyDelete