கனவுகள் என்னை
கடித்து பிராண்டியும் விளையாடியும் தொந்தரவு செய்கின்றன
துரத்துகின்றன.
வால் துடிக்க
சில பொழுது
கருமணி விழிகளால்
நான் பேச ஆரம்பிக்கையில் கனவுகள்
பிரக்ஞையின் குறிப்புகளை ஒரு நீள் கோடாய் இழுத்து சுற்றுகின்றன
பின்னர் அவை ஒரு தொடர் இசையாகின்றன
நான் பேச்சை நிறுத்துகையில்
கனவுகள் ஒரே வரியில் தொக்கின இசையின் மொழியில்
என்னை கேலி செய்கின்றன
இரக்கத்தால் அல்ல
அவை இறுதியில் விடைபெறுவது
எதேச்சையாய்
திருகி விட்ட பொம்மையை மறந்து போன குழந்தையை போல் அது நடக்கிறது
நான் யோசிக்கிறேன்
கனவுகள் ஒன்றா பலவையா என்று
எனக்கு வேண்டியது
கனவுகளற்ற ஒரு வெண் தூக்கமோ
ஆழ்மனதில் அலெயெழுப்பாமல் மிதந்து விழிப்பதோ
கண்டடைதலின் உற்சாகத்தில் கண் திறப்பதோ
மறதியை
வெகுநாள் பழகிய ஒரு இசைக்கருவியென
சுருதி சேர்ப்பதோ அல்ல.
துவங்கி முடிவதாக
மைய பகுதி அற்றதாக
ஒரு கனவு.
திரும்பிச் செல்ல வேண்டியிராததாக
அது இருக்கட்டும்.
நிஜத்தில், தொந்தரவு செய்பவை
மிகையான பிம்பங்களோ
விசித்திரமான எண்ண வெடிப்புகளோ
அல்ல -
நமதல்லாத
வீடோ உணவோ தேவையிராத
ஒரு மிருகம்
அவசர சந்தடிப் பாதையில்
நம்மை வழிமறிப்பது தான்.
என்னவென்ற சொல்ல முடியாவண்ணம்
அது சிதைவுற்று உள்ளது என்பதும்
இன்னும் வாழ்கிறது, சாவே இல்லை என்பதும் தான்
நமக்கு ஓர் கனவு வேண்டும்
அது இப்படியாக இருக்கக் கூடாது.
No comments :
Post a Comment