காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
அவை கடிப்பதே இல்லை
அல்லது தெரியாதபடி மிருதுவாக கடிக்கும்
பரிணாமத்துக்கும் அழிவுக்கும்
நடுவிலான
இக்கொசுக்கள்
அடிக்கப் போகும் நம் கையின்
நிழலை
காண்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகின்றன
நீங்கள் வேகமாகவோ மெல்லவோ அசைந்தபடியோ
அடிக்கலாம்
திட்டமிடலும் சூழ்ச்சியும் வஞ்சகமும்
அவை முன் தோற்கின்றன
அடித்த உடன்
அவை ரத்தம் சிந்துவதில்லை
கொசுவின் ரத்தம் எவர் ரத்தம்?
ரத்தம் தெறிக்கும் போது
நாம் இதை கேட்பதில்லை
நம்மிடம் இருந்து
மிக காருண்யமான ஒரு அடியையே
அவை வேண்டுகின்றன
அதனால்
ஒரு செல்லப்பிராணியை போல்
நாம் அதை அன்பாக தட்டுகிறோம்
அடிபட்ட பின்
அவை சிதைவது இல்லை
உருண்டோடி பக்கத்தில்
எங்காவது விழுந்து
காணாமல் போகின்றன
சிறிது நேரம் தேடி விட்டு ஓய்கிறோம்
வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் எதையும்
உறுதி செய்யாமல் உயிர் பிரியும் அவை
ஒரு வேளை நம்
முழங்கையில் இருந்த போதே
இறந்து விட்டிருந்தனவா
என்று நினைக்கும் போது
நமக்கு லஜ்ஜை ஏற்படுகிறது
காலை வெளிச்சத்தை அருந்தியபடி இருக்கும்
கொசுக்கள்
உறுதியின்மையால்
நம்மை வியப்பூட்டுகின்றன
மரணத்தின் விரலை
அவை
மிருதுவாக பற்றி இருக்கின்றன
எதையும் எதிர்பார்த்து இருக்கும் போது
எதுவும் நிகழ்வதில்லை
என் நாளை ஆரம்பிக்கும் பரபரப்பு
தொற்றும் முன்
இதோ அடுத்த கொசு
கட்டை விரலில் அமர்ந்து
மெல்ல தியானிக்கிறது
அருமையாக வந்து இருக்கிறது.
ReplyDeleteஅபி..நீங்க நல்லா குணமாகிட்டிங்க தானே இப்போ?? உடம்பை நல்லா பார்த்துக்கோங்க..
ReplyDeleteநன்றி சித்ரா
ReplyDeleteகுணமாகி விட்டேன் ஆனந்தி. பழைய உடல் நலத்தை சிறுக சிறுக மீட்டு வருகிறேன்.
ReplyDelete