என் மேஜையில் இருக்கும் இந்த புத்தனை நான் கழுவியாக வேண்டும் ---
அவன் மீது முழுக்க தூசும் எண்ணெய் பசையும்
அதிகமும் அவனது நெஞ்சு மற்றும் வயிற்றில்; ஆஹ்
எத்தனையோ நெடிய இரவுகளை ஒன்றாய் பொறுத்திருக்கிறோம்;
சப்பையானவையையும் பயங்கரமானவையையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம்
பண்பற்ற காலங்களில்
சிரித்திருக்கிறோம் – இப்போது
குறைந்தது நான் அவனுக்கு செய்ய வேண்டியது
சில நீண்ட இரவுகள்
நிஜமாகவே கொடூரமாகவே இருந்துள்ளன ஆனால்
புத்தன் ஒரு நல்ல அமைதியான துணையாகவே
இருந்து வந்திருக்கிறான்; சொல்லப் போனால் அவன் என்னை பார்ப்பதில்லை ஆனால்
எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதாய் தெரியும் – இந்த
பீத்தனமான இருப்பை நோக்கி
சிரித்துக் கொண்டிருக்கிறான்: வேறொன்றும் இல்லை செய்வதற்கு.
“ஏன் என்னை சுத்தம் செய்கிறாய்?” அவன் கேட்கிறான், “நான் திரும்பவும்
அசுத்தமாகத் தான் போகிறேன்”
“ஏதோ சுத்தம் பேணுவதாய் கிறுக்கத்தனமாய் பாவிக்கிறேன்”, நான் பதிலிறுக்கிறேன்.
“வைனை குடி”, அவன் சொல்கிறான், “அது தான் உனக்கு நன்றாக வருவது”
“அப்போ” நான் கேட்கிறேன் “உனக்கு என்ன நன்றாக
வருமாம்?”
திரும்ப சொல்கிறான் “உன்னை பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக வரும்”
பிறகு அவன் மௌனமாகிறான்.
குஞ்சம் வைத்த ஒரு உருள்மணிகளின் வட்டமொன்றை
ஏந்தியிருக்கிறான்.
எப்படி இவன் வந்தான்
இங்கு?
No comments :
Post a Comment