நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை
அது கதவுக்கும் வெளிக்கும் நடுவாக
அமர்ந்து வாலசைக்கிறது
தன் காதை அறைக்கு உள்ளாக
அறை ஜன்னலின் திசைக்கு
தொலைவில் கேட்கும் குரைப்புகள் விசும்பல்கள் ஊளைகள் சத்தமான அழைப்புகள் ரயில் சைரன் குழந்தைகளின் கீச்சிடலுக்கு
திடுக்கிட்டு பதற்றமாகி
இடைப்பட்ட வெளியில் இருந்து வெளியே சென்று உறுதிசெய்து
மீண்டும் திரும்பி
மூடின கதவிடம் முறையிடுகிறது
பிறாண்டுகிறது
சிலமுறை அறைகிறது
ஒருமுறை நின்று தள்ளுகிறது
தட்டினால் திறப்பதில்லை கதவு
என்பது நாய்க்கு தெரிந்தது தான்
அறைக்குள் அதன் பிராந்தியமும் இல்லைதான்
மறுபுறம் ஓசைகளின் குழப்பத்துக்குள் திரும்புதலும்
அவஸ்தையே
அதனால்
அதன் காதுகள் திசைக்கொன்றாய் திரும்பி கேட்கின்றன
இடைவெளியின் இடத்தில்
கதவு ஏன் இருக்கிறது?
No comments :
Post a Comment