ஒரு கத்தியை போல்
பூமிக்குள்
மறைத்துக் கொள்ள வேண்டும்
ஒரு கத்தி யாரிடம் இருந்து தன்னை
பாதுகாக்கிறதோ
அவரையும் தான் தன்னிடம் இருந்து
பாதுகாக்கிறது
என்பதை அறியும்
ஒளிந்திருக்கும் கத்தி ஒரு போதும்
தூக்கம் அறியாது
ஆனாலும் அது
உடல்கள் நிறைந்த பிரபஞ்சத்தை பார்க்கையில்
முதன்முதலாய் புத்தாடையை அறியும்
குழந்தையை போல்
மெலிதாய் கூச்சம் அடைகிறது
கத்தி
ஒரு உடலுக்குள் நுழையும் போதே
தான் முழுநிர்வாணம் கொள்கிறோம்
என்பதை அறிந்திருக்கிறது
ஒளிந்திருக்கும் போது அது
அம்மணக் கடற்கரையில்
எதேச்சையாய் ஆடைகளுடன் நுழைந்தவனைப் போல்
அந்நியமாய் உணர்கிறது
வெளிப்பட்டு உடலுக்குள் நுழைவதற்கு இடையிலான
காலத்திலே
அது
மனிதனுக்கு
ஆடை என்பது
எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறது
தன்னைப் போல் ஒளிந்திருக்கும்
பல்லாயிரம் கத்திகளை
அது அறியும்
இறகுகள் புடைத்த வெள்ளை அன்னத்தை போல்
அவை அத்தனையும்
ஒருநாளில் வெளிப்பட துடிக்கின்றன
அவற்றை தடுப்பது
பறத்தலுக்கும் இருத்தலுக்கும் இடையிலான ஒருகண தயக்கம்
கத்தி தான் பயப்படுவது
தன் நிர்வாணத்தையா ஆடைகளையா
என்று அடிக்கடி யோசிக்கிறது
ஆடையை களைவதற்கும் களைந்ததற்கும் இடையில்
ஏதோ ஒன்று நிகழ்கிறது
காமமும்
சுயபரிசீலனையும்
நிர்பந்தமும்
அவநம்பிக்கையும்
சுயபிரேமையும்
ஒரு பிரேதத்தின் விரைப்பும்
அவமானப்படுத்தப்படும் பயன்படுத்தப்படும் கிழிக்கப்படும்
உடலின் கண்களில் மிளிரும் ஒளியும்
வெவ்வேறு அம்மணங்கள்
ஆனால் கத்தி பயப்படுவது
அத்தகைய விடுவிப்பையோ கைவிடுதலையோ அல்ல
ஒளிந்திருந்து பாயும் முன்
இப்பூமியின் அத்தனை கத்திகளும்
உறங்காதிருப்பது அதனால் தான்.
(புறநடை பத்திரிகையில் வெளியான கவிதை)
No comments :
Post a Comment