Friday, 20 January 2012

ல‌ஷ்மி மணவண்ணனின் “அப்பாவை புனிதப்படுத்துதல்”: அதிகாரம் எனும் சதுரங்க விளையாட்டு



ல‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகளை உணர்வெழுச்சிகளால், உருவகங்கள், உவமைகள், குறியீடுகளால், தர்க்கத்தால், எளிய சித்தரிப்புகளால் சீராக கட்டி எழுப்புவதில்லை. ஒட்டுமொத்தமான ஒரு தரிசனத்தை, புதிய கண்ணோட்டத்தை, கண்டுபிடிப்பை தர அவை முனைவதில்லை. ல‌ஷ்மியின் கவிதைகளில் நாம் காண்பது கூர்மையான அவதானிப்புகள், குறிப்பாய் அதிகாரம், கலாச்சார அரசியல், பிம்பங்கள் நம் மனப்பரப்பில் ஏற்படுத்தும் குழப்பம், விழுமியங்களும், அறமும் அதிகாரக் கருவிகளாதல் பற்றியவை.
உலக அரசியல் என்று ஒன்று இல்லை என்று நமக்கு இன்று தெரியும். சுதேசி அரசியலும் உலக அரசியலும் ஒன்றுதான். அனைத்து பிரதமர்களும் ஜனாதிபதிகளும் அரசியல் தலைவர்களும் இன்று ஒரே அதிகாரத்தின் மொழியை தான் பேசுகிறார்கள். உலகமயமாக்கல் தேசியத்தின் எல்லைகளை அழித்து மக்களை உலகம் பூரா எம்.என்.சிக்களின் நுகர்வோர்கள் ஆக்கி விட்டன. இறையாண்மை கேலிச் சொல் ஆகி விட்டது. இன்று மதமும், அறமும், ஒழுக்கமும், அரசியல் கோட்பாடுகளும் பேசுவது விற்பனையின் சாமர்த்தியான மொழியை தான். இன்று மக்கள் ஒரு அரசியல் தலைவரின் ஊழல் பணத்தை வாங்கிக் கொண்டே அவரை ஊழல் குற்றத்துக்காக தோற்கடிக்கிறார்கள். ஆக நாம் ஆதிக்கத்தை எதிர்ப்பது கோஷங்களாலோ சித்தாந்தங்கள், நேர்மையான ஆவேசமான புரட்சிகள் மூலமல்ல; ஆதிக்கவாதியின் அதே அறமற்ற சாமர்த்தியமான ஆயுதத்தை அவனுக்கு எதிராக திருப்பி பயன்படுத்துகிறோம். இந்த விதமான அரசியல் எதிர்ப்பை தமிழில் தலித் கவிதைகளில் தான் அதிகமாக காண்கிறோம். மணிவண்ணன் தலித் அடையாளத்தைக் கடந்து ஒரு பின்காலனிய பிரதிநிதியாக மூன்றாம் உலக நாடுகளின் குரலாக இவ்வெதிர்ப்பை செய்கிறார். அவரது கவிதைகள் கண்டுள்ள இந்த விரிவு அவரை நம் சமகாலத்தின் முக்கிய அரசியல் கவிஞராக்குகிறது குறிப்பாய் சதாம் உசேன் தூக்கிலடப்பட்டதின் பின்னணியில் எழுதப்பட்ட விருந்துகவிதை. விவிலியத்தில் இருந்து சமகால அரசியல், மீடியாவின் மொழி என்று பல அர்த்தங்களில் இக்கவிதையை படிக்க முடியும். இங்கு நமது கவிஞர்களின் அரசியல் செயல்பாடு குறித்து ஒரு கேள்வி வருகிறது.
உலகின் சிறந்த கவிஞர்கள் தம் காலத்தின் சமூக அரசியல் நிகழ்வுகளால் வலுவாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் தனது காலத்து அரசியல் கிளர்ச்சிகளை எதிர்ப்பவராக, நிலையான ஆட்சியை விரும்புபவராக இருந்திருக்கிறார். போர்ஹெஸ் தனது நாட்டை ஆண்ட கம்யூனிஸ்டு கட்சியின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்தார். இரு எழுத்தாளர்களும் இருவேறு விதங்களில் ஆட்சி அதிகாரத்துக்கு எதிர்வினையாற்றியதை கவனியுங்கள். அவர்கள் செய்தது சரியா தவறா என்பதல்ல, அவர்கள் நேர்மையாக எதிர்வினையாற்றினார்கள், வலுவான சமூக அக்கறையுடன் இருந்தார்கள் என்பதே முக்கியம். நமது நவீன கவிஞர்கள் ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் இருந்து ஒதுங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய கவிஞன் ஒவ்வொரு நிமிடமும் அரசியல் நிகழ்வுகளின் பகுதியாகத் தான் இருக்கிறான். அதனால் தான் ல‌ஷ்மி சொல்கிறார் “முன்னோர்கள் இதுவரை அறிந்திராத வகையில் எமது உடல் விசித்திர உடல் மொழியை அடைந்து விட்டது. உடல் என்பது இனிமேல் வெறும் பௌதிக இருப்பல்ல. விருந்து கவிதையில் ஓரிடத்தில் அவர் நமது உடலே இன்று ஒரு டி.வியாக மாறி விட்டதோ என்று பொருள்பட எழுதுகிறார். யோசித்துப் பாருங்கள். ஒரு யுத்தவிமானம் குண்டுவீசி தகர்ப்பதை பார்க்கும் போது நம் மனமும் அந்த பிம்பங்களில் ஒன்றாகிறது. நாம் அதை ரசிக்கிறோம், வெறுக்கிறோம், ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம். ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியாது. நாம் தன்னிச்சையாக இயங்கும் டீவிகள்.
ஈழக் கவிஞர்கள் தாம் அதிக அளவிலான அரசியல் கவிதைகளை எழுதினார்கள். சமகாலமாக நாம் தீபச்செல்வனிடம் பார்ப்பது போல் அவை வெற்று ஆவேசங்களாக புலம்பல்களாகத் தான் இருக்கின்றன. மனுஷ்யபுத்திரன் “வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி எழுதினார். அதில் ஒரு பரந்த பார்வை இருந்தது. ஈழப் போர் என்பது அப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீன போராக புதிய பொருளில் வந்தது. முக்கியமாக போர் என்பது இன்று யாரும் தடுக்க முடியாத வரலாற்று அபத்தமாகி விட்டதை சொல்லியது. ல‌ஷ்மியின் கவிதை இன்றை போர்களின், உலகளாவிய வன்முறைகளின் அரசியல் கலாச்சார பரிமாணத்தை பார்க்கிறது. இந்த வகையான கவிதைகள் நமது தமிழின் முக்கியமானதொரு போக்கு எனலாம்.
ஆரம்பத்தில் சொன்னது போல் ல‌ஷ்மியிடம் ஒரு ஒருமித்த கவிதை அனுபவத்தை அல்ல கூர்மையான ஆழமான அவதானிப்புகளின் சிதறலைத் தான் காண்கிறோம்.விருந்தில் சதாமின் தூக்கிலடலை பற்றி பேசும் போது
“கவிதைகளை தூக்கிலிடும் பணியும் எளிமையடைந்து
வருகிறதென வரிகளுக்கிடைப்பட்ட மௌனம் விலகி
ஓடுவதை
கவிஞன் எத்தனிக்கிறான் என்று குறிப்பிடுகிறார். கடவுளும் சுதந்திரமாக இல்லை. இக்கவிதையில் “மரண தண்டனையில் இருந்து தப்பித்து வந்த ஒரு கடவுளும் வருகிறார். இன்று கட்டுவிக்கப்பட்ட சொற்களும் பிம்பங்களும் தான் துப்பாக்கிகளுக்கு இணையாக கொலைகளை செய்கிறார்கள். ஈழப்போராளியை வதை செய்யும் ராணுவ வீரன் அதை வீடியோ எடுக்கிறான். அது பின் ஊடகங்களில் வெளியாகிறது. இங்கு வீடியோ காட்சி ஒரு வதைக்கருவி தான். பின் லேடனின் கொலையுண்ட புகைப்படங்களை வெளியிட தடை செய்கிறது அமெரிக்கா. பின் லேடன் அளவுக்கு அவனது பிணத்தின் சித்திரமும் அபாயகரமானது என்று அது தெரிந்து வைத்திருக்கிறது.
ல‌ஷ்மியின் இந்த வரியை பாருங்கள்
(சதாமின் வாழ்வில்) கடைசிச் சுற்றில் கதைசொல்லிகள்
விநோதத் துப்பாக்கிகள் ஆனது எவ்வாறு?
மேலும் சில நுட்பமான மேற்கோளாக நம் நினைவில் தங்கக் கூடிய வரிகள் “கதவுகளின் கதையில் இருந்து -
“கதவுகள் திருடர்களுக்காகவே செய்யப்பட்டவை
திருடர்களை அவை
கண்டு பிடிக்கின்றன
வரலாற்றை பற்றின ஒரு உருவக வரி
“நெடுஞ்சலையில் அரைநிர்வாணமாய்
அலையும் காலசொரூபி
தான் உடைத்தெறிந்த கதவுகளை
உரக்க பைத்தித்து
ரெயில் பெட்டியென
இழுத்து செல்கிறாள்

இந்த கவிதையில் கதவு விழுமியங்களுக்கான ஒரு குறியீடு. மதம் என்பது விழுமியங்களால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. விழுமியங்கள் கதவைப் போல் கடவுளை சுற்றி மூடிக் கொள்கின்றன. விழுமியங்கள் கடவுளுக்கு அந்நியமானவை. மனிதன் ஆடை என்றால் கடவுள் நிர்வாணம். கதவு என்றால் அவர் திறந்தவெளி. இந்த வரி இதை நுட்பமாக பகடி செய்கிறது
“ஒவ்வொருவரும் கதவான ஊரில்
கடவுளின் நிர்வாணம் கண்டு
குழந்தைகள் அஞ்சியோடினர்
லஷ்மி மணிவண்ணன் “குழந்தைகளுக்கு கடவுள் வளர்ந்தவர்களுக்கு சாத்தான் என்ற கட்டுரை நூலில் பேச முடியாமல் போகிற பேச்சு என்ற கட்டுரையில் அதிகார பொதுமையாக்கம் பற்றி பேசுகிறார். அதாவது ஒரு அதிகார சக்தி என்று தனித்த ஒன்றோ ஒருவரோ இல்லை. நாம் ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருக்கிறோம் என்றால் நாம் அதே சர்வாதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்கிறோம். சர்வாதிகாரியைப் போல் யோசிப்பதன் வழி அதிகாரத்தை அடைகிறோம். தனிப்பட்ட சிந்தனையை, தனித்துவத்தை அழிக்கிறோம். உதாரணமாக இன்றைய மனிதன் சமச்சீர் கல்வி பற்றி தனது நிலைப்பாட்டை உருவாக்குவது எளிதல்ல. அவன் ஏற்கனவே அதிகார மட்டத்தில் ஆதரவாகவும் எதிராகவும் உள்ள தரப்புகளை எடுத்துக் கொண்டு மாறி மாறி மோதுகிறான். குழப்பம் எஞ்சுகிறது. ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொதுவாக அதிகார மையம் ஒரு குரலை கொடுக்கிறது. இன்றைய மனிதனுக்கு எந்த சித்தாந்த ரீதியான கடப்பாடும் இல்லாததால் அவன் ஒரு பொதுக் குரலைத் தான் விரும்புகிறான். இந்த கருத்து மணிவண்ணனின் இக்கவிதைகளிலும் ஆழமாக பேசப்படுகிறது. அவர் ஒரு மனிதனுக்கு அதிகாரம் கைமாறப்படும் போது அவன் தன் தனித்துவத்தை, கிறித்துவ மொழியில் சொல்வதானால், ஆன்மாவை இழப்பதாக கருதுகிறார். அவர் அதிகாரப் பரவலை ஒரு சதுரங்க ஆட்டம் போல் கற்பனை செய்கிறார். எந்த கட்டையும் எதையும் வெட்டலாம் என்பது தான் விதிமுறை. வெட்டப்பட்ட கட்டை உள்ளே வர தானும் ஒன்றை வெட்டி வெளியேற்ற வேண்டும். இதைத் தான் “அப்ரூவர் வந்திருக்கிறேன், “கொலைத்தொழில் ஆகிய கவிதைகளில் சொல்கிறார். குற்றவாளிக்கும் நீதிபதிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இருவரும் இரு பாத்திரங்கள். நீதிபதி குற்றவாளி ஆனால் குற்றவாளி நீதிபதியாகி அவருக்கு தண்டனை வழங்கலாம். நம் சமூகத்தில் திருடன் போலீஸ் ஆவதில்லை. எல்லாருக்கும் நிலையான ஒரு இடம் உள்ளது. மணிவண்ணன் சொல்ல வருவது என்ன? பூக்கோ தண்டனை என்பது ஒருவரை திருத்துவதற்காக அல்ல, அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு என்று சொன்னார். அதனால் தான் தண்டனைகள் பகிங்கரமாக நிறைவேற்றப்படுகின்றன. ஒரு முதலாளி தன் பணியாளனை பலர் முன்னிலையில் திட்டத்தான் விரும்புகிறார். ஆசிரியர் வகுப்பின் முன்னிலையில் தான் ஒரு மாணவனை பிரம்பால் அடிப்பது. தண்டனையின் ஒரு நோக்கம் மக்களை பயமுறுத்துவது. அதற்கான கருவிகள் தான் நீதிவானும் குற்றவாளியும். இதனால் தான் மணிவண்ணனின் கவிதையில் ஒரு குற்றவாளி அப்ரூவராகி ஒரு அதிகாரியை கைது செய்ய வருகிறான். அந்த அதிகாரி தான் தண்டனை பெறும் இடத்திற்கு வந்திருப்பதை அறிய வில்லை அல்லது அறிந்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. மணிவண்ணனின் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

மணிவண்ணனின் கவிதைகளில் நமது வாசிப்பு சுதந்திரத்தை தடை செய்யும் படியாய் அதிகப்படியான உருவகங்கள் வருகின்றன. அவரது புனைகதைகளின் மொழியும் இதே பிரச்சனையை தான் கொண்டுள்ளது. சமகால தமிழ் உருவகங்களை கூடிய வரையில் களைந்து நேரடியான எளிய சொற்களால் பேசவே முனைகிறது. வானம், கடல், மழை போன்ற உருவகங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. சிலவேளைகளில் ஒற்றை உருவகம் கொண்டு எழுதப்படும் கவிதைகளும் வருகின்றன. இது தவிர்க்க முடியாதது. மணிவண்ணன் தனது மனச்சித்தரிப்புகள் கொண்ட அநேக கவிதைகளில் உருவகங்களை நம்பி இருக்கிறார். சில வரிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவகங்கள் அடுகடுக்காக வருகின்றன.
ஜெயாவின் பிறந்தநாள் கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.
ஜெயா என்ற பெண் கண்ணாடி முன் நின்று தன் முகம் பார்க்கிறாள். படைப்பு மொழியில் கண்ணாடி என்றால் மனம். முகம் நமது ஆணவம் அல்லது ஈகோ. ஆணவம் எப்போதுமே நமது சிறுமைபெருமைகளை பெருக்கிக் காட்டும். ஆக ஜெயாவுக்கு ஏகப்பட்ட முகங்கள் கண்ணாடியில் தோன்றுகின்றன. “ஜெயாவின் எந்த முகம் தனது முகம் என அறியாத மிரட்சியில் பிம்பம் அவளது கன்னத்து பருவை பெருத்து காட்டியது; ஜெயா மீண்டும் முகம் கழுவி புதிய அலங்காரத்துக்குள் நுழைந்து முகப்பருவை சிறுத்து காட்டுமாறு புதுப்புடவைக்கு மாறினாள். இந்த வரிகளின் நுட்பமான பகடி சிறப்பானது தான். ஆனால் அடுத்து கவிதை ஜெயாவின் பழைய நினைவுகள் வழி பயணித்து அவளது சுயமான ரூபத்தை வெளிப்படுத்துகிறது. அவளது அசலான தோற்றம் தூயமிருகநிலையால் ஆனது என்று சொல்கிறது. இதற்கு மணிவண்ணன் அடுத்தொரு “ராட்டினம் என்ற உருவகத்தை உள்ளே கொண்டு வருகிறார். இது தமிழாசிரியர்கள் பொழிப்புரைக்கே பொழிப்புரை சொல்வது போல் ஆகிறது. மணிவண்ணனின் இந்த உருவக மழை நூற்றாண்டுகளின் பழமை கொண்டது.
மணிவண்ணனின் மொழியில் வானம்பாடிகளுக்கு உரித்தான கற்பனாவாத மிடுக்கும் உள்ளது. ஒரு தகவலை மூக்கை சுற்றி தருவதன் மூலம் ஸ்டைலாக சொல்வது இது. உதாரணமாக “வார்த்தை கவிதையின் முதல் வரி
“வானம்
நீள் நெடுஞ்சாலைகளை
தனது சகோதரனென கருதும் நாளில்

இந்த வரி சொல்ல வருவது வானமும் நிலமும் நீண்டு கிடந்து ஒன்றோடொன்று கலப்பதாய் தெரியும் ஒரு காட்சியை. “வானமகள் நாணுகிறாள் கேள்விகளால் வேள்விகளை செய்வேன் போன்ற வரிகளின் சற்று மேம்பட்ட வடிவம் தான் இது.
ஓயாசிரிப்பொலியில் வருகிறது
“எல்லார் கைகளிலும் கொடிகள்
பெண் கொடிகள்
ஆண் கொடிகள்
செடி கொடிகள்
கடைசி வரியை எந்த அர்த்தமும் அற்றது. அது பகடியின் பொருட்டு வருகிறது. இப்படி சந்த நயம் கொண்டு கேலி செய்வது இன்று அநேகமாக யாரும் முயலாதது.
மணிவண்ணன் இத்தொகுப்பை திருக்குறள் பாணியில் அறம், பொருள், இன்பம் என்று பிரித்திருக்கிறார். இதன் மூலம் தத்துவார்த்தமாக அவர் வள்ளுவருடன் உரையாட முயலவில்லை. வள்ளுவரில் இருந்து சமகால மனிதன் மாறுபட்ட ஒரு விழுமியங்களை இன்று கொண்டுள்ளதை சுட்ட இந்த பகுப்பை பயன்படுத்துகிறார். இன்பம் பகுதியில் அவர் காமத்துப்பால் குறள்களை குறிப்புணர்த்த காதலி, தோழி, காதலியின் அம்மா ஆகிய பாத்திரங்களை கொண்டு வருகிறார். இவர்களின் பொறுப்பும் அதே தான். அம்மா என்றால் கண்காணிப்பது. காதலி எனில் காதலிப்பது, தோழிக்கு காதலனை பற்றி பேசுவது. இவர்களின் சுபாவத்தை மட்டும் மாற்றியிருக்கிறார். செவ்வியல் கவிதைகளில் போன்று காதலியை நேரடியாய் விளித்து சொல்லும் பாணியை இங்கும் பின்பற்றுகிறார். துரதிர்ஷ்டவசமாக காதலி காதலன் காதலை சொல்லாமல் “காலம் கடத்துவதால் கலவரமடைபவளாக இருக்கிறாள். இன்று காலத்தை யாரும் கடத்துவதும் இல்லை, இப்படி கலவரப்படும் பெண்களும் இல்லை. இது திருக்குறளுக்கு எதிர்வினை செய்வதல்ல, டப்பிங் செய்வது.
ஆனால் அவரது பகடி மற்றும் தத்துவ, வாழ்வனுபவ, அரசியல் கவிதைகள் நேரடியான மொழியில் எழுதப்பட்டவை. இவை தனித்துவமும் புதுமையும் கொண்டவை.
இப்படி மணிவண்ணனின் மொழி வேறுபட்ட இயல்புகளை கொண்டதாக உள்ளது. அவருக்குள் வைரமுத்துவும், சு.ராவும், ல‌ஷ்மி மணிவண்ணனும் உள்ளார்கள்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates