தோனியின் உடல் மொழி தோல்விமனப்பான்மையை காட்டுகிறது. உண்மையா?
உண்மை தான். இதற்கு மூன்று காரணங்கள் தோன்றுகிறது.
தோனி என்றைக்குமே உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படையாக ஆதரவு காட்டும் அல்லது கண்டிக்கும் அணித்தலைவர் அல்ல. இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்த போது அவரது இந்த அடக்கமும் அக்கறையின்மையும் தான் போற்றப்பட்டன. இப்போது நாம் ஒரு தோதான காரணம் கிடைக்காததால் அதே பாராட்டிய பண்புகளையே குறைகளாக முன் வைக்கிறோம். தோனியை குறை கூறுவதற்கான வேளை இன்னும் வரவில்லை. ஒரு இளம் அணியை அவருக்கு அளித்து அதனை வளர்த்து மேலெடுக்க அவகாசம் தர வேண்டும். பின்னரும் தோல்விகள் தொடர்ந்தால் முடிவெடுக்கலாம்.
தோனியின் பட்டுக்கொள்ளாத வகை தலைமைக்கு பின்பு ஒரு இந்திய மனநிலை உள்ளது. வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கிற்கு விட்டு தன் பங்கை மட்டுமே ஆற்றினால் வெற்றி அடையலாம் என்பது அந்த இந்திய அணுகுமுறை. மேலும் நம்முடைய கலாச்சாரம் நிறைய வேறுபாடுகள் ஒரே இடத்தில் ஒன்றாக இருக்கிற, அன்றாட வாழ்க்கையின் அடிப்படை விசயங்களில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிற சீரற்ற தன்மை உடையது. அதாவது ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் ஏசி இருக்கும், பிரியாணி போடுவார்கள், ஆனால் கழிப்பறை இருக்காது, இருந்தாலும் தண்ணீர் இருக்காது. இந்த சூழலில் ஒருவர் மேற்கில் போல ஒழுக்கமும் சீரான அடிப்படைகளையும் எதிர்பார்க்க முடியாது. கிரெக் சாப்பல் பண்ணின தவறு அது தான். அவர் அமைப்பை சீர்படுத்தினால் இந்திய கிரிக்கெட் அணி மேம்படும் என்று நினைத்தார். சமீபமாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் ஐந்தாறு மொழிகள் பேசப்படுகின்றன, அதனால் அணிக்குள் பிளவும் ஒற்றுமையின்மையும் உள்ளது என்றொரு அசட்டு அபிப்ராயம் சொன்னது. இந்தியாவை பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் சொல்வது இது. இதே சென்னையில் நான்கைந்து மொழிகள் தினமும் அநாயசமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள். நமக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை வேற்றுமையில் ஒற்றுமை எல்லாம் நமக்கு ரத்தத்தில் உள்ளது.
இப்போது விமர்சகர்கள் மொத்தமாய் இந்திய கிரிக்கெட் அமைப்பையே மறுகட்டமைப்பு செய்தால் தான் அணி வெற்றியடையும் என்று பேசுகிறார்கள். இதெல்லாம் நடக்காது. இந்திய கிரிக்கெட்டுக்குள் செல்வாக்கும், ஊழலும், தெளிவின்மையும், தொலைநோக்கின்மையும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
எப்போதும் நாம் குப்பையில் இருந்து மாணிக்கமும் சேற்றில் தாமரையும் அடைந்து பழக்கப்பட்டவர்கள். நாம் என்ன சொல்வோம் என்றால் இதே குழப்பமான, தொலைநோக்கற்ற ஒரு அமைப்பு தான் தெண்டுல்கரையும் கபில்தேவையும் திராவிடையும் உருவாக்கியதென்றால் இன்னும் அப்படியே முடியும் என்று. தோனி எல்லாவற்றையும் அனுமதித்து சின்ன அளவில் மட்டுமே கட்டுப்படுத்தும் ஒரு தலைமை பாணியை பின்பற்றுகிறார். பெரும்பாலும் அது வெற்றிகரமானதாக இருந்துள்ளது. சின்ன சின்ன சறுக்கல்கள் அவரது அணுகுமுறையை தவறாக்காது.
மற்றொரு விசயம் தோனியின் தனிப்பட்ட மட்டையாட்ட நிலை மோசமாக உள்ளது. இது நிச்சயம் அவரது தலைமையை பாதிக்கிறது. அவரது வித்தியாசமான கீப்பிங் பாணி காரணமாக தொடர்ந்து அடிபட்டு விரல்கள் வளைந்து போயுள்ளன. ஆக ஒரு மட்டையாளர் மற்றும் கீப்பராக அவர் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இப்பிரச்சனைகள் அவருக்கு தலைவராக ஒரு தடையாக இருக்கக் கூடும். ஏனென்றால் உடல் தகுதியுள்ள ஒரு சிறந்த ஆட்டநிலையில் உள்ளவர் தான் பிறரிடம் இருந்து அதே பண்புகளை ஆட்டத்தரத்தை எதிர்பார்க்க கோர முடியும்.
அடுத்து அணிக்குள் சில வீரர்கள் தோனியின் பால் அதிருப்தி உற்று உள்ளதாக ஒரு வதந்தி உள்ளது. கவாஸ்கர் முதலில் இதை சொன்னார். அவர் மறைமுகமாக சேவாகை குற்றம் சாட்டினார். பின்னர் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இதை எடுத்துக் கொண்டு பரபரப்பாக்க சேவாக் இதை மறுத்து அறிக்கை விட்டார். ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் மற்றொரு அறிக்கையில் தோனி தான் இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தாம் டெஸ்டு அணியின் ஆடுவதாக தெரிவித்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால் இந்த உள்-அணி சச்சரவும் அதிருப்தியும் கூட இயல்பு என்று தான் சொல்ல வேண்டும். உலகக்கோப்பை வென்றதுமே நமக்கு தோன்றிய சந்தேகம் தோனி இன்னும் நாலு வருடங்கள் தலைமை தாங்குவாரா அப்ப்டி நிகழ்ந்தால் அவரது தலைமையின் இரண்டாம் பருவம் வெற்றியடையுமா என்று. ஏனென்றால் பல சிறந்த தலைவர்கள் அவ்வளவு காலம் நீடித்தது இல்லை. இம்ரான் கான் 92 உலகக்கோப்பை வென்றவுடன் ஓய்வு பெற்றார். ஸ்டீவ் வாஹ் கூட ஐந்து வருடங்கள் தான். ரணதுங்கே உலகக்கோப்பை வெற்றிக்கு பின் மெல்ல மெல்ல தன் சோபையை இழந்து தோல்வியடைந்த அணித்தலைவராக தான் வெளியேறினார். ஒரு அணித்தலைவருக்கு என்று ஒரு காலாவதி தேதி உண்டு என சொல்லப்படுகிறது. வீரர்கள், சூழ்நிலை, காலகட்டம் மாற அவர்களும் மாற வேண்டும்.
டெஸ்டு போட்டிகளுக்கு புது அணித்தலைவர் தேவையா?
புது அணித்தலைவராக டெஸ்டு அணிக்கு சேவாக் அல்லது காம்பிர் வரலாம். இருவரில் காம்பிர் மேலானவர் என சொல்லலாம். சேவாகின் தலைமைக்கு ஒரே கியர் தான். டாப் கியர். அவர் ஒரே திட்டத்துடன் தான் களத்துக்கு இறங்குவார். அது தாக்கி ஆடுவது. எதிரணி சமாளித்து ஆடி நிலைகுலைத்தால் அவர் திணறி ஸ்தம்பித்து விடுவார். நடந்து முடிந்த மேற்கிந்திய அணிகளுடனான ஆட்டத்தொடரில் அவரது முக்கிய பிரச்சனை இதுவாகவே இருந்தது. சேவாகின் தலைமை கொஞ்சம் கங்குலியுடையது போன்றது. மிக ஆவேசமான பாணி. ஆனால் இது எப்போதும் எடுபடாது. எப்போதும் ஒரு அணியால் சுலபமாக விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது. அதே வேளையில் விக்கெட் விழாத போது அதிக ஓட்டங்களையும் கசிய விடக் கூடாது. இந்த சூட்சுமத்தை சேவாக் இன்னும் கற்கவில்லை. மாறும் நிலைமைக்கு ஏற்ப சமயோஜிதமாக யோசித்து உடனடி முடிவுகள் எடுக்க சேவாகுக்கு வராது. தோனி புரூஸ்லீ என்றால் சேவாக் ஆர்னால்டு ஷுவாஸ்னேக்கர். இரண்டு துருவங்கள்.
அடுத்து அவரது மோசமான உடல்தகுதி மற்றும் களத்தடுப்பு சேவாகை அடுத்து அமையப் போகும் இளைய அணிக்கு ஒரு மோசமான வழிகாட்டியாக மாற்றும். அவர் பிறரிடம் இருந்து இந்த இரு தகுதிகளையும் கோர முடியாது.
காம்பிர் கிட்டத்தட்ட தோனி மாதிரி. ஆனால் மேலும் ஆவேசமானவர். முழு அர்ப்பணிப்புடன் ஈடுபாட்டுடன் வீரர்கள் ஆடுவதற்கு தூண்டுவார். யாராவது சொதப்பினால் அந்த இடத்திலே திட்டு. காம்பிரின் தலைமை அணிக்குள் அவருக்கு ஏற்படும் அந்தஸ்து, ஏற்பு, மரியாதையை பொறுத்தது. அதாவது அவர் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி. அணிக்குள் சிங்கம், புலி, கரடி யானை எல்லாம் இருக்கும். எல்லாருமே கட்டுப்பட்டு விட்டால் அவர் ஜெயித்து விடுவார். காம்பிரின் உடல்தகுதியும் களத்தடுப்பும் அவரை சேவாகை விட ஒரு படி உயர்த்துகிறது.
மூன்றாவதாக சஹீர்கானுக்கும் தலைமைப்பண்புகள் உண்டு என சொல்ல வேண்டும். தோனியின் கீழ் பந்துவீச்சு தலைவராக அவரது கள அமைப்பு அவர் பந்து வீச்சாளரை ஊக்கப்படுத்துவது சிறப்பாக இருக்கும். வார்னெ, அக்ரம், இம்ரான்கான், கபில்தேவ் போல பல சிறப்பான பந்துவீச்சாளர்கள் அணித்தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரே பிரச்சனை அவரது உடல்தகுதி. அவரால் இன்னும் மூன்று வருடங்கள் நீடிக்க முடியுமா என்பதே ஒரே கேள்வி.
மூத்தவீரர்கள் இப்படி வற்புறுத்தப்பட்டு வெளியேறுவதற்கு அவர்களாகவே கிளம்பலாமே?
சச்சின், திராவிட், லக்ஷ்மண் ஆகியோர் நம் அணிக்கு செய்துள்ள சேவை மகத்தானது. வெளிநாடுகளில் நம்மால் வெற்றி அடைய முடியும் என்று நிரூபித்தவர்கள், நம் அணியை தலை நிமிர்ந்த உலக மேடையில் நடக்க செய்தவர்கள் இவர்கள். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இன்றுள்ள இந்த மாபெரும் மதிப்புக்கு, ஆவேசமான ஆதரவுக்கு, பின்பற்றுதலுக்கு இவர்களின் இரு பத்தாண்டுகள் நிலைத்த சிறப்பான ஆட்டமும் பல சாதனைகளும் காரணம். அதனால் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக அவர்கள் நமக்கு நம் தேசத்துக்கு திரும்ப தந்துள்ளார்கள். அவர்களின் ஆட்டவாழ்வு முடிவை நெருங்குகிறது என்பது உண்மை தான். ஆனால் நாம் அவர்களை இப்போது புரிந்துணர்வுடன், பண்புடன் நடத்த வேண்டும். அவமானப்படுத்தக் கூடாது. அவர்கள் மரியாதையுடன் ஓய்வு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். கங்குலியை போல் அவர்களை அவசரப்படுத்தி நெருக்கடிக்குள்ளாக்கி ஓய்வு பெற செய்யக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் வேறு ஒரு பண்பாடு உள்ளது. அங்கு அனைவரும் சமம். பண்ணுகிற வேலை மட்டுமே முக்கியம். ஆனால் இங்கே இந்தியாவில் ஒரு படிநிலை உள்ளது. நாம் மூத்தவர்களை மதிப்பதை தலையானதாக நினைக்கிறோம். அதனால் தான் சச்சினை பாஜி என்று அணிக்குள் அழைக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் கூட பாண்டிங்கை ரிக்கி என்று தான் அழைப்பார். நாம் அவர்களை பார்த்து சூடு போட்டுக் கொள்ளக் கூடாது.
அடுத்ததாய் அனுபவம். இவர்களுக்கு உள்ள அனுபவத்தை இளைய வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் ஆவன செய்ய வேண்டும். சச்சின் கடந்து நான்கு வருடங்களாக அதைத் தான் செய்து வந்தார். அவர் இளைய வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குகிறார். அவரது அருகாமை அவர்களுக்கு பல பண்புகளை, விழுமியங்களை ஊட்டுகிறது. அவர்களின் பண்பாட்டை மெருகுபடுத்துகிறது. பின்னர் அணி வளர்ந்தவுடன் அவர் ஒருநாள் ஆட்டங்களில் ஆடுவதை குறைத்துக் கொண்டார். இது முழுக்க சச்சினின் சம்மதத்துடன் விருப்பத்துடன் நடந்தது. இதே போல் திராவிடும் லக்ஷ்மணும் இளைய வீரர்களை ஆற்றுப்படுத்த வழிகாட்ட நாம் ஒரு அவகாசத்தை வழங்க வேண்டும். அணியில் ஒருவரின் பங்களிப்பு வெறுமனே விக்கெட்டுகளும் ஓட்டங்களும் மட்டுமே அல்ல.
டங்கன் பிளட்சரை இந்த தொடர்ந்த ஏழு வெளிநாட்டு டெஸ்ட் ஆட்ட தோல்விகளை கொண்டு மதிப்பிடலாமா?
டங்கன் பிளட்சரின் நான்காவது தொடர் இது. அவருக்கும் நாம் போதிய அவகாசத்தை முதலில் வழங்க வேண்டும். பிறகு விமர்சிக்கலாம்.
அவர் பொதுவாக சர்வாதிகார தன்மை கொண்ட பயிற்சியாளர் என்று அறியப்பட்டார். இங்கிலாந்தில் அவர் அதைத் தான் செய்தார். அங்கு கவுண்டி அணிகளில் யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் இந்தியாவில் அவர் எந்த நிர்வாக விசயங்களும் தலையிட முடியாது. இங்கிலாந்தை போல் ஒரு ஒழுங்குபட்ட அமைப்பும் இயக்கமுறையும் இங்கு இல்லை. இங்கு அமைப்பை விட தனிநபரின் செல்வாக்கு முக்கியம். செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை கடந்து அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. அதனால் தான் பிளட்சர் இந்தியா வந்ததும் ரொம்ப சாத்வீகமாகி விட்டார். முன்பு அவர் முசுடு என்று மீடியாவால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் மீடியாவிடம் சாமர்த்தியமாக உரையாடுகிறார். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார். உதாரணமாக இந்திய அணி வீரர்கள் அவர்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். முழுபயணத்தின் போது குடும்பத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் இவ்விசயத்தில் பிளட்சர் கண்டிப்பாக இல்லை என்று ஒர் தரப்பில் கண்டனங்கள் எழுகின்றன. இங்கிலாந்தில் சச்சினின் மகன் வலைப்பயிற்சியில் நுழைந்து பயின்றது ஒரு கட்டத்தில் சச்சினையே எரிச்சல்படுத்தியது. இப்படி பிளட்சர் விட்டுப் பிடிப்பது ஒரு கட்டத்தில் அவர் கட்டுப்பாட்டையே இழந்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.
மேலும் பிளட்சர் மிக சிறந்த நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு கொண்டவர். இளைஞர்களை நன்றாக பயிற்றுவிக்கக் கூடியவர் என்று சொல்ல்ப்படுகிறது. ஆஷஸை வென்ற இங்கிலாந்து அணியும் மிக இளைய அணியாக இருந்து பிளட்ச்ரால் முழுக்க வளர்த்து எடுக்கப்பட்டது. அதாவது அவர் ஒரு நல்ல father figure ஆக இருக்க வல்லவர். ஆனால் இந்திய அணியோ ஏற்கனவே 11இல் 10 father figureகளை கொண்டது. அவர்களிடத்தில் அவருக்கு கற்றுவிக்க ஒன்றுமில்லை. அவர் ஆதிக்கம் செலுத்த முடியாது. இது அவருக்கு ஒரு இடர்பாடு. ஒரு நர்சரி ஸ்கூல் வாத்தியார் கல்லூரியில் பாடமெடுக்க போவது போன்றது இது.
ஆக மூத்தவீரர்கள் இடத்தை காலி செய்த பின் அணியை நிர்வகிப்பது பிளட்சருக்கு இன்னும் எளிதாக தோதாக இருக்கலாம்.
மூன்றாவதாக அவரது வயது. முன்னாள் பயிற்சியாளர் கேரி கெர்ஸ்டன் ஒப்பிடுகையில் இளமையானவர். நல்ல உடல்வாகு கொண்டவர். வலைப்பயிற்சிகளின் போது அவராகவே அதில் ஈடுபடுவார். நூற்றுக்கணக்கான throwdownகளை தொடர்ந்து சளைக்காமல் வீசுவார். அவர் அணியின் மற்றொரு வீரரை போல் இருந்தார். அணி அவரை எளிதில் ஏற்றுக் கொண்டது. பிளட்சரை பார்த்தாலே நமக்கு தெரியும் அவரால் அதெல்லாம் முடியாது. ஒருவிதத்தில் அவர் தோனியை போல் விலகி நின்று வழிநடத்துபவராகவே இருப்பார்.
மேலும் கெர்ஸ்டன் இன்று அணியில் உள்ள மூத்த வீரர்கள் பலருக்கு எதிராக தெ.ஆப்பிரிக்காவுக்காக ஆடியவர். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக சில சிறந்த சதங்கள் அடித்து அற்புதமாக களத்தடுப்பு செய்தவர். இயல்பாகவே தொண்ணூறுகளில் இருந்து ஆட துவங்கிய நமது இந்திய வீரர்களுக்கு அவர் மீது மரியாதை இருந்தது. இந்தியர்களிடம் இல்லாத பண்புகளாகிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், களத்தடுப்பு, சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினால் பெரிய விசயங்கள் தானே கைகூடும் என நம்புவது, ஒழுக்கம் ஆகிய விசயங்களை நமக்கு சொல்லித் தந்தார். அதனால் அவரது பயிற்சி காலம் மிக பயனுடையதாக இருந்தது. பிளட்சரால் நமக்கு என்ன நல்க முடியும் என்று இப்போது சொல்ல முடியாது. தேவையான சுதந்திரமும் நம்பிக்கையும் அளித்தார் அவர் நமது இளைய வீரர்களை நன்கு மெருகேற்றுவார். இனி வரும் நான்கு வருடங்கள் ஒரு எதிர்கால அணியை உருவாக்கும் சிற்பியாக அவர் இருப்பார். அவ்விதத்தில் அவரைப் போன்ற ஒருவர் தற்காலத்திற்கு மிக நல்ல தேர்வு எனலாம். நமக்கு ஒரு வாத்தியார் தேவைப்பட்டார். இதுவரை வகுப்பில் குழந்தைகள் இல்லை. அதனால் அவருக்கும் வேலை இல்லை. குழந்தைகள் வந்தவுடன் அவர் தனது இயல்புக்கு திரும்பக் கூடும்.
ஒரு வருடத்தில் இத்தனை கிரிக்கெட் என்பதே தேவையற்றது. ஐ.பி.எல் , உலகக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து,பின்னர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் , ஆஸ்திரேலியா என கிரிக்கெட் என்ன மெகா சீரியலா..? அளவுக்கு அதிகமான கிரிக்கெட்டால் நாம் (ரசிகர்கள்) அடையப் போவது தோல்வி தான்!
ReplyDeleteone day seriesla நாம win பண்ணுவோம்ல... :)
ReplyDeleteதொடர் கிரிக்கெட் மற்றும் bowling weakness.. மற்றும் அவர்களின் பவுன்ஸுக்கு நாமளால தாக்குபிடிக்கமுடியாதனால..தான் தோக்கறோம். நாம்மள விட they are more atheletics
மத்தபடி பிளட்சர், நான்கு மொழி, தோனி, மூத்த வீரர்களென சரியான அலசல்
உலகக்கோப்பை வெற்றியின்
ReplyDeleteமூலம் தோனியைத் தலையில்
தூக்கியவர்கள்,தொடர்
தோல்விகளுக்காக
அவரைத் தரையில்
இறக்கியதோடு
விட்டால் போதும்.