1
குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள், பைக், கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது. நழுவி குதித்ததோ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.
அன்று பூரா வீடு பற்றின நினைவுகள் அலுவலகத்தில் அவனை அலைகழித்தன. அவனை ஒரு நரம்பு இசைக்கருவி போல் கற்பனை உருவங்கள் தொடர்ந்து முறுக்கேற்றின. விரல் நுனியிலும் கிறுகிறுப்பு. இரண்டு முறை தனிமையான கழிப்பறைக்கு சென்று குறியை தளர்த்த முயன்று அநாகரிகமாய் பட திரும்பினான். ரம்யா வேறு இதைக் குறித்து அறிவுறுத்தி இருக்கிறாள். அவளை நினைத்ததும் பேண்டுக்குள் மீண்டும் அழுத்தியது.
உடல் கிளர்ச்சி கொள்ளும் போது அபாரமான தனிமை குடி கொள்கிறது. அலுவலகத்தில் கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின் கணினி ஓசைகள், கிசுகிசுப்பு, காலடிகளின் பரபரப்பு அவனுக்கு தனது இருப்பை விட இல்லாமையையே உணர்த்தின. போர்னோவின் கதையின் பக்கங்கள் போல் வீடு அவன் காலத்திலும், அதற்கு வெளியிலும் வளர்ந்தது. ரம்யா நாளை வருவாள்.
முதன் முறையாய் சொந்தபந்தங்கள் இல்லாத வீட்டுக்குள் அவனுக்கென ஒரு அவள். பெற்றோர்களும் சொந்தங்களும் அவனுடன் அவ்வீட்டில் இருந்ததுண்டு. ஆனால் அந்நியமான பெண்மையின் அருகாமை போல் யாரும் பாதுகாப்பை தர முடியாது. ரம்யாவின் ஆகிருதி வீட்டில் நினைத்த இடங்களை எல்லாம் நிரப்பியது. வீட்டுடன் சேர்த்து அவளது அங்கங்களை குளோசப்பில் யோசிப்பத்தை தவிர்க்க முடியவில்லை. குளோசப் காட்சிகளுக்கு மூச்சுத் திணறடிக்கும் குணம் உண்டு. அந்த அலுவலகம் தான் எத்தனை சிறியது.
வீட்டுக்கு வந்ததும் பரபரப்பானான். வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். ஹால் சுவர் கண்ணாடியை மூட வேண்டும். சோபா உறைகளை மாற்ற வேண்டும். புது கார்ப்பெட் மாற்றி, புத்தக அடுக்குகளை சுத்தம் செய்து, துவைக்காத துணிகளை மூட்டை கட்டி பீரோவில் பூட்டி, குளிர்பதனப் பெட்டியில் பீருடன் விஸ்கி பாட்டில்களும் அடுக்கணும். அவளுக்கு விஸ்கி அவ்வளவாய் பழக்கமில்லை. நாளை பழக்கமாகலாம். சாப்பாடு ஆர்டர் செய்ய …. அவனுக்கு அப்போது சட்டென பூனை நினைவு வந்தது. இருந்த சுவடே கூடாது, விரட்ட வேண்டும். அப்புறம் பிங்க் வண்ணத்தில் படுக்கை விரிப்பு விரிக்க வேண்டும். மென்வெளிச்சத்தில் துலங்கும் ஆப்பிரிக்க ஜோடியின் அணைப்பு ஓவியத்தை எதிரிலே மாட்ட வேண்டும். அந்த மார்புக் கூர்மை பார்த்து அவளுக்கு பொறாமை வருமா? மூக்கு வழி சிரித்தான். படுக்கை அறை ரூம் பிரஷ்ணருக்கான வாசனையை கிளர்ச்சியூட்டக்கூடியதாக தேர்வு செய்ய வேண்டும்.
No comments :
Post a Comment