ஜெ.டி சாலிங்கர் எனும் ஆநாமதேய ஆசாமி Catcher in the Rye எனும் 200 பக்க நாவலை எழுதி 80 வருடங்களுக்கு முன் அதிவிரைவில் உலகப்புகழ் பெற்றார். இப்போதும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட இந்நூலின் பிரதிகள் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. பின்னர் சாலிங்கர் குறிப்பிடும்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்பது மட்டுமல்ல அவர் தன்னைப் பற்றி பொது அரங்கில் எந்த தனிப்பட்ட வாழ்வு சார் அடையாளத்தையும் விட்டுச் செல்லாமல், மீடியாவிடம் இருந்து பதுங்கி நாவலுக்கு முன்பான ஆநாமதேய ஆசாமியாகவே வாழ்ந்து மறைந்தார். சாலிங்கரின் தொடர்ந்த புகழுக்கு இந்த புதிரான தன்னடக்க வாழ்வும் ஒரு காரணம். இன்றும் இந்நாவல் பல இளைஞர்களால் ஆர்வமாக படிக்கப்பட்டு ஒரு cult அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. அதாவது Catcher in the Rye படித்து ஆமோதிப்பவர்கள் தம்மை ஒருமித்த மன அமைப்பு கொண்டவர்களாக, வாழ்க்கை கொள்கை கொண்டவர்களாக, கருதிக் கொள்ளலாம். இந்நாவல் ஒரு பிரச்சனையை மட்டும் பேசவில்லை, வலுவான ஒரு வாழ்வியல் நிலைப்பாட்டை முன் வைக்கிறது. அதனாலேயே இந்நாவல் படித்து ரசிக்கக் கூடியதாக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார தரப்பாக, அதன் பதாகையாக, சின்னமாக உள்ளது. இவை இரண்டும் என்ன என்பதை பார்க்கலாம்.
அதற்கும் முன் மொழி பற்றி கொஞ்சம்.
சாலிங்கரின் இந்நாவல் அனைத்துத் தரப்பினராலும் படிக்கப்படுகிறது. அதாவது ஒரு நடைபாதை கடையில் திருட்டுப்பதிப்பிலும் கூட பரவலாக கிடைக்கக் கூடிய ஆனால் எலைட் மக்களும் படித்து பேசக் கூடிய வகை புத்தகம். இலக்கியத் தன்மை இருந்தாலும் எந்தவித பாசாங்கும் சிடுக்கான கதைகூறல் பாணியும் இல்லை என்பதால் Catcher in the Ryeயை யார் வேண்டுமானாலும் ஒரே நாளில் எளிதில் வாசித்து முடித்து விட முடியும். கதைசொல்லியே நேரடியாக கதை சொல்லும் முறை பயன்படுத்தப்படுவதால் ஒரு மேஜிக் நிகழ்கிறது. ஒரு சுயவழிபாட்டு மனநிலை கொண்ட குரல் சுவாரஸ்யமாக தன்னைப் பற்றியே பேசிக் கொண்டு செல்கையில் ஒரு கட்டத்தில் வாசகன் ஹிப்னாடிக் மனநிலைக்கு செல்கிறான். Catcher in the Ryeயில் விவரணைகள் குறைவு, அதிகமும் உரையாடல் தாம். நேரடியாக கதை சொல்கிற இடங்களில் கூட கதைசொல்லி வாசகனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறான். நாவலின் சரளத்தன்மை மற்றும் ஈர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
மற்றொரு விதத்தில் சாலிங்கர் மிக புத்திசாலித்தனமாக மொழியை பயன்படுத்துகிறார். நாவலின் நாயகன் ஹோல்டன் கொல்பீல்டு 16 வயது இளைஞன். பள்ளியில் எல்லா பாடங்களிலும் தோற்கும் அவனுக்கு ஆங்கிலம் நன்றாக வரும். ஆனால் அவன் புத்தகப் புழுவோ அரும்பி வரும் புத்திஜீவியோ அல்ல. ஆக சாலிங்கர் அவனை கெட்டவார்த்தைகள் சரளமாக உதிரும் கொச்சை மொழி பேச வைக்கிறார். இதுவரை எல்லாரும் செய்வது தான். ஆனால் சாலிங்கர் ரோல்டனை சில சொற்களை நாவல் முழுக்க திரும்ப திரும்ப பயன்படுத்த வைக்கிறார். உதாரணமாய் ஹோல்டன் தனக்கு பிடிக்காத மனிதர்கள், இடங்கள் மற்றும் விசயங்களை corny, phoney போன்ற சொற்களால் மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்துகிறான். இவற்றின் பொருள் “போலி” அல்லது “பாசாங்கானது” என்பதே. ரோல்டனால் போலியான எதையும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இப்படி சொற்களை மீள்பயன்படுத்துதல் ஒரு வெற்றிகரமான கவிதை உத்தி. ஒரு விசயத்தை நோக்கி நம் கவனத்தை குவிக்க, உக்கிரமான மனநிலைக்கு இட்டு செல்ல, நகைமுரண் ஏற்படுத்த இது உதவுகிறது. சாலிங்கர் மற்றொரு விசயத்தையும் உத்தேசிக்கிறார். அது மொழியின் குறைபாடு. ரோல்டனுக்கு உலகில் நிறைய விசயங்கள் பிடிக்கவில்லை தாம். ஆனால் அவன் பிரச்சனை இந்த பிடிக்காத உலகம் அல்ல, அதை தெளிவாக மொழியில் வடிக்க தன்னால் முடியவில்லை என்பதே. அவன் தொடர்ந்து தன் குறைபட்ட மொழியுடன் போராடுகிறான், கையில் மொண்டு வழியில் நீரில் உலகையே பிரதிபலித்து பார்க்க தவிக்கிறான். உலகம் விரல்வழி ஓடு மறைகிறது. அவனது மொழிக்குறைபாடு என்பது குறைவான வார்த்தை வளம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. இந்த உலகின் எண்ணற்ற போலித்தனங்களை அளவிட்டு அறிந்து அதற்கான தர்க்கத்தை வடிவமைப்பதற்கான ஒரு சட்டகம் அவனிடம் இல்லை. அதனாலேயே அவன் தொடர்ந்து தன் தரப்புடன் உடன்படாதவர்களை “போலியானவர்கள்” (phoney, corny, fake) என்று வரையறுத்துக் கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு காக்காயாக பார்த்து கறுப்பு கறுப்பு என்கிறான். தான் எத்தனை எண்ணிய பிறகும் உலகின் காகங்கள் மீண்டும் மிண்டும் கறுப்பாகவே உள்ளது எண்ணி மேலும் தன்னையே நொந்து கொள்கிறான். உலகம் தீமையாக இருக்கிறது என்பதல்ல அவன் வருத்தம், ஏன் நன்மையாக மட்டும் இல்லை என்பதே. பின்னர் God of Small Thingsஇல் அருந்ததி ராய் பிரபலமாக்கிய இந்த மொழிநுட்பம் தான் சாலிங்கரை தனித்து காட்டுகிறது.
ரோல்டனுக்கு ஆலி என்றொரு தம்பி உண்டு. அவன் படுசுட்டி, வகுப்பில், வீட்டில் ரொம்ப பிரபலம். புத்திசாலி. அவன் ஒருநாள் திடீரென்று இறந்து போய் விடுகிறான். இந்த இழப்பின் வலி தாங்க முடியாமல் சின்ன ஹோல்டன் தன் முஷ்டியால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்குகிறான். மெல்ல அவன் உளவியல் ரீதியாக பாதிப்படைகிறான். அவன் பைத்தியமல்ல, ஆனால் பிரச்சனைக்குரிய ஆளுமை கொண்டவன். அவனால் பிறருடன் எளிதில் ஒத்துப் போக முடியாது. தனது பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், வகுப்பு மற்றும் விடுதி தோழர்கள், காதலிகள் ஆகியோர் மீது அவனுக்கு உள்ள புகார் அவர்கள் நேர்மையாக வெளிப்படையாக இல்லை என்பது. நாவலின் முக்கியமான சுவாரஸ்யம் சாலிங்கர் பல தரப்பட்ட மனிதர்கள் தங்களது சுயபிரேமை அல்லது பாதுகாப்பின்மை காரணமாக எப்படியெல்லாம் அசட்டுத்தனமாக அபத்தமாக நடந்து கொள்கிறார்கள் என்பது. கர்த்தரில் இருந்து அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், ஒழுக்கவாதிகள், கலைஞர்கள், குழந்தைகள் வரை எப்படி தம்மைத் தாமே வேடிக்கையாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று நுட்பமான அங்கதத்துடன் விவரிக்கிறார். ஓரளவுக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவர்களை கூட சற்றே கரிப்பு கலந்த சாலிங்கரின் நகைச்சுவை சத்தமாக பல இடங்களில் சிரிக்க வைக்கும். ஒருவித மனித அவலத்தை இவ்வளவு நகைச்சுவையுடன் சொல்ல முடிந்திருப்பதே சாலிங்கரின் சாதனை. மனித வெறுப்பின் விளிம்பில் குதிகால் ஊன்றி நிற்கிற அங்கதம் இது. கலாச்சார நுண்ணுணர்வும், புத்திசாலித்தனமும் இல்லாத மந்தைமனநிலை கொண்ட மக்களை விடாமல் கேலி செய்யும் நீட்சேயிய எலைட்டிஸ்டு மனநிலை இந்நாவலில் உள்ளது. சாலிங்கரின் விமர்சகர்களின் முக்கிய குற்றச்சாட்டு இது தான் என்றாலும் நாவலை கொண்டாடுபவர்களின் முக்கிய கவர்ச்சியும் அதுவே. மந்தை மனிதர்களை வெறுக்கும் ஒவ்வொரு மேட்டுக்குடி புத்திஜீவியும் ரோல்டனில் தன்னை காண முடியும்.
அபத்தத்தின் மீதான அங்கதம் நாவலின் ஒரு பகுதி மட்டுமே. இந்நாவல் மற்றொரு பிரச்சனையை பேசுகிறது. இதன் இலக்கியத்தனம் அங்கிருந்தே தோன்றுகிறது. அது குழந்தையாக இருக்க ஆசைப்படும் அதே வேளை வளர்ந்து விட அவசரமும் படும் ஒரு பதின்வயது சிறுவனின் சுயமுரண். ஹோல்டன் தான் கிறித்துவத்தை அங்கீகரிக்கவில்லை, ஆனால் கிறுஸ்து தனக்கு பிடித்தமானவர் என்கிறான். அவனுக்கு புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும், ஆனால் பள்ளிக் கூட பாடங்கள் வேண்டாம். ஒரு வளர்ந்த நபரின் ஆதரவு வேண்டும், ஆனால் அது பெற்றோராகவோ, குடும்பமாகவோ, ஆசிரியராகவோ வேண்டாம். அவன் டேட்டிங் செல்லும் பெண்களை புணர முயன்று தோற்கிறான். ஆனால் தனக்குத் தெரிந்த பெண்ணை டேட்டிங்கின் போது தனது நண்பன் ஸ்டுராடுலெட்டர் புணர்ந்திருக்கக் கூடும் என்ற தகவல் அவனுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. ஹோட்டலில் ஒரு விபச்சாரியை அழைத்து விட்டு ஆனால் அவளிடம் உறவு கொள்ளத் தயங்கி பின்னர் பணம் கொடுத்து அனுப்பி விடுகிறான். தொடர்ந்து யாராவது தன்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அப்பெண் கூட ஐந்து டாலர் கேட்க மறுத்து அவளது மாமாவால் அடித்து பணம் பிடுங்கப்படுகிறான். பண விசயத்தில் பொதுவான கரார் அல்லாத அவன் இது பல சமயங்களில் அநாவசியமான சண்டைகள் இழுத்து அடிவாங்கி அதை ரகசியமாய் சிலாகிக்கிறான்.
பள்ளிக்கூடத்தில் இருந்து ஹோல்டனை வெளியேற்றி விட அத்தகவல் தன் வீட்டுக்கு போன பின்னர் தான் அங்கு சென்றடைய வேண்டும் என்று மூன்று நாட்கள் வெளியே சுற்றுகிறான். அந்நாட்களில் நிகழும் சம்பங்கள் தான் நாவல். இம்மூன்று நாட்களும் ஹோல்டன் ஒரு பேச்சுத் துணைக்காத தான் ஏங்கியபடியே இருக்கிறான். ஆனால் யாரிடமாவது பேச ஆரம்பித்தால் ஒன்றில் அவர்களின் சுயதம்பட்டமோ, பாவனைகளோ அவனை எரிச்சலடைய வைக்கிறது; அல்லது அவன் தன் பிரச்சனைகளை பற்றி குழப்பமாக பேசி அவர்களை எரிச்சலடைய வைக்கிறான். இப்படி அவனால் யாரிடமும் தொடர்புறுத்த முடியாமல் போகிறது. ஒருவேளை அறிவுஜீவிகளால் தன்னை புரிந்து கொள்ள முடியும் என்று இருவரை நாடுகிறான். ஒருவர் லூசெ. அவர் அவனது பள்ளிக்கூடத்தில் மாணவர் ஆலோசகராக இருந்தவர். அவர் ரோல்டனை உளவியல் ஆலோசனை பெற சொல்லி அவனை தொடர்ந்து கவனிக்கும் பொறுமை இல்லாமல் கிளம்புகிறார். மற்றவர் அண்டோலினி. அவர் ரோல்டனின் முன்னாள் ஆசிரியர். அவர் வீட்டுக்கு சென்று உரையாடும் பகுதி நாவலில் மிக முக்கியமானது. இவ்வுரையாடல் வழி சாலிங்கர் ரோல்டனின் பிரச்சனை என்ன என்பது பற்றி வெளிப்படையான ஒரு விவாதம் வைக்கிறார்.
ரோல்டனின் மனக்கசப்புக்கு காரணம் அவன் உலகின் தீமையை கவனிக்கிறான், அதன் ஆன்மீக, கலாச்சார சீரழிவை பற்றி கவலைப்படுகிறான் என்பதே. அவனது மனத்தெளிவே அவனது வேதனைக்கு காரணமாகிறது. இதில் இருந்து மீள அவன் நடைமுறை வாழ்வின் விதிகளை பின்பற்றி வாழ்ந்து பின் தனக்கான வாழ்வுமுறையை பின்பற்றும் சுதந்திரத்தை அதில் இருந்து பெற வேண்டும். கல்வியின் வழி கிடைக்கும் அறிவு பயிற்சி அவனுக்கு தான் காணும் சீரழிவை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வை கண்டறிய பயன்படும். உலகின் பல மேதைகள் இதை செய்திருக்கிறார்கள். மனித குலம் பற்றி கரித்துக் கொட்டுவதுடன் அவர்கள் நிற்கவில்லை. அதைத் தாண்டி மனிதனின் சீர்கேட்டுக்கான ஆதார காரணத்தை சுட்டுவதற்காக அறிவின் சட்டகத்தை கல்வி மூலம் அடைந்து அவன் மேம்பட ஆலோசனைகளை முன்வைத்தனர். அப்படி செய்வதே ரோல்டனுக்கான விடிவாக இருக்கும். அவன் நடைமுறை வாழ்வை வாழ்ந்து அதனை வென்றால் மட்டுமே மனித குலத்துக்கு பயனுள்ளவனாவான். இல்லையேல் மனிதவெறுப்பு சுயவெறுப்பு முற்றி தன்னை தானே அவன் அழித்துக் கொள்வான். அல்லது தனது தரப்பு என்ன என்ற குழப்பத்துடன் மறைந்து போவான். இவ்வாறு ஆண்டோலினி விளக்குகிறார். பின்னர் அவ்விரவை அவன் ஆண்டோலினியின் வீட்டில் கழிக்கிறான். நள்ளிரவில் தன் தலையை யாரோ கோதுவது உணர்ந்து திடுக்கிட்டு எழுகிறான். ஆண்டோலினி ஒரு ஒருபால் உறவுக்காரர் என்பதும் அவர் தன்னை பயன்படுத்த முயல்கிறார் என்பதும் அறிந்து அவன் அவசரமாக அங்கிருந்து வெளியேறி இரவை ரெயில்வே நிலைய காத்திருப்பு அறையில் கழிக்கிறான். அப்போது அவனுக்கு தன் வாழ்வில் பலமுறை இவ்வாறு ஒருபால் உறவு மீறல்கள் தனக்கு பிறரால் நிகழ்ந்துள்ளது நினைவு வருகிறது. இந்த இடம் மற்றொரு பொருளில் யோசிக்கத்தக்கது.
நாவல் ரோல்டனின் பாதுகாப்பின்மையை தொடர்ந்து விவாதிக்கிறது. மிகச் சின்ன குழந்தைகளும் வளர்ந்தவர்களும் எப்போதும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இடைப்பட்டவர்கள் தாம் தொல்லைக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு தாம் யார் என்ற குழப்பமும் இருக்கிறது. ஹோல்டன் நாவலில் பல இடங்களில் மிக குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறான். பிறருடன் சண்டை வந்து மோதும் போது சத்தமாய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது, விடாமல் பிறரை வைவது, தனக்குத் தானே ஒரு பாத்திரமாக கற்பனை பண்ணி நடிப்பது, அவசியமின்றி பொய் சொல்வது என்ற பல குழந்தைத்தனங்கள். அதே வேளை தன்னை வளர்ந்தவனாக காட்டிக் கொள்ளவும் பிரயத்தனிக்கிறான். நாவல் முழுக்க அவன் ஏதாவது ஒரு தருணத்தில் மது அருந்த புகைபிடிக்க முயன்று இதனை சாதிக்கிறான். ஆனால் அதனால் அவன் அதையெல்லாம் ரசிக்கிறான் என்றில்லை; குடியும் புகையும் அவனுக்கு தன்னை வளர்ந்தவனாக காட்டிக் கொள்ள தேவைப்படுகின்றன. இப்படி இடைத்தரப்பட்டவர்களுக்கான நாவலாக Catcher in the Ryeக்கு வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு.
நாவலில் இரு காட்சிகள் ஒரு திறப்பாக அமைகின்றன. ஒன்று ஹோல்டன் தன் வீட்டுக்கு போகும் வழியில் ஒரு உணவகத்தில் மூன்று கன்னியாஸ்திரிகளை சந்திப்பது. அவர்கள் தம்மருகே ஒரு கூடையை வைத்திருக்கிறார்கள். பொதுவாக கிறித்துமஸின் போது அவர்கள் தெருவில் சென்று இந்த கூடையை காட்டி தானம் பெற்று ஏழை எளியோருக்காக செலவிடுவர். அன்று ஹோல்டன் பன்றிக்கறி தின்று கொண்டிருக்க கன்னியாஸ்திரிகள் எளிய உணவான பிரட் டோஸ்டும் காப்பியும் அருந்துகிறார்கள். கன்னியாஸ்திரிகளின் சுயமறுப்பு, எளிமை, வறுமை ஆகியவை அவனை வருத்துகிறது, நெகிழ்ச்சியடைய வைக்கிறது; அவன் தன்னிடம் இருந்து பத்து டாலர்கள் அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கிறான். மற்றொரு இடத்தில் ஹோல்டன் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேறின பின் என்ன செய்வது என்று யோசிக்கையில் பாதிரியாருக்கு படித்தால் என்ன என்று பரிசீலிக்கிறான். ஆனால் அவன் கத்தோலிக்கன் அல்ல என்பதால் அது முடியாது என்று தெரிய வருகிறது. இந்த முரண்பாட்டை கவனியுங்கள். மனித குலத்தை அதன் குறைபாடுகளின் பொருட்டு இவ்வளவு வெறுக்கும் ஹோல்டன் கருணையும் சேவையும் தான் வாழ்வின் உத்தமமான பணி என்று நினைக்கிறேன். மனிதர்களை உளமார வெறுப்பதும் உக்கிரமாய் நேசிப்பதும் எப்படியோ ஒரு புள்ளியில் இணைந்து கொள்கின்றன. நாவல் பல இடங்களில் தஸ்தாவஸ்கியை நினைவுறுத்துவதும் இப்படி வேதனையில் துடிக்கும் ஆன்மாவின் வெறுப்பும் அன்பும் ஒரே இடத்தில் ரோல்டனிடம் குடியிருப்பதால் தான்.
மற்றொரு இடம் ஹோல்டன் இறுதியாக தன் தங்கை பீபெயை பார்க்க வருவது. புதன் கிழமைக்கு முன்பே பள்ளியில் இருந்து வந்தது பெற்றோருக்கு தெரிந்தால் தான் வெளியேற்றப்பட்டதும் தெரிய வரும் என்பதால் அவன் இரவில் தனது எட்டு வயது தங்கையை ரகசியமாய் வந்து அவள் அறையில் சந்திக்கிறேன். அவர்களின் உரையாடல் மிக அற்புதமானது. வளர்ந்தவர்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட போலித்தனம் கொண்டவர்கள் தாம். ஆனால் அவர்களிடம் போலித்தனம் கூட இனிமையானது, சிலாகிக்கத்தக்கது என்கிறான் ஹோல்டன். பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்காக பீபெ அவனிடம் கோபித்து கொள்கிறாள். ஹோல்டன் அவளிடம் தான் மேற்குக்கு பயணித்து கவ்பாயாக வாழப் போவதாக சொல்கிறான். அவள் சொல்கிறாள் “அட அசடே உனக்கு குதிரை ஓட்டக் கூடத் தெரியாதே”
அவன் ஒருவழியாய் சுதாரிக்கிறான் “அதற்கென்ன குதிரை ஏற்றத்தை ரெண்டு நிமிடத்தில் படித்து விடலாம்”. இப்படி தன்னை ஒத்த தன்னிலும் மூத்தவர்களை சதா பகடி செய்து நிராகரிக்கும் ஹோல்டன் ஒரு எட்டு வயது பாப்பாவிடம் தொடர்ந்து தோற்கும் இடங்கள் மிக நெகிழ்ச்சியானவை. ஏனென்றால் அவனே அறியாமல் ஹோல்டன் அங்கு தன் தங்கையின் முன் ஒரு வளர்ந்தவரின் பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறான். அவள் என்ன சேட்டை செய்தாலும் சீண்டினாலும் “இந்த குழந்தைகளே இப்படித்தான்” என்ற பெரியவர்த்தனமாக சலித்துக் கொள்கிறான். பின்னர் மெல்ல மெல்ல இந்த பாத்திர மாற்றத்தினால் தான் அவன் ஆற்றுப்படுகிறான்.
அடுத்த நாள் அவன் ஊரை விட்டு போகும் முன் தன் தங்கையை அருங்காட்சியகத்தில் சந்திக்கிறான். பீபெ ஒரு பெரிய சூட்கேஸை கஷ்டப்பட்டு சுமந்து அவனிடத்து வருகிறாள். முந்தா நாள் ஸ்கூலுக்கு போய் ஒழுங்காய் படித்து டாக்டர், வக்கீல் போல் யாராவது ஆவது வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று அண்ணனுக்கு அறிவுரை சொன்னவள் இன்று மனம் மாறி “நான் பள்ளிக்கூடம் போக விரும்பவில்லை, உன் கூடவே வருகிறேன், என்னையும் அழைத்துக் கொண்டு போ” என்று அவனிடம் கெஞ்சுகிறாள். ஹோல்டன் திகைக்கிறான். அவனால் தங்கையின் முடிவை ஏற்க முடியவில்லை. ஏனெனில் முதன்முறையாக ஹோல்டன் தனக்குள் இருக்கும் வளர்ந்தவரின் மனம் முழுமையாக விழிப்பதை உணர்கிறான். தனது தங்கை பள்ளிக்கூடம் துறப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கடுமையுடன் அவளை திரும்ப போக அறிவுறுத்துகிறான். மறுக்க அவளை அடிக்கிறான். அவள் கோபித்துக் கொண்டு அவனிடம் பேச மறுக்கிறாள். அவன் சமாதானம் செய்கிறான் “வேண்டுமானால் இன்று மட்டும் வகுப்புக்கு மட்டம் போடு. ஆனால் நாளை முதல் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்ன சரியா” என்கிறான். அவள் மசிய தயாராக இல்லை. அவளை மிருகக்காட்சி சாலை, ராட்டினம் என்று அழைத்துப் போய் மகிழ்வித்து மெல்ல ஆற்றுப்படுத்துகிறான். தான் இதுவரை ஏற்க மறுத்து எதிர்த்து கலகம் செய்த அதே போலியான வாழ்வுக்கு தன் தங்கையை மட்டும் ஏன் வற்புறுத்துகிறோம் என்று அவன் யோசிக்கவே இல்லை. ஏனென்றால் அத்தருணத்தில் அவன் ஒரு பொறுப்புகளை ஏற்க வேண்டாத ஊர்சுற்றியோ மரபான சமூக சடங்குகளின் எதிர்ப்பாளனோ அல்ல, அவன் ஒரு அண்ணன். ஒரு பொறுப்பான வளர்ந்த சமூக உறுப்பினன். பின்னர் பீபெயை சமாதானப்படுத்தி பள்ளிக்கு திரும்ப செய்ய அவனும் வீட்டுக்கு திரும்பி தான் விரும்பாத நடைமுறை போலி வாழ்வை வாழ சம்மதிக்கிறான். புதிய பள்ளிக்கூடம், மனநோய் சிகிச்சை என மீண்டும் செக்கு சுழல்கிறது. இப்படி நாவல் முடிகிறது.
Catcher in the Rye என்பது ராபர்டு பெர்ன்ஸின் ஒரு கவிதையில் இருந்து பெறப்பட்டு சற்றே திரிக்கப்பட்ட ஒரு வரி. மலை மீதுள்ள ரை பயிர்கள் ஒரு வயல். அங்கு சின்ன குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். சில குழந்தைகள் மலையின் விளிம்புக்கு ஓடி வந்து விடும். அவர்களை விழாமல் காப்பாற்றும் வண்ணம் பிடித்து திரும்ப கொண்டு விடுவதே தன் பணி என்று தன் தங்கையிடம் ஒரு கற்பனை காட்சியை பற்றி ஹோல்டன் பேசும் போது சொல்கிறான். ஆக Catcher in the Rye என்பது ஹோல்டன் தான். பொதுவாக விமர்சகர்கள் இந்த மலை முகடு என்பது குழந்தைமையின் குறியீடு என்கிறார்கள். பருவமடைந்து குழந்தைகள் வளர்ந்தோரின் உலகுக்கு வந்து களங்கமுறுகிறார்கள். இதில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தனக்கொரு பணியை ஹோல்டன் நியமித்து கொள்கிறான். மற்றொரு காட்சியில் அவன் தன் தங்கையின் பள்ளியில் சில குறும்புக்காரர்கள் “fuck you” என்று சில இடங்களில் கிறுக்கி இருப்பதை கண்டு பதற்றப்பட்டு அதை அழிக்கிறான். பின்னர் அருங்காட்சியகத்தில் மம்மிகள் இருக்கும் இடத்திலும் இதே போல் வசைச்சொல் எழுதப்பட்டிருக்க “நாளை நான் செத்து சமாதியானாலும் அங்கும் என் கல்லறையில் வந்து இது போல் யாராவது fuck you என்று எழுதப்போகிறார்கள்” என்று பரிகாசமாய் கவலைப்படுகிறான். ஹோல்டன் ஒழுக்கவாதி அல்ல, ஆனால் அவன் உலகம் களங்கப்படுவது பற்றி ஓயாமல் கவலையுறுகிறான். இறுதியாக அவன் தங்கைக்காக தன் சுதந்திரத்தை தியாகம் செய்வதும் இப்படி களங்கமின்மையை காப்பாற்றுவதற்கு தான்.
ரோல்டனின் பிரச்சனை உலகம் போலியானது என்பதா அல்லது அதில் தன்னால் பங்கெடுக்க முடியவில்லை என்பதா என்ற கேள்வியை நுட்பமாக சாலிங்கர் எழுப்புகிறார். அவனது கதாபாத்திர மாற்றம் ஒரு புது பரிமாணத்தை வெளிப்படுத்தி Catcher in the Ryeஐ அதன் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.
No comments :
Post a Comment