Thursday, 26 January 2012

ஒரு மழை முடிந்த நாளில்


ஈரமும் சகதியும்
சிதறும் வாகன சக்கர சாக்கடையும்
மிச்சமுள்ள மழைத்துளிகளும்
அடையாளமாகிய இந்நாட்களில்
நாங்கள்
வீட்டில் அமர்ந்தபடி
சதா கொசுக்களை பற்றி
எச்சரிக்கையுணர்வுடன் இருக்கிறோம்

எக்கணமும்
ஏதாவதொரு கொசு
சருமத்தில் அமர்ந்து தீண்டும் எனும்
நுண்ணர்வுடன் விழித்திருக்கிறோம்

தூங்காத வேளைகளில்
கொசுக்கள் ஏன் நம்மிடம் வருவதில்லை
என வியக்கிறோம்

தூக்கத்தின் வீச்சம் அறிந்த கொசுக்கள்
அண்மையில் வட்டமிடும் போது
நமது வாசனை பற்றி
நமக்கே ஐயங்கள் தோன்றுகின்றன

கொசுக்கள் நம்மை பின் தொடர்வது
உண்மையல்ல
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்கையில்
மற்றொரு கொசு தான்
விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது
அதே பிடிவாதத்துடன்
இடத்தில் இருந்து இடத்திற்கு
என்பதை விட
கொசுவில் இருந்து மற்றொரு கொசுவிற்கு தான்
செல்கிறோம்
கொசுக்கள் கூட்டமாக இருந்தாலும்
தனித்தனியாக தெரிவது
இதனால் தான்

அப்போதெல்லாம்
ஒரு ஜன்னல் திறப்பின் வழி
மழையினால் பிசுபிசுப்பாகும்
ஒரு வனமிருகம் போல் புரண்டு படுக்கும்
மக்கள் திரளின்
நெருக்கடியை,
குழப்பத்தை,
தப்பித்து செல்ல முடியாமையை
பார்த்து
ஆசுவாசம் கொள்கிறோம்

எங்களது நாய்
கொசுக்களை
கடிக்க முயன்று
ஏமாற்றத்தில் அழுகிறது
ஓடி ஓடி களைக்கிறது

பூனைகள்
சுவரில் தெரிவது
கொசுக்களின் நிழல் என
தெரியாமல்
அறைந்து விளையாடுகின்றன

திடீரென்று
ஒரு பருவத்தின் விருந்தாளியாய்
வீட்டுக்குள் பிரவேசித்த பூச்சிகளை
வரவேற்பதா விரட்டுவதா
என்று அவற்றுக்கு தெரியவில்லை

மெல்ல மெல்ல வெயில் திரும்பிய
ஒரு நாளில்
துணிகளை காயப் போட்டு
படுக்கையை உதறிப் போட்டு
பொருட்கள் மேல் வந்து அமரும்
தூசியை
ஆர்வமாய் கவனித்த படி
ஜன்னல்களை திறந்து விடும் போது
மெல்லிய குற்றவுணர்வு அடைகிறோம்
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates