ஒரு பிரபலத்தை பின்னால் இருந்து கவனிக்கும் போது
இன்னும் இன்னும்
தெளிவாகிறது
அவர் முகம்
தன்னை சூழ்ந்துள்ள
ஒவ்வொரு முகத்தையும்
கிள்ளி சூடி
அவர் தப்பித்து விடைபெறுகையில்
அவரது இருப்பு
யாருக்கும் தொந்தரவாவதில்லை
ஒரு பிரபலத்தின்
ஒவ்வொரு தந்திரத்தையும்
அறிந்து விட்ட நம்பிக்கையில்
அவர் முன்னே
போய் நிற்கிறோம்
அவர் வெறுமையாய்
புன்னகைக்கிறார்
பிறகு
ஏன் அவரைப் போல் புன்னகைத்து
அவருக்கும் உலகிற்கும் இடையே
ஒரு தடை என
நாம் நிற்கிறோம்
என்று புகார் செய்கிறார்
அவரைப் போல்
பேசி
பழகி
சைகைகள் காட்டி
அன்பு செய்து
முரண்பட்டு
தவறுகளையும் சரிகளையும் மாற்றி மாற்றி செய்து
நாம்
அவரை தன் பாட்டுக்கு வாழ விடாமல்
பெரும் தொந்தரவாக ஆவதாக
விசனிக்கிறார்
உடனே
மீண்டும்
முதுகுப் பக்கமாய் விலகி நின்று
சகஜமாக உரையாடலை தொடர்கிறோம்
நமக்குப் பின் எத்தனை தலைகள்!
(உயிரோசையில் வெளியானது)
(உயிரோசையில் வெளியானது)
No comments :
Post a Comment