இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்
எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை
இன்று உன்னை வாழ்த்தியவர்களை
அழுத்தமாய் நினைவில் வைக்கிறாய்
அவர்கள் உன் நினைவில் கடந்து போனவர்கள்
உன் முகத்தை நிமிர்ந்து நோக்கும் அவகாசம் அற்றவர்கள்
எத்தனையோ பெயர்களில் ஒன்றாக உன்னைக் கருதி உரையாடுபவர்கள்
ம்ஹும் இன்று உனக்கு விரோதிகளோ நண்பர்களோ இல்லை
இந்த நாளில் உன்னைச் சுற்றி
வாழ்த்துகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
இந்த நாளுக்காக அவ்வளவு
தயாராக இருந்தாய்
இந்த நாள் உனக்காகவே அச்சடிக்கப்பட்டு
வெதுவெதுப்பாய்
உன் உள்ளங்கையில் காத்திருக்கிறது
இந்த நாள் முடியும் முன்
வாழ்த்தினவர்களுக்கு
அவசர அவசரமாய் நன்றி
சொல்லிக் கொண்டு வருகிறாய்
உன் செல்போன் ஓயவில்லை
குறுஞ்செய்தி பெட்டி வழிகிறது
முகநூல் பக்கம் ஒரு சரம் போல் நீண்டு செல்கிறது
இன்று நீ
களைக்கவே மாட்டாய்
இன்றைய நாள்
உனக்கும் வாழ்த்துகிறவர்களுக்கும் இடையிலானது
இன்றைய நாள்
மெல்ல மங்கி இருண்டு
கேக்கின் கடைசி துண்டை
நீ வாயில் மெல்லும் போது
வைனின் இறுதித் துளியை
நுனிநாவில் வழிய விடும் போது
நீ ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே எண்ணுகிறாய்
இதோ கடிகார முள்
நாளின் இறுதி விநாடியை கடக்கும் போது
முதன்முறை அக்களைப்பை உணர்கிறாய்
இந்த முப்பது வருடங்களாய்
உணர்ந்த களைப்பை உணர்கிறாய்
ஒரே ஒரு பிறந்தநாளில் கடந்து விடக் கூடிய அக்களைப்பை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வெறும் களைப்பு என
உன் கண்ணாடியிடம் கூறி விட்டு
அரைதூக்கத்தில் விழுகிறாய்
ஆனால் அதற்கு முன்
அத்தனை வாழ்த்து செய்திகளையும் நினைவுகளையும் எண்ணிப் பார்த்து
கோப்பில் இட்டு மூடுகிறாய்
பரிசுகளை பரணில் பத்திரப்படுத்துகிறாய்
கசங்கிப் போன புத்தாடையை
அழுக்குத்துணி குவியல் மீது வைக்கிறாய்
வியர்வை வீச்சத்துடன் பிசுபிசுப்புடன்
ஏப்பங்களுடன் கண்ணெரிச்சலுடன் -
களைப்பு முழுமையாய்
மூடிக் கொள்கிறது
கடைசியாக ஓர் அழைப்பு
தாமதமாய் வாழ்த்துவதற்கு மன்னிப்பு கேட்டபடி
ஒரு பரிச்சயக் குரல்
ஒரு முழுநாளின் அலுப்புக்கு பின்னரும் மிச்சமுள்ள
சின்ன அன்புடன்.
“நேற்று முடிந்து போயிற்றே” என்கிறாய்
சின்ன வருத்தத்துடன்.
“எங்கே இன்னும் ஒரு நிமிடம் ஒரு நொடி இருக்கிறதே
என் கடிகாரத்தில்” என அங்கிருந்து நினைவுறுத்தப்படுகிறது
சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்ள
“நன்றி” கூறுகிறாய்
அப்போது
கண்ணில் திரண்ட
அத்துளிக்கு
அர்த்தமே
விளங்கவில்லை
உனக்கு.
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே
என உன்னையே கடிந்து கொள்வதன்றி
வேறெதுவும் தோன்றவில்லை
உனக்கு.