(மூன்று வாரங்களுக்கு முன் எழுதினது)
இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் அதன் கீழ்ஸ்தாயை அடைந்து விக்கி விக்கி நிற்கிறது. அவர்களுக்கு எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை துவங்குவது போன்ற இன்னும் பல புரட்சிகர முடிவுகளை எடுத்து போராட்டத்தை முன்னெடுக்க பார்க்கிறார்கள். சரியான கொள்கை பின்னணி இல்லாத இப்போராட்டம் அனுமார் வால் பற்றிக் கொண்டது போல இப்படித் தான் முடியும் என பலரும் எதிர்பார்த்தோம். இப்போது நாம் இந்த போராட்டத்தை எப்படி அணுகுவது, இதன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
தமிழகத்தில் ரொம்ப காலத்துக்குப் பிறகு மீண்டும் மக்கள் பங்களிப்புடன் ஒரு போராட்ட இயக்கம் உண்டானது என்பது உற்சாகத்துக்குரியது. போராட்டங்கள் மக்களுக்கு அரசியல் பிரக்ஞை ஏற்படுத்தும். அரசியல் ஈடுபாடு ஏற்படுத்தும். இந்தி எதிர்ப்பு போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறை இன்றும் ஒரு குறைந்தபட்ச அரசியல் அறிவுடன் உள்ளதை பார்க்கிறோம். முழுக்க முழுக்க அரசியல் சுரணையற்ற ஒரு மத்திய வர்க்கத்தின் மத்தியில் சின்ன அளவிலான இன உணர்வு, தமிழ்ப்பெயரிடுவது, பெரியாரியம், சாதி, மத எதிர்ப்பு என அவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் (என்ன மனதளவில் நாற்பது வருடத்துக்கு முன்பு தான் நிற்கிறார்கள்). எதிர்ப்பு இயக்கங்களின் கொடையாகத் தான் இந்த அரசியல் உணர்வை பார்க்க வேண்டும்.
லட்சியபூர்வமாக அரசியலும் பொதுவாழ்வும் அன்றாட வாழ்வின் பகுதியாக இருக்க வேண்டும். கேரளாவில் போல. அங்கு வலுவான தொழிற்சங்கங்களும் இடதுசாரிகளின் வெற்றியும் கல்வியறிவும் இன்னபிற நானறியாத சமாச்சாரங்களும் மக்களுக்குள் தனிநபர் வழிபாடற்ற, சினிமா மோகமற்ற அரசியல் உணர்வை உருவாக்கி இருக்கிறது. திருவனந்தபுரம் கலக்டிரேட்டின் முன் யாராவது தினமும் போராட்டம் பண்ணுவதை பார்க்க முடியும். சமூக வளர்ச்சி, பொதுமக்கள் உரிமை சார்ந்த ஒரு அரசியலுக்கு அங்கு மதிப்புள்ளது. இங்குள்ள பற்பல அரசியல் தில்லுமுல்லுகளும், பிரிவினைகளும் அங்குண்டு என்றாலும் அங்கு ஒரு தலைவரின் முகத்துக்காக சினிமா பிம்பத்துக்காக ஓட்டுப்போடும் வழக்கம் இல்லை. இதன் விளைவாக குடும்ப அரசியலும் ஜாதி பிரதிநுத்துவமும் ஓட்டை தீர்மானிக்கும் காரணியாக உருவாகவில்லை. மக்கள் உணர்வுகளை முன்னெடுக்கும் ஒரு நிர்பந்தம் அங்கு அரசியல்வாதிகளுக்கு உண்டு. இத்தாலிய கடற்படையினர் இரு மீனவர்களை கொன்ற சம்பவம் நல்ல உதாரணம்.
தமிழகத்தில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். இங்கே ஒரு சின்ன அசைவு கூட பொதுமக்கள் தரப்பிலோ மீடியாவிலோ இல்லை. ஆனால் கேரளாவில் இரு கொலைகளுக்காக தேசிய ஊடகங்களையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். கொலைகாரர்களை கைது செய்து விசாரணைக்கு உற்படுத்தினார்கள். அவர்கள் ஏமாற்றி ஊரில் போய் இருந்து இந்தியாவுக்கு வரமறுத்த போது அன்று மாலையே உம்மன் சாண்டி தில்லிக்கு விமானம் மூலம் கிளம்பிப் போய் பிரதமருக்கு நெருக்கடி கொடுத்தார். உடனே பிரதமர், மந்திரிகள் தரப்பில் இருந்து இத்தாலியை கண்டித்து அறிக்கைகள் பறந்தன. நாம் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அறிக்கையில் சேர்க்க ஒரு மாதத்துக்கு மேலாக போராடினோம். மத்தியில் கண்டு கொண்டார்களா? தேசிய மீடியா மாநில இனவெறி என போராட்டங்களை கேலி பேசியது. ஏன் இந்த இரட்டை நிலை?
ஒன்று கேரளாவில் தேசிய கட்சிகளின் வளர்ச்சி அம்மாநில மக்களுக்கு தேசிய அளவிலான அதிகாரத்தை கொடுக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டங்கள் அல்லோலப்பட்டதை பார்த்தோம். ஆக தேசிய கட்சிகளின் ஓட்டுத்தேவை மட்டுமல்ல மக்களுக்கு மாநில தலைவர்கள் மீதுள்ள கட்டுப்பாடும் முக்கியம். ஆம், தமிழகத்தில் தலைவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஆனால் அசல் மக்களாட்சியில் இது நேர்மாறாக நடக்க வேண்டும். கலைஞரையும் ஜெயலலிதாவையும் போல தலைவர்கள் கொள்கை உறுதிப்பாடு இல்லாமல் சந்தர்ப்பவாத முடிவுகள் எடுத்தால் மக்கள் ஏமாறும் நிலை இருக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் நாம் செய்யும் தவறு கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஆட்சியை அளிப்பது தான். இதற்கு காரணம் கழக பக்தி. மீடியாவில், சினிமாவில், அரசு அதிகாரிகள், பொதும்மக்களிடத்தில் கழகங்கள் மீது பக்தி இன்றும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. பத்திரிகைகள் திமுக அதிகமுக என பிரிந்து கிடக்கின்றன. சாதி அரசியல் மட்டும் தான் கடந்த பத்து வருடங்களில் இதில் வந்துள்ள ஒரே மாறுதல். சாதிக் கட்சிகளும் பணம் வாங்கிக் கொண்டு கழகங்களின் நிழலில் இளைப்பாறி மக்களை ஏமாற்றின. இந்த தலைவர் வழிபாட்டினால் தான் தமிழக மக்களுக்கு என்று ஒன்றுபட்ட ஒரு அரசியல் நோக்கம் இல்லாமல் போயிற்று. அரசியல் என்றாலே கலைஞர் vs ஜெயா என்றானது தான் தமிழக வரலாற்றின் மிகப்பெரிய துயரம்.
விளைவாக எந்த மக்கள் பிரச்சனை வரும் போது நம் அரசியல்தலைவர்கள் ஒருங்கிணைந்து போராட மறுக்கிறார்கள். கர்நாடக நதிநீர் பங்கீடு பிரச்சனை வந்த போது அங்கு பா.ஜ.கவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியதை பார்த்தோம். ஆனால் தமிழகத்தில் கழகங்கள் இதனால் எதிர்த்தரப்புக்கு எந்த நலனும் கிடைத்துவிடக் கூடாதே எனத் தான் யோசித்தன.
கேரள, கன்னட மக்களும் நம்மைப் போல திராவிட இனம் தான். ஆனால் அவர்கள் இன உணர்வு அரசியலில் தம்மை இழந்து விடவில்லை. அதனால் தான் அங்கு வலுவான அரசியல் பிரக்ஞை செயல்படுகிறது. உண்மையில் நாம் இன்று பார்ப்பது தமிழ் தேசியத்தின் தோல்வி தான்.
தமிழ் தேசியம் நம்மை மக்களின் பொதுவான அன்றாட பிரச்சனைகளுக்காக அன்றி, பண்பாட்டு அடையாளங்களுக்காக போராட தூண்டுகிறது. ஆனால் பண்பாடு நம்மை துப்பாக்கி ரவைகளிடம் இருந்து காப்பாற்றாது, சோறு போடாது, வளர்ச்சித் திட்டங்கள் அமைக்காது. இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சமீபத்திய இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு நல்ல உதாரணம். ஒரு போராட்டம் என்ற அளவில் உள்ளதைத் தவிர இவற்றுக்கு வேறு பிரயோஜனமில்லை. ஒரு பண்பாட்டு சின்னத்தைக் கொண்டு மக்களை இணைக்க உதவும் இவை. ஆனால் இணைத்த மக்களை வைத்து அடுத்த போராட்டங்களை நடத்த திராணி இருக்காது. ஏனென்றால் பொது நலனை அடிப்படையாக கொண்ட கொள்கைத் திட்டங்கள் தமிழ் தேசியத்துக்கு இல்லை. உதாரணமாக கடந்த பத்து இருபது வருடங்களில் தமிழ்தேசியவாதிகள் விலைவாசி உயர்வு, இலவச கல்வி, ஊழல், விவசாய நில ஆக்கிரமிப்பு, நில மாபியா, கொத்தடிமை கொடுமை போன்ற ஏதாவது ஒரு விசயத்துகாக போராடி பார்த்திருக்கிறீர்களா?
தமிழ் தேசியத்தின் இன்னொரு சிக்கல் அது நம்முடைய உள்ளார்ந்த வேறுபாடுகளை மூடி மறைக்கும் ஒரு பாசாங்கு அமைப்பு என்பது. தமிழர்கள் நூறு நூறு சாதி வேறுபாடுகளுக்குள் பிரிந்து கிடைகிறார்கள். தமிழ் என்கிற உணர்ச்சிகர அடையாளம் அவர்களை மேம்போக்காக இணைக்கிறது. ஆனால் அதற்கான காலாவதி முடிந்ததும் அவர்கள் மறுபடி கலைந்து போவார்கள். இப்போதைய மாணவர் போராட்டத்தை லைம் ஜூஸ் குடித்து முடித்து வைக்காமல் மற்றொரு போராட்டம் மூலம் புதுப்பிக்கலாமே என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன். உதாரணமாய், மீனவர் கொலைகளை எடுக்கலாமே? “அது முடியாது. மீனவர் என்றால் தனிசாதி. அவர்களுக்காக பிற சாதி மாணவர்கள் ஒன்று திரள மாட்டார்கள்” என்றார். இது இப்படி இருக்க தர்மபுரி கலவரத்துகாக போராடுவதை எல்லாம் யோசிக்கவே முடியாது. சரி “இலவச படிப்பை கோரி அவர்கள் புதிதாய் போராடலாமே?” என்றேன். ”அதுவும் முடியாது. மத்திய, மேல் வர்க்க மாணவர்கள் இலவச கல்விக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றார். அது மட்டுமல்ல இலவச கல்விக்கான போராட்டம் என்றால் புதிய தலைமுறை போன்ற சானல்களில் அது பற்றி மூச்சே விட மாட்டார்கள். கணிசமான கல்லூரிகளை அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் நடத்துவதால், அவர்களின் விளம்பரங்கள் முக்கியம் என்பதால் மீடியா ஆதரவும் கிடைக்காது, காவல் துறையும் கடுமையாய் ஒடுக்கும். ஆனால் அடிப்படை பிரச்சனை மாணவரிடமே ஒற்றுமை இருக்காது என்பது என்றார்.
இந்த பிரச்சனைகளை கடந்து போக மாணவர்களுக்கு ஒரு கருத்தியல் பிடிமானம் இருக்க வேண்டும். நல்ல அரசியல் தெளிவு உள்ள தலைவர் வேண்டும். போராட்டத்தை மக்கள் பிரச்சனைகள் நோக்கி திருப்ப வேண்டும். வெறும் உணர்ச்சிகள் நம்மை இந்தி ஒழிக என்றும் இலங்கை ஒழிக என்றும் மட்டுமே கத்த வைக்கும். முதலில் நம் உலைகளில் தீ எரிகிறதா என்று பார்க்க வேண்டும். உணர்வுத் தீ அல்ல வயிற்றில் எரியும் தீ தான் முக்கியம். தமிழகம் போலி உணர்வுகளை மறந்து நடைமுறை அரசியலுக்கு வர வேண்டும். ஒரு துவக்கத்துக்கு, மீனவர் படுகொலைகளை கண்டித்து உண்ணா விரதம் இருப்போம். அடுத்து ஒவ்வொரு மக்கள் பிரச்சனையாக கையில் எடுப்போம்.
No comments :
Post a Comment