“பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்”
- விக்கிரமாதித்யன்
மண்மாதிரி இருப்பது என விக்கிரமாதித்யன் சுரணைகெட்டத்தனத்தை குறிக்கிறார். எனக்கு இன்னொன்று தோன்றுகிறது.
மோகன்லாலின் வெற்றியை பற்றி குறிப்பிடும் போது இயக்குநர் பிரியதர்ஷன் அவருக்கு ஒரு அப்பாவித்தனமான முகம் வாய்த்தது அனுகூலம் என்கிறார். அந்த முகத்தை கொண்டு சீரியஸாக நடித்தாலும் நகைச்சுவை பண்ணினாலும் மக்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது. தமிழில் இது ரஜினிக்கும் பொருந்தும். அவர் பண்ணுகிற அதே ஸ்டைலை கமல் செய்தால் நமக்கு அது அலட்டலாக தோன்றி எரிச்சல் தருகிறது. எல்லாத்துக்கும் முகம் தான் காரணம்.
அன்றாட வாழ்விலும் இது போல் அப்பாவி முகம் கிடைத்தால் நல்லது. என்ன தான் கிரிமினல் வேலை பண்ணினாலும் ஜனம் சீக்கிரம் நம்பி விடும். எவ்வளவு தான் புத்திசாலியாய் இருந்தாலும் அது சட்டென்று வெளியே தோன்றினால் உடன் இருப்பவர்கள் நம்மை வெறுப்பார்கள். புத்திசாலித்தனத்தை மறைக்க கற்க வேண்டும். அதற்கென்று முகத்தை மாற்ற முடியாதல்லவா!
சராசரிகள் புத்திசாலிகளை பார்த்து அஞ்சுகிறார்கள். எதிரிகளை கூட விட்டு விடுவார்கள். ஆனால் உங்களை தேடி தேடி அழிப்பார்கள். அதனால் சராசரிகளால் காரியம் ஆக வேண்டிய போது மண்ணைப் போல் இரு! அதற்குள் விதை, புதையல், கண்ணி வெடி என்னவேண்டுனாலும் இருக்கலாம். ஆனால் மேலாக மண்ணைப் போல் இரு.
என்னவாக இருந்தாலும் மண்ணாகித்தான் தானே போகப்போகிறோம்...
ReplyDeleteஎட்டுத்திக்கும் சராசரிகள் சூழ்ந்திருக்க, தன் சுயத்தை நிறுத்திக் கொள்ள தத்தளிப்பவனின் கையறு நிலையைச் சுட்டும் பதிவு.
ReplyDeleteஉங்கள் பதிவின் நனவோடையில் விக்கிரமாதித்தனின் கவிதையை நகர்த்திச் சென்ற பரிசோதனையின் அபத்த விளைவு வருமாறு.
முகம்
பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்
பூமியில்
பொய் பேசி
திருடி
வஞ்சனை செய்து
நன்றி கெட்டு
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்
பூமியில்
முட்டாள் உயரதிகாரியிடமும்
அகங்காரம் கொண்ட அரசியல்வாதியிடமும்
நாணயமற்ற வியாபாரியிடமும்
கருணையற்ற மருத்துவனிடமும்
அன்பில்லாத் துணையிடம்
கூட இருந்து
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்.
அன்புடன்