புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர்.
பொதுவாக இன்று இன/மத அழித்தொழிப்புகள் குறித்த வினா எழுப்பப்படும் போது மறுதரப்பு எய்கிற மாமூல் ஆயுதம் இது: நீங்களும் குற்றம் செய்யவில்லையா?
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இரு குற்றங்கள் ஒரு சரியாகி விடாது. தவறு என்றுமே தவறு தான்.
புலிகள் செய்தது தவறென்பதை நாம் மறுக்கப் போவதில்லை. ஆனால் அத்தவறுக்கு பதில் கூற அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முடியாது. ஆக, அதைப் பற்றி இனி பேசுவதிலும் பொருளில்லை.
சிங்களப்படை தளபதிகளும் ராகபக்ஷேவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். இது மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை. முன்பு ஜெயலலிதா கூறியது போல சிலர் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என இதற்கு நியாயம் பேசுகிறார்கள். ஆனால் உலகம் முழுக்க போர்க்குற்றங்களுக்கு தலைவர்களும், ஜனாதிபதிகளும், தளபதிகளும் பதில் சொல்லி தண்டனை அனுபவித்தே இருக்கிறார்கள். யாரும் இதுவரை உலக சமூகத்தால் மன்னிக்கப்பட்டது இல்லை. ராஜபக்ஷேவும் ஒரு நாள் தன் பாவங்களை கழுவி ஆக வேண்டும்.
சமீபத்தில் என்னுடைய முகநூலில் காவிப்படையினர் ஏவிய மும்பை கலவரத்தைப் பற்றின காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதற்கு என் இளம்பருவ நண்பன் ஒருவன் “கூட கோத்ரா வன்முறை படங்களையும் நீ பகிர்ந்து பாரேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறான். கோத்ரா உண்மையில் ஒரு மதவாத தாக்குதால் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மும்பையில் அப்பாவி மக்களை பா.ஜ.க கொன்றதை கோத்ராவால் நியாயப்படுத்த முயல்வது படு அபத்தம். ஒரு விவாதத்தில் கண்ணுக்கு கண் கேட்பவர்கள் ஒரு பண்பட்ட நாட்டில் வாழும் தகுதி அற்றவர்கள்.
சுருக்கமாக, புலிகளுக்கும் ராஜ பக்ஷேவின் மனித உரிமை மீறல்களுக்கும் சம்மந்தமில்லை. புலிகள் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும் இலங்கை தன் கழுத்தை பலி பீடத்தில் வைத்து தான் ஆக வேண்டும்!
No comments :
Post a Comment