டி.வி விவாதங்களில் அவ்வப்போதும், எப்போதும் தலைகாட்டும் நண்பர்களைத் தெரியும். நானும் சிலமுறை தோன்றியிருக்கிறேன். அப்போது எனக்கு இரண்டு கேள்விகள் தோன்றும்.
1. இங்கு நான் ஏன் இருக்க வேண்டும்?
2. எனக்கு என்ன பயன்?
ஏன்?
நண்பர் வட்டத்தில் கொஞ்சம் புத்திசாலியான ஆட்களையே பார்த்து பார்த்து ”நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் தான் நிஜமான பொதுஜனத்தை பார்க்க முடிகிறது. பலர் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள், நம்மை விட பணக்காரர்கள், சமூகத்தில் நம்மை விட உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள். அவர்களிடையே ஒன்றுமில்லாத நான் சிறப்பு விருந்தினராக போய் அமர்வதில் ஒரு சின்ன பழிவாங்கும் சந்தோஷம் உள்ளது. ஆக, காரணம் நம்பர் 1 ஈகோ.
என்னுடைய கருத்து லட்சக்கணக்கானவர்களை போய் சேர்கிறதா என தெரியவில்லை. பெரும்பாலும் கவனிக்க மாட்டார்கள், அல்லது புரியாது அல்லது மறந்து விடுவார்கள். நான் கூட அப்படித் தான். டி.வியில் தோன்றி கருத்து கூறுபவர்கள் பலரையும் அதற்கு அடுத்து வருகிற விளம்பரங்களோடு மறந்து விடுவேன். சொல்லப்போனால் டி.வி சிந்தனையாளர்களை விட மெந்தோஸ் விளம்பரத்தில் வரும் ராக்கி நாயை தான் மக்கள் அதிகம் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனாலும் யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்கிற திரில்லுடன் பேசுவதில் ஒரு உற்சாகம் உள்ளது. அதை போதை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அடிப்படை மனித இயல்பு அது. எனக்கு வகுப்பில் பேசும் போதும் இதே த்ரில் உள்ளது.
டி.வி விவாதங்களில் பொதுவாக மக்கு பேர்வழிகளை தான் அழைக்கிறார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இவர்களை வாதத்தில் தோற்கடிப்பது எளிது. சச்சின் வங்கதேசம், கென்யாவை ஆட அதிகம் விரும்புவதை போலத் தான். ஜாலியாக ஒரு ஆட்டம் ஆடி வரலாம். இது காரணம் நம்பர் 2.
பயன்?
புதிய தலைமுறையில் காலை செஷனில் பேசினால்மட்டும் தான் பணம் கொடுப்பார்கள். மற்ற சானல்களில் அதுவும் இல்லை.
பிரபலமாகலாமே என நினைக்கலாம். ஒரு சின்ன முகப்பரிச்சயம் கிடைக்கும் தான். ஆனால் இது விளம்பரங்களில் தோன்றும் நடிகர்களுக்கு கிடைப்பதை விட குறைவு. ஒரு நடிகனோ, சினிமா பாடலசிரியனோ அரசியல்வாதியோ டி.வியில் தோன்றும் போது அது உபரி புகழ். அவனது ஏற்கனவே உள்ள பிம்பத்தை வலுப்படுத்தவோ தன்னை தொடர்ந்து மக்கள் நினைவில் வைக்கவோ பயன்படலாம். ஆனால் ஒரு விளிம்புநிலை எழுத்தாளன் டி.வியில் தோன்றும் போது அவனுக்கு இந்த பின்னணி இருப்பதில்லை. பார்வையாளன் அவனை வெறும் ஆளாகத் தான் பார்க்கிறான். அவன் மற்றொரு டி.வி பேச்சாளனாக மாறுகிறான். அவனது புத்தகங்கள் கூடுதலாய் விற்பனையாவதில்லை. குறைந்தபட்சம் அவனது அடையாளத்தை தேடி அறியக் கூட பொதுஜனம் முயல்வதில்லை. வெளியில் அவனைப் பார்த்தாலும் அவர்களுக்கு மைக்குடனான அவனது முகம் தான் நினைவு வருகிறது.
டி.வியில் தோன்றி பேச எழுத்தாளன் கணிசமான நேரத்தை ஒதுக்குகிறான். அங்கு அவனுக்கு இணையாக உரையாடவும் ஆளில்லை. அந்நேரத்தை அவன் வேறுவிதத்தில் உருப்படியாக செலவழிக்க முடியும்.
எழுத்தாளனாக தனிப்பட்ட பயன் இல்லை என்றாலும், சிறுபத்திரிகை வட்டத்தில் மட்டும் புழங்கிய அவனுக்கு லட்சக்கணக்கான பொதுமக்களை சந்திக்கும் வாய்ப்பை மீடியா வழங்குகிறது. அது ஒரு முற்றிலும் புது உலகம். அதன் கதவு டி.வி வழி அவனுக்கு திறக்கிறது.
ஆனால் டி.வி புகழ் ஏற்படுத்தும் நடைமுறை நெருக்கடி ஒன்றையும் பேசியாக வேண்டும். பொதுவாக நம் சமூகத்தில் கலாச்சார புகழ் என்பது பணத்துக்கும் அந்தஸ்துக்கும் பிறகு வர வேண்டிய ஒன்று என நம்பப்படுகிறது. நல்ல வேலை, வசதி என இருப்பவர்கள் ரசத்தில் நெய்யூற்றுவது போல் கால் ஸ்பூன் புகழும் இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பார்கள். நம் சமூகத்தில் பணக்காரர்கள் மேடையில் தோன்றி பொன்னாடை போர்த்தி பாராட்டப்படுவதை விரும்புவார்கள். தமக்கு உரையாற்றவும் கவிதை சொல்லவும் திறமை இருப்பதாக நம்ப தலைப்படுவார்கள். ஆனால் இந்த படிநிலை அமைப்பை இடைவெட்டி ஒருவன், ஏழையாகவும் பொருட்படுத்தத் தகாதவனாகவும் இருக்கும் ஒருவன், தன் எழுத்து மூலம் புகழ் அடையும் போது அதிகார மட்டத்தால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
இதனால் தான் நம்மவர்கள் மாணவப்பருத்தில் வாசிப்பு, எழுத்து என ஆர்வம் காட்டி விட்டு ஒரு இருபது வருடம் காணாமல் போய் விடுவார்கள். பொருள் திரட்டி குடும்பத்தை நிலைப்படுத்தி விட்டு மீண்டும் இலக்கியத்துக்கு நரைகூடிய பின் திரும்ப விரும்புவார்கள். எழுபது எண்பதுகளில் தமிழில் எழுதியவர்கள் ஒன்றும் தியாகிகள் அல்ல. கணிசமானோர் அரசு வேலைகளில் இருந்தார்கள். அதற்கு பின் வந்த தலைமுறை லௌகீக வெற்றிக்கு சினிமாவை தேடிப் போனார்கள். அவர்களுக்கு பிறகு ஐ.டி வேலை கொண்ட எழுத்தாளர்கள் தோன்றினார்கள். பொருளுக்கு பிறகே புகழ் என்கிற நியதியை உடைக்கும் போது நிறைய சிக்கல் வருகிறது.
அலுவலகத்தில் உங்களை எடுபிடி போல நடத்தும் உயரதிகாரிகள் நீங்கள் திடீரென்று சிறப்பு விருந்தினராக டி.வியில் போய் அமர்வது கண்டு கடுமையாக எரிச்சலும் குழப்பமும் அடைகிறார்கள். நியாயமாக பணமும் அந்தஸ்தும் பெற்ற தாம் தானே அங்கிருக்க வேண்டும் என கோருகிறார்கள். முன்னர் டி.வியில் ஸ்திரமான வேலையும் அதிகாரமும் கொண்ட தமிழ் ஆசிரியர்கள் தாம் கொட்டமடிப்பார்கள். அவர்கள் தன்னை போனில் அழைத்து “யாருன்னே தெரியாத எவனையோ எல்லாம் ஏன் சார் கூப்பிட்டு சிறப்பு விருந்தினர் என்று பேச விடுகிறீர்கள்” என ஏசுவதாக “நீயா நானா” இயக்குநர் ஆண்டனி என்னிடம் ஒருமுறை சொன்னார்.
உண்மையில் எழுத்தாளன் டி.வியில் தோன்றும் போது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இந்த குழப்பம் ஏற்படுகிறது. தமிழகம் போன்று பண்பாட்டு வறட்சி கொண்ட சமூகத்தில் கலையினால் வரும் புகழ் என்பது பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கான உபரி விளைவாக இருக்க வேண்டும். இந்த நியதியை டி.வி எழுத்தாளர்கள் உடைக்கிறார்கள். அலுவலகத்தில் கூஜா தூக்கும் ஒருவன் சட்டென்று ஒருநாள் ராஜாவாக ஒரு டி.வி நிகழ்ச்சியில் அரியணையில் அமர்கிறான். பெரும்பாலான மேலதிகாரிகளால் இதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. தன்னுடைய சிப்பந்தியை எதற்கு டி.வியில் அமர வைத்து கருத்து கேட்கிறார்கள் என அவர்கள் எரிச்சலடைகிறார்கள். விளைவாக எழுத்தாளனுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இரண்டு நெருக்கடிகள் தோன்றும்.
டி.வியில் தோன்றி தோன்றி அவன் தான் ஒருவேளை மதிக்கத்தக்க ஆள் தானோ என நினைக்க தொடங்கி விடுவான். ஆனால் நடைமுறையில் அவன் பல பேருக்கு தண்டனிடத் தான் வேண்டும். தன்னுடைய சமூக நிலை குறித்த குழப்பமும் பாதுகாப்பின்மையும் அவனை அலட்டும். ஒருவன் அடிமையாகவோ ஆண்டானாகவோ இருக்க வேண்டும். எழுத்தாளன் இரண்டுக்கும் இடையே போய் மாட்டிக் கொள்கிறான். மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி விழுகிறது.
இரண்டாவதாக, வேலையிடத்தில் வயிற்றெரிச்சல் கொள்ளும்
மேலதிகாரிகள் அவனை சற்று அதிகமாக மட்டம் தட்டி அவமானப்படுத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்வார்கள். நெருக்கடி அதிகமாகிக் கொண்டே சிலவேளை அவனுக்கு வேலையை விட்டு நீங்கக் கூடிய கட்டாயம் கூட நேரும். ஸ்லம் டாக் மில்லியனரில் டீ சப்ளையர் ரியாலிட்டி ஷோவில் வெல்ல அவன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தப்படும் காட்சி நினைவிருக்கும். அப்போதும் அவனிடம் தொடர்ந்து கேட்பார்கள் “உனக்கு எப்பிடிடா இந்த கேள்விக்கெல்லாம் விடை தெரியும்?”
“எப்பிடியோ தெரியும் சார். என்னை விட்டுடுங்க”
டி.வியில் வரும் எழுத்தாளனின் நிலை அலுவலகத்தில் கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும்.
இது டி.விக்காரர்களின் குற்றமும் அல்ல. எழுத்தாளனை முன்னெடுக்கும் பணியை பிரபல பத்திரிகைகள் தான் செய்திருக்க வேண்டும். அப்போது எழுத்தாளன் சமூக அங்கீகாரம் பணத்துடன் நியாயமாக உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்திருப்பான். ஆனால் இப்போதைய நிலைமை ராமாயணத்தில் அங்கதன் தன் வாலைச்சுருட்டி ஒரு ஆசனம் போய் ஆக்கி ராவணனுக்கு நிகராக உயர்த்தி அதன் மீது அமர்ந்தது போலத் தான். ராவணுக்கு கோபம் வராதா என்ன?
எனக்கு மூன்று எழுத்தாளர்களின் கதை நினைவு வருகிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோ முதலாளியிடம் போய் சொன்னார் “நான் வேலையில் இருந்து நின்று கொள்கிறேன்”
அவர் கேட்டார் “ஏன் வேலை பிடிக்கவில்லையா?”
“இல்லை. நான் எழுத்தாளன் ஆகி விட்டேன். இனிமேலும் இங்கு எடுபிடி வேலை செய்வது எனக்கு அவமானமாக இருக்கிறது”.
இந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் அந்த முதலாளி எப்படியான குழப்பத்தையும் வியப்பையும் அடைந்திருப்பார் என தோன்றும்.
மனுஷ்யபுத்திரன் ஒரு சம்பவம் சொன்னார். அவர் மனோன்மணியம் பல்கலையில் ஊடகவியல் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது காலச்சுவடு ஆசிரியராகவும் அறியப்பட்ட கவிஞராகவும் இருந்தார். அவரது இருப்பு வகுப்பில் ஆசிரியர்களுக்கு தொந்தரவளிப்பதாக இருந்திருக்கிறது. அவர்கள் அவரை அந்நியப்படுத்தினார்கள். மதிப்பெண்ணில் கைவைத்தார்கள். ஒருநாள் அப்போதைய துணைவேந்தர் ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் மனுஷ்யபுத்திரனின் கட்டுரை ஒன்றை புகழ்ந்து பேச, மாணவர் மத்தியில் அவருக்கு மதிப்பு உயர்வதற்கு பதிலாய் வெறுப்பும் பொறாமையும் அதிகமாகியது. அவர் முழுக்க தனியானார். துணைவேந்தர் தனக்கு நல்லது இழைப்பதாய் நினைத்து தீங்கு செய்து விட்டதாய் குறிப்பிட்டார் மனுஷ்யபுத்திரன்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெயமோகனை அவரது அலுவலகத்துக்கு போய் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்காய் உரையாடிக் கொண்டிருப்பேன். ஒரு நாள் போனில் அழைக்கும் போது “இனிமேல் அலுவலகத்துக்கு வர வேண்டாம்” என்றார். பின்னர் அவர் விளக்கினார். அலுவலகத்தில் அவரை தன் போட்டியாளனாக நினைக்கும் ஒரு தொழிற்சங்க கவிஞர் இருந்தார். அவருக்கு என்னைப் போன்ற வாசகர்கள் ஜெ.மோவை அங்கு போய் பார்ப்பது சங்கடமாக எரிச்சலாக இருந்திருக்கிறது. அவர் அதிகாரபூர்வமாய் புகார் செய்து விட்டார். சில வாரங்கள் கழித்து மீண்டும் போன போது ஜெயமோகன் என்னைத் தன் உயரதிகாரியிடம் அறிமுகப்படுத்தினார்: “என்னுடைய வாசகன் இவர்”. அவர் சின்ன முகச்சுளிப்புடன் “உம்” என்றார். தான் எழுதும் விண்ணப்ப கடிதங்களில் இலக்கணப்பிழை கண்டுபிடித்து உயரதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது பற்றி ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபமாக மனுஷ்யபுத்திரனின் கட்டுரை நூல் வெளியீட்டுக்கு அதே முன்னாள் துணைவேந்தர் வந்திருந்து பாராட்டி பேசினார். ஆனால் இம்முறை பார்வையாளர்களில் யாரும் அதற்காக அவரை வெறுக்கவில்லை. அதே போல் இப்போதிருக்கும் ஜெயமோகன் முன்னும் இதே சமூகம் தண்டனிட்டு மரியாதை செலுத்தும். இப்போது அவர்கள் வந்தடைந்துள்ள இடம் தான் வித்தியாசம்.
ஒரு கவிஞரை அவர் வேலை பார்த்த டி.வி நிலையத்தில் பார்க்க போனேன். இலக்கியம், தத்துவம் என காற்றில் மிதந்தபடி பேசிக் கொண்டே வெளியே வந்தோம். அப்போது காரில் ஒரு டி.வி அரசியல் விமர்சகர் வந்தார். அவர் ஒரு அரைவேக்காட்டு ஆசாமி என எங்களுக்கு தெரியும். ஆனால் அவருக்கு நிறைய தொடர்புகள் இருந்தன. கவிஞருக்கு தன் மகனுக்கு பள்ளிக் கூட சீட் வாங்க அவரது சிபாரிசு வேண்டி இருந்தது. அதனால் அவரிடம் ஓடிப் போய் கூனிக் குறுகி கெஞ்சினார். இந்த அவலக் காட்சியை பார்த்து மௌனமாக நின்றிருந்தேன். இன்னொரு முறை கவிஞர் என்.டி ராஜ்குமார் தபால் துறையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த போது என் கண் முன்னாடி மூட்டைகளை சுமந்து கொண்டு போவதை பார்த்தேன். அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் எனக்கு கண்ணீர் வரும். இப்படியான எழுத்தாளர்களுக்கு புகழினால் என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்?
இங்கு பணம் சம்பாதிக்கும் முன் வரை, சமூக அந்தஸ்தை அடையும் வரை ஒரு சின்ன புகழ் கூட எழுத்தாளனுக்கு முள்கிரீடம் தான்.
ஏன் இப்படியான சமூகத்தில் என்னை பிறப்பித்தாய் என கடவுளைக் கேட்க மட்டுமே அவனால் முடியும்.
இது எனக்கு முக்கியமான கட்டுரை. இதைப் பற்றி தற்போது அனுபவித்துக் கொண்டு பல அனுவங்களின் தொகுப்பாக இதைப் பார்க்கின்றேன்.
ReplyDeleteநன்றி
நல்ல கட்டுரை.
ReplyDeleteஅதிகாரத்திற்கும், பணத்திற்கும் மட்டுமே மரியாதை செலுத்தும் சமூகமாக நம் சமுதாயம் இன்னும் இருந்து வருகிறது. வாழ்க்கையில், ஒரு நல்ல பதவியை அடைந்து விட்ட ஒருவரால், மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் - தனக்கு அதற்கேற்ற தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும்- பேசக் கூடிய உரிமையை சமூகம் அவர்களுக்கு வழங்கி விடுகிறது. அந்த உரிமையை மிக இயல்பாக, எந்தப் பரிசீலனையும் இல்லாமல், பலர் ஏற்றுக் கொண்டு, எல்லாப் பிரச்னைகளிலும் தங்கள் மொக்கையான கருத்துக்களை பெரிய மனுஷத் தனத்தோடு சொல்வது தான் தமிழ் டி.வி யின் சிறப்பே.
இந்த நிலை மாற, டி.வி. விவாதங்களில் குறிப்பிட்ட பிரச்னையைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள், தங்கள் கருத்துக்களை தெளிவாக, தன்னம்பிக்கையுடன் முன் வைப்பது மிகவும் அவசியம்.
இது ஒரு சமூகக் கடமையும் கூட.