எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு முக்கியமான நாவலாசிரியருடன் வெற்றி பெற்ற திரைக்கதையாளரும் கூட. மலையாளத்தின் பொற்கால நடுநிலைப் படங்களில் சிறந்த ஒன்றான “சதயம்” அவரது திரைக்கதையில் உருவானது. 92இல் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. மோகன் லாலின் நுட்பமான நடிப்பும் சிபி மலயிலின் கூர்மையான இயக்குமும் கூடுதல் பலங்கள். படம் தூக்குத்தண்டனையை பற்றியது.
சமீபத்தில் காங்கிரஸ் தேர்தல் முன்னோட்டமாக தொடர் தூக்குத்தண்டனைகளை நிறைவேற்றியதை ஒட்டி மரண தண்டனை குறித்த விவாதங்கள் மீண்டும் தூசு தட்டி எழுப்பப்பட்டன. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட போது கூட அது தவறு தான் என நிலைப்பாடு எடுத்த அறிவுஜீவிகள் இங்கு உண்டு; அவர்கள் கடுமையான நெருக்கடியையும் சந்தித்தனர். தூக்குத்தண்டனை எப்போதும் உணர்ச்சிகரமான நிலைப்பாடுகளை நோக்கி தள்ளுவது. நம் இதயம் கொடும் குற்றவாளிகளையும் தேசத்துரோகிகளையும் கொல்லும் தீர்ப்பையே ஆதரிக்கும். மூளை அதை மறுக்கும். அப்படியான சூழலில் ஒரு கலைப்படைப்பு தான் மக்களுக்கு தூக்குதண்டனையின் பல்வேறு சிக்கல்களை புரிய வைக்க முடியும். விநோதமாக அப்படி ஒரு படம் 92இல் தான் வந்தது: “சதயம்”. பிறகு தமிழிலோ இந்தியிலோ சமீபத்தில் வரவில்லை. கமலின் “விருமாண்டி”, வசந்தபாலனின் “அரவான்” போன்ற படங்கள் தூக்குத்தண்டனையின் அறம் பற்றின கேள்விகளை எழுப்பவில்லை. அவை ஒரு செண்டிமெண்டுக்காக மட்டுமே இந்த பிரச்சனையை எடுத்துக் கொண்டது. நமக்கு “சதயத்தை” போன்ற ஒரு படம் இப்போது தேவைப்படுகிறது.
“சதயம்” இதைப் பற்றியது என்று குறிப்பாக கூறுவது ஒரு அநியாயம் தான். அது பல்வேறு விசயங்களை துருத்தாமல் பேசுகிறது. படத்தின் நோக்கங்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அது குற்றவாளியின் மனநிலையை அலசுகிறது. ஒருவன் ஏன் கொலைக் குற்றம் செய்ய தூண்டப்படுகிறான்? இந்த கேள்வியை எம்.டி அநாயசமாக கையாண்டிருக்கிறார். அடுத்த நோக்கம் தூக்குத்தண்டனைக்கு உள்ளாகும் அக்குற்றவாளி அனுபவிக்கும் மனவதை, அவனது தடுமாற்றங்கள், மனச்சிதைவு, இறுதியான மனமாற்றம் ஆகியவற்றை சித்தரிப்பது. இதனிடையே மலையாள சினிமாவின் வழக்கமான வளவளவென்ற கதைகூறும் பிரயத்தனம் உள்ளது. அது ஒரு பலவீனம். இந்த இரண்டாம் பகுதியில் சிறை வாழ்வில் தூக்குக்காக காத்திருப்பவனின் மனநிலையை சித்தரிக்கும் அற்புதமான காட்சிகள் வருகின்றன.
மோகன் லாலின் பாத்திரமான சத்யன் சிறுவனாக அறிமுகமாகும் காட்சி முக்கியமானது. அவன் தனியாக கடற்கரையில் மணற்சிற்பம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு பாதிரியார் அங்கு புகைப்படம் எடுக்க வருகிறார். அவர் மணற்சிற்பத்தால் கவரப்பட்டு புகைப்படம் எடுக்க முயல் அதற்குள் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சில சிறுவர்கள் சிற்பத்தை உடைத்து விடுகிறார்கள். சத்யன் கோபத்தில் அவர்களில் ஒருவனைப் பிடித்து ஒரு மரக்கட்டையால் அடிக்கிறான். பாதிரியார் அவனைத் தடுக்கிறார். ஏன் இவ்வளவு வன்மத்தோடு இருக்கிறாய் என வினவுகிறார். அவனது அம்மா ஒரு விபச்சாரி. அப்பா இல்லை. தன்னை எல்லோரும் அவமானப்படுத்துவதாய் புகார் கூறுகிறான். அந்த சிற்பம் அவனது கனவுலகம். அவன் அங்கு சென்று தப்பித்துக் கொள்கிறான். ஆனால் உலகம் அவன் கனவை அடிக்கடி கலைக்கிறது. அவனை மேலும் மேலும் அற்பமாக உணர வைக்கிறது. அவனுக்கு எல்லோரையும் கொல்லும் வெறி ஏற்படுகிறது. இப்படித் தான் சத்யனின் பாத்திரம் நிறுவப்படுகிறது.
குற்றம் செய்பவர்கள் உலகின் மீது கொள்ளும் வெறுப்பு தம்மீதுள்ள வெறுப்பின் பிரதிபலிப்பு தான். தம்மிடம் இருந்து தப்பித்து புது அடையாளத்தை, லட்சியத்தை, விழுமியங்களை கட்டமைக்க பார்க்கிறார்கள். அதை உலகம் அனுமதிக்காத போது எதிரிகளை அழிப்பதன் மூலம் தன் இடத்தை புதிதாக உருவாக்க முனைகிறார்கள். கொலை என்பது முத்தம், அரவணைப்பு போல ஒரு உறவாடல் தான். எதிர்மறையானது, மறுப்பை அடிப்படையாக கொண்டது என்பது தான் வேறுபாடு. சத்யனுக்கு தன்னுடைய அவமானகரமான வாழ்வு பிடிக்கவில்லை. பாதிரியாரின் பாதிப்பில் இதை பாவம் என அடையாளப்படுத்துகிறான். அவனுடைய வாழ்வின் லட்சியமே தன் விபச்சார அம்மாவை மறக்க வேண்டும், தன் வாழ்வில் இருந்து அவமானங்களை துடைக்க வேண்டும் என்பது. இதில் சிக்கல், எல்லா பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேர்வது போல, அவனுக்கு தன் கடந்த காலத்தை திருத்தி எழுத ஆசை தோன்றுவது. கடந்தகாலம் என்று ஒன்று இல்லை. அது நம் நினைவில் நிழலாட்டம் மட்டும் தான்.
அவனுக்கு இதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவன் வீட்டுப் பக்கத்தில் ஜெயா என்று ஒரு பெண் தனது இரு பதின் வயது சகோதரிகளுடன் வசிக்கிறாள். அவளுக்கு அம்மா இல்லை. சித்தியுடன் வசிக்கிறாள். விபச்சாரியான சித்தி அவளையும் அவ்வழிக்கு இழுக்கிறாள். ஜெயாவுக்கு அந்த இழிவில் இருந்து தப்பிக்க சத்யன் உதவத் துவங்குகிறான். அவனுக்கு இது தன் இளமையை மீளுருவாக்க ஒரு அரிய வாய்ப்பு. ஜெயாவின் சிறு சகோதரிகளை மீண்டும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புகிறான். அவளுக்கு மாடலாக தன் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறான். அவளை துன்புறுத்தும் ஒரு மாமாவை அடித்து துரத்துகிறான். எல்லாம் நன்றாக போவது போல் இருக்கிறது. சத்யனுக்கு ஜெயாவை மணக்கும் கனவும் ஏற்படுகிறது. அப்போது சத்யனின் முதலாளி அவளை கெடுத்து விடுகிறாள். அவள் கர்ப்பமாக ரெண்டாயிரம் ரூபாயை வீசி அவளை விபச்சாரி போல் நடத்தி காயப்படுத்துகிறான். தொடர்ந்து அவள் வேலையை இழந்து சமூகத்தின் மீதான கோபத்திலும் அவநம்பிக்கையிலும் பணத்துக்காகவும் விபச்சாரியாகிறாள்.
தன் கண்முன்னே தன் லட்சியம் பாழாவது கண்டு சத்யன் வெகுண்டெழாமல் இயல்பாக ஆவேசப்படாமல் அமைதியாக கவனிக்கிறான். அவன் தன் மனசமநிலையை இழந்து விட்டான். என்னதான் முயன்றாலும் உலகம் மீண்டும் மீண்டும் படுகுழியை நோக்கி ஒருவனை தள்ளுகிறது என நம்புகிறான். இதற்கு மேல் மீட்பு இல்லை. அவன் வன்முறை மூலம் உலகை தோற்கடிக்க முனைகிறான். ஜெயாவின் தங்கையான 12 வயதுப் பெண்ணை அந்த மாமா விற்பதற்கு துரத்தி வருகிறான். சத்யன் அவளைக் காப்பாற்றி தன் ஓவியம் தீட்டும் கத்தியால் அவளைக் கொல்லுகிறான். ஒரு படுக்கையில் தூங்குவது போல் படுக்க வைத்து போர்வையால் மூடி வைக்கிறான். பிறகு அவளது சின்ன தங்கையையும் கொன்று பக்கத்தில் படுக்க வைக்கிறான். பிறகு அவன் “இனி மேல் உங்களை யாரும் பாவ வாழ்க்கையை நோக்கி தள்ள முடியாது. நான் அதை அனுமதிக்க முடியாது” என எக்காளத்துடன் சொல்கிறான். மனம் பிறழ்ந்து அந்த சில நிமிடங்களில் அவன் வன்முறையில் குதூகலம் அடைவதை மோகன் லால் அற்புதமாக சித்தரித்திருப்பார். அடுத்து அவன் தன் முதலாளியையும் அவனது நண்பனையும் கொல்லுகிறான்.
அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் அவன் அதை மறுப்பதில்லை. குற்றமன்னிப்பு கேட்பதில்லை. கழிவிரக்கத்துக்கு பதில் இறுமாப்பு அடைகிறான். அச்சத்துக்கு பதில் தன்னம்பிக்கை மிக்கவனாகிறான். மறுப்புவாதத்தின் இன்னொரு முனையில் போய் நிற்கும் ஒருவன் இப்படித் தான் யோசிப்பான். அவன் தன்னை பிறர் கண்டிக்க கண்டிக்க அதிகமாய் நியாயப்படுத்திக் கொண்டே போகிறான். அடுத்தவர் தன்னை நிராகரிக்கிறார் என்பதே அவனது நியாயம். அதன் மீது தான் தன் தன்னம்பிக்கையை கட்டமைக்கிறான். ஆனால் படத்தின் பிற்பாதியில் கதை மாறுகிறது. அவனுக்கு ஒவ்வொருவராய் கருணை காட்டுகிறார்கள். கருணையின் பிரகாசம் தாங்காமல் அவன் பலவீனமாகி மனம் நொறுங்குகிறான். இது அவனது மனம் மாற்ற கட்டம். படத்தின் தலைப்பே இதைப் பற்றியது தான்: “கருணையுடன்”
எம்.டியிடம் தஸ்தாவஸ்கியின் பாதிப்பு அதிகம். சத்யனின் பாத்திரம் ரஸ்கால்நிக்கோவை நினைவுபடுத்துகிறது. அவனும் ஒரு கொலைமூலம் சமூக நியாயம் அடைய முயல்கிறவன் தான். அவனும் கருணை முன்பு மண்டி இடுகிறான். குற்றத்தை ஒப்புக் கொண்டு சத்யனைப் போல் பாவ மன்னிப்பு கோருகிறான். படத்தில் கணிசமான இருத்தலிய பாதிப்பும் உள்ளது. இருத்தலியம் ஒரு மீட்பற்ற குரூரமான உலகை சித்தரிக்கிறது. அங்கு ஒரு மூர்க்கமான சக்தி மனிதனை அர்த்தமற்று தண்டிக்கிறது. எளிமையாக சொல்வதானால், இருத்தலியத்தில் உலகம் ஒரு சிறை; அங்கு மனிதன் ஒரு தப்பிக்க முடியாத கைதி. இந்த படத்தில் சீரழிவில் இருந்து தப்பிக்க மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைகிறது. சத்யன் ஜெயா மூலம் மீட்பு அடைய முயல்கிறான். ஜெயாவும் தன் விபச்சார/சேரி வாழ்வில் இருந்து விடுதலை பெற போராடுகிறாள். ஆனாலும் மேற்தட்டை சென்றடையும் போதும் அங்கும் அவளை ஒரு விபச்சாரியாகவே பார்த்து அப்படியே மாற்றி விடுகிறார்கள். அங்கு அவள் ஆங்கிலம் கற்று நவீன ஆடையணிந்து ஆங்கிலம் பேசும் அதிக பணத்துக்கு விலை போகிறவள் ஆகிறாள். மனிதனுக்கு சமூகத்தின் எந்த தளத்துக்கு சென்றாலும் சூழல் மாறாமல் அப்படியே இருக்கிறது. ஒரு பெரும் எந்திரத்தின் சக்கரம் போல் அவன் சுதந்திரம் அற்று இருக்கிறான்.
படத்தில் வரும் ஜெயிலர் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம். அவர் தூக்கில் இடுவது ஒரு கடமை மட்டுமே என தட்டையாக ஒரு அறப்பிரச்சனையை பார்ப்பவர். ஒவ்வொரு முறையும் யாராவது சத்யனுக்கு பரிந்து பேசும் போது அவர் “தூக்கு என்று முடிவான பின் உணர்ச்சிவசப்படாமல் அதை நிறைவேற்றுவது நம் கடமை” என்பார். அதே போல் சத்யனின் கருணை மனுக்கள் தள்ளுபடியாகி அவனது தண்டனை விபரங்கள் உறுதியாகின ஆணைகள் வரும் போது அவர் அவற்றை கோப்பில் இட்டு கட்டி வைக்கும் காட்சி இடையிடையே வரும். ஒவ்வொரு முறை கோப்பு கட்டப்படும் போதும் சத்யன் மரணத்தை மேலும் நெருங்குகிறான். கோப்பு இந்த சட்ட அமைப்பின் எந்திரத்தனத்தின் உருவகம் தான். அதே போன்றே ஜெயிலர் தூக்குமேடையின் தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டும் காட்சியும். அந்த ஜெயிலர் காம்யுவிடம் நாம் பார்ப்பது போன்ற ஒரு கராறான இருத்தலிய பாத்திரம்.
படத்தில் கர்த்தருக்கும் மேரி மக்தலினாவுக்குமான உறவு நுட்பமாய் நினைவுபடுத்துப்படுகிறது. கர்ப்பமான ஜெயாவை தலைமுடியை பற்றி இழுத்து வந்து அவளது சித்தி சத்யனின் வீட்டு வாசலில் தள்ளி “சமுக சீர்கேடுகளை திருத்துகிறேன் என்று திரிந்தாயே, உன்னால் அவள் இந்த நிலைக்கு வந்திருக்கிறாள், பதில் கூறு” எனக் கூறும் காட்சி ஒரு உதாரணம். படத்தின் பிற்பகுதியில் ஜெயாவின் தோற்றமும் மேரி மெக்தலீனாவை நினைவுறுத்துகிறது.
சத்யன் தீமையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக குழந்தைகளை கொன்றதாக கூறுகிறான். நம்மூரில் கூட பெற்றோர்கள் தற்கொலை செய்வதற்கு முன் தம் குழந்தைகளையும் கொன்று விடுவதை பார்க்கிறோம். சத்யனின் தவறு அவன் நியாயவானின் பாத்திரத்தை எடுக்கிறான் என்பது. காந்தியைப் போன்று சீர்திருத்தவாதிகள் பலருக்கும் நேரும் சறுக்கல் இது. இந்த உலகில் திருந்த மட்டும் அல்ல, கெட்டு சீரழியவும் மனிதனுக்கு உரிமை உண்டு. அதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அக்குழந்தைகள் எதிர்காலத்தில் எந்த கதவையும் திறக்கலாம். விபச்சாரியாகலாம், வேறுவிதமாகவும் ஆகலாம். அதை முடிவு செய்யும் நியாயவாதியின் ஆணவம் தான் சத்தியனை அவர்களை கொல்ல தூண்டுகிறது. காந்தி இப்படித் தான் தன் ஆசிரமத்தில் காதலித்த பாவத்துக்காக ஒரு பெண்ணை மொட்டையடிக்க வைத்தார். கழிவறை அலம்ப மறுத்ததற்கு மனைவியை அடித்தார். ஆனால் அடுத்தவர் வாழ்வை கையாள்வது நம் வேலை அல்ல.
படத்தில் அழகான நுட்பமான காட்சிகள் பல இருக்கின்றன. தூக்குக் கயிற்றை சோதிக்க மூட்டையை கட்டி விழ வைக்கும் போது எழும் சத்தத்தில் சிறை அறையில் இருக்கும் சத்யன் திடுக்கிடும் காட்சி அதில் ஒன்று. அதைப் போன்றே அவன் தூக்கிலடப்படும் முன்பு அமைதியாக நள்ளிரவில் குளிப்பது, அவனுடைய பெயரைக் கேட்டு உறுதிப் படுத்தி, மச்சம் போன்ற அடையாளங்களை சரி பார்க்கும் சடங்குகளை அதிகாரிகள் மேற்கொள்ளும் காட்சிகளும் மறக்க முடியாதவை. இது மோகன் லாலின் ஆகச்சிறந்த நடிப்பு அல்லாவிட்டாலும் அவரது சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று. குறிப்பாக உடல் மொழியை சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதியில் அவர் மிகுந்த பணிவும் கூச்சமும் கொண்டவர். கொலைக்கு பின் தன்னை நியாயவாதியாக நினைத்துக் கொண்டபின் ஒரு அபார தன்னம்பிக்கை அவனுக்கு வருகிறது. அப்போது ஒரு இறுமாப்பு கொண்ட உடல்மொழியை நுட்பமாக காட்டுகிறார்.
உப பாத்திரங்கள், சிறுபாத்திரங்கள் ஆகியவற்றின் அமைப்பும் நடிப்பும் படத்தின் பிற சிறப்புகள். சின்ன சின்ன கூர்மையான வசனங்களையும் குறிப்பிட வேண்டும்.
தூக்குத்தண்டனைக்கு ஆளாகும் கைதி அதற்கு முன்பே மனதளவில் பல தடவைகள் செத்து விடுகிறான். மரணத்துக்கான காத்திருப்பு அவனுக்கு எவ்வளவு கொடூரமானது என படம் வலுவாக சித்தரிக்கிறது. பிற மொழிகளில் மீண்டும் வர வேண்டிய படம். பேரறிவாளன் போன்றவர்கள் தூக்கிலடப்படும் முன் அது இங்கு வர வேண்டும்.
No comments :
Post a Comment